உலக அளவில் செய்திகளுக்கான தேவை என்பது அதிகரிக்கவே செய்திருக்கிறது. அன்றாடம் நிகழும் பல்வேறு விதமான சம்பவங்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு உடனுக்கு உடனோ, சிறிது கால தாமதத்திலேயோ பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, போட்டிப் போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி 24x7 பணியாற்றுகின்றன பல செய்தி நிறுவனங்கள்.

பொழுதுபோக்கு, அரசியல், புலனாய்வு, வணிகம், வர்த்தகம் என பல தொழிற்துறை சார்ந்தும் வார, மாத இதழ்களும் எல்லா மொழிகளிலும் போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளை கொட்டி, குவிக்கின்றன. இச்சூழலில்தான் தற்போது ‘மொபைல் ஜர்னலிசம்’ என்கிற ப்யூச்சர் மீடியா எனும் புதிய கதவு ஒன்றும் பெரிய அளவில் திறந்து விடப்பட்டிருக்கிறது!

கோடிக்கணக்கில் வர்த்தகம் பார்க்கும் பல நிறுவனங்களின் பார்வை தற்போது இதன் மீதுதான். ஏற்கனவே, நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் செய்தி சேனல்களும் இதில் தப்பவில்லை. அலைபேசி வழியாக விற்பனை செய்ய முடியாத எந்த பொருளும் இனி வரும் காலங்களில் காலவதியாகும். ஆகவே, தங்களுடைய செய்தி சேவையை அலைபேசி வழியே உடனுக்கு உடன் அறிந்துகொள்ளும் வகையில் செயலிகளை(Apps) உருவாக்கி, நொடிக்கு நொடி வாசகர்களுடன் உறவாடி வருகின்றன ஊடகங்கள்.

இதை தொலைநோக்குப் பார்வையோடு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே முன் எடுத்தது மனம். “இதயத்தில் தமிழ் மனம்; இணையத்தின் தமிழ் முகம்” எனும் அடைமொழியோடு களத்தில் இறங்கியது. பன்முக ஆளுமைகளின் நேர்காணல்கள், படைப்புகளோடு வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது. தற்போது, அது மூன்றாம் ஆண்டில் கால்பதித்துள்ளது. இந்த நேரத்தில் இதன் வளர்ச்சியில் துணை நின்ற எழுத்தாளர்கள், படைப்பாளிகள், திரை நட்சத்திரங்கள், விளம்பரதாரர்கள் அனைவரையும் ஒருசேர அணைத்துக்கொள்கிறது மனம். தொடரட்டும் இந்த ஆதரவு என்ற வேண்டுகோளோடு புதிய மாற்றங்களுக்கு தயாராகிறது உங்கள் மனம்.

விரைவில்!


மூன்றாம் ஆண்டில் களம் புகும் மனம்!


ஆசிரியர்

@மனம்

விமலை தேடிவந்த 5 படங்கள்!

அண்மையில், பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லியிருந்த இந்தப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விமல், 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 'வெற்றிவேல்' படத்தின் இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.


இளமை ததும்பும் ‘சொல்லிவிடவா’

ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி, அர்ஜுன் இயக்கிய ‘சொல்லிவிடவா’, அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘இளமை ததும்பும் காதல், கலர்புல் காமெடி, அனல் பரக்கும் ஆக்ஷன், சுவாரஸ்யமான திருப்பங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரக் கூடிய வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதே வெற்றிக்கு காரணம்’ என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். இப்படத்தில் இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்க, நடிகர் சந்தன் முதன்முறையாகத் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி, நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோரையும் வசீகரிக்கும் ‘கோலி சோடா 2’

"நல்ல கதைகள் மீதான நம்பிக்கையும், அவற்றை அப்படியே திரையில் கொண்டு வருவதும் ரசிகர்களை எப்போதுமே ஈர்த்திருக்கிறது. கோலி சோடா படத்தின் வெற்றி எனக்குள் இருந்த நம்பிக்கையை ஊற்றெடுக்க வைத்து, உடனடியாக புது களத்தில் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க வைத்தது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கும். குறிப்பாக சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் ஆன்மாவை உயர்த்தி, எல்லோரையும் வசீகரிக்கும்" என்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.


சென்சார் போர்டு பாராட்டிய ‘எக்ஸ் வீடியோஸ்’

திரையுலகில், சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் சினிமா காட்சிகள் இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும். அந்தவகையில், தற்போது ‘எக்ஸ் வீடியோஸ்’ என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


தொடங்கியது ‘ஜருகண்டி’ படத்தின் டப்பிங்!

வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி 'ஜருகண்டி' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடித்துள்ளனர். படத்தின் டப்பிங் வேலைகள் அண்மையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்தூரி என்பது அனைவரும் அறிந்ததே!

துரிதமாக படப்பிடிப்பை முடித்த கிருத்திகா உதயநிதி!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் 'காளி' படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த இந்த ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு, அண்மையில் முடிவடைந்தது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் 'காளி' படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. 'காளி' படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிம்பன்சி குரங்கு நடிக்கும் தமிழ்ப் படம்!

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘ இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது. கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.