உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களின் மனங்களில் எல்லாம் பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இளையராஜா. இந்திய சினிமாவின் இசை ஆதர்சம்; தமிழ் மனங்களை தாலாட்டும் தாய். இன்னும் எப்படி புகழ்ந்தாலும் தீராத தாகம் கொண்டது அவரது இசை. அந்த ராஜாங்கத்தை தேடி வந்துள்ளது அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன்!

விருதுகளையும் புகழ் மாலைகளையும் கடந்து நிற்கும் சிகரம் அவர் என்றாலும், வாழும்போதே இசையின் தவப்புதல்வனை பாராட்டி, மகிழ்ந்துள்ளது மத்திய அரசு. ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களுக்கு இது ராஜ ராக ஆலாபனை. நல்லதோ, கெட்டதோ, சந்தோஷமோ, துக்கமோ எப்போதும் நம்முடன் துணை நிற்கும் இளையராஜாவின் பாடல்கள். டாக்டருக்கு படித்தால் டாக்டராகிவிடலாம். இன்ஜினியரிங் படித்தால் இன்ஜினியர் ஆகிவிடலாம். ஆனால், இசையை தலைகீழாக கரைத்து குடித்தாலும் ஒருவர், ஒருபோதும் ஆக முடியாது இளையராஜா!

இசை ஒரு வரம். வாங்கி வந்தவர்களுக்கே அது தெரியும், புரியும், தெளியும். அதை உணர்ந்தவர் ராஜா. எப்போதும் இசையால் நம்மை வசமாக்கும் இதயம் அவரிடம் மட்டுமே உள்ளது. ஆகவே தான், இசையின் இலக்கணங்களை கற்றவரெல்லாம் இசைஞானி ஆகவியலாது. இது பித்தல்ல; யதார்த்தம். ஜனனத்திலும் மரணத்திலும் துணை நிற்கும் அவரின் இசையோடு வாழ்க்கையை கொண்டாடுவோம்.

வாழ்த்துகள் ராஜா சார்!இசையால் இதயத்தை வசமாக்கும் ராஜா!

ஆசிரியர்

@மனம்

கதிரின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

'மன்னார் வளைகுடா' படத்தின் இயக்குநர் பிரபாகரனிடம் உதவியாளராக இருந்தவர் ரஞ்சித் கண்ணா. அவருடைய இயக்கத்தில் கதிர் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, அண்மையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை!

படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “கிராமத்திலிருக்கும் நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான்? முடிவு என்ன? என்பதே கதை. அது என்ன பிரச்சினை தெரியுமா? சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சினைதான் அது!” என்று கூறி ஆச்சர்யமூட்டுகிறார். 'மதயானைக் கூட்டம்' , 'கிருமி ' படங்களுக்குப் பிறகு, கதிருக்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்குமாம்!


கோலிவுட்டின் லேட்டஸ்ட் குயின்!

கோலிவுட்டில் நுழையும்போதே ‘கிளாமர் குயின்’ என்ற பட்டத்தோடு வலம் வருகிறார் இஷா. இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உதவி இயக்குநர்கள் நோட்ஸ் எடுங்கப்பா!

ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல!

“நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்க்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் ‘மதுரவீரன்’ கதை உருவானது. இது ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல; அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளேன். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பே கதையை உருவாக்கிவிட்டோம். ஆனால், அந்தப் போராட்டம் பற்றிய சிறிய தொகுப்பு படத்தில் உள்ளது!” என்கிறார் இயக்குநர் பி.ஜி.முத்தையா.


சயீஷா இப்போ ரொம்ப பிஸி!

‘வனமகன்’ படத்தில் அறிமுகமானவர் சயீஷா சைகல். ஏனோ அந்தப் படம் பெரிய வெற்றியை தரவில்லை. இதனால், படங்களும் புக் ஆகாமல் இருந்தவருக்கு, தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. விஜய் சேதுபதி உடன் ‘ஜுங்கா’, ஆர்யாவோடு ‘கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் கலக்கி வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப்குமாரின் உறவுப் பெண் சயீஷா என்பது குறிப்பிடத்தக்கது!


படையலுக்கு ரெடி ‘படைவீரன்’! பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடிக்கும் 'படைவீரன்' படத்தின் அபிஷியல் டிரைலர், அண்மையில் வெளியானது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பாரதிராஜா. படத்தின் சிறப்புக் காட்சியை நேற்று, திரையிட்டு காட்டியது படக்குழு. பார்த்தவர்கள், சோஷியல் மீடியாக்களில் இயக்குநர் தனாவை பாராட்டி வருகிறார்கள். இவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆவார்.

வரவேற்பைப் பெற்ற மஜீத் மஜீதி!

ரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம்!

தொடங்கியது ‘கொரில்லா’ படப்பிடிப்பு!

ல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது. இப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது!