மனிதநேயம் காத்து பேரிடரை வெல்வோம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்த முறை ‘மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும்’ என்கிறது வானிலை ஆராய்ச்சி மையம். சொன்னதுபோல, வருண பகவான் கடுமையாக தனது வேலையை தொடங்கிவிட்டார். ஒருநாளில் அவர் காட்டிய காட்டு நம்மை திக்குமுக்காட வைத்துவிட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், பெருவெள்ளமாக மாறி நம் வாகனங்களுக்கு கிலி ஏற்படுத்திவிட்டது!. அதுமட்டுமா? வீட்டைச்சுற்றி தேங்கியிருந்த கழிவுகளுடன் சேர்ந்து பெருநோய்களுக்கு வழிவகுத்துவிட்டது பெருமழை!

குடிநீருக்கு வழியின்றி, தண்ணீர் லாரிக்காக காத்திருந்த நிமிடங்கள் எல்லாம் மாறி, காலில் அலைமோதும் நீரை காப்பாற்றி, பயன்படுத்த வழியின்றி,கூவத்தை நோக்கி ஓடியதை கண்ட கண்கள் குளமாகிவிட்டன. இவையெல்லாம் மாற வேண்டாமா?

கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னையை நடுங்க வைத்து, அலற விட்ட பெருவெள்ளத்தின் வடுக்களை அனைவருமே அறிவோம். மீண்டும் அப்படியானதொரு நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா? ‘மழை மேலும் வலுக்கும், இன்னும் தீவிரம் அடையும்’ எனும் மற்றொரு அறிவிப்பை ஒதுக்கிவிட்டு, நாம் நகர்ந்து செல்லுதல் நலமாகுமா?

மழையினால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக அரசு. குழந்தைகள், பெண்கள், முதியோரை காப்பதும், உணவில்லாதோருக்கு அதை பெற்று தருவதும், நம் ஒவ்வொருவரின் உரிமையாக எண்ணுவோம். மழையினால் பாதிக்கப்பட்டோருக்கு துணிகளாகவோ, தங்குவதற்கு இடமாகவோ அல்லது உணவுப் பொருட்களாகவோ, இயன்றதை செய்வோம். எதுவுமே முடியாதபோது அலைபேசியில் வரும் சரியான உதவிக்கரம் நீட்டும் செய்திகளின் உண்மையறிந்து பகிருவோம். எதற்கெடுத்தாலும் அரசை குற்றம் சாட்டாமல், களத்தில் இறங்குவோம்!. மீண்டும் நம் மனிதத்தை நிரூபிக்க, இது மகத்தான வாய்ப்பு. கரம் கோர்ப்போம், பேரிடரை வெல்வோம்!

ஆசிரியர் @மனம்

நான்கு மனிதர்களை சுற்றி நடக்கும் கதை ‘விழித்திரு’!

- இயக்குநர் மீரா கதிரவன்

மிழ் சினிமாவில் ‘அவள் பெயர் தமிழரசி’ மூலம் தோல்பாவை கூத்திற்கு மகுடம் சூட்டியவர் இயக்குநர் மீரா கதிரவன். கோலிவுட்டில் சமூகம் சார்ந்து, சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவர். ‘விழித்திரு’ மூலமாக, தனது அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறார். தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள அவர், படம் குறித்து பேசியபோது,

“நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு நல்லது அல்லது தீமையைச் செய்து விட்டு செல்கின்றனர். இப்படிப்பட்ட நான்கு மனிதர்களை சுற்றி நடக்கும் கதையே ‘விழித்திரு’ படம். இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதே சவாலாக இருந்தது.

மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், காதல் கிடையாது. அன்றாடம், சமூகப் பிரச்சினைகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர்?, அரசியல்வாதிகளின் நாற்காலி வெறி, பாமர மக்களை எவ்வாறு வேட்டையாடுகிறது? என்பதுதான் இந்தப் படம். வழக்கமாக காதலைச் சொல்லித்தான் மக்களை சுவாரஸ்யப்படுத்த முடியும் என்ற தவறான கருத்தை உடைத்த படமாகவும் ‘விழித்திரு’ இருக்கும். சீனு ராமசாமி, வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குநர்கள் படம் பார்த்துட்டு, “இது ஒரு புதுவிதமான திரைக்கதை”ன்னு பாராட்டியிருப்பதே அதற்கு சான்று!

பவித்ரா

விக்னேஷ் .க

பெரும்பாலும் படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் நடந்தது. சென்னையின் முக்கிய சாலைகளில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். ஒவ்வொரு நாளும் சென்னையின் நிறங்கள் மாறிகிட்டே இருக்கும். அதனால கன்டினியூட்டில கவனமா இருக்க வேண்டியிருந்தது. இரவு நேரங்களில் படப்பிடிப்பு என்பதால ஆர்ட்டிஸ்ட் பேபி சாரா தூங்கிடுவாங்க. அதுக்குள்ள அவங்க சம்பந்தப் பட்ட ஷாட்ஸ்களை வேகமாக எடுக்கணும். இதையெல்லாம் படப்பிடிப்பின்போது எதிர்கொள்ள வேண்டியிருந்தது!

இப்படத்தின் கதாநாயகன் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தான். இரவு நேர ஒளிப்பதிவை சிறப்பா செஞ்சிருக்காரு.

ஆடியன்ஸுக்கு ‘விழித்திரு’ விஷுவல் ட்ரீட்டா இருக்கும். இரவு நேரத்தில் ஷுட்டிங் என்பதால், படப்பிடிப்பு குழுவினர் பல நேரங்களில் சோர்ந்துடுவாங்க. அதாவது மூன்று இரவுகள் தொடர்ச்சியா படப்பிடிப்பு நடந்தால், பத்து நாட்கள் அவங்க ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்துல ஆர்டிஸ்ட்டுகளோட எடையிலோ தோற்றத்திலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கக் கூடாது. நடைமுறையில் இதெல்லாம் எங்களுக்கு ரொம்பவே கடினமானதாக இருந்தது. ஏறக்குறைய படப்பிடிப்பு முடியவே இரண்டு வருடங்கள் ஆனது. பல கட்ட தடைகளுக்குப் பின் படம் இப்போ வெளியாக உள்ளது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு!” விழிப்புணர்வோடு முடித்தார் மீரா கதிரவன்!

ணக்கம், டாக்டர். மழைக்காலம் ஆரம்பிச்சிருச்சு. மழைக்கால பாதிப்பிலிருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் பத்தி சொல்லுங்களேன்?”

“வணக்கம். பருவங்கள் மாறுவது இயல்பான ஒன்றுதான். வெயில் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கிற நாம ரெண்டு நாளு மழைன்னாலே சுருண்டுக்கிறோம். அப்படி இல்லை, மழையை கொண்டாடணும். மழைக்காக விழா எடுத்துக் கொண்டாடின மண் இது. அத மனசுல வைச்சுக்கணும். அதே நேரத்துல உடலை காலத்திற்கேற்ப பாதுகாப்பா வைச்சிருக்கிற விழிப்புணர்வும் அவசியம்தான். பொதுவா இந்த மழைக்காலத்துல சளி, இருமல், சுரம், இரைப்பு (ஆஸ்துமா) காமாலை, பூஞ்சைத் தொற்று, கழிச்சல் போன்ற நோய்கள் உடலைத் தாக்கலாம்.

பொதுவாக குடிநீரைக் காய்ச்சி இளஞ்சூடாக பருகுவது நல்லது. உணவும் சூடாக உண்ணுதல் நல்லது. ஆறிய பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் சளி, கழிச்சல், காமாலை நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மழை நீரில் நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்ததும் ஈரம் முழுமையாகப் போகும் மட்டும் சுத்தமான துணி கொண்டு துவட்டி விட வேண்டும். இதனால் ஒவ்வாமை, சளிப்பித்தல், பூஞ்சைத் தொற்று ஏற்படுதல் போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குழந்தைகள், முதியவர்கள், உடல் வன்மை குறைந்தவர்கள் போன்றோருக்கு சிற்சில இடர்பாடுகள் வரலாம். அதனையும் குணப்படுத்த உதவும் எளிய சித்த மருத்துவ முறைகளையும் கூறுகிறேன்.சளி இருமல் - (1) ஆடாதோடைக் குடிநீர் - இருவேளை உணவிற்கு முன்பெரியவர்களுக்கு - 60 - 90 மி.லி. அளவுசிறியவர்களுக்கு - 30 - 60 மி.லி. அளவுகுழந்தைகளுக்கு - 10 - 30 மி.லி. அளவு

(2) திரிகடுகு சூரணம் - இருவேளை தேனுடன் - உணவிற்கு பின்பெரியவர்களுக்கு - மூன்று விரல் கொள்ளும் அளவுகுழந்தைகளுக்கு - இரு விரல் கொள்ளும் அளவு

சுரம் - நிலவேம்பு குடிநீர் (அ) சர்வசுர குடிநீர் சுரம் இருப்பதைப் பொருத்து இருவேளை முதல் நான்கு வேளை வரை

பெரியவர்கள் - 60 - 40 மி.லி.
சிறியவர்கள் - 30 - 60 மி.லி.
குழந்தைகள் - 10 - 30 மி.லி.

இரைப்பு (ஆஸ்துமா) (1) திப்பிலி இரசாயணம் காலை, மாலை உணவிற்கு பின் அளவு சுண்டைக்காய் அளவு


காமாலை

(1) கீழா நெல்லியை அரைத்து உருட்டி எலுமிச்சை அளவு மோருடன் உணவிற்கு முன்

(2) கரிசலாங்கண்ணியை அரைத்து உருட்டி எலுமிச்சை அளவு மோருடன் உணவிற்கு முன்

(3) ஆமணக்கு கொழுந்து, சீரகம், கற்பூரம் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சை அளவு மோருடன் உணவிற்கு முன்

(4) மண்டூராதி அடைக் குடிநீர் உணவிற்கு முன் இருவேளை அளவு 60 90 மி.லி.

காமாலை என்று உறுதி செய்யப்பட்டால் சித்த மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.


பூஞ்சைத் தொற்று சீமை அகத்திக் களிப்பு வெளிப்பிரயோகமாகபிரட்தண்டு தைலம் வெளிப்பிரயோகமாகஒவ்வாமை சிலருக்கு இருமல், தும்மல் போன்றவை ஏற்படலாம் அதற்கு ஆடாதோடை குடிநீர் முன்னர் கூறியபடி அருந்தலாம்.

சிலருக்கு தோலில் தடிப்புகள், அரிப்பு போன்றவை ஏற்படலாம். அதற்கு அருகம்புல் வேருடன் ஒரு கைப்பிடி, 5 மிளகு, காப்பு நீக்கிய வெற்றிலை இவற்றை 200 மி.லி. நீர்விட்டுக் கொதிக்க வைத்து 50 மி.லி.யாக வற்ற வைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் அருந்தலாம். வெளிப் பிரயோகமாக அருகம்புல் தைலம் பூசலாம்.

கழிச்சல் சுண்டை வற்றல் சூரணம் இருவேளை மூன்று வேளை தேவைக்கேற்பபெரியவர்களுக்கு ஐந்துவிரல் கொள்ளும் அளவு மோருடன்சிறியவர்களுக்கு மூன்று விரல் கொள்ளும் அளவு மோருடன்

ஓமத்தீநீர் தேவைக்கேற்ப இரண்டு மூன்று வேளை பெரியவர்கள் - 30 மி.லி. வரை நீருடன் கலந்துகுழந்தைகள் - 10 - 15 மி.லி.வரை நீருடன் கலந்து

“விரிவான பதிலுக்கு நன்றி டாக்டர். உடலைப் பாதுகாக்கிற மாதிரி வீட்டைப் பாதுகாக்க எதும் வழிமுறைகள்?”

“வீடு மட்டுமல்ல, சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை. நீர் தேங்காமல் வைத்திருந்தாலே பல நோய்களைத் தவிர்க்க முடியும்.

வீட்டில் பூஞ்சை ஏற்படாமல் இருக்க திரைச் சீலைகளை பகலில் கழட்டி வைக்கலாம். சாம்பிராணிப் புகை உள்நொச்சி புகை, உலர் வேப்பிலைப் புகை போடுவதின் மூலம் வீட்டில் உள்ள சுவர்களில பூஞ்சை படியாமலும், ஈரம் தடிக்காமலும் உலர்வாக வைக்க முடியும். பூஞ்சை வாசமே பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி சளி, இருமலை ஏற்படுத்தும். சிலருக்க இரைப்பையும் உருவாக்கும். புகை போடுவதின் மூலம் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். அதேபோன்று தலையணை உறை, போர்வை போன்றவற்றை அடிக்கடி மாற்றுவதும் அவசியம்.”

“மிகவும் நல்லது டாக்டர். மழைக்காலத்துல அருந்துகிற பானம் ஏதாவது சொல்லுங்களேன்.”

“சுக்கு நீர் அருந்துவது எப்பொழுதும் நன்மை பயக்கும். தோல் நீக்கிய சுக்கு 50 கிராம், கொத்துமல்லி 50 கிராம் பொடித்து நன்றாக கலந்து கொண்டு 200 மி.லி. நீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். மதிய நேர பானம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை மாலையில் அருந்தலாம். ‘மழை வருவது மழை வருது கசாயம் கொண்டு வா’ என வேடிக்கையாக நாங்கள் சொல்வதுண்டு. வாரம் ஒருமுறையோ இருமுறையோ நிலவேம்பு குடிநீர் அருந்துதலும் நன்மை பயக்கும்!”

‘மிகினும் குறையினும்’ நிறைவுற்றது!எல்லோருடைய மனதையும் பாதிக்கும் ‘விழித்திரு’!

_ நடிகர் விதார்த்

பவித்ரா

“நான் நடிக்கிற ஒவ்வொரு படமும் நாயகனுக்கான கதையாக இருக்காது. அது எப்போதும் இயக்குநரோட கதையாக மட்டுமே இருக்கும். ‘மைனா’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ வரை அப்படித்தான். என்னைப் பொறுத்தவரை இயக்குநர் எனக்காக எழுதிய பாத்திரத்தில் வாழணும். அப்படித்தான் ‘விழித்திரு’ படத்தில் திருடனாகவே வாழ்ந்திருக்கேன்!” ஒரு நட்சத்திரத்துக்கு உரிய எந்த அலட்டலும் இன்றி இயல்பான உடல்மொழியில் பேசுகிறார் விதார்த். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்.

“இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘விழித்திரு’ படத்தில் கதைதான் ஹீரோ. படத்தின் திரைக்கதை எல்லோராலும் பேசப்படும். நான்கு கதை மாந்தர்களை வைத்து, பின்னப்பட்ட கதை என்றாலும், இது விதார்த் படம், வெங்கட் பிரபு படம் இல்லை. இது முழுக்க முழுக்க இயக்குநரோட படம்!.

ஓர் இரவில் நடக்கிற கதை என்பதால், ஷூட்டிங்கின்போது எல்லோருமே பிஸியாக இருந்தோம். அதனால், அப்போ படம் எப்படி வருமோன்கிற கேள்விகள் நிறைய இருந்தது.

பிறகு, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் எல்லாம் முடிந்து, படத்தை முழுவதுமாக பார்த்த போதுதான் அதனோட அழகு, பிரம்மாண்டம் எல்லாம் புரிந்தது. படத்துல, சென்னையோட அழகை பார்க்கிறதுக்கே அவ்வளவு பிரமிப்பாக இருந்தது!.

பொதுவாக வெங்கட் பிரபு சாரை நல்ல பாடகராகவும், இயக்குநராகவும் மக்களுக்கு தெரியும். ஆனால், அவர் நல்ல நடிகர் என ‘விழித்திரு’ படத்துக்கு பிறகு தெரிய வரும். இந்தப் படத்தில் தன்ஷிகா மற்றும் தம்பி ராமய்யா உடனான காம்பினேஷன் சீன் எனக்கு அதிகமா இருக்கு. எங்க மூன்று பேரோட பாத்திரப் படைப்பு நகைச்சுவை கலந்து இருக்கும். கதை நகர நகர எமோஷனல் அதிகமாகும். அதோட சுவாரசியமாகவும் இருக்கும். நிச்சயம் உங்க எல்லோருடைய மனதையும் ஈர்க்கிற, பாதிக்கிற படமாகவும் ‘விழித்திரு’ இருக்கும்!” நம்பிக்கையோடு முடித்தார் விதார்த்!

வா மஹால் என்பது ஆனேகுந்தியில் இருக்கும் ஒரு பழைய அரண்மனை. அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாளிகை முகப்பில் தீப்பந்தங்கள் சில நட்டு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து எண்ணெய்ப்புகை சுருள் சுருளாக மேலேறிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைபவர்கள் முகங்களில் நெருப்பின் வெளிச்சம் உருக்கப்பட்ட பத்தரை மாற்றுத் தங்கக் குழம்பாய் ஒளிர்கிறது.

ஒரு பிரம்மாண்டமான திறந்த வெளி முற்றத்தின் மையத்தில் தீ வளர்க்கப்பட்டு அவற்றைச் சுற்றி இளைஞர்களும், இளம் பெண்களும் இசைக்கேற்ப நடனமாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகம் பார்வையாளர்கள் அனைவரையும் தொற்றுகிறது. இந்தச் சிறிய கிராமத்தில் இவ்வளவு இளைஞர்களும், இளம் கன்னியர்களும் எப்படித் திரண்டார்கள்?

இந்த மாளிகையில் அவ்வப்போது சாரணர்கள், என்.சி.சி. குழுவினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் வந்து தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு தங்குபவர்கள், ஆனேகுந்தியின் எளிய வாழ்க்கை முறையை அனுபவிக்கிறார்கள். கிஷ்கிந்தா, ஹம்பி பகுதிகளுக்குச் சென்று நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். மாலை வேளைகளில் திறந்த வெளி முற்றத்தில் பான் பயர் ( ) என்னும் நன்னெருப்பு வளர்த்து அதைச் சுற்றிலும் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். நாங்கள் ஆனேகுந்திக்குச் சென்ற நேரம் ஓர் இராணுவப் பள்ளியில் இருந்து மாணவ மாணவியர் வந்திருந்தார்கள். அதை ஒட்டி மாலை வேளைகளை ஆனே குந்தி கிராமமே கொண்டாடிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

சற்று நேரம் கழித்து விடுதிக்குத் திரும்பினோம். அரை இருட்டுப் பாதையில் சுவர்க்கோழிகள் ஒய்யாரமாய் ரீங்காரமிட்டன. சாண வாசம், வைக்கோல் வாசம், முந்திரி ஓடுகள் எரியும் வாசம் என்று கிராமத்து நறுமணம் நாசியைத் தழுவின. அந்த வாசத்துக்கு வயிற்றுப்பசியைத் தூண்டிவிடும் சக்தி இருக்கும் போல. வயிற்றில் கப, கபவென பசி. விடுதியில் சுடச்சுட ஃபுல்காக்களும், தோசைகளும் காத்திருந்தன. சாப்பிட்டோம். அறை சென்றடைந்தோம்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்தோம். காற்றில் இதமான குளிர். குளித்தோம். நவ பிருந்தாவன வழிபாட்டுக்குச் செல்பவர்கள் மேல் சட்டையின்றி, இடுப்பில் வேஷ்டி மட்டும் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று பரசுராம் அவர்கள் கூறியிருந்ததால் அவ்வாறே உடுத்திக் கொண்டோம். பெண்கள் புடவை அணிந்து செல்லலாம். இளம் பெண்கள் பாவாடை, தாவணி எனும் பாரம்பரிய உடையில் செல்வது நலம்.

ஆறு மணிக்கெல்லாம் ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தை அடைந்து விட்டோம். அங்கிருந்துதான் நவபிருந்தான ஆராதனைக்கு அர்ச்சகர்கள் புறப்படுவார்கள் என்பதால் அவர்களோடு இணைந்து சென்று அவர்களுடனேயே திரும்பி வந்து விடலாம் என்று பரசுராம் அறிவுறுத்தியிருந்தார்.அரை மணி நேரம் கழித்து அர்ச்சகர்களோடு இணைந்து படகுத்துறையை நோக்கி நடந்தோம். துங்கபத்ரா நதியின் வடகரையில் உள்ள ஆனேகுந்தி படகுத்துறையிலிருந்து, படகுகள் மூலம், நதியின் நடுவே இருக்கும் நவபிருந்தாவனத் தீவுப்பகுதிக்குச் செல்லலாம்.

அந்தப் பயணம் மிஞ்சிப் போனால் பதினைந்து நிமிடங்கள்தான் எடுத்துக் கொள்ளும்.

நீண்டு வளைந்து செல்லும் துங்கபத்ரா, அதன் இரு கரைகளிலும் பரவிக் கிடக்கும் பெரும் பாறைக் கற்கள், பச்சைத் தாவரங்கள், ஆற்றின் இடையே ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைகள், இவற்றினூடே சுழித்து ஓடும் நீரோட்டம், தண்ணீரின் நடுவிலேயே எழுப்பப்பட்டுள்ள அறுபத்து நான்கு கால் மண்டபம், பிரமாண்ட பாறைகளையே உடலாகக் கொண்டு, பெரு மலையாய் கண்ணெதிரே எழுந்து நிற்கும் தாரா பர்வதம் என இயற்கைக் காட்சிகள் நெஞ்சை அள்ளுகின்றன.

இவற்றையெல்லாம் ரசித்தவாறே தீவை அடைந்து, அங்கிருக்கும் படகுத் துறையில் இறங்கி, பாறைத்திட்டில் சற்றே நடந்து, நவபிருந்தாவன வளாகத்தை அடைந்தோம். வளாகத்தைச் சூழ்ந்துள்ள சிறிய சுற்றுச்சுவர். கோபுரமோ, கதவுகளோ இல்லாத எளிய நுழைவாயில். உள்ளே நுழைந்ததும், எதிரே, திறந்த வெளியில், சமதரையில், நவபிருந்தாவனம் என்ற ஒன்பது புண்ணிய சமாதிக் கோயில்கள் அருள் காட்சி அளிக்கின்றன.

கருங்கல்லால் எழுப்பப்பட்ட துளசி மாடங்களைப் போன்ற தோற்றத்தில், சிறிதும், பெரிதுமாக, பல்வேறு அளவுகளில் அவை வளாகம் முழுவதும் பரவியுள்ளன. புனிதமான, அடர் பச்சை துளசிச் செடிகள் அவற்றின் மேற்பகுதிகளை அலங்கரிக்கின்றன. பிருந்தாவனங்களின் எளிய தோற்றமே, அவற்றின் புனிதத் தன்மையை பறைசாற்றுகின்றன. கண்மூடி, கரம் குவித்து, தியானிக்க வைக்கின்றன.

வளாகத்தின் மத்தியில், முன்புறம் தூண்களுடன் கம்பீரமாகவும், பிருந்தாவனங்கள் அனைத்துக்கும் நடுநாயகமாகவும் அமைந்துள்ளது, மஹான் ஸ்ரீ வியாசராஜரின் பிருந்தாவனம். மற்ற எட்டு பிருந்தாவனங்களும், வியாசராஜ பிருந்தாவனத்தை மையமாக வைத்தே, அதைச் சுற்றிலும், அதாவது அதற்கு இடப்புறமாகவும், வலப்புறமாகவும், பின்புறமாகவும் அமைந்துள்ளன. வளாகத்தில் நுழைந்தவுடன் வலது புறம், சில படிகள் ஏறி அடையக்கூடிய மேடான பகுதியில், ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயரின் சிறிய சந்நிதிகள் உள்ளன.

ஆதிசேஷப் படுக்கையில் சயனித்திருக்கும் அரங்கனையும், அவர் பாதம் பற்றியபடி அருகே நிற்கும் சிற்பச்சிறப்பு மிக்க தேவியின் அழகிய உருவத்தையும், நேர் எதிரே இருக்கும் முதல் சந்நிதியில் தரிசிக்கலாம்.

இதற்கு இடது புறம் உள்ள ஆஞ்சநேயரின் சந்நிதியில், வலது கையை ஓங்கியவாறும், இடது கையில் சௌகந்திகா புஷ்பத்தை ஏந்தியவாறும், நீண்ட வால் தலையைச் சுற்றிலும் வளைந்திருக்க, ராவண புத்திரன் அக்ஷயகுமாரனைக் கால்களின் கீழே இட்டு வதம் செய்யும் கோலத்தில், ஆஞ்சநேயர், ஸ்ரீ ஜாக்ரதை ஆஞ்சநேயர் என்ற பெயருடன் எழுந்தருளி இருக்கிறார். வியாசராஜரின் பிருந்தாவனத்துக்கு நேர் எதிரே ஹனுமாரின் மற்றொரு சந்நிதி அமைந்துள்ளது. தூண்கள் தாங்கும் முன்மண்டபத்துடன் கூடிய இந்த சந்நிதியில் ஆஞ்சநேயர், 'அவதாரத்ரய ஹனுமான்’ என்ற அபூர்வப் பெயருடன் காட்சி தருகிறார்.

கால்களைக் குத்திட்டு அமர்ந்து, பருமனான புஜங்களுடன், இரு கைகளில் ஓலைச் சுவடிகளை ஏந்தியவாறு எழுந்தருளியிருக்கிறார், அவதார த்ரய ஹனுமான். 'த்ரய' என்ற வடமொழிச் சொல்லுக்கு, மூன்று என்ற பொருள். 'அவதார த்ரய' என்ற பெயருக்கு, மூன்று அவதாரங்களின் கலவை என்ற அர்த்தம். வாயுபகவான் த்ரேதா யுகத்தில் ஹனுமாராக அவதாரம் எடுத்தார். அடுத்து த்வாபர யுகத்தில் பீமனாகவும், கலியுகத்தில் மத்வாசார்யராகவும் அவதரித்தார். இந்த மூன்று அவதாரங்கள் இணைந்து தோற்றமளிப்பவரே, ஸ்ரீ அவதாரத்ரய ஹனுமான்.

முகம் அனுமனைக் குறிக்கிறது; பருத்த புஜங்களும், பின்னால் இருக்கும் கதையும் பீமனைக் குறிக்கின்றன; கையில் உள்ள சுவடிகள், பெரும் பண்டிதரான ஸ்ரீ மத்வாசார்யரைக் குறிக்கின்றன. அனுமனுக்குப் பின்னால், அதே கருவறையில், ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியும் எழுந்தருளியுள்ளார்.

மஹான்களின் ஒன்பது பிருந்தாவனங்களுடன், ஸ்ரீ ரங்கநாதர், ஜாக்ரதை ஆஞ்சநேயர் மற்றும் அவதாரத்ரய ஹனுமான் ஆகியோரும், நவபிருந்தாவன வளாகத்தில் நமக்கு அருள்பாலிக்கின்றனர். நவபிருந்தாவன வழிபாடு என்பது எளிமையான ஒன்று. இங்கு 'செய்தே ஆகவேண்டும்' என நிர்ணயிக்கப்பட்ட சடங்குகளோ, வழிபாட்டு முறைகளோ எதுவும் இல்லை! இங்கு வந்து வழிபடத் தேவையானவை பக்தி, நம்பிக்கை, உள்ளத் தூய்மை, உடல் தூய்மை இவ்வளவு தான்!

இப்பகுதி, புண்ணிய துங்கபத்ரா நதியின் நடுவிலேயே அமைந்திருப்பதால், நவபிருந்தாவனத் திட்டுக்கு வந்து சேர்ந்ததும், முடிந்தவர்கள் நதியில் நீராடலாம். இயலாதவர்கள், அதன் புனித நீரை தலையில் தெளித்துக் கொள்ளலாம். தங்கும் இடத்திலோ அல்லது நதியிலோ நீராடி முடித்து, துவைத்து உலர்த்திய ஆடைகளை அணிந்து கொண்டு, பக்தியுடன் நவபிருந்தாவனத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஆடவர்கள் வேஷ்டி அணிந்து கொண்டு, சட்டை அணியாமல், அங்கவஸ்திரம் என்னும் மேல்துண்டைப் போர்த்திக்கொண்டு செல்லவேண்டும்.

நவபிருந்தாவனத்தில், பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் அல்லது பிரார்த்தனை நிறைவேறியவர்கள், ஸ்ரீரங்கநாதர், ஜாக்ரதை ஆஞ்சநேயர், அவதாரத்ரய ஹனுமார் மற்றும் ஒன்பது பிருந்தாவனங்கள் ஆகியவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபத்தை, அதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் ஏற்றி வைத்து வழிபடலாம். இதே போல, அவதாரத்ரய ஹனுமானுக்கு சிறிய வெள்ளை வஸ்திரமும், ஒன்பது பிருந்தாவனங்களுக்கு, பெரிய அளவில் வஸ்திரங்களும் சாற்றலாம். பிருந்தாவன மஹான்கள் துறவிகள் ஆதலால், பிருந்தாவனங்களுக்கு காவி நிற வஸ்திரங்களைச் சாற்றலாம்.

தீபங்களை ஏற்றுபவர்கள் தாங்களே அவற்றை உரிய இடங்களில் ஏற்றலாம். வஸ்திரங்களை அணிவிக்க விரும்புபவர்கள், அவற்றை அர்ச்சகர்களிடம் முன்னதாகவே கொடுத்து விடுவது நல்லது. பின்னர், நவபிருந்தாவனங்களை பிரதட்சணம் செய்யலாம். ரங்கநாதர், ஜாக்ரதை ஆஞ்சநேயர், அவதாரத்ரய ஹனுமான் ஆகியோருக்காக ஒவ்வொரு முறை வலம் வந்த பின், ஒன்பது பிருந்தாவனங்களுக்காக, ஒன்பது முறையோ அல்லது, பதினெட்டு, இருபத்து ஏழு, முப்பத்தாறு என ஒன்பதின் மடங்கிலோ வலம் வரலாம்.

இங்கு சமாதி கொண்டுள்ள மகான்கள், அவரவர்கள் பிருந்தாவனங்களில் இன்றும் ஜீவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'நவபிருந்தாவனங்கள் உயிர் உள்ளவை ஆகவே தொடக் கூடாது' என்று நுழைவாயிலிலேயே தெளிவாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணம் கொண்டும், பிருந்தாவனங்களுக்கு அருகே செல்வதோ அவற்றைத் தொடுவதோ, கண்டிப்பாகக் கூடாது. இதனால் கடும் பாவத்துக்கு ஆளாவோம்!

ஒன்பது பிருந்தாவனங்களைச் சுற்றிலும், மஞ்சள் நிறத்தில் கோடு ஒன்று வரையப்பட்டுள்ளது. இதற்கு வெளிப்புறமாகத்தான் பிரதட்சணம் செய்ய வேண்டும். இதைத் தாண்டி கண்டிப்பாக உள்ளே செல்லக்கூடாது.

‘பத்மநாபம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸராஜஹம்ரகுவர்யம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் ததைவ சஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம் நவ பிருந்தாவனம் பஜே!’

என்று, அங்கே சுற்றுச் சுவரில், கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள நவபிருந்தாவன மஹான்களுக்கான த்யான ஸ்லோகத்தை மெதுவாக உச்சரித்தவாறு, நவபிருந்தாவனங்களை வலம் வந்து வழிபடலாம். இவை தவிர, அர்ச்சகர்கள் செய்யும் பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனைகளையும் தரிசிக்கலாம்.

(பயணம் தொடரும்)

கேமிராவுக்குப் பின்னால் இயக்குநரின் முகம் வேறு’!

_ நடிகர் ராகுல்

பவித்ரா

விக்னேஷ் .க

“பொறியியல் படிப்பு படிச்சிருந்தாலும், சினிமாவின் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்தது. வடக்கு இந்தியாவுல வளர்ந்ததால், எனக்கு ஹிந்தி நல்லாத் தெரியும். ‘விழித்திரு’ படத்தில் பணியாற்றும்பொழுது ஹீரோயினுக்கு சீனை சொல்லிக்கொடுத்து, இயக்குநருக்கு உதவியாக இருந்திருக்கேன். நடிப்புன்னு இல்லாம, எனக்கு படம் இயக்கவும் ஆசை இருக்கு. நடிகர்கள் அஜீத், விஜய் சேதுபதி மாதிரி எனக்கு எந்த பின்புலமும் கிடையாது. அவங்களை மாதிரி கடுமையாக உழைக்கணும். மக்களின் ஆதாரவோட சினிமாவுல ஜெயிக்கணும்!” நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறார் புதுவரவு நடிகர் ராகுல்.

‘விழித்திரு’ பட வாய்ப்பு குறித்து?


“இயக்குநர் மீரா கதிரவன் எனக்கு நல்ல நண்பர். சினிமா வாய்ப்பு தேடிட்டு இருக்கும்பொழுது, அவருகிட்ட “உங்க படத்துல நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீங்கன்னா என்னுடைய சினிமா கேரியர்ல அது நல்ல பிரேக் கொடுக்கும்” சொன்னேன். ‘விழித்திரு’ படம் முடிவானதும், அதுல எனக்கு வாய்ப்பு தந்தாரு. அதற்கு நான் என்னோட நன்றியை தெரிவிச்சுக்குறேன்!”

படத்தில் பணியாற்றிய அனுபவம்?

“முதல்ல க்ளைமேக்ஸ் காட்சிகளைத் தான் படம் பிடிக்க திட்டமிட்டோம். அந்த காட்சியிலதான் எல்லா ஆர்டிஸ்ட்டும் இருப்பாங்க.

படப்பிடிப்பின் முதல் நாளே எனக்கு ரொம்ப பதட்டமா இருந்தது. இயக்குநர் வெங்கட்பிரபு சார், கிருஷ்ணா சார் தான் என் பயத்தை போக்கினாங்க. போட்டோ ஷூட்ல இருந்தே எனக்கு உதவியா இருந்தாங்க. அதை மறக்க முடியாது!”

முதல் படம் என்பதால் நடிப்புக்கு பயிற்சி எடுத்தீர்களா?

“இல்லைங்க. நடிப்பு பயிற்சி மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. கண்ணாடி முன்னால நின்னுகிட்டு நடித்து பார்க்கிறதுதான் நல்ல பயிற்சின்னு நினைக்கிறேன்.

அதுமட்டுமில்லாம இயக்குநர் மீரா கதிரவன் சார் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அதனால ‘விழித்திரு’ படத்துல முக்கியமான பாத்திரத்துல நடிப்பது சுலபமாக இருந்தது!”

இயக்குநர் மீரா கதிரவன் பற்றி?

“என்னுடைய நீண்டகால நண்பர். நண்பர்கள் வட்டத்துல இயல்பாக சிரிக்க சிரிக்க பேசுவாரு. ஆனால் படப்பிடிப்புன்னு வந்துவிட்டால் ரொம்ப கண்டிப்பானவரு. வேலையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கிட்டு நூறு சதவீதம் அர்ப்பணிப்போடு செய்வாரு. கேமிராவுக்குப் பின்னாடி அவருடைய முகமே வேறு!”

அடுத்தப் பட வாய்ப்பு ?

“சினிமா இண்டஸ்ட்ரிக்கு நான் புது வரவு. அதனால என்னை நிறைய இயக்குநருக்கு தெரியாது. ‘விழித்திரு’ படத்தை பலரும் பார்த்துட்டு வாழ்த்தினாங்க. இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்!”

சிறுநீரகச் செயலிழப்பு

ன்றைய சூழலில் மனிதர்களிடம் அதிகமாக காணப்படும் நோய்களில் ‘சிறுநீரக செயலிழப்பு’ முன்னணியில் நிற்கிறது. அதன் அறிகுறிகளும், அந்நோயை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்

“விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித இனத்தின் வரமா? சாபமா? என்று எத்தனையோ முறை பட்டிமன்றம் நடத்திவிட்டோம். ஆனால், அதற்கான தீர்வு என்பது இன்று வரை கொடுக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும், நகலக கடைகளைப் போல் எல்லா மருத்துவமனைகளிலும் சிறுநீரக டயாலிசிஸ் சென்டர் பெருகிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். யாரைக் கேட்டாலும், “சிறுநீரகக் கோளாறு” என்று கூறுவது மிகவும் சகஜமாகி விட்டது.

சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டால் தன்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணி மன உளைச்சலுக்கு பலர் ஆளாகிறார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆயுர்வேத முறையிலும், சித்த முறையிலும், சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்தலாம். ஆனால் அதற்கு நோயாளிகள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.

சிறுநீரகக் செயல் குறைபாடுகள் ஏற்படக் காரணம் :

அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.

இரத்த சர்க்கரையின் அளவை கவனிக்காமல் இருப்பது.

அதிகமாக பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகள், காய்கறி, பழங்களை உட்கொள்ளுதல்.

தொடர்ந்து வாய்வுத் தொல்லைகளுக்கு, மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை நாமே வாங்கி உட்கொள்வது.

ஒருவருக்கு இலேசாக கால் வீக்கம் ஏற்பட்டு கவனிக்க தவறிவிட்டால், அவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மார் சளி சேர்ந்து விடும்.

பின்பு அவர் மருத்துவமனையில் சென்று சோதனை செய்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கும்.

சிறுநீரக செயலிழப்பு என்றாலே டயாலிசிஸ்தான், வேறு சிகிச்சையே கிடையாதா? என்று கேட்டால், நாங்கள் “கட்டாயமாக இருக்கிறது” என்று தான் கூறுவோம். சிறுநீரக செயலிழப்பு என்பது சமீபத்தில் தோன்றிய நோயே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. அதற்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் சிறுநீர் செயலிழப்பு ஏற்பட்டதும், அவசர சிகிச்சையாக டயாலிசிஸ் சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர். டயாலிசிஸ்லிருந்து விடுபடுவது எப்படி? என்றால்,

செயல்படாமல் இருக்கும் உறுப்புகளை பலப்படுத்துதல் பலவீனமாக இருக்கும் உறுப்புகளை பலப்படுத்துதல்

உணவு முறைகள் மாற்றம்

இஞ்சி ஒத்தடம்

உடற்பயிற்சி

மனப்பயிற்சி

பிராணாயாமம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள்

உடலை சுத்திகரிக்கும் மாத்திரைகளை உட்கொள்ளுதல்; பேதி மாத்திரை

மேற்கண்டவற்றை தொடர்ந்து செய்து வந்தால், வாரத்திற்கு இருமுறை டயாலிஸ் என்பது குறைந்து வாரம் ஒருமுறை என்றாகி, படிப்படியாக குறைந்து பதினைந்து நாட்களுக்கொருமுறை என்றாகும். பெரும்பாலானோர், டயாலிசிஸ் சிகிசிச்சையை நிறுத்தி வெறும் மருந்து மாத்திரைகளையே உட்கொள்கிறார்கள். அவர்களின் ஆரோக்கியமும் முன்னேறும், அமைதியான வாழ்க்கையையும் பல்லாண்டு காலம் வாழலாம்!”.

'பொன் விதி' பாடல் ரசிகர்களை கவரும்!

‘விழித்திரு’ படத்தின் மூலமாக, இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சத்யன் மகாலிங்கம். படத்தில் ஏழு இசையமைப்பாளர்களை பாடவைத்துள்ளது இவரது சிறப்பு. இதுகுறித்து அவர் பேசும்போது,

“இங்கிலிஷ் ஹார்ன் எனப்படும் அரிய வகை இசைக்கருவியை நாங்கள் 'விழித்திரு' படத்தில் பயன்படுத்தி இருக்கின்றோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக, டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி பிரகாஷ் குமார், சந்தோஷ் நாரயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா மற்றும் அல்போன்ஸ் என மொத்தம் ஏழு இசையமைப்பாளர்கள் எங்கள் படத்தில் இருக்கும் ஆறு பாடல்களை பாடியுள்ளனர். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதை விட பெருமை வேறு என்ன இருக்கிறது. மேலும் எந்தவித இசை கருவியையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மனித குரலை மட்டும் கொண்டு ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றோம். அதுதான் சந்தோஷ் நாரயணன் பாடி இருக்கும் 'பொன் விதி' பாடல். நிச்சயம் ரசிகர்களை கவரும் படமாக விழித்திரு இருக்கும்" என்றார்.


பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘எக்ஸ் வீடியோஸ்’!

- இயக்குநர் சஜோ சுந்தர்

விக்னேஷ் .க

பவித்ரா

யக்குநர்கள் ஹரி, பிரகாஷ் ராஜின் பட்டறையில் இருந்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சஜோ சுந்தர். தன்னுடைய நண்பனின் மனைவிக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்னையை மையமாக வைத்து, ‘எக்ஸ் வீடியோஸ்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். விரைவில், கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் வெளியாக உள்ள இப்படம் குறித்து, அவர் பேசும்போது,

“நம்முடைய சமூகத்தில் ஆபாச வீடியோக்களால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம். அவர்களுடைய ஆன்மாக்கள் தான், எனக்கு பின்னால் பலமாக இருந்து ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தை எடுக்க வைத்திருக்கு!.

படம் இயக்கணும்கிற ஆர்வத்துலதான் நான் சினிமாத்துறைக்குள்ள வந்தேன். எல்லார் மாதிரியும் கமர்ஷியல், காமெடி படங்கள் இல்லாமல், சமூகத்துக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய படத்தை, நாம ஏன் எடுக்கக் கூடாது?ன்னு நினைத்தேன். அந்த முயற்சியின் பலன்தான் இந்தப் படம். ‘நம்முடைய தினசரி வாழ்வில், நமக்கே தெரியாமல் நாம் எத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொள்ள நேர்கிறது’ என்பதன் ஒன்லைனே ‘எக்ஸ் வீடியோஸ்’!

காதலுக்கு சாட்சியாக, முன்பு கடிதங்கள் தான் இருக்கும். ஆனால் இன்றைய ஆண்ட்ராய்டு யுகத்தில், காதலர்களுக்கு சாட்சி, அவங்களோட அந்தரங்கப் படங்கள்தான். காதலன் கேட்கிறானேன்னு, விழிப்புணர்வே இல்லாமல் தன்னுடைய அந்தரங்ககளை ஷேர் செய்றாங்க. ஒருமுறை டிஜிட்டல்ல உங்களோட படங்களை பதிவேற்றிட்டீங்கன்னா, அதனை எக்காலத்துக்கும் அழிக்க முடியாது. ஆகவே, காதலர்கள் ரொம்ப எச்சரிக்கை உணர்வோடு இருக்கணும்!. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்தலும் அவசியம்!

நம்முடைய நாட்டில், செக்ஸ் என்கிற வார்த்தையையே தவறான அர்த்தம் கொண்டதாக மாற்றிவிட்டோம். கடந்த இருநூறு வருடங்களாகத்தான் இப்படி ஒரு நிலைமை, சமூகத்துல இருக்கு. அதற்கு முன்பே,

'நம்முடைய முன்னோர்கள் கோயில் சிற்பங்கள் மூலமாக, செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்காங்க. அதற்கான ஆதாரங்கள் இப்பவும் நம்முடன் இருக்கு!'

நம்முடைய பிள்ளைகளுக்கு சரியான வயதில், செக்ஸ் எஜூகேஷனை போதித்தால் கட்டாயமாக அவர்களுக்கு புரிதல் ஏற்படும். பல தவறுகள், ஆபத்துகளை எளிமையாக தவிர்க்கலாம்!.

‘எக்ஸ் வீடியோஸ்’ கதையை எழுதி, முடித்துவிட்டு பல தயாரிப்பாளர்கள்கிட்டே வாய்ப்பு கேட்டு, அலைந்தேன். ஆனால் அவர்கள் இதை ஆபாச படமாகத்தான் புரிஞ்சிக்கிட்டாங்க. யாருமே தயாரிக்க முன்வராதபோது, நானும் என்னுடைய சில நண்பர்களும் சேர்ந்து படத்தை தயாரிக்கும் முடிவுக்கு வந்தோம். இப்போது எங்களுடைய முயற்சி வெற்றி பெற்றிருக்கு!

தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படம் வெளியாகுது. ஹிந்தியில் வெளியிட சென்சார் போர்டுக்கு படத்தை காண்பித்தேன். அந்தக் குழுவில் பெரும்பாலும் பெண்கள்தான் இருந்தாங்க. படம் பார்த்துட்டு, “இது போன்ற தவறுகள் எல்லாம் நடக்குமா?”ன்னு கேட்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஆனாங்க!. பெண்களை மனதில் வைத்து, சில காட்சிகளை மட்டும் நீக்க சொன்னாங்க. பெண்களுக்கான பிரத்யேக காட்சிகள் திரையிட நான் பேசிட்டு இருக்கேன்.

‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தை கல்லூரி, பள்ளிகளில் திரையிடணும். வயதுக்கு வந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. முக்கியமாக, பெற்றோர்கள் இப்படத்தை பார்க்கணும் அறிவுறுத்துறேன். படம் பார்த்துட்டு, தங்களுடைய பிள்ளைகளையும் இந்தப் படத்தை பார்க்க அனுமதிக்கணும்னு வேண்டுகோள் வைக்கிறேன்!.” என்று கூறி நமக்கு வியப்பும், ஆச்சர்யம் மேலிட வைத்தார் இயக்குநர் சஜோ சுந்தர். அண்மையில் இப்படத்தின் டீசர் ஒன் மில்லியன் பார்வையாளர்களை சென்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!.