விபரீத விமர்சனங்கள் வேண்டாமே!

இந்திய சினிமாவின் தரம், இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முன்னேறி உள்ளதற்கு காரணம், தொழில்நுட்பரீதியாக நாம் அடைந்துள்ள முன்னேற்றம் மட்டுமல்ல; மனித வாழ்வின் அவலத்தை ரத்தமும் சதையுமாக பதிவு செய்ததால்தான். ஆகவே, இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடி வரும் இவ்வேளையில், இப்போதும் நாம் இயக்குநர் சத்யஜித்ரே இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ படத்தை நினைவு கூறுகிறோம். அப்படம் எடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதை முறியடிக்கிற படங்களை நாம் எடுக்கவில்லையா?

பெரிய பட்டியல் போடும் அளவுக்கு பல்வேறு மொழிகளில் எடுத்திருக்கிறோம். ஆனால், ‘பதேர் பாஞ்சாலி’யில் உள்ள யதார்த்த அழகியலையும், மானுட அவலத்தை பதிவு செய்வதிலும் கோட்டை விட்டுவிட்டோம். ‘சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம்; வியாபாரம் தான் இங்கே பிரதானம்’ என்கிற கோட்பாட்டுக்குள் நாம் நகர்ந்ததுதான் அதற்கு காரணமா?

உறுதியாக, அப்படியிருக்க வாய்ப்பில்லை. வணிகநோக்கில் தரமான படங்கள், உலகம் முழுவதும் எடுக்கப்படுகின்றன. அப்படங்களில் மனித வாழ்க்கையின் மையப் பிரச்னைகள் அலசப்படுகின்றன. ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ என்கிற ஒரு படம் பல மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறது. தொடர்ந்து அந்தப் படம் குறித்த, விவாதங்கள் எதோ ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரச்னை பின் எங்கே? என்று நம் மூளைக்குள் அலாரம் அடிக்கிறதா?

கதைகளால் நிரம்பியது மானுட வாழ்வு. கதை சொல்லியே வளர்க்கப்பட்டவர்கள் நம் முன்னோர்கள். நாமும் பாட்டிகளின் கதைகள் வழியேதான் வளர்ந்தோம். ஆனால், புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் அதை மறந்து விட்டோம். உட்கார்ந்து கதை சொல்வதிலோ, கேட்பதிலோ, படிப்பதிலோ நாம் பின்தங்கிவிட்டோம். ‘வேகம்.. வேகம்..’ இது ஒன்றே நம் தாரக மந்திரமாக இருக்கிறது. அதனால், எது சரி; எது தவறு என்று கண்டறிவதில் கூட நமக்கு அகச்சிக்கல்கள் இருக்கின்றன. அதன் விளைவுதான் யாரோ ஒருவர் விமர்சனம் செய்வதை, நம் மனம் ஏற்க மறுக்கிறது; விவாதிக்க வைக்கிறது; முடிந்தால் சண்டையிடவும் தூண்டுகிறது. முதலில், ஆரோக்யமான விமர்சனங்களை ஏற்கப் பழகுவோம். விமர்சிக்கிற நாமும் பொறுப்புணர்வோடு வார்த்தைகளுக்கு ‘சென்சார்’ போடுவோம். அப்போது தானாய் தலைநிமிரும் தமிழ் சினிமா!

@மனம்

ஆசிரியர்

தீயணைப்பு வீரர்களுக்கு மகுடம் சூட்டும் நெருப்புடா!

நடிகர் விக்ரம் பிரபு எக்ஸ்கிளுஸிவ்!

ன்னை இல்லத்தின் வாரிசுகளில் ஒருவர் நடிகர் விக்ரம் பிரபு. கோலிவுட்டில் தாத்தா சிவாஜி கணேசனைப் போல, ஒவ்வொரு படத்திலும் ‘சிகரம் தொடு’கிறார். இப்போது ‘பர்ட்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ எனும் நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறார். ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ அலுவலகத்தில் தன்னுடைய தாத்தாவின் பெரிய படத்துக்கு முன்னால் பவ்யமாக அமர்ந்தபடி, ‘நெருப்புடா’ படம் குறித்து பேசியதிலிருந்து..

“இன்றைக்கு பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ரஜினி சாரை தெரியாம இருக்காது.

அதேபோல, அவருடைய ‘நெருப்புடா’ வசனமும் தான். அவருடைய பிரம்மாண்டத்தாலதான் “நெருப்புடா” என்கிற பாடலே பெரிய அளவிலே போய் சேர்ந்துச்சு. ஆரம்பத்தில் நாங்க இந்தத் தலைப்பை யோசிக்கவே இல்லை. நெற்றிக்கண், தீ போன்ற தலைப்புகள்தான் பரிசீலனையில் இருந்தது. கபாலி படத்தில் இருந்து அந்தப் பாடல் வெளியானபோது ‘என்னடா இது நம்ம சப்ஜெக்ட்டுக்கு ஏற்றமாதிரி இருக்கே.. என்ன செய்யலாம் தலைப்பை கேட்டு பார்க்கலாமா’ன்னு தோணுச்சு. பிறகு, தாணு சாரை மீட் பண்ணினோம். “தாராளமா எடுத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டார்.

கிராபியென் ப்ளாக்

படத்தலைப்பை கேட்டுவிட்டு ரஜினி என்ன சொன்னார்?

“தீயணைப்பு வீரர்களை பற்றிய படம்தான் ‘நெருப்புடா’. எங்களுடைய டாக் லைனே ‘ஃபயர் வித் இன் யு’ தான். உனக்குள்ளே இருக்கிற நெருப்பாலதான் எதையுமே, நீ சாதிக்க முடியும் என்பதுதான் படத்தோட ஒன்லைனே!. ‘நெருப்புடா’ தலைப்பை பார்த்துட்டு ரஜினி சார் கேட்டாங்க. “டிரைலரை பார்த்துட்டு இது பொருத்தமான தலைப்பான்னு, நீங்களே சொல்லுங்க அங்கிள்..” சொன்னேன். அதுபோல படத்தோட டீசர், டிரைலரைப் பார்த்துட்டு முதலில் கைதட்டி பாராட்டியது ரஜினி சார் தான்!. அதேபோல, மக்களோட ஆதரவும் படத்துக்கு கிடைக்கும்னு உறதியாக நம்புறோம்!”

தீயணைப்பு வீரர் பாத்திரத்தில் நடித்தது குறித்து?

“சமூகத்துல ஒரு மனுஷன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ விரும்புறான்..? என்பதை சொல்கிற படம்தான் ‘நெருப்புடா’. நம்மோட வாழ்க்கையில் தீ என்பது சாதாரண விஷயமில்லை. அதேபோல தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையும்தான்.

சென்னையை சுனாமி, பெருவெள்ளம், வர்தா புயல்னு தாக்கியபோதெல்லாம், அங்கெல்லாம் முதல் ஆளாக வந்து நின்று, நம்மை காப்பாற்றியது அவங்க தான். தன்னுடைய உயிரையும், குடும்பத்தையும் பற்றி கவலைப்படமால் அடுத்தவரின் உயிரை காக்கப் போராடுகிற தன்னலமற்ற அவர்களோட மனசு, ரொம்பப் பெரியது. படத்தில் நடிக்கும்போது தீயணைப்பு வீரர்கள் மீதான மதிப்பு, எனக்கு மேலும் கூடியது. நிச்சயம் அவர்களுக்கு மகுடம் சூட்டுகிற படம் தான் நெருப்புடா!”

நிக்கி கல்ரானி படத்தின் கதாபாத்திரம் எப்படி?

பொதுவாக ஷுட்டிங்கில் நிக்கி, திருதிரு துருதுருன்னு இருப்பாங்க.

படத்துல அவங்களோடது ஒரு பாஸிட்டிவ் பாத்திரம். தன்னோட கேரக்டரை உணர்ந்து, சிறப்பா நடித்திருக்காங்க. ஒரு நேர்மறை பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்காங்கன்னுதான் சொல்லுவேன். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கு. ஃபேமிலியாக வந்து பார்க்கக் கூடிய படமாக ‘நெருப்புடா’ இருக்கும்!

படப்பிடிப்பில் மறக்க முடியாத நாள் உண்டா?

“சென்னையில் இருக்கிற கண்ணகி நகரில் சுமார் 65 ஆயிரம் வீடுகள் இருக்கு. அங்கே, 30 நாட்கள் நாங்க படப்பிடிப்பை நடத்தினோம். பெரிய டீமை வைச்சிக்கிட்டு, பெரிய மைக்கில் “ஆக்ஷன், கட்” சொல்லி சத்தம் போடறதை, அனுசரித்துக்கிட்டு போகிறதுக்கு பெரிய மனசு வேணும். அந்த மக்கள் பொறுமையாக எங்களை ஏத்துக்கிட்டாங்க. படத்துல கண்ணகி நகரும் ஒரு கேரக்டராகவே டிராவல் ஆவறதை, நீங்கள் பார்க்கலாம். அங்கே ஒரு மணிக்கூண்டு செட் போட்டோம். அதுவே, இப்போ அந்த நகரினுடைய அடையாளமாக ஆகிப்போயிடுச்சு!”

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளீர்களே?

“ஒரு நடிகனா எனக்கு எதிரே உள்ளதுதான் தயாரிப்பாளர் ரோல். இரண்டையும் எப்படி பேலன்ஸ் பண்ணப்போறோம் என்கிற யோசனை ஆரம்பத்தில் இருந்தது. என்னுடைய அலுவலகத்தில் இருக்கும்போது தயாரிப்பாளராக இருப்பேன். படப்பிடிப்புக்குள் நுழையும்போது அங்கே நான் நடிகன் மட்டும் தான்!. புரொடக்ஷனை கவனிச்சிக்கறதுக்கு தனியாக நான்கு பேரை வைத்திருக்கேன். அவங்க ஒத்துழைப்போடு, எல்லாம் சரியா நடக்குது!

பர்ட்ஸ் ஆர்ட்டிஸ்ட்?

“தாத்தா என்கூட பேசும்போதெல்லாம் “என்னை எல்லோரும் பர்ஸ்ட்னு சொல்லுவாங்க.. நீயும் பர்ஸ்ட்டா இருக்க முயற்சி பண்ணேன்..” சொல்லுவாங்க. அதனால, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும்போது அது தாத்தாக்கிட்ட இருந்து தொடங்கினா சரியா இருக்கும்னு நினைச்சேன். அதனாலதான் ‘பராசக்தி’ எனும் படத்தினுடைய சக்சஸையே லோகோவாக தேர்வு செய்தேன். ‘பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’னு பேரும் வைத்தேன். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் முதல் நாயகன் முதல் நடிகர் யாரு?ன்னு, உலகத்தின் எந்த மூலையிலும் வசிக்கிற தமிழனிடம் கேட்டீர்கள் என்றால், அவர்கள் “சிவாஜி சார்”னுதான் சொல்வாங்க.. நானும் அதைத்தான் உங்ககிட்ட சொல்றேன்!” தன்னம்பிக்கையோடு முடித்தார் விக்ரம் பிரபு.

கவிதைகள் சொல்லவா!

பாடலாசிரியர் முருகன் மந்திரம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அம்மச்சிக்கோயிலை சேர்ந்தவர் பாடலாசிரியர் முருகன் மந்திரம். ‘பேசுவது கிளியா’, ‘விருந்தாளி’, ‘தேநீர் விடுதி’, ‘காதல் பாதை’, ‘திருட்டு விசிடி’, ‘பட்டினப்பாக்கம்’ உள்ளிட்ட படங்களில் பாடல் எழுதியுள்ளார். விரைவில் வெளியாக உளள ‘கேக்ரான் மேக்ரான் கம்பெனி’, ‘நாட்டுக்கும் வீட்டுக்கும்’, ‘ஓவியா’, ‘மியா’, ‘நாகேஷ் திரையரங்கம்’ உள்ளிட்ட படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

மிச்சம் வைக்கிறாய்

எவ்வளவு எடுத்துக்கொண்டாலும் மிச்சமிருக்கிறாய்.

எவ்வளவு அள்ளித் தந்தாலும்மிச்சம் வைக்கிறாய்.

இதழேறிய முத்தங்கள் உன் புன்னகையின் சுவையறியாமல் தற்கொலை செய்துகொண்டதாகவே நினைவுகள்.

கிராபியென் ப்ளாக்

தேர்வெழுதும் மாணவனாய்கடிகாரத்தின் கட்டுப்பாட்டில் உன்னை காதலிக்கும் நாட்களை சபிக்கிறேன்.

கடைசி பெல்லுக்குமுன்பாக வாங்கப்படும் பேப்பரில்வேகவேகமாய் சிதறப்படும் எழுத்துக்களென..

விடைபெறும் முன்நிகழும் தழுவல்களையும் நழுவல்களையும் முறைப்புகளையும் முத்தங்களையும் எந்தக் கணக்கிலும் வரவு வைக்க முடியவில்லையடி, உன் காதலும் என் காமமும் தீர்ந்தே போகும் அந்த ஒரு நாள் நம் மரணத்திற்குமுன்னில்லை.. என்றறிவோம் நாம்.

ஏனெனில்.. எவ்வளவு எடுத்துக்கொண்டாலும் மிச்சமிருக்கிறாய்.

எவ்வளவு அள்ளித்தந்தாலும் மிச்சம் வைக்கிறாய்.
க. விக்னேஷ்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் சீடர். இந்தி அளவில் நம்பர் ஒன்னாக இருக்கும் ‘சி.என்.என். ஐ.பி.என்.’ சேனலின் கேமிரா மேன் என்பதையெல்லாம் தாண்டி, இப்போது அசோக்குமாரின் அடையாளம் ‘நெருப்புடா’ படத்தின் இயக்குநர். முதல் படத்திலேயே மொத்த திரையுலகையும் தன் பக்கம் ஈர்த்திருப்பவர். ‘மனம்’ இதழுக்காக அவர் மனம் திறந்தபோது..

நெருப்பு காட்சிகளில் ரிஸ்க் எடுத்தார் விக்ரம் பிரபு!

இயக்குநர் அசோக்குமார்

கிராபியென் ப்ளாக்

அதனால் அப்படியொரு களத்தை தேர்ந்தெடுத்தேன். தீயணைப்புத் துறைக்குள் போகத் துடிக்கிற ஐந்து இளைஞர்களை பற்றிய கதைதான் இது. ஃபயர் சர்வீஸோட வால்யூ ‘நெருப்புடா’ படம் மூலமாக மக்களை போய்ச் சேரும்!

விளிம்பு நிலை மக்கள் என்றாலே, கலீஜா இருப்பாங்க என்பது மாதிரியான பிம்பம், நம்மோட சினிமாவில் கட்டமைக்கப்பட்டிருக்கு. ஆனா, அங்கே கலர்புல்லான வாழ்க்கையும் உண்டு. அதைத்தான் நான் தொட்டிருக்கேன். ‘பொல்லாதவன்’ படத்தின் பேக் டிராப்பில் ஒரு படம் பண்ணணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ‘நெருப்புடா’வில் அதை சாத்தியமாக்கியிருக்கேன்.


சிவாஜி சார் வீட்டுக்கு எதிரே எனக்கு நடந்த சம்பவத்தை மையமாக வைத்துதான் ‘நெருப்புடா’ படத்தோட கதையை எழுதினேன். கதையில் வர்ற நாயகனுக்கு யார் சரியா பொருந்தி வருவாங்க?ன்னு யோசித்தப்போ, எனக்கு கண்ணு முன்னால வந்து நின்னது விக்ரம் பிரபு சார்தான். அவரை சந்தித்து, கதை சொன்னேன்.
“தமிழ் சினிமாவில் நிறைய கதைகள் சொல்லப்பட்டிருக்கு. ஆனா, தீயணைப்புத்துறையினரை பற்றி பெரிய பதிவுகள் இல்லை. படத்தில் ஒரு அங்கமாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய, முழுமையாக ஒன்றும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கைக்குப் பின்னால் நிறைய வலிகளும், வேதனைகளும் இருக்கு. அதை செல்லுலாய்டில் பதிவு செய்ய நினைத்தேன்.

படத்தோட முதல் பகுதியை கேட்டுட்டு, “நல்லாயிருக்கு”ன்னாரு. இரண்டாவது பகுதியை ‘வீர சிவாஜி’ படத்தின் ஷுட்டிங் பிரேக்குக்கு இடையில சொன்னேன். நாம சேர்ந்து பண்ணலாம்னு சொல்லி, வேகமாக படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதோடு, அவரே தன்னோட ‘பர்ஸ்ட் ஆட்டிஸ்ட்’ நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் செய்தாரு.

எந்த ஜார்னரில் வேண்டுமானாலும் கதை சொல்லலாம். ஆனா, அது உணர்வுபூர்வமாக ரசிகர்களோட மனதைப்போய் சேரணும். அப்படி ‘நெருப்புடா’ படத்தோட கதையை முதலில் எழுதிட்டு, அதில் சில ஃபீலிங்கான சில விஷயங்களை பின்னர் சேர்த்தேன். பல தயாரிப்பு நிறுவனங்களில் “அதை மட்டும் தூக்கிட்டா, படம் பண்ணலாம்”னு சொன்னாங்க. என்னால, அதை ஏத்துக்க முடியலை. ஆனா, அதை சரியாக உள்வாங்கிக்கிட்டு, பட வாய்ப்பு தந்தார் விக்ரம் பிரபு சார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!

படப்பிடிப்பின்போது விக்ரம் பிரபு சார் மேல ரொம்ப கேர் எடுத்துக்கிட்டேன். நெருப்பு காட்சிகளில் எல்லாம் துணிச்சலா உள்ளே போய் நடிப்பார். ஆனா, எனக்குள்ளே ஒரு பயம் ஓடிக்கிட்டே இருக்கும். ஒரு நிமிஷம் தப்பானாலும் எல்லாமே மாறிப்போயிடும். ஃபயர் சீன் என்பது ரொம்ப ரிஸ்க்கான விஷயம். அந்த ரிஸ்க்கை ‘நெருப்புடா’வில் பலமுறை எடுத்தார் விக்ரம் பிரபு சார். அதற்காகவே இந்தப் படம் பெரிய வெற்றியை அடையும்னு நம்புறேன்!

கண்ணகி நகருக்கு நடுவே மணிக்கூண்டு அமைத்த ஆர்ட் டைரக்டர் பிரபாகர் சார், ஃபயருக்கு நடுவே ஸ்டண்ட் காட்சிகளை எடுத்த சூப்பர் சுப்புராயன், திலீப் சுப்புராயன் மாஸ்டர்ஸ், ரொம்ப நேர்த்தியாகவும், அழகாகவும் ஒளிப்பதிவு செய்த ஆர்.டி.ராஜசேகர் சார் எல்லோரும் படம் சிறப்பாக வர, கடுமையாக உழைத்திருக்காங்க. அதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் ஹிட்டடிக்கும்!

படத்தோட ஷுட்டிங் நடந்துக்கிட்டு இருக்கிறப்போ, ஒருத்தர் வந்து என்னிடம் கைகுலுக்கிவிட்டு, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார்.. நிறைய போலீஸ் படங்கள் சினிமாவுல வந்திருக்கு. ஆனா, யாரும் ஃபயர் சர்வீஸ் ஆளுங்களை பத்தி படம் எடுத்தது கிடையாது. இந்தப் படத்துக்கு பிறகு, எங்க வீட்டம்மா, என் வீட்டுக்காரரும் ஃபயர்மேன்தான் பெருமையாக சொல்லுவாங்க..” என்றார். அவருடைய வார்த்தைகளைத்தான் பெரிய பாராட்டா நினைக்கிறேன்.” என்றார். அவர் பேசி, முடித்ததும் நமக்குள்ளும் ஃபயர் பற்றிக்கொண்டுவிட்டது!கிராபியென் ப்ளாக்

“பொடுகு நானும் சொல்லாத நாளில்லை, தலைக்கு எண்ணெய் வைன்னு, கேட்கவே மாட்டேங்கறா. இப்ப பாருங்க பொடுகு நிறைய வந்துருச்சு. டிவில விளம்பரத்துல வர்ற எல்லா ஷாம்புவையும் போட்டுப் பாத்தாச்சு. சரியான மாதிரி தெரியல, நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது”

“ஹாஸ்டல்ல இருக்கும் போது லேசா பொடுகு இருந்தது டாக்டர். அப்புறம் தன்னாலயே சரியாயிடுச்சு. இப்ப டெலிவரிக்குப் பிறகு திடீர்னு அதிகமாயிருக்கு”

“தலை அரிக்கிற மாதிரி இருக்கும். கைய வைச்சா வெள்ளையா உதிரும். தலைக்குக் குளிச்சிட்டா சரியாயிடும். இப்பலாம் தலைக்குக் குளிச்சாலும் சரியாகறதில்லை. முடியும் கொட்ட ஆரம்பிச்சிருக்கு”

“பொடுகு ரொம்ப வருசமா இருக்கு டாக்டர். நா கண்டுக்கிட்டதே இல்லை. ஆனா, இப்ப கொஞ்ச நாளா புருவம், மீசை இங்க கூட வெள்ளை வெள்ளையா உதிர்ற மாதிரி இருக்கு”

“தலைக்கு தொடர்ந்து குளிச்சா பொடுகு வர்றது இல்ல டாக்டர். விட்டுட்டம்னா உடனே வந்துருது”

“டாக்டர் பொடுகை குணப்படுத்தவே முடியாதா? என்ன செஞ்சாலும் திரும்ப வந்துருது”

பொடுகுக்காரர்களின் கேள்விகள் பலவிதமாக ஒலிக்கத் தொடங்கியது. கட்டுரை எழுத அமர்ந்தேன்.

‘உடற்சூடு’ என்ற பதம் நமது கட்டுரையில் தொடர்ந்து இடம்பெறுவதைக் கண்டிருப்பீர்கள். ‘ஆதாரமான சுழல்’ என்று சித்த மருத்துவ இலக்கியத்தில் இதனைக் குறிப்பிடுவோம். உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உடற்சூடு இயல்பாக இருந்தால் எந்த ஒரு நோயும் நம்மைத் தாக்காது. இயல்பிற்கு மிகும் போதோ, குறையும் போதோ பலவிதமான நோய்களைத் தோற்றுவிக்கும். எனவேதான் ‘ஆதாரமான சுழல்’ என்றோம்.

சித்தர் பாடல் வடிவில் கூறுவதாக இருந்தால்,

“ஆதாரமான சுழல் உஷ்ணமாச்சே அணுகி வரும் பல பிணிக்கும் இறையுமாச்சே..”

குறிகுணங்கள்

தலையில் அரிப்பு.செதில் உதிரல்.சிறுசிறு கட்டிகள், கரடு போல தலையில் தென்படல்.முடி உதிரல்.

மருத்துவம்!

உணவே மருந்து!

உடற்சூட்டை இயல்பில் வைக்கும் உடல்திறனை வளர்க்கும் கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உருக்கிய நெய்யை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற கனி வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சித்த மருந்துகள்!

பொடுதலை என்னும் மூலிகையை அரைத்து தலையில் பூசி, ஊறவைத்து பின் குளித்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

கோழிமுட்டை வெண்கருவை தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து, சுடுநீரில் குளித்து வர பொடுகு நீங்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

புளித்த தயிரை தலையில் தேய்த்து ஊற வைத்து, சுடுநீரில் குளித்து வர பொடுகு குணமாகும். இதனையும் வாரம் இருமுறை செய்து வரலாம்.

வெள்ளை மிளகை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும். இது காரத்தன்மை மிக்கது என்பதால் ஒரு சிலருக்கு தலையில் சிறிது எரிச்சலைத் தரலாம்.

பொடுதலை தைலம்!

சித்த மருந்தகங்களில் கிடைக்கும். இதனைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும்.

பிரம்ம தண்டு தைலம்!

சித்த மருத்துவர்களிடம் கிடைக்கும். இதனைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும். தீவிர நிலையில் இதனை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் 5 மி.லி. அளவு காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் கலந்து, எடுத்துக் கொள்ளலாம்.

வெட்டாலைத் தைலம் - தலைக்குத் தேய்த்து வர பொடுகு குணமாகும்.

பொடுகு வராமல் தடுக்க:

* வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் ஷாம்புவை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி சிகைக்காய்க்கு மாறுதல்.

* தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்தல்.

* தலைக்குத் தொடர்பான சீப்பு, தலையனை உறை, போர்வை, ஹெல்மெட் போன்றவற்றை சுத்தமாகப் பராமரித்தல்.

அடுத்த இதழில் ‘பித்த வெடிப்பு’

விக்ரம் பிரபுவும் நிக்கி கல்ரானியும் அழகான ஜோடி!

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்

“ ‘நெருப்புடா’ படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவாளர்னு முடிவானதும், பிரபு சார், “என் மகனை உங்ககிட்டே ஒப்படைச்சிட்டேன், அவரை நீங்கதான் பத்திரமா பார்த்துக்கணும்”னு சொன்னாரு. படப்பிடிப்பு முடிந்து, பர்ஸ்ட் லுக் பார்த்துட்டு, என் கையை பிடிச்சிக்கிட்டு ரெண்டு நிமிஷம் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தார். பிறகு, “என் வாக்கை காப்பாத்திட்டீங்க..!”என்றார். டிரைலர் வெளியானபோது, ரஜினி சார் பார்த்துட்டு, “ஹாட்ஸ் ஆஃப் டு கேமிராமேன்”னு வாழ்த்தினார். அவரின் வார்த்தைகள் உத்வேகம் தந்துச்சு. பிரபு சாரின் வேண்டுதலை நான் காப்பாத்திட்டேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!”

க. விக்னேஷ்

பவித்ரா

சிலிர்ப்போடும் நெகிழ்வோடும் பேசினார் ஆர்.டி.ராஜசேகர். இந்திய சினிமா வியக்கும் ஒளிப்பதிவு ஆளுமையோடு உரையாடிதிலிருந்து..

அன்னை இல்லம் வீட்டுக்குள் கால் வைத்திருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

“சினிமாவின் மாபெரும் ஆளுமை சிவாஜி சார். அவரின் குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு ‘நெருப்புடா’ படம் மூலமாக எனக்கு கிடைத்ததை பெரிய வரமாக பார்க்கிறேன். அவங்க வீட்டுக்கு போகும்போதெல்லாம் ‘சிவாஜி சார் எங்கே நிற்பார், உட்காருவார், எந்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவார்?’ போன்ற கேள்விகளையெல்லாம் பிரபு சாரிடம் கேட்பேன்.

அவர் சுவாசித்த இடங்களை எல்லாம் பார்த்து, மெய்சிலிர்த்து போனேன். அப்படி நான் மரியாதை வைத்திருக்கிற கலைஞனின் குடும்ப உறுப்பினர்களோடு வேலை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்!”

‘நெருப்புடா’ படம் குறித்து?

“தீயணைப்பு வீரர்கள் பற்றிய தனித்துவமான சினிமாக்கள் எதுவும் தமிழில் வந்ததில்லை. இயக்குநர் அசோக் என்கிட்டே கதை சொல்லும்போதே எனக்கு ரொம்ப வித்தியாசமாக தெரிஞ்சுது. தீயணைப்பு வீரர்கள் தன் உயிரைப் பற்றி பெரிதாக நினைக்காமல், தீயில் சிக்கியவர்களை காப்பாற்றுவதே கடமையாகக் கொண்டு வாழ்வதை, கதைக் களமாக வைத்திருக்கிறார். இதனைச் சார்ந்து தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு.

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கண்ணகி நகரில்தான் படப்பிடிப்பை நடத்தினோம். மிகவும் பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில் எந்தப் பிரச்னையும் இன்றி, ஷுட்டிங்கை முடித்தோம். எல்லாவற்றுக்கும் காரணம் ஒரேயொருவர் தான் என்பது எனக்கு தெரிந்தது. அந்த ஒருவர் பிரபு சார் தான்!”

சவாலான காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்?

“இன்றைய சூழலில் பார்வையாளர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கு. அவர்களை ஏமாற்ற முடியாது. அவர்களை மனதில் வைத்துக்கொண்டு வேலை பார்த்தோம். தீயை வச்சு, ஷூட் பண்ணும்பொழுது மட்டும் எங்களுக்கு கொஞ்சம் சிரமமா இருந்தது. உதாரணத்துக்கு, படத்துல குடிசை எரியுற மாதிரி ஒரு காட்சி இருக்கு. அதை தொண்ணூறு சதவீதம் கேமராவுல படம்பிடித்திருக்கிறோம். மீதமுள்ள பத்து சதவீதத்தை தான் கிராபிக்ஸில் கொண்டு வந்தோம். கதையின் பாத்திரங்களுக்கு லைட்டிங் செய்வதைத் தாண்டி, தீ காட்சிக்கும் தனியா லைட் பண்ணனும். நிஜ சவால் அதுதான்!”

விக்ரம் பிரபு நிக்கி கல்ரானி ஜோடி எப்படி?

“சொன்னா நம்ப மாட்டீங்க. நானும் என் கேமராவும் ரகசியமாக பேசிக் கொள்வோம். கேமரா கோணங்கள்ல எது சரி? எது தப்பு?ன்னு, அது எனக்கு சொல்வது போல தோணும். அப்படித்தான் நான் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கேன்; செய்துகிட்டு வர்றேன். அது ஒருவேளை என்னோட உள்ளுணர்வாகக் கூட இருக்கலாம். என்னோட வெற்றிகளுக்கும் அதுதான் காரணமுன்னு நினைக்கிறேன். படத்தில் எந்த கோணத்தில் விக்ரமும் நிக்கியும் அழகாகத் தெரிவாங்கன்னு, பார்த்து பார்த்து ஒளிப்பதிவு செய்தேன். ‘நெருப்புடா’வில் இருவரும் ஸ்பெஷலாக தெரிவதன் ரகசியம் இதுதான்!”

இயக்குநர் அசோக்குமார் பற்றி?

“அடிப்படையில அசோக்கும் ஒரு ஒளிப்பதிவாளர். ரவிவர்மன்கிட்டே, உதவியாளராக இருந்திருக்காரு. ‘நெருப்புடா’ படத்துக்காக என்கிட்டே பேசும்பொழுது “இந்த ஸ்க்ரிப்டை உங்ககிட்டே ஒப்படைக்கிறேன். இதனை ஒளி மூலமாக, நீங்க பாதுகாத்து கொடுப்பீங்கன்னு முழுசா நான் நம்புறேன்”ன்னு சொன்னார். அந்த நம்பிக்கையை காப்பாத்தியிருக்கேன்னு நினைக்கிறேன்!” அதே குழைவும், சாந்தமுமாக முடித்தார் ஆர்.டிஆர்!

பவித்ரா

ன்றைய நாளேடுகளிலும், வார, மாத இதழ்களிலும் தவறாமல் இடம்பிடிப்பது ‘சோரியாசிஸ் நோய் விளம்பரங்கள்’ தான். அந்த அளவிற்கு, அந்த நோயின் தாக்கம், இன்று பலரையும் பீடித்திருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் மன அழுத்தம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அவ்வகையில், இந்த இதழில் சோரியாசிஸ் நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்.

“நவீன தொழில்நுட்ப உலகில், நாம் மாபெரும் முன்னேற்றமடைந்து உள்ளோம். கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதற்கு, முக்கியக் காரணம் மாறிக் கொண்டிருக்கும் நமது வாழ்க்கைமுறையும் சுற்றுப்புறச் சூழலும் தான். இன்று, ஏராளமான புதுவிதமான நோய்கள் ஏற்பட முக்கியமான காரணம் ‘மன அழுத்தம்’. நோய்களினால் இளமையில் பாதிக்கப்படாதவர்கள் கூட, இன்று நடுத்தர வயதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!.

தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் பணிச் சுமையினால் ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் அதிக உடல் பருமன் போன்வற்றால், மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மரணத்தில் கொண்டுபோய் தள்ளி விடுகிறது. ஒரு பக்கம், உளவியல் சார்ந்த தாக்குதல்களும், இன்னொரு பக்கம், நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களில் கலப்படங்களாலும் பாதிக்கப்படுகிறோம்.

சமீபத்தில், நாம் எல்லோரும் ஊடகங்களில் அறிந்த செய்திதான் இது. நீண்ட காலமாக தொடர்ந்து குறிப்பிட்ட அந்நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்தியதால் ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட புற்று நோய். அதற்கு, நஷ்ட ஈடாக, எவ்வளவு பணம் கொடுத்தாலும் உயிரிழப்பு என்பது மிகக் கொடுமையான ஒன்று. சமீபகாலமாக, ரசாயனக் கலப்புகளால் தோல்நோய் என்ற வார்த்தையை, நாம் அடிக்கடி கேட்கிறோம். அதிலும் ‘சோரியாசிஸ்’ என்ற தோல்நோய் ஏற்பட மன அழுத்தமும் மிக முக்கிய காரணம் என்பது வேதனைக்குரியது!”

சோரியாசிஸ் நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் தோலானது, செதில் செதிலாக இருக்கும். சோரியாசிஸ், ஒரு பரம்பரை வியாதி.எளிதில் அடுத்தவர்களுக்கு பரவும் தோற்று. இதனை குணப்படுத்தவே முடியாது.

போன்ற சில தவறான கருத்துக்கள் நம் மக்களிடம் நிலவிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், உண்மையில் ‘சோரியாசிஸ்’ வருவதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவைதான்!

தவறான உணவுப் பழக்கம் அதீத மன அழுத்தம் பிற நோய் சிகிச்சைகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் தொடர்ந்து வெளியிடத்தில் உட்கொள்ளும் அசைவ உணவுகள்

சோரியாசிஸ் நோயினை ஐந்து வகையாக பிரிக்கலாம்;

பொடுகுகளால் ஏற்படக் கூடிய ஸ்கால்ப் சோரியாசிஸ். தோல்களில் ஏற்படக் கூடிய ஸ்கின் சோரியாசிஸ். மூட்டுகளின் பின்புறம் மட்டும் ஏற்படும் சோரியாசிஸ். நகங்களில் வரக் கூடிய நெயில் சோரியாசிஸ். குதிங்கால், உள்ளங்கால் மற்றும் கைகளில் மட்டும் ஏற்படக்கூடிய சோரியாசிஸ்.

இந்நோயை ஆயுர்வேத முறைப்படி நூறு சதவீதம் நாம் குணப் படுத்த முடியும்.

அதாவது,

ஆயுர்வேத பஞ்ச கர்ம சிகிச்சை.சரியான உணவு கட்டுப்பாடு. மனப் பயிற்சி. உடல் பயிற்சி. ஆண்டுக்கொருமுறை, உடல் கழிவுகளை சுத்திகரிக்கும் சிகிச்சை.

போன்ற விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே, நோயிலிருந்து விடுபட்டு, நலமாக வாழலாம்!

நிக்கி கல்ரானியின் காஸ்ட்யூம்தான்இப்போ ட்ரெண்ட் செட்டர்!

காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்.

“நடிகர் விக்ரம் பிரபு உயரமான, வாட்ட சாட்டமான ஆளு. அவரு பெர்சனாலிட்டிக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு ‘வீர சிவாஜி’ படத்துல காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றி இருக்கேன். “இப்போ, பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ தயாரிப்புல வெளிவரப் போகும் ‘நெருப்புடா’ படத்திலேயும் வாய்ப்பு கிடைத்துள்ளது. “இந்தப் படத்துல விக்ரம் பிரபு ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தாரு”ன்னு பிரபு சார் சொல்லியிருக்காரு. அதை கேட்டதும் எனக்கு பெருமையாக இருந்தது. ஏன்னா, நான் பிரபு சாரோட ரசிகை!” சிரிப்பும், சந்தோஷமாகப் பேசுகிறார் அம்ரிதா ராம். கோலிவுட்டின் பரபரப்பான காஸ்ட்யூம் டிசைனர் உடனான சந்திப்பிலிருந்து..

பவித்ரா

‘நெருப்புடா’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து?

“கதை கேட்கும்பொழுதே, எனக்கு ரொம்ப புதுசாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. சவாலான பல விஷயங்கள் படத்தில் இருக்கும்னு தோணிச்சு. இந்திய சினிமா உலகமே கொண்டாடும் சிவாஜி சாரோட பேரனின் தயாரிப்பு நிறுவனத்துல பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி. இயக்குநர் அசோக் குமாரோட ஐடியாவும் என்னோட கிரியேட்டிவிட்டியும் சேர்த்து காஸ்ட்யூமில் கலக்கியிருக்கிறோம்!”

தீயணைப்பு வீரர் வாழ்வை மையமாகக் கொண்ட படம் என்பதால், ஆடை வடிவமைப்பு சவால் நிறைந்ததாக இருந்திருக்குமே?

“படத்தில் தீ காட்சிகள் அதிகம் என்பதால் இயக்குநர், ஒளிப்பதிவாளரோடு டிஸ்கஸ் பண்ணி, அவங்க சொல்றதுக்கு ஏற்ற மாதிரி டிசைன் செய்தேன். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் சாரை திருப்தி படுத்துறது ரொம்ப கஷ்டமான விஷயம். நெருப்பு சம்பந்தப்பட்ட படம் என்பதால் காஸ்ட்யூம்களுக்கான நிறங்களை தேர்வு செய்யும்போது ரொம்ப உஷாரா இருக்கணும். அப்படியாக, நான் தேர்ந்தெடுத்த காஸ்ட்யூம்களை அவர் ரொம்பவே ரசித்து, பாராட்டினார்!. ‘நெருப்புடா’ படமுன்னு இல்லை; நான் பணியாற்றும் ஒவ்வொரு படமும் எனக்கு தனித்துவமாகத்தான் இருக்கணும்ன்னு நினைப்பேன். அந்த வகையில ‘நெருப்புடா’ படம் எனக்கு சவாலாக அமைஞ்சது!”

நிக்கி கல்ரானி காஸ்ட்யூமில் என்ன ஸ்பெஷல்?

“நிக்கி கல்ரானியை கவர்ச்சியாக இல்லாமல் மாடர்னாக காட்டணும்னு நினைச்சேன். அவங்க லாங் ஸ்கர்ட்தான் போட்டுகிட்டு வர்றாங்க. அதற்கு மேட்சாக ப்ளாக் பிரிண்டட் டாப்ஸ் தான் கொடுத்தேன்.

படம் முழுக்க அவங்க போட்டுட்டு வர்ற பிளாக் மெட்டல் ஜுவெல்லரிதான் இப்போ ட்ரெண்ட் செட்டர்!”

படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளாரே. அவருக்கென்று விசேஷமாக கவனம் எடுத்துக்கொண்டீர்களா?

“ராஜேந்திரன் சாரோட மிகப் பெரிய விசிறி நான். இந்தப் படத்துல அவருக்கான காஸ்ட்யூம் ஸ்ட்ரக்சரிங்தான் நான் செஞ்சேன். ஆனால் முழுமையாக டிஸைன் பண்ணினது ரங்கசாமி அண்ணன்தான். படத்துல ராஜேந்திரன் ரொம்ப ஸ்பெஷலா தெரிவாரு!”

நூறு சதவீதம் பொருந்திப்போகிற ஆடை அமைந்த விக்ரம் பிரபு படம் என்று எதைச் சொல்வீர்கள்?

“யானைப் பாகனாக ‘கும்கி’ திரைப்படத்துல விக்ரம் பிரபு நடிச்சிருப்பாரு. அதுக்கு காண்ட்ராஸ்ட்டா ‘அரிமா நம்பி’ திரைப்படத்துல அவரு ரொம்ப ஸ்டைலிஷா வருவாரு. ரெண்டுமே அவருக்கு கச்சிதமாக இருக்கும். ஏன்னா அவரோட பெர்சனாலிட்டி அப்படி. அவருக்கு, பேஷன் பற்றி நிறைய தெரிஞ்சாலும், நம்ம வேலையில தலையிட மாட்டாரு. அதோட, ரொம்ப முக்கியமா, எந்தெந்த ஆடை அவருக்கு எப்படி இருக்கும்னு தெரியும். அதுனால அவருக்கு பொருந்தாத எதையுமே நாம அவருக்கு கொடுக்க முடியாது!” நச்சென்று முடித்தார்.

கிராபியென் ப்ளாக்

நிறைந்த மனதுடனும், நெஞ்சில் நிம்மதியுடனும் பிருந்தாவன வளாகத்தை விட்டு வெளிப்பட்டோம். அடுத்து நவபிருந்தாவன தரிசனம்தான் என்றாலும் மந்திராலயத்திலேயே நாம் தரிசிக்க வேண்டிய இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. ஒன்று ஸ்ரீ ராகவேந்திரர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீ வேங்கடாஜலபதி ஆலயம். மற்றொன்று பஞ்சமுகி ஆஞ்சநேயர் ஆலயம்.

வேங்கடாஜலபதி ஆலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது. இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து செல்ல வேண்டும். மந்திராலயத்தில் யாரைக் கேட்டாலும் வழி காட்டுவார்கள். ஊர் மக்கள் காட்டிய பாதையில் நடந்தோம். மேடு பள்ளங்கள் நிறைந்த மண் சாலைகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் சாணி நீர் தெளித்து கோலம் போட்டிருந்தார்கள். சில வீட்டு வாசல்களில் பாத்திரம் கழுவினார்கள். துணி துவைத்தார்கள். சில வீட்டு வாசல்களில் தளைகளில் மாடுகள் கட்டப்பட்டிருந்தன. ஆடுகள் சுதந்திரமாகத் தழைகளை மேய்ந்து கொண்டிருந்தன. அச்சு அசலான ஆந்திர கிராமம் ஒன்றின் தெருக்களினூடே ஒரு வித்தியாசமான அனுபவம்.

பத்து நிமிடத்துக்குள் ஆலயத்தை அடைந்து விட்டோம். சின்னஞ்சிறு ஆலயம். சன்னிதி பூட்டப்பட்டிருந்தாலும், திறந்திருந்தாலும் வேங்கடாஜலபதியை தரிசிக்கலாம்.சன்னிதியில் எரிந்த திருவிளக்கின் தங்க வெளிச்சத்தில் வேங்கடாஜபதி தேஜசுடன் காட்சி அருளினார். ஊர் மக்கள் பிருந்தாவன தரிசனத்துக்குச் செல்கிறார்களோ இல்லையோ வேங்கடாஜலபதி தரிசனத்துக்குத் தவறாமல் வருகிறார்கள்.

தீர்த்தம், சடாரி, துளசிப்பிரசாதம் சகிதம் வேங்கடாஜலபதி தரிசனத்தை முடித்துக் கொண்டோம்.

அடுத்து நாம் தரிசிக்க இருப்பது பஞ்சமுகி ஆஞ்சநேயர் ஆலயம். மந்திராலயத்திலிருந்து சுமார் இருபத்தோரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பஞ்சமுகி ஆலயத்துக்கு அரசுப் பேருந்துகள் செல்கின்றன. தவிர ஆட்டோவிலும், காரிலும் செல்லலாம். ஆனால் நாங்கள் சென்ற சமயத்தில் துங்கபத்ரா நதியின் மீது போடப்பட்டிருந்த பாலம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் பேருந்துகளோ, ஆட்டோக்களோ, கார்களோ பாலத்தின் மீது செல்ல இயலாத சூழ்நிலை.

‘அடடா… அப்படியெனில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லவே முடியாதா’ என்ற ஏக்கம் எங்கள் நெஞ்சில் கிளர்ந்து எழுந்த வேளையில் ஊர்க்காரர் ஒருவர், ‘பரிசலில் துங்காவைக் கடந்தால், எதிர்க்கரையில் இருந்து ஆட்டோவில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வரலாம்’ என்று நல்வாக்கு அருளினார். அவர் வார்த்தையை தெய்வ வாக்காகக் கொண்டு துங்கபத்ரா நதிக்கரைக்குச் சென்று அங்கே காத்திருந்த பரிசலில் அமர்ந்தோம். பரிசல் சுழன்று சுழன்று எதிர்க்கரையை நோக்கிப் பயணப்பட்டது.

பரிசல்காரர் போட்ட கோல் ஓரு சில சந்தர்ப்பங்களில் முழுக்க, முழுக்க தண்ணீரில் மூழ்கியது. சிற்சில சமயங்களில் ஓரடி, இரண்டடி கூட தண்ணீருக்குள் மூழ்காமல் எதிலோ மோதிக்கொண்டு எதிர்த்து எழும்பியது.

“நீரோட்டத்தில் அங்கங்கே பாறைகள் இருக்கும்…” என்றார் பரிசல்காரர். அவர் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபிப்பது போல நதி நெடுக ஆங்காங்கே பாறைகள் தலை நீட்டிக் கொண்டிருந்தன. “இது என்ன விளையாட்டு? தண்ணீரில் இப்படியா தட்டாமாலை சுற்றிக் கொண்டு போவது? நடந்தே நதியைக் கடந்திருக்கலாம் போலிருக்கிறதே…” என்று எங்களுடன் வந்த ஓவியர் ஜெ.பி. சொல்லி வாயை மூடியிருக்கமாட்டார். “அங்கங்கே தண்ணீர் முப்பது அடி, நாற்பது அடி ஆழம்… அது மட்டுமில்லை… அவ்வப்போது முதலைகள் வேறு வாய் பிளந்து கொண்டு அலையும்….” என்று பரிசல்காரர் உலகக் கிண்டல் அத்தனையும் கலந்து கிண்டலே இல்லாத ஒரு தொனியில் கூறினார். அதன் பிறகு நாங்கள் ஏன் வாய் திறக்கிறோம்? ஆற்றின் மறுகரையை அடைவதற்கு முன் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் ஆற்றிய மகிமைகள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோமா?

ராகவேந்திரர் மகிமை - 1

மகோன்னத வாழ்வை அளித்த மண்!ஒன்றுக்கும் உதவாத மனிதர்களை, மண்ணுக்கு சமம் என்று குறை கூறுவது வழக்கம். தான் வாழ்ந்த விதத்தால் மிருத்திகை எனப்படும் மண்ணுக்கும், மக்கள் அனைவரும் வணங்கும் மகத்தான இடத்தை அளித்தவர் ராகவேந்திரர். அவர் மண்ணுலகை வலம் வந்த காலத்திலும், இன்றும், ஏன் என்றுமே ராகவேந்திர பக்தர்களுக்கு மிருத்திகை என்னும் மண்ணானது குரு ராகவேந்திரரின் பிரசாதம்தான்!

அவர் கை பட்ட மண் செய்த மகோன்னத லீலை ஒன்று இதோ!

மடத்தில் ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் சிஷ்யனாக வந்து சேர்ந்தான். பண்டிதர்கள் வரிசையில் சேர்க்க முடியாவிட்டாலும், பண்பாளனாகவும், குரு பக்தியில் தோய்ந்த தொண்டனாகவும் அவன் விளங்கினான். கல்விக்கான பருவம் முடிந்ததும், அவனது தாய் தந்தையர் அவனுக்கு மணம் செய்ய ஏற்ற பெண்ணைத் தேடினார்கள். ஏழைக்கு யார் தன் மகளை மணமுடித்துத் தருவார்கள்? அதனால் சிஷ்யன் குருவுக்குப் பணிவிடைகள் செய்தவாறே காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான்.

எல்லாம் தெரிந்த மகானுக்கு இந்த விவரங்கள் தெரியாதா? கார்மேகம் போன்ற அவரது கருணை, சிஷ்யனின் பொறுமையையும், குருபக்தியையும் கண்டு அவன் மீது மழையாகப் பொழிய தக்க தருணத்துக்காகக் காத்திருந்தது.

எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் பிரதி உபகாரம் செய்யாமல் பலனை மட்டும் சன்யாசிகள் அனுபவிப்பது இல்லை. அதே விதமாக ஆற்றிலும், குளத்திலும் குளிக்கச் செல்லும் துறவிகள் நீராடி முடித்து விட்டு, கரையேறும் போது, நீர் நிலையில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வந்து வெளியில் சேர்ப்பது வழக்கம்.

ஒரு நாள் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ராகவேந்திரர், நீராடுவதற்குத் தனக்கு உதவிய சிஷ்யனிடம், அதே மண்ணை ஒரு பிடி அள்ளித் தந்து 'இதை எடுத்துக் கொண்டு போய் விவாகம் செய்து வாழ்வாயாக' என ஆசீர்வாதம் செய்தார். குரு தந்த மண்ணை மாபெரும் பாக்கியமாக எண்ணி, பயபக்தியுடன் அதை ஒரு துணியில் முடிந்து, தலையில் வைத்துக் கொண்டு, சொந்த ஊருக்கு சிஷ்யர் பயணமானார். நெடும் தொலைவு பயணத்துக்குப் பிறகு ஒரு நகரத்தை அடைந்தார். களைப்பு காரணமாக ஒரு வீட்டின் திண்ணையில் கண்ணயர்ந்தவர் நடுநிசியில் பேரரவம் கேட்டு விழித்தார்.

ஒரு பிரம்மராக்ஷசன் அந்த வீட்டிற்குள் செல்ல முயன்று, அது முடியாமல் போராடிக் கொண்டிருந்தான். பிரம்மராக்ஷசனை உள்ளே செல்ல முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது கோபாக்னியாக ஒரு வேலி. சிஷ்யரின் மூட்டையிலிருந்த ராகவேந்திரரின் பிரசாதமான மண்தான் அது! ராக்ஷசனை வீட்டுக்குள் செல்லாமல் தடுத்த அதே மண்தான், அதை அழிக்கவும் வல்ல மாற்று மருந்து என்று சிஷ்யருக்குத் தோன்றியது.

குரு ராகவேந்திரரை மனதில் தியானித்தபடி, அவரது திருநாமத்தை நெஞ்சில் நிறுத்தி பிரசாத மண்ணை, சிஷ்யர் பூதத்தின் மேல் வீச, அது பிரம்ம ராக்ஷசனை பஸ்பமாக்கியது.

பூதத்தை எரித்த அந்த அக்னியிலிருந்து, சாபவிமோசனம் பெற்ற தேவன் ஒருவன் திவ்ய மங்கள உருவத்துடன் தோன்றினான். சிஷ்யருக்கு ஆசிகள் பலவற்றுடன் அளவிட முடியாத பொன்னையும், பொருளையும் தந்து தன் இருப்பிடம் சேர்ந்தான்.

அந்த வீட்டின் சொந்தக்காரர் ஓர் அந்தணர். இந்த காட்சிகளைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டில் பிறந்த பல சிசுக்களை பிரம்ம ராக்ஷசன் இதுவரை தின்று முடித்திருந்தான். இன்றும் நிகழ இருந்த பிரசவத்திலிருந்து குழந்தையைத் தின்பதற்காகவே அந்த பூதம் அங்கு வந்தது. பூதம் மடிந்து, சுகப் பிரசவத்தில் தனக்கு வாரிசும் கிடைக்க, அதற்குக் காரணமாக விளங்கிய மிருத்திகை மற்றும் ராகவேந்திரரின் அருளை அவர் போற்றினார். தன் குறைகளைத் தீர்த்த சிஷ்யருக்குத் தன் சகோதரியை மணம் முடித்து வைத்தார். ராகவேந்திரர் கையால் கொடுத்த மண் சீடருக்குப் பொன்னையும், பொருளையும், வாழ்க்கைத் துணையாகப் பெண்ணையும் தேடித் தந்தது.

குரு ராகவேந்திரரை நம்பியவருக்கு, வாழ்வில் ஒரு நாளும் இடர் என்பதே இல்லை!

ராகவேந்திரர் மகிமை - 2

கவிதை நடையில் பேசிய காவித் துணி

ராகவேந்திரரின் திருக்கரத்தால் தீண்டப்பட்ட மண் எவ்வளவு மகிமை வாய்ந்ததோ, அதே போல் அவர் அணிந்த ஆடைகளும் மகிமை வாய்ந்தவையே!

ராகவேந்திரர் மத்வமட பீடத்தை அலங்கரித்து, மக்களின் மனத்துயர் நீங்க நல்லுபதேசங்கள் செய்து கொண்டிருந்த வேளை. அவரது பெருமை நாடெங்கிலும் உள்ள கற்றோரையும் மற்றோரையும் அவர் பால் ஈர்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வடநாட்டில் மூன்று அந்தணர்கள் வாழ்ந்து வந்தார்கள். கல்வி, கேள்விகளில் சிறந்த அவர்களுக்குத் தங்கள் புலமை மீதும், ஞானத்தின் மீதும் ஆணவம் மிகுந்திருந்தது. அதனால் பேசும் போது கூட வடமொழியில் பேசி வந்தார்கள்.

ஒரு சமயம் ராகவேந்திரரின் அருமை, பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை தரிசிக்க குடந்தை மடம் நாடி வந்தார்கள். வெகு தூரம் பயணம் செய்த களைப்பு நீங்க, காவிரியில் குளித்து விட்டு, ராகவேந்திரரைக் காண்பது எப்படி என்பது பற்றி தங்களுக்குள் வட மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சற்றுத் தொலைவில், சலவைத் தொழிலாளி ஒருவன் மடத்தின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் வழக்கு மொழியில் பேச, அவர்களது ஆணவம் இடம் கொடுக்க வில்லை.

ஆனால் அவனோ, அந்தணர்கள் வடமொழியில் பேசியதைக் கேட்டு அவர்களை விடச் சுத்தமான வடமொழியில் அவர்களுக்கு வேண்டிய விவரங்களை அளித்தான். ஒரு தமிழ்நாட்டு கிராமத்து இளைஞன் பேசிய வடமொழி வார்த்தைகளினால் அந்தணர்கள் வியப்படைந்தார்கள். நேரம் சற்று சென்றதும், அதே சலவைத் தொழிலாளியிடம் அவர்கள் வேறு சில விவரங்கள் கேட்க, அவர்கள் பேசிய வடமொழி அவனுக்குப் புரியவில்லை. பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் மட்டும் அவன் வடமொழியில் பேசியது எப்படி என்ற சந்தேகத்துடன் அவர்கள் மடத்தை அடைந்தார்கள்.

ஸ்ரீமடத்தை அடைந்து, அங்கே பலரிடம் பேசி தங்கள் சந்தேகத்தைக் கேட்ட போதுதான் அவர்களுக்கு அதன் காரணம் புலப்பட்டது. வடமொழி தெரியாத அந்த சலவைத் தொழிலாளி மூலம் பேசியது, அவன் அப்போது துவைத்துக் கொண்டிருந்த ராகவேந்திரரின் ஆடைகள்தான் என்பதும், ராகவேந்திரரின் ஆடைகளைத் துவைத்து முடித்ததும் அவனுக்கு வடமொழி தொடர்பும் போய்விட்டது என்று புலப்பட்டது. உயிரற்ற ஜடப் பொருள்களான காவித் துணிகளும், அவரது அருளால் ககனத்து மொழிகளில் எல்லாம் கவிதை நடையில் பேசும் என்பது கண் கூடாகியதும், அந்தணர்கள் ராகவேந்திரரின் அளப்பரிய பெருமையை உணர்ந்தார்கள்.

ராகவேந்திரர் மகிமை – 3

மரணத்தைத் திருத்தினார்

ஸ்ரீ ராகவேந்திரர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பல இடங்களில் இறந்தவர்களையும் கூட உயிர்ப்பித்திருக்கிறார்.

கிரீடகிரி என்னும் கிராமத்தில் அவர் நிகழ்த்திய அற்புதம், இறைவனுக்கு அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்று உலகுக்கு எடுத்துச் சொன்னது. கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான பூஜையும், அதன்பின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக மாம்பழச் சாறு ஒரு அண்டா நிறைய நிரப்பப்பட்டிருந்தது.

விளையாடிக் கொண்டிருந்த அந்த வீட்டுக் குழந்தை, மாம்பழச் சாறு நிரம்பியிருந்த அண்டாவுக்குள் எட்டிப் பார்க்க முனைந்து, தடுமாறி அண்டாவினுள் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் தத்தளித்து மூழ்கி விட்டது. அத்தனை பேரும் ஸ்ரீ ராகவேந்திரர் செய்யும் மூலராமரின் பூஜையிலிருந்து விழிகளை அகற்ற இயலாமல் ஈடுபட்டிருந்தனர். சமையலறையில் நடந்த விபரீதம் அவர்கள் யாருக்குமே தெரியாது! குழந்தை மூழ்கிய அதே நேரம் ஸ்ரீ ராகவேந்திரர் பூஜைக்கு வைத்திருந்த கமண்டலத்தில் ஒரு வண்டு விழுந்து விட்டது. பூஜைக்கு வேறு தீர்த்தம் கேட்டுப் பெற்ற ஸ்ரீ ராகவேந்திரர், உள்ளே நடந்ததை அறிந்து கொண்டு விட்டார்.

பூஜை முடிந்தது. பிரசாதங்கள் வழங்கும் நேரம் வந்தது. குழந்தையை அழைத்து வரச் சொன்னார். அவர் பாதங்களில் விழச் சொல்வதற்காக குழந்தையைத் தேடிப் போன பெற்றோர், குழந்தை அண்டாவுக்குள் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். துடித்தனர். ‘குழந்தை இறந்து விட்டதே!’ என்ற கலக்கத்தை விடவும் விஷயம் தெரிந்தால் யாரும் உணவருந்தாமல் போய் விடுவார்களே என்ற கலக்கம் அதிகமாக வருத்தியது. குழந்தையை அப்படியே ஒரு துணியில் சுற்றி ஓரமாக வைத்தனர். பொங்கும் துக்கத்தை நெஞ்சில் புதைத்தனர். விருந்து முடியும் வரை அதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென அந்தப் பெற்றோர் முடிவு செய்தனர்.

விடுவாரா குரு மகான்! குழந்தையை அழைத்து வரச் சொல்லிப் பல முறை கூறினார். பெற்றோர் தாங்க முடியாமல் உண்மையை உரைத்து அவர் காலடியில் விழுந்து கதறினர். குழந்தையைக் கொண்டு வந்து அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர். ஸ்ரீ ராகவேந்திரர் தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரைக் குழந்தையின் மீது தெளித்தார். கண்மூடிப் பிரார்த்தித்தார்.

அதிசயம் நிகழ்ந்தது! அடங்கியிருந்த குழந்தையின் உடலில் அசைவு! நின்று போன இதயம் மீண்டும் இயங்கத் துவங்கியது! குழந்தை துள்ளி எழுந்தது! கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்! கிராமத் தலைவரும், அவரது மனைவியும் ராகவேந்திரர் பாதங்களில் விழுந்து நன்றியில் கதறினார்கள்.

'தெய்வ அம்சமே ஆனாலும், மனித வடிவெடுத்து உலகை வலம் வருபவர்களால் இவை சாத்தியமாகக் கூடுமா?' என்ற கேள்வி எழுகிறது. தெய்வ அருளின் பெருமைகளை அவ்வப்போது மக்களுக்கு உணர்த்தவும், அவர்களுக்கு தெய்வ நம்பிக்கை ஊட்டவுமே, இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக ஸ்ரீ ராகவேந்திரரே கூறியுள்ளார். மகான் ஆற்றிய இன்னொரு அற்புதத்தைப் பேசலாம் என்று பார்த்தால் அதற்குள் மறு கரை வந்து விட்டதே!

பரிசலில் இருந்து இறங்கிக் கரை ஏறினோம். பஞ்சமுகிக்கு அழைத்துச் செல்ல அங்கே காத்திருந்த ஓர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம்.

(பயணம் தொடரும்)