“ஒரு தாய் என்கிற ரோல்தான் இன்றைய பெண்களுக்கு சவாலாக இருக்குன்னு நினைக்கிறேன். அலுவலக வேலையோ, வீட்டு வேலையோ அல்லது எழுத்தாளராக பணியாற்றுவதோ, இது எதுவுமே எனக்குச் சிரமமாக தெரியவில்லை. குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கவனத்தை அந்தந்த நேரத்தில் அவங்களுக்கு கட்டாயம் நாம கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான், நம்மளோட வாழ்க்கை முறையை புரிஞ்சுகிட்டு அவங்களும், நம்மளோட சேர்ந்தே பயணிப்பாங்க...” என்று தன்னுடைய எட்டு வயது மகள் அம்முவைப் பற்றி, முதன்முறையாக பொதுவெளியில் மனம் திறக்கிறார் கவிஞர் செல்வி ராமச்சந்திரன். கவிஞர், இதழாசிரியர் என்று பன்முகம் கொண்டவரை சந்தித்தோம்.

கவிஞரான நீங்கள், அம்முவைப் பற்றிய கவிதை தொகுப்பு எழுத வாய்ப்பு உள்ளதா?

“ஏற்கனவே மனுஷ்ய புத்திரன், அம்முவைப் பற்றி நிறையவே எழுதிட்டாரு. அதை ஒரு தொகுப்பாகவே நாம கொண்டு வரலாம். அவரை விட அம்முவோட நான்தான் அதிக நேரம் செலவிடறேன். அவர் எழுதினதைத் தாண்டி இன்னும் அம்முவைப் பற்றி பேச நிறைய இருக்கு. அதை ஒரு படைப்பா கொண்டு வரணும்னு இருக்கேன்.”

அம்முவின் உலகத்தில் நீங்கள் எப்படி? 

“ நான் தனி ஆளாக இருக்கும்பொழுது, அதிகமாக பயணம் செஞ்சதில்லை. எனக்கென்று ஒரு வட்டம், அதுக்குள்ளேதான் நான் இருந்துக்குவேன். அம்மு வந்த பிறகு, நான் அதிகமான பயணங்களை மேற்கொள்ள ஆரம்பிச்சேன். ஏன்னா, அவளுக்கு பயணம் ரொம்ப பிடிக்கும். இரவில் ரயில் பயணம் மேற்கொள்ளும்பொழுது, வெளியே தென்படுகிற நிலா, மரங்கள், இப்படி எல்லாத்தையும் ரசிச்சிக்கிட்டு வருவா. அவை எல்லாவற்றையும் பார்த்தால் அவளுக்கு என்ன தோணுதுன்னு, சொல்லிட்டே இருப்பா. குழந்தைகளோட உலகமே தனி. நாமும் அவர்களோடு சேர்ந்து குழந்தையா மாறி ரசித்தால்தான் அது என்னன்னு நமக்குத் தெரியும்.”

பிள்ளை வளர்ப்பு குறித்து இன்று பல புத்தகங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ஒரு பதிப்பாசிரியராக, இந்த புத்தகங்கள், ஒருவருக்கு எந்த அளவில் உதவும் என்று கூறமுடியுமா?

“ஒவ்வொரு குழந்தையும், வெவ்வேறு உலகம். ஒரு குழந்தையைப்போல் இன்னொரு குழந்தை இருப்பதில்லை. அவர்களுக்கென்று, ஒரு விருப்பு, வெறுப்பு என்று இருக்கிறது. இது போன்ற புத்தகங்கள், வெறும் வழிகாட்டியாக செயல் படுமே ஒழிய, இதனை நாம் பின்பற்ற முடியாது.”

பெற்றோர்கள், தங்கள் ஆசைகளை, தன் குழந்தைகளின் மீது திணிப்பது சரியான போக்கு என்கிறீர்களா?

“என்னைப்பொறுத்தவரை இது தவறு என்றுதான் சொல்லுவேன்.  குழந்தைகளை, அவர்கள், இயல்பிலேயே வளரவிடுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், அவர்களை நல்ல வழியில் செதுக்கும். என்னைக் கூட, என் நண்பர்கள் சிலர் “என்னங்க! "நீங்க உங்க பிள்ளைகளை காட்டுச் செடியைப் போல வளர்க்குறீங்க?” என்று கேட்பார்கள். எனக்கு பிள்ளைகளை ரோஜா செடியைப்போல உரமிட்டு, எந்நேரமும் கண்காணித்து வளர்ப்பதில் சிறிதும் விருப்பமில்லை. குழந்தைகள், அவர்கள் இயல்பில் வளர்வதுதான் அவர்களுக்கும் நல்லது.”

பள்ளிக்கூடத்தில், குழந்தைகளின், நடவடிக்கைகளை பெற்றோர்கள் அறிய வேண்டியது அவசியம் தானா?

“கண்டிப்பா அவசியம்தாங்க. பள்ளிக்கூடங்கள்ல வெவ்வேறு சூழல்ல இருந்து பிள்ளைகள் வருவாங்க. ஒவ்வொருத்தரோட எண்ணங்கள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சில குழந்தைகள் வீட்டில் அமைதியா இருப்பாங்க, ஸ்கூல்ல வால் தனம் செய்வாங்க. அம்மு ஸ்கூல்ல ரொம்ப அமைதியா, அவங்க நண்பர்கள் செய்யுறதை கூர்ந்து கவனிச்சு வீட்ல நடைமுறை படுத்துவா!. அதுதான் அம்முவோட ஸ்பெஷாலிட்டி!”குட் டச்  பேட் டச் பற்றிய அறிவு இன்றைய பிள்ளைகளுக்கு எவ்வளவு அவசியம்?

“ குட் டச் பேட் டச் சார்ந்த அறிவு இன்றைய சூழல்ல பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது ரொம்ப ரொம்ப அவசியம். பள்ளிக்கூடங்கள்ல, அதைப் பற்றிய படிப்பினைகள் இல்லைன்னுதான் நான் சொல்லுவேன்.

அதோட கார்ட்டூன் படங்களில் இடம்பெறும் வசனங்களை கவனிச்சீங்கன்னா ரொம்ப எதிர்மறையா இருக்கும். உதாரணத்துக்கு சொல்லணும்னா “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது”ன்னு   போன்ற வசனங்கள் எல்லாம் வரும். அதை கவனிச்சு, அம்மு என்கிட்டே பலமுறை அப்படி கேட்டு இருக்கா. உனக்கு மட்டுமில்லை இப்படி எல்லோருக்கும் நடக்கும்னு சொல்லி இருக்கேன். பெற்றோர்களாகிய நாமதான் அவங்களுக்கு நல்ல விஷயங்களை சரியாக சொல்லி கொடுக்கணும்னு இல்லையா?!” என்று கொக்கி போட்டு, நம்மிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்டார்!

இருக்கின்றபோது அதன் அருமை எப்போதுமே நமக்குத் தெரிவதில்லை. மழைக்காலத்தில் இங்கே வீணான தண்ணீர் கொஞ்சமா நஞ்சமா ? நிலப்பரப்பு மொத்தத்தையும் நீர் மூடி நின்றது அப்போது. பெய்த மழைத்தண்ணீர் முழுதும் அப்படியே போய்க் கடலில் சேர்ந்தது. கல்லகழ்ந்த பாறைக்குழிகள் அங்கங்கே இருந்தன. வெள்ள நீரை அந்தப் பாறைக்குழிகளில் சென்று தேங்கும்படி ஒரு சிறிய இணைப்பு வேலையைச் செய்திருந்தால் போதும். பாறைக்குழிகள் செலவில்லாத நீர்த்தேக்கங்களாய் மாறி நீரைச் சேர்த்து வைத்திருக்கும். இப்போது அந்நீரைக் குடிப்பதற்கு இல்லையென்றாலும் எத்தனையோ பயன்பாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை நாம். 

முற்காலத்தில் சாலையோரங்களில் சாரைசாரையாய்ப் புளியமரங்களை நட்டார்கள். அந்த மரங்கள் பெருமரங்களாய் வளர்ந்து நிற்கின்றன. எந்தக் காலத்திலும் நீங்கள் சாலைவழியாய்ச் சென்றால் புளியமர நிழலிலேயே செல்வீர்கள். தரையின்மீது சூரியவெளிச்சம் படாமல் இருந்தாலே போதும். அங்கே குளிர்ச்சி தோன்றிவிடும். அந்த மரங்களை வைத்தவன் என்ன நினைத்து வைத்தான் ? நாளைக்கே இவை வளர்ந்து பலன் தந்துவிடும், புளியம்பழங்களைக் கொய்து தின்னலாம் என்று நினைத்தானா ? இல்லை. நமக்குப் பின்னால் வரும் தலைமுறை புளியம்பழங்களைத் தின்று வாழட்டும் என்று நினைத்தான். இச்சாலையில் செல்லும் வழிப்போக்கன் வெய்யிலில் வாடி மயங்காமல் நிழலடியில் குளிர்ச்சி பெறட்டும் என்றே எண்ணினான். அந்த அறப்பண்புதான் சாலையோரங்களில் புளியமரங்களை வைத்துப் பேணியது. வளர்த்துத் தந்தது. அம்மரங்களின் விளைச்சலை நாம் இன்று கண்டோம். அதன் நிழலில் மனங்குளிர்ந்தோம். 

இன்றைக்குப் புளிகள் வளர்ந்த சாலையில் செல்லும்போது பூங்காற்றாய் நம்மீது படுங்காற்று வெற்று வெளியில் செல்கையில் வெங்காற்றாய்ப் பொசுக்குகிறது. அன்றைக்கு நம்மக்கள் எல்லாரும் செருப்பணிந்தார்களா என்ன ? இல்லை, செருப்பு என்பதே கல்லும் முள்ளும் கால்களைக் கீறாதபடி பாதுகாக்கத்தான் தோன்றியது. தரை வெப்பத்திடமிருந்து அடிக்கால்களைப் பாதுகாப்பதற்காகத் தோன்றவில்லை. இன்றைக்குக் கல்லும் முள்ளும் இல்லாமல் வழித்தெடுக்கப்பட்ட தார்ச்சாலைகள் இருக்கின்றன. ஆனால் செருப்பில்லாமல் தார்ச்சாலைமீது ஒரு நொடிகூட நிற்கமுடியாது. 

வெப்பத்தால் தார்ச்சாலை அம்மன்கோவில் தீக்குழியாய்த் தகிக்கிறது. இதே தார்ச்சாலை புளியமரத்தடியில் பூவிரிப்பாய்க் குளிர்கிறது. வெய்யிலில் பன்மடங்கு வெப்பத்தை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. இடையில் என்ன நடந்தது ? சாலையோரத்தில் வளர்ந்து நிழலூற்றிய தருக்களையெல்லாம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வேரோடு பெயர்த்தெறிந்தோம். இப்போது அதுதான் நிலைமை. சாலைகளில் கால்வைத்தால் பொசுங்கிவிடும். 

சாலைகளில் நிழற்குடை அமைக்கிறேன் என்று ஆங்காங்கே கட்டடக்கூடங்களைக் கட்டிவைத்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் நிதி, திட்ட மதிப்பீடு ஒன்றரை இலட்சம் என்று அதில் பொறித்தும் வைத்திருக்கிறார்கள். எண்ணிப் பாருங்கள்.. எவ்வளவு பெரிய மடத்தனம் இது ! நிழற்கூடம் அமைப்பதற்கு மாற்றாக இரண்டு நிழல்மரங்களை வைத்தால் அங்கே பணம் மிச்சம், கனிமப்பொருள்கள் மிச்சம், இயற்கைக்கும் பாதுகாப்பு. ஆனால், அதைச் செய்யாமல் நிழற்குடை கட்டி வைத்திருக்கிறார்கள். அந்நிழற்குடை நாறிப்போய்க் கிடக்கும். நாய்தான் படுத்திருக்கும். நிழற்குடையில் பக்கவாட்டு நிழலில் மக்கள் நின்றுகொண்டிருப்பார்கள். 

நாம் செய்த எல்லா மடத்தனங்களின் விளைவுகளையும்  இக்கோடையில் பட்டுணர்கிறோம். பழமொழியும் அதைத்தான் சொல்கிறது,  நிழலின் அருமையை வெய்யிலில் தெரிந்துகொள்கிறோம். ஆனால், தெரிந்துதான் கொண்டோமே தவிர மீண்டும் தொடர்ந்து ஆக்கவழியில் செயலாற்றுவோமா என்றால் தெரியாது. இனியும் நிழல்மரங்களை வளர்க்காவிடில் கட்டட நிழலும் கொதிப்பாகத்தான் இருக்கும். உயிர்வளியைப்போல உயிர்நீரைப்போல மரநிழல் என்பது உயிர்களின் உறைவிடம் என்பதை மறந்துவிட்டோம். எப்படியும் நாம் மறப்போம் என்றுதானோ என்னவோ, நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்று சொல்லிச்சென்றார்கள். 

எல்ரெட் குமார் தயாரிப்பில் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் 'வீரா' படத்தை இயக்கியுள்ளார் ராஜாராமன். ஏற்கனவே விளம்பரப் படங்களில் தனது முத்திரையைப் பதித்தவர், இப்போது இந்தப் படம் மூலமாக வடசென்னை மக்களின் வாழ்க்கையை அழுத்தமான பதிவு செய்துள்ளார். அவரை சந்தித்தபோது,  

"ஒரு இயக்குநராக உருவாவதற்கு திரைப்படக் கல்லூரியில் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கலை. இன்ஜினியரிங் படிச்சேன். இப்படியான சூழலில்தான் ஸ்பென்சர் பிளாஸாவில் அப்போது லேண்ட்மார்க் எனும் கடை இருந்தது. அதில் நிறைய சினிமா சார்ந்த ஆங்கிலம், தமிழ் சார்ந்த புத்தகங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் எடுத்து படித்துதான் சினிமா அறிவை வளர்த்துக்கிட்டேன். 

ஒரு திரைக்கதை என்பது கண்ணுக்கு தெரியாத விஷயம். அதனால், நிறைய திரைப்பட விவாதங்களில் பங்கெடுத்துக்கிட்டேன். அதன்பிறகு விளம்பரப் படங்களில் அதிகமாக வேலைப் பார்த்தேன். அப்படி பணியாற்றும்போது நிறைய ஒளிப்பதிவாளர்களின் தொடர்பு கிடைத்தது. அப்படியே சினிமா தொழில்நுட்பத்தையும் கத்துக்கிட்டேன். பிறகு, விளம்பரப் பட இயக்குநராக மாறினேன். இப்போ 'வீரா' படம் மூலமாக இயக்குநராகிட்டேன்!

'சரபம்', 'கோ&2' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினேன். இவை தவிர, வேறு சில இயக்குநர்களின் படங்களுக்கும் எழுதியிருக்கேன். அப்படியாக ஒரு திரைப்படத்தை இயக்கும்போது கதையையோ, வசனங்களையோ வேறு ஒருவரை வைத்து செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. அப்படித்தான் என்னுடைய நண்பர் வாசு என்பவர் மூலமாக எழுத்தாளர் பாக்கியம் சங்கர் அறிமுகமானார். அவரிடம் ஒரு திரைப்படத்துக்கான ஒன்லைன் இருந்தது. அதை படமாக்கினால், நிச்சயமாக அது ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்பினேன். அதேபோல, ஒரு இயக்குநராக அந்தக் கதையை படமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கிருந்தது. அப்படித்தான் 'வீரா' படமும் உருவானது.

ரஜினி சார் இதுவரை நடித்த படங்களிலேயே ஆடியோவில் பெரிய ஹிட் அடித்த படம் 'வீரா'. அதேபோல, ஆடியோவில் இந்த வீராவும் ஹிட்டடித்திருக்கிறது. இது ரெண்டும் தான் ஒன்றே தவிர, மற்றபடி கதையமைப்பில் இந்த 'வீரா' வேறு. கதையின் நாயகனுடைய பேரு வீரமுத்து. அதனால் டைட்டிலை அப்படி வைத்தோம். மற்றபடி நானும் தலைவரோட (ரஜினி) ரசிகன் தான்!

படத்தின் கதையை பாக்கியம் சங்கரோட விவாதிக்கும்போது, ஸ்கெட்ச் சேகர், ஏழுகிணறு ஏழுமலை, சுராமுருகன், வீரமுத்து, பச்சமுத்து என 
கதாபாத்திரங்களோட பேரையே வித்தியாசமாக சொன்னாரு. இவங்க எல்லோருமே வடசென்னையோட மனிதர்கள்தான். சில பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையோட பிரதிபலிப்புகளாக இருக்கும். அதை வேண்டுமென்றேதான் படத்தில் வைத்தோம். அது தயாரிப்பாளர்களுக்கும் பிடித்திருந்தது. வட சென்னைக்கான படங்கள் என்று சொல்லும்போது, கதாபாத்திரங்கள் உறுதியானதாக இருக்கணும். அதன் வழியாகத்தான் ரசிகர்களிடம் போய்ச் சேர முடியும். அதற்கு இந்தப் பேரு எல்லாம் உபயோகமாக இருக்கும். வடசென்னை மக்களின் வாழ்வியலைத்தான் 'வீரா' படத்தில் சொல்லியிருக்கிறோம்!

வழக்கமான வடசென்னை படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்க வேண்டும் என நினைத்தேன். 'மெட்ராஸ்' படத்தில் ஒரு சுவரை மையமாக வைத்து இயக்கியிருப்பார் பா.ரஞ்சித். இந்தப் படத்தில் வட சென்னையில் இருந்த மனமகிழ் மன்றங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகிற கதைகள் ஜெயிக்கும் என்பது எப்போதுமே நான் நம்புகிற விஷயம். அதுபோல 'வீரா' படமும் இருக்கும். 'கோ 2', 'கவலை வேண்டாம்' போன்ற படங்களுக்கு இசையமைச்சிருந்தாரு லியோன் ஜேம்ஸ். முதலில் "வூட்டாண்ட..." பாடலைதான் கம்போஸ் பண்ணினோம். அப்பவே எனக்கு அவருடைய இசை மேல நம்பிக்கை வந்துடுச்சு. பாடல்களும் சிறப்பாக வந்திருக்கு!" என்றார். இப்போது வடசென்னையை மையமாக வைத்து, அதிகமான படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை வெற்றியும் அடைகின்றன. அந்த வரிசையில் 'வீரா' படமும் இடம் பிடிக்கும் என நம்புவோமாக!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின் பல மாறுதல்கள், உலகம் முழுக்க நிகழத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்று ஐ.டி. துறை. அதிக சம்பளத்தை பெற்றுத் தந்த இந்த துறையில் தற்போது ஆட்குறைப்பு என்பது அதிகரித்துள்ளது. அது தமிழகத்தில் உள்ள பல எம்.என்.சி.களில் எதிரொலித்துள்ளது. தற்போது கணிப்பொறி துறையில் பணியாற்றும் இளைஞர்களில் பலர், அதிகமான வருமானம் தந்த தங்களுடைய வேலைகளை உதறிவிட்டு, விவசாயம் நோக்கி அடியெடுத்து வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. காரணம், எதிர்காலத்தில் பணம் கொழிக்கும் துறையாக இருக்கப்போவது விவசாயம் என்பதால் தான்!. அப்படி நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, விவசாயத்துக்கு, பல இளைஞர்கள் இன்று படையெடுத்து வருகின்றனர். பத்து வருடத்திற்கு முன்பே இதில் கால்பதித்த இயற்கை ஆர்வலர்களான அலெக்ஸான்டர் மற்றும் செங்குட்டுவனைச் சந்தித்தோம். 

மொட்டைமாடித் தோட்டத்தில் பல புதுமையான விஷயங்களை செய்து, அதனை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். அலெக்ஸிடம் ''எதிர்காலத்தில் விவசாயம், என்னவாகப் போகிறது?" என்றதற்கு, “இயற்கை விவசாயத்தை நோக்கித் தான் நம்ம எல்லோருடைய பயணமும் இருக்கு. இயற்கை விவசாயம் என்பது, வெறும், இயற்கை முறை உரங்களை போட்டு செடிகளை வளர்ப்பது இல்லை என்பதை தெளிவா புரிஞ்சிக்கணும். நம்ம தட்பவெப்பத்துக்கு ஏற்ற மாதிரி மண்ணுல விளையுற மரங்களை வளர்ப்பது தான் இயற்கை விவசாயம். இது தெரியாம, ஹைபிரிட் மரங்களை வளர்த்து தயார் செய்யுறாங்க. உதாரணத்துக்கு சொல்லணும்னா, தர்பூசணியை முழுவதுமாக வளர்த்து அதனை 60 கிலோமீட்டருக்கு மேல கொண்டு போக முடியாது. பழம் வெடிச்சுடும். அப்படி வெடிக்க விடாம, பாதுகாக்க, சில ரசாயனங்களை உபயோகப் படுத்தறாங்க. அது மட்டுமில்லாம, ஹைப்ரிட் வெரைட்டி செய்யுறாங்க. இதுனால நமக்கு இயற்கையான சத்துள்ள பழங்கள் கிடைக்கிறது இல்லை. 

தொழில் நுட்பம் தெரியாத இளைஞர்களே இப்பொழுது கிடையாது. விவசாயத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்கணும்னா, நம்ம டெக்னாலஜியை பயன்படுத்துறது தப்பே கிடையாது. அதற்கு முதல் படியாக நாங்க என்ன செஞ்சு இருக்கோம்னா, விவசாயத்துக்கு ஏற்ற மொபைல் செயலியை உருவாக்கி இருக்கிறோம். அதுக்கு முதல்ல, உங்க செடிகள்ல நீங்க டிவைஸை பொருத்திக் கொள்ளணும். எந்த அளவுக்கு நீர் தேவை, தேவையில்லை போன்ற விபரங்களை உங்க மொபைலுக்கு அனுப்பி வச்சிடும். நீங்க ஊருக்கு போனாலும் உங்கள் தோட்டத்தோட நிலவரங்களை உங்களுக்கு சொல்லிடும். சிசிடிவி கேமரா பொருத்திடீங்கன்னா நீங்க, எங்கே இருந்தாலும், உங்க தோட்டத்தை மானிட்டர் செஞ்சுக்கலாம். 

முக்கியமாக, அவங்களுக்கு, நீரின் இன்றியமையாமையை சொல்லி கொடுக்கணும். இப்போ நாங்க சொட்டு நீர் பாசனத்தைதான் வலியுறுத்திட்டு வர்றோம். மக்களும், அதுல தங்களை ஈடுபடுத்திக்கிறதை பார்க்கிறோம். நம்ம நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இப்ப இருக்குற இளைஞர்களால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கு" என்று உறுதியாக அவர் கூறியதும், அருகில், இருந்த செங்குட்டுவன் அவர்கள் சில மூலிகை செடியின் பயன்களை நமக்கு சொல்கிறார். இயற்கையே, மருந்தாகவும், உணவாகவும் நமக்கு இருப்பது வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது. அவற்றில் சில,

சர்க்கரைத் துளசி - 

இது தொண்டை கரகரப்பு, வாய் துர்நாற்றம்  மற்றும் சளிக்கு ஏற்றது. இலையோட சுவை பெப்பர் மின்ட் போல இருக்கும். 

இன்சுலின் - 

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. கீரையாக சமைத்து சாப்பிட்டு வந்தால், பசியின்மை குணமாகும். அரைத்து வெளிப்பூச்சாக முகத்தில் பூசினால், முகம் பொலிவு பெரும். 

அக்ராகார் - 

பல் வலிக்கு ஏற்றது. பல்லில் ஏற்படக்கூடிய கிருமிகளை அழிக்கும்.

 
மஞ்சள் கரிசலாங்கண்ணி - 

மஞ்சள் காமாலை, முடி உதிருதல் போன்றவைகளை குணமாகும். இயற்கை ஹேர்டையாக பயன்படுத்தலாம்.

சிறுபீளை - 

சிறுநீரகக் கற்களுக்கு ஏற்றது. அதிகமாக வயல் வெளிகளில் காணப்படும் தாவரம்.

நிலவேம்பு- 

நூறு பாகற்காய் கசப்பு இதன் ஒரு இலையில் இருக்கும். மலேரியா போன்ற நோய்க்கு ஏற்ற மருந்து. பாம்புக்கடி, விஷக்கடிக்கு ஏற்றது.

தவசிக்கீரை 

எல்லா கீரைகளிலும் இருக்கக்கூடிய சத்துக்கள் மொத்தமும் இக்கீரையில் இருக்கிறது.
 
என்று மருத்துவரைப் போல் இவர் சொன்ன குறிப்புகள் வியக்க வைக்கிறது. நம் முன்னோர்கள் மருந்து என்று பேணி பாதுகாத்த தாவரங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இனிமேலும், சுதாரித்துக் கொண்டு, நாம் இவற்றை நம் வீட்டிலேயே பயிரிட்டுக் கொள்ளலாமே. இதை விட இவர்கள் கொடுத்த பூனைமீசை டீ சுவையாகவே இருந்தது. அதற்கான, செய்முறையையும் செங்குட்டுவன் கூறுகிறார், 

"சீரகத்துளசி, செடியில் வளரும் பூவானது பூனை மீசையை போலவே இருப்பதானால் பூனை மீசை என்கிறோம். சீரகத் துளசியின்  10 இலைகளை தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு, கருப்பட்டி சேர்த்து அருந்தினால் சுவையான 'பூனைமீசை டீ' தயார். இது உடலில் சேரக் கூடிய அதிக கொழுப்பு, உப்பு போன்றவைகளை வெளியேற்றும்.” என்று கூறி, நமக்கும் அந்த டீயைக் கொடுத்தார். சுவை அருமையாகவே இருந்தது.

உங்கள்முன்னே நான்கு கதைகள் உள்ளன. ஆனால், அவற்றை எழுதியவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த நான்கில் ஒரு கதை, உங்கள் அபிமான எழுத்தாளர் எழுதியது. மற்ற மூன்றும் வேறு யாரோ எழுதியவை. இப்போது, நீங்கள் இந்த நான்கு கதைகளையும் படித்துப்பார்க்கவேண்டும், அவற்றுள் உங்கள் அபிமான எழுத்தாளர் எழுதிய கதை எது என்று கண்டுபிடிக்கவேண்டும்.

ஏற்கெனவே படித்த ஞாபகத்தை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அது சாத்தியமில்லை. காரணம், உங்கள் அபிமான எழுத்தாளருடைய புதிய கதை இது. நீங்கள் இன்னும் இந்தக் கதையைப் படிக்கவில்லை. ஆகவே, இப்போது உங்களுக்கு நினைவாற்றல் உதவாது. அந்த அபிமான எழுத்தாளருடைய பாணியைக் கண்டுபிடிக்கும் திறன்தான் உதவும்.

அதாவது, உங்கள் அபிமான எழுத்தாளருக்கென்று ஒரு தனித்துவமான பாணி இருந்தால், இந்த நான்கில் ஒரு கதையில் அந்தப் பாணி வெளிப்படும், நீங்கள் சட்டென்று அதைக் கண்டுபிடித்துவிடுவீர்கள். ஒருவேளை அவருக்கு அப்படி எந்தப் பாணியும் இல்லை, அவர் எல்லாரையும்போல் எழுதுகிறவர் என்றால், இவற்றில் எது அவருடைய கதை என்று நீங்கள் கண்டுபிடிப்பது சிரமம். குத்துமதிப்பாக ஏதேனும் ஒன்றைச் சொல்லலாம். அதிர்ஷ்டவசமாக அது சரியாக அமைந்தால்தான் உண்டு.

ஆனால், இந்த விஷயத்தில் பெரும்பாலானோர் தவறுசெய்யமாட்டார்கள். தங்களுடைய அபிமான எழுத்தாளரின் கதையைத் துல்லியமாகவே கண்டுபிடித்துவிடுவார்கள். இதற்கு என்ன காரணம், எதைவைத்து இது அவருடைய கதை என்று சொல்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்தால், அவர்களுக்கு விளக்கம் சொல்லத்தெரியாது. 'இது அவரோட கதைன்னு தோணுது' என்பார்கள், அவ்வளவுதான்.

உண்மையில் அவர்கள் இவ்வாறு கண்டுபிடிக்கக் காரணம், அவர்களுடைய தனித்திறமை இல்லை. சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் தனித்திறமை, அதாவது, அந்த எழுத்தாளர் கூட்டத்திலிருந்து தன்னைத் தனியே அடையாளம் காட்டிக்கொள்ளும் திறமைதான் இதற்குக் காரணமாகிறது. அவர் அவ்வாறு தனித்துக்காட்டிக்கொண்டதால்தான் அவருடைய எழுத்தை இவர்கள் ரசிக்கிறார்கள்.

தனிப்பட்ட எழுத்தாளர்களின் நிலைமை இப்படியிருக்க, ஊடகங்கள் இதற்கு நேரெதிரான ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, தனித்துக்காட்டிக்கொள்ளாவிட்டால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்கிற மனோபாவம் அதிகரித்திருக்கிறது. 'இன்றைய பத்திரிகைகளின் அட்டையைக் கிழித்துவிட்டால் எதையும் யாருக்கும் அடையாளம் தெரியாது' என்பார்கள். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சானல்கள், இணையத்தளங்கள் என அனைத்திலும் அதே கதைதான். தங்களுடைய அடையாளமாக அவர்கள் காட்டிக்கொள்ளும் வணிகச்சின்னம் போன்ற விஷயங்களை மறைத்துவிட்டால், அவர்களைத் தனித்துக் கண்டறிய இயலாது. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் ஒரேமாதிரிதான் இயங்குகின்றன.

இதனால், இன்றைக்கு யாரேனும் ஊடகத்துறையில் நுழைந்து ஒரு புதிய பத்திரிகையை உருவாக்க விரும்பினால், ஏற்கெனவே பலரும் பின்பற்றிக்கொண்டிருக்கிற அதே பாணியைதான் அவர்களும் பின்பற்றவேண்டியிருக்கிறது. ஒருவேளை மாற்றிச்செய்தால் மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்று அவர்கள் தயங்குகிறார்கள்.

இது ஒரு மிக மோசமான சுழல். யாரைப்பார்த்து யார் செய்கிறார்கள் என்றே தெரியாதபடி எல்லாரும் எல்லாரையும் பார்த்து ஒரேமாதிரியான ஊடகச்சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இப்படிச்செய்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பாருங்கள். எல்லாரும் ஒரேமாதிரி பாத்திரங்கள், ஒரேமாதிரி கதைப்பின்னணி, ஒரேமாதிரி திருப்பங்களுடன் கதையெழுதத் தொடங்கினால், ஒரு நாளைக்கு ஐம்பது கதைகள் உருவாகிவிடும், ஆனால், அவற்றை யாரும் வாசிக்கமாட்டார்கள், புறக்கணித்துவிட்டுச் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.

அதேபோல், மாறுகிற சமூக எதிர்பார்ப்புகளையும் ஊடகங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்பத் தங்களுடைய பாணியை அமைக்கவேண்டும். அப்படிச்செய்யாவிட்டால், 'இவர்கள் என் மொழியைப் பேசவில்லை, நான் கேட்க விரும்பும் விஷயங்களைப் பேசவில்லை’ என்று ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும் ஏற்படும், மாற்று ஊடகங்களைத் தேடத்தொடங்குவார்கள். இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்தச்சூழல், சுமார் கால் நூற்றாண்டுகாலத்துக்குமுன்பே மேற்கத்திய நாடுகளில் தொடங்கிவிட்டது. அன்றைய மக்களின் மொழியை அன்றைய ஊடகங்கள் பேசவில்லை, எல்லாம் ஒரேமாதிரி அரைத்த பழைய மாவையே அரைத்துக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பாக, இளைஞர்களின் மாறிவரும் உலகைப் பொது ஊடகங்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய தர அளவுகோல்களை இவர்கள்மீது திணிக்க முயன்றார்கள். அது எப்படி எடுபடும்?

அந்தச் சூழ்நிலையில், இளைஞர்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் விதத்தில், அவர்களுக்கு நெருக்கமான மொழியில், அவர்களுக்கான பொழுதுபோக்கை வழங்கியது Voice of Montreal என்ற ஒரு பத்திரிகை. மற்றவர்கள் மத்தியில் இவர்கள் வித்தியாசமாகச் செயல்பட்டதால், இளைஞர்கள் உடனே கவனித்தார்கள், ஆதரவளித்தார்கள். அப்போதும், மற்ற ஊடகங்கள் விழித்துக்கொள்ளவில்லை. சொல்லப்போனால், அவர்கள் இந்தப் பத்திரிகையைக் கண்டுகொள்ளக்கூட இல்லை. ஒருவேளை கவனித்திருந்தாலும், 'இதெல்லாம் ரொம்பநாள் தாங்காது, ஒன்று, இந்தப் பத்திரிகையை இழுத்து மூடிவிடுவார்கள், அல்லது, அவர்களும் விரைவில் எங்கள் பாணிக்கு வந்துவிடுவார்கள்' என்றுதான் சொல்லியிருப்பார்கள்.

ஆங்கிலத்தில் இதனை 'Niche Market' என்பார்கள். அதாவது, வெகுஜன மக்களுக்காக அல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான பேர்களைமட்டும் திருப்திப்படுத்தும் சந்தை. நமக்குப் புரியும்படி ஓர் உதாரணம் சொல்வதென்றால், ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களெல்லாம் வெகுஜன மக்களுக்காகப் பரபரப்பான கதைகளுடன் எடுக்கப்படுகின்றன; இன்னொருபக்கம், இயல்பான மனிதர்களை, வாழ்க்கையைப் பதிவுசெய்கிற படங்களும் வருகின்றன, அவற்றை அதிகப்பேர் பார்ப்பதில்லை, எனவே, அவற்றை விரும்பிப்பார்க்கிற சிலரைமட்டுமே அந்தப் படங்கள் திருப்திப்படுத்தும். அதுதான் Niche Market.

இப்போது ரஜினி, கமல் படங்களை எடுக்கிற இயக்குநர்கள் இந்த Niche Market படங்களைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்?

'அதெல்லாம் சில பேர்தான் விரும்புவாங்க, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்காது, நான் அந்தமாதிரி படம் எடுத்தா நல்லாயிருக்காது'... இந்தத் திசையில்தான் அவர்களுடைய சிந்தனைகள் செல்லும். ஒருவேளை, இந்த Niche Market மெல்ல Mass Marketஆக மாறிவிட்டால்? பெரும்பான்மை மக்கள் அதிரடிப் படங்களைவிட இதுபோன்ற படங்களை விரும்பத்தொடங்கிவிட்டால்?

இதுதான் ஊடகத்துறையில் அன்றைக்கு நடந்தது. மக்கள் 'வழக்கமான' ஊடகங்களை வெறுக்கத்தொடங்கினார்கள்.

தங்களுக்கான விஷயங்களைத் தரும் தனித்துவமான ஊடகங்களைத் தேடினார்கள். அவற்றைக் கொண்டாடினார்கள். Voice of Montreal பத்திரிகை வெற்றிபெற்றது அப்படிதான். 1994ம் ஆண்டில் தொடங்கிக் கனடா அரசின் ஆதரவுடன் வெளிவந்த இந்தப் பத்திரிகை, ஆரம்பத்திலிருந்தே மற்றவர்களைப்போலில்லாமல் வித்தியாசமாகச் செயல்பட்டது. இளைஞர்களின் மனத்தை அறிந்து அவர்களுக்கு நெருக்கமான பாணியில் எழுதியது. அன்றைக்கு அந்தப் பத்திரிகையில் வந்த விஷயங்களைப் பெரிய பத்திரிகைகள் ஒருநாளும் வெளியிடமாட்டார்கள். ஒருவேளை அவற்றை வெளியிட்டாலும், இதேபோல் வெளியிடமாட்டார்கள், ‘தூய்மைப்படுத்தி’தான் வெளியிடுவார்கள்.

காரணம், ஒரு பத்திரிகையில் எவையெல்லாம் வரவேண்டும், அவை எப்படி வரவேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் வரையறுத்துக்கொண்டிருந்த எல்லைகள், இலக்கணங்களையெல்லாம் இந்தப்பத்திரிகை மீறியது. மற்ற பத்திரிகைகள் வெளியிடாத விஷயங்களை வெளியிட்டது, அவர்கள் எழுதாத பாணியில் எழுதியது. அதனாலேயே, இளைஞர்களுக்கு இப்பத்திரிகையைப் பிடித்துப்போனது. இசை, நவீன பழக்கவழக்கங்கள், கலாசாரம் என அவர்கள் எதைப் பேசினாலும் ஒரு வித்தியாசத்தன்மையுடன் பேசினார்கள். அதுவும் வலியத்திணித்த வித்தியாசத்தன்மை அல்ல, இளைஞர்கள் இப்படிதான் சிந்திக்கிறார்கள், இதைத்தான் வாசிக்க விரும்புகிறார்கள் என்று புரிந்துகொண்டு செயல்படும் உறுதியான பத்திரிகை தர்மம், அல்லது, தொழில் தர்மம், அல்லது, இரண்டும்.

இங்கே 'பத்திரிகை', 'தொழில்' என்ற சொற்களின் கூட்டணி மிகவும் முக்கியம். Voice of Montreal பத்திரிகையை நடத்திய ஷேன் ஸ்மித், சுரூஷ் அல்வி, கவின் மெக்இன்னீஸ் மூவருமே இதனை வெறும் பத்திரிகையாக நினைக்கவில்லை; வெறும் தொழிலாகவும் நினைக்கவில்லை; இளைஞர்கள் விரும்பக்கூடிய விஷயங்களைத் தரவேண்டும், அதேசமயம், அது வெறும் சேவையாக இருந்துவிடாமல், தொடர்ந்து லாபமும் வரவேண்டும், அதன்மூலம் இந்த ஊடகத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்று நினைத்தார்கள்.

பொதுவாக Niche Marketக்குப் படைப்புகளை உருவாக்குபவர்கள் இப்படிச் சிந்திப்பதில்லை. 'நாம சிலருக்காகமட்டும்தானே இயங்கறோம், அவங்ககிட்டேயிருந்து பெரிய லாபத்தை எதிர்பார்க்கமுடியாது' என்று நினைத்துவிடுவார்கள். ஆனால், ஷேன் ஸ்மித் குழுவினர் அப்படி நினைக்கவில்லை. இந்த Niche Marketதான் நாளைக்கு Mass Market ஆகப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆகவே, ஆரம்பத்திலிருந்தே லாபத்தையும் ஒரு குறிக்கோளாகக்கொண்டு இயங்கினார்கள். அதேசமயம், வெறும் லாபத்துக்காக மற்றவர்கள் செல்லுகிற பாதையில் செல்லாமல் வித்தியாசம் காட்டினார்கள்.

இதனால், ஆரம்பத்தில் கனடாவில்மட்டும் வெளியாகிக்கொண்டிருந்த Voice of Montreal விரைவில் பிற நாடுகளுக்கும் பரவியது. அதன் பெயரும் VICE என மாறியது. சந்தையும் பெயரும் மாறியபோதும், VICE தனது தனித்துவத்தை மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ந்து இளைஞர்களுக்குப் பிடித்தமான விஷயங்களையே தந்துகொண்டிருந்தார்கள். அதன்மூலம் அவர்களுடைய ஆதரவைப் பெற்று வளர்ந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் VICE பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டது. அவற்றில் சில, அவர்களுடைய அடித்தளத்தையே அசைத்துப்பார்ப்பவையாக இருந்தபோதும், அவர்கள் தயங்கவில்லை, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அந்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்கள், அதற்குப் பொருந்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

எடுத்துக்காட்டாக, இளைஞர்கள் வாசிப்பதைவிடப் 'பார்ப்பது' அதிகம் என்பதைப் புரிந்துகொண்டபோது, தங்களுடைய தனித்துவமான பாணியை வீடியோவில் வழங்க முன்வந்தார்கள். அந்த DVDகள் கடைகளுக்கு வருவதற்குள் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது என்பதைப் புரிந்துகொண்டபோது, சட்டென்று இணையம்வழியே வீடியோக்களை வழங்கும் பாணிக்குத் தாவினார்கள். இன்றைக்கு இளைஞர்களைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான இணைய வீடியோ சானல்கள் இயங்கிவருகின்றன என்றால், அனைத்துக்கும் முன்னோடி VICEதான்.


ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தங்களுடைய 'லாபகரமான ஊடகம்' என்ற குறிக்கோளிலிருந்தும் மாறவில்லை. 'இளைஞர்களுக்கேற்ற நிகழ்ச்சிகள்' என்ற கொள்கையையும் விட்டுக்கொடுக்கவில்லை. அச்சு, வீடியோ, இணையம் என ஊடகம் எதுவானாலும், VICEன் பேச்சைக்கேட்கும் ஸ்பான்ஸர்கள்தான் அங்கே நுழையமுடியும், தங்கள் விருப்பத்துக்கு அவர்களை வளைக்கமுடியாது.

இப்படி எத்தனைதான் நிபந்தனை போட்டாலும், அடுத்த பல மாதங்களுக்கு VICE ஊடகத்தளங்களில் விளம்பரங்கள் ஹவுஸ்புல்; காலியிடமே இல்லையாம். அந்த அளவுக்கு அனைத்துப் பெரிய நிறுவனங்களும் அங்கே க்யூவில் நிற்கிறார்கள். காரணம், இளைஞர்களின் நாடித்துடிப்பை VICE புரிந்துகொண்டுவிட்டது. அதுவும் இப்போதல்ல, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பே. அதை இன்னும் தக்கவைத்துக்கொண்டு அடுத்த தலைமுறையையும் ஈர்க்கும்படி தன் ஊடகங்களைத் தனித்துவத்துடன் நடத்திவருவதே அவர்களுடைய வெற்றிக்கு அடிப்படை.

(தொடரும்)


சமீபகாலமாக பொதுமக்களிடம் பாரம்பர்ய உணவுகளை நாடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் பல இயற்கை அங்காடிகள் கிளை பரப்பி உள்ளன. சென்னையில் எங்கு திரும்பினாலும் ஆர்கானிக் ஷாப்களே கண்ணில் தட்டுப்படுகின்றன. பலர் இதை குடிசைத் தொழிலாகவே செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஐ.டி. ஊழியர்கள் பலர் இப்போது இதில் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர். சிலர் இயற்கை விவசாயத்திலும் நாட்டம் காட்டுகின்றனர். அப்படியாக ஒருவரைத் தேடிப் பிடித்தோம். 

"ஆர்கானிக் பற்றி ஆய்வுகள் செய்து, பல ஆவணப் படங்களை எடுத்திருக்கேன். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில, நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை சொல்ல விரும்புறேன். தமிழகத்துல, நாட்டுப் பால் ரொம்ப குறைந்த அளவுலதான் இருக்கு. ஜெர்சி கலப்பின மாடுகளோட விகிதம் மிகுதியாக இருக்கு. இப்போ நாம் அன்றாடம் பருகும் பால், பதப்படுத்தப் பட்டதுதான். மாட்டிலிருந்து கறந்து, நம்மை அடைய குறைந்த பட்சம், இரண்டு நாட்களாவது ஆகிறது. 

எங்க கடையில கிடைக்கிறதும் ஜெர்சி மாட்டுப்பால் தான். ஆனால்  அதை நேரடியாக மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து வாங்குகிறோம். அதாவது, ஒரே மாடு வைத்து வளர்க்கும் விவசாயி, அந்த மாட்டிலிருந்து கிடைக்கும் பாலை, தன் வீட்டிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மிச்சத்தை கூட்டுறவில் சென்று சேர்ப்பார்கள். அந்தப் பாலை பெற்று,  விற்கிறோம். அதுவும், தேவையின் அடிப்படையில் மட்டுமே!" என்றவரைத் தொடர்ந்து, ஆர்கானிக் பொருட்கள் குறித்து அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் சிவகுமாரின் புதல்வர் கார்த்தியிடம் பேசினோம். "நம்ம ஊர் சாப்பாடு என்பது சிறு தானியங்கள் தான். அரிசி நம்ம நாட்டு உணவே கிடையாது. இயற்கையாக உற்பத்தி செய்கிற விளைபொருட்களை கொள்முதல் செய்து பலரும் கடைகளில் விற்பனை செய்யுறாங்க. இந்த மாதிரி, ஆர்கானிக் கடைகள் சென்னையில் அதிகமாயிடுச்சு. அப்படியான ஒன்று இப்போது சென்னை வளசரவாக்கத்திலும் வந்திருப்பதில் சந்தோஷம்!” என்றார். பெண்கள் தனியாக சுயதொழில் தொடங்கி, வாழ்க்கையில் முன்னேற நினைப்பது வரவேற்கத்தக்கதே. வாழ்த்திவிட்டு வெளியேறினோம்!

டாக்டர் முதல்ல விரல்லதான் வெள்ளையா புள்ளி மாதிரி ஆரம்பிச்சது. ரெண்டு மூணு வருசம் அப்படியேதான் இருந்தது. இப்ப ஒரு ஆறு மாசத்துக்குள்ள கைக்கு பரவ ஆரம்பிச்சுருச்சு. சரியாக எவ்வளவு நாளாகும் டாக்டர்"

"சார் அஞ்சு வருசம் முன்னாடி ஒரு ஆக்சிடண்ட் கால்ல காயம். ஆறுனதுக்கு ஒரு மாசம் ஆயிடுச்சு. காயம் ஆறுன இடத்துல இப்படி வெளுப்பா இருக்கு. கொஞ்சநாளா பரவுற மாதிரி இருக்கு"

"டாக்டர் எனக்கு வந்து பத்து வருமாச்சு. பல ட்ரீட்மெண்ட் எடுத்துட்டேன். எதுலயும் குறைஞ்ச மாதிரி தெரியல. சித்தால சரி பண்ணினதா பஸ்ல என்னைப் பார்த்தவரு சொன்னாரு. அதான் இங்க வந்தேன்."

"உடம்புல வேற எங்கேயும் இல்ல சார். உதட்டுல தான் வெளுப்பா இருக்கு. ஆரம்பத்துல இரத்தக் குறைவுன்னு நெனச்சு கவனிக்காம விட்டுட்டேன். இப்ப அதிகமான மாதிரி தோணுது."

"பேக்டரில ஒரு ஃபயர் ஆக்சிடண்ட் சார். கைல எனக்கு தீக்காயம் பட்ருச்சு. காயம் ஆறிடுச்சு. ஆனா இந்த இடம் மட்டும் வெளுப்பா இருக்கு"

"டாக்டர் இது பரம்பரை நோயா. இது வந்தபிறகு என் வீட்டுக்காரரு ஒதுக்கி வைச்சுட்டாரு. என் பிள்ளைகளுக்கும் வருமா. ஏதாவது தடுப்பு மருந்து இருக்குமா?" 

கட்டுரை எழுத அமர்ந்த உடனே காதில் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றன குரல்கள்.

நோய் விளக்கம் :

உடல் முழுவதுமான அல்லது கை, கால், முகம், இன உறுப்பு, ஆசனவாய் போன்ற இடங்களிலோ தோலின் இயல்பான நிறம் மறைந்து வெளுத்துக் காணப்படும் நோயை வெண்படை என்கிறோம்.

உடல்திறன் எனப்படும் நோய் எதிர்ப்புத் திறனில் ஏற்படும் கோளாறு, வெண்படை நோய்க்கு காரணமாக அமைவதுண்டு. சிலருக்கு விபத்து, தீக்காயம் இவற்றினால் ஏற்படும் நாட்பட்ட காயங்கள் ஆறினும் வெளுப்பாக தோல் மாறிவிடுவதுண்டு. தோலுக்கு நிறத்தை வழங்கும் நிறமி செல்கள் பாதிக்கப்படுவதா£ல் மேற்கண்ட காரணங்களில் வெண்படை ஏற்படலாம். சிலருக்கு பரம்பரையாக இந்நோய் வருவதுண்டு. 

பிற தோல் நோய்கள் போன்று அரிப்போ, நீர்க் கசிவோ, இரத்தக் கசிவோ இந்நோயில் ஏற்படுவதில்லை. மேலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது. தோலின் நிறத்தை இழப்பதால் அழகு சார்ந்த பிரச்னையாகவே கருதப்படுகிறது. இந்நோய் பலருக்கு தாழ்வு மனப்பான்மையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில் வெண்படை உள்ளவர்களுக்கு உள்ள மன அழுத்தமே இந்நோய் உடலில் பரவுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. 

சித்த மருத்துவம்:

உணவே மருந்து:

புளிப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடல்திறனை வளர்க்கும் பொருட்டு கீரைகள், காய்கறிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

முளைக்க வைத்த பாசிப்பயறு அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருந்துகள்:

உள்மருந்துகள்: வெளி மருந்துகள்:

1. கடுகு / நுணா எண்ணெய், நுணா இலை

நுணா எனப்படும் மஞ்சணத்தி மரம் தமிழகம் முழுவதும் காணப்படும் தாவர வகையாகும். இதன் இலைகளை அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து 100 மி.லி. நல்லெண்ணெயுடன் கலந்து அடுப்பேற்றி சிறு தீயாக எரிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், அரைத்த இலைகந்தம் எண்ணெயில் பொரிந்து கடுகு போல மிதக்க ஆரம்பிக்கும் தருவாயில் இறக்கி, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வடிகட்டியில் இருப்பது நுணா, கடுகு கிடைத்த எண்ணெய் நுணா தைலம்.

நுணா கடுகை பட்டாணி அளவு காலை மாலை உணவிற்கு முன் உண்டு வர வெண்படை மாறும்.

நுணா தைலத்தை வெண்படை உள்ள இடங்களில் பூசி மாலை வெயிலில் காட்டி வர வெண்படை மாறும். தொடர்ந்து பயன்படுத்தவும்.

2. கார்போகரிசி பொடி

நாட்டு மருந்துக் கடைகளில் கார்போகரிசி கிடைக்கும். இதனை ஒரு மண் அகலில் பரப்பி, அது மூழ்கும் வரை நாட்டுப்பசு சிறுநீரை ஊற்றவும். பின் அதனை வெயிலில் வைக்கவும். இது போன்று மூன்று நாட்கள் செய்யவும். ஒவ்வொரு நாளும் பசுவின் சிறுநீரை மாற்றவும். பின்னர் உலர்ந்த கார்போகரிசியை உரலிலிட்டு இடித்தோ அல்லது மிக்சியில் அரைத்தோப் பொடியாக்கி, சலித்து எடுத்துக் கொள்ள கார்போகரிசிப் பொடி தயாராகிவிடும்.

அளவு: 1 தேக்கரண்டி காலை, மாலை தேனுடன்

வெளிமருந்தாகவும் கார்போகரிசி பொடியைப் பயன்படுத்தலாம். கார்போகரிசிப் பொடியுடன் புளித்த தயிரைக் கலந்து வெண்படை உள்ள, இடத்தில் பூசி மாலை வெயிலில் காட்டலாம்.

3. பூவரசம் பட்டைக் குடிநீர் உதட்டில் வரும் வெண் படைக்கு கொப்பளிக்கும் மருந்தாக:

நாட்பட்ட மரமாக இருக்கும் பூவரசம் மரத்தின் பட்டை உதட்டில் வரும் வெண்படை நோயைக் குணமாக்க வல்லது. நூறாண்டு கடந்த பூவரசம்பட்டை 50 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு சூடேற்றி சிறுதீயாக எரித்துக் கொதிக்க விடவும். 200 மி.லி. அளவு வற்றியவுடன் அதனை வடிக்கட்ட பூவரசம் பட்டைக் குடிநீர் தயாராகி விடும். இக்குடிநீரை உதட்டில் வரும் வெண்படை நோய் குணமாக, கொப்பளிக்கும் நீராகப் பயன்படுத்தவும். தொடர்ச்சியாக பயன்படுத்த பலன் தரும்.


வெண்படை நோய் குணமாக ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை ஆகலாம். ஆகையால் பொறுமையாக மருந்து எடுத்துக் கொள்ளல் இன்றியமையாதது. மேலும் மேற்கூறிய மருந்துகள் அடிப்படையான சித்த மருந்துகள். உயர்வகை சித்த மருந்துகள் என பற்பங்கள், செந்தூரங்கள் சில நோயருக்கு தேவைப்படலாம். அத்தகையோர் சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு, செம்பு, தங்கம் போன்ற உலோகங்களும் முறையாக மருந்தாக்கப்பட்டு வெண்படை நோய்க்கு மருந்தாகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. 

அடுத்த இதழில் 'காது வலி".

கோடை விடுமுறைக் காலம் வந்து விட்டது. ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்கிறது தமிழ்நாட்டிற்குள். காரில் ஏசி போடத் தேவையில்லை சில இடங்களில். பார்க்கிற இடங்களிலெல்லாம் தற்காலிகப் பசுமை கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது. இந்த நேரத்திலும் வீட்டை விட்டுக் கிளம்பாமல், அலுவலகத்தில் சீட்டை கெட்டியாகப் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஆனாளப்பட்ட அரசியல்வாதிகளே  ஒன்றும் பேராமல், சுற்றுப் பயணம் என்கிற பெயரில் ஊர்சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டனர். இதற்குப் பிறகும் எல்லோரும் சும்மா உட்கார்ந்திருந்தால் டூர் என்கிற வார்த்தைக்கே அசிங்கம்!.

இந்த டூர் என்றதும் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. காஷ்மீர் போய் வர இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் மிகச் சொற்பமானதுதான் என நண்பர் ஒருத்தர் சமீபத்தில் சொன்னார். உண்மையில் ஆயிரக்கணக்கில் ஆகும். எதுக்கு இந்த நேரத்தில் இப்படியொரு செலவு என யோசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் போல பலரும் யோசிக்கலாம். உண்மையில் சீட்டில் பெல்ட் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் மனநிலையில் இருந்து மாறினாலே போதுமானது. ஆக பயணம் செய்வதற்கு பணம் பிரச்னையில்லை. மனம்தான் பிரச்னை. 

ஒருபக்கம் தொல்காப்பியத்தில் முந்நீர் வழக்கம் என தமிழர்களின் கடல் கடக்கும் வேட்கையைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். முந்நீர் வழக்கம் என்றால், மூன்று நேரம் முறைவைத்து கட்டிங் அடிப்பது என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. கல்விக்காக, செல்வம் சேர்ப்பதற்காக, போர் நடவடிக்கைகளுக்காக என்று பிரித்திருக்கிறார்கள். அதிலும் முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லையாம். பெண்களோடு போகக் கூடாதாம். அதனால்தான் முந்நீர் வழக்கம் போகிற இடத்தில் எல்லாம் வப்பாட்டிகளை வைத்துக் கொண்டார்கள். அப்பா பெயர் தெரியாத குழந்தைகளை உலகெங்கும் விதைத்து விட்டுக் குற்றவுணர்வு இல்லாமல் கிளம்பி வந்தார்கள் என்பது தனிக்கதை. இப்படி தமிழ் இனம் ஒரு காலத்தில் பல்வேறு காரியங்கள் நிமித்தமாக சீட்டை விட்டு எழுந்து வெளியே போய்ச் சுற்றி விட்டு வந்தார்கள் என்பதைச் சொல்வதற்காகச் சொல்கிறேன். மற்றபடி உங்களைக் குழந்தைகளை உற்பத்தி செய்கிற தொழிற்சாலை மேனேஜராக மாறச் சொல்லவில்லை. நீங்கள் மாற நினைத்தாலும் முடியாதெனச் சொல்லி பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து விட்டது உலகம். தந்தை தெரியாத பையன்களை உலகிற்குத் தராமல் இருப்பதற்குக் காரணம் உங்களது தாராளம் அல்ல. ஒரு குட்டியூண்டு சாதனம். அவ்வளவுதான். குற்றவுணர்வைக் கொல்வதுகூட இந்த குட்டியூண்டு சாதனம்தான். பயணம் என்றால் பலதையும் மனசு யோசிக்கத்தான் செய்யும் என்பதால் விட்டு விடுங்கள்.

இப்படி ஒருபக்கம் ஒரு பிரிவினர் உலகம் முழுக்க பயணம் செய்தார்கள். ஆனால் இன்னொரு பக்கம் "நான் இந்த ஊரு எல்லையைக்கூடத் தாண்டியதில்லை" என்று பெருமை பேசியே செத்துப் போன பல பெரிசுகளை நானறிவேன். பயணம் போவது, புதிய அனுபவம் ஆகியவற்றிற்கு நேர் எதிரான மனநிலையே தமிழர்களின் அடியாழத்தில் புதைந்து கிடக்கிறது. 'ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்வது'. விளையாட்டாக இந்த மனநிலையை இப்படிச் சொல்லிக் கிண்டலடிப்பார்கள். 'சொந்தத் தெருவில் சொறிநாய்கூடக் குரைக்கும். வெளி இடங்களில் போய் குரைத்து விட்டு வரலாம்' என்றுதானே பலர் பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்தார்கள், சொல்லுங்கள்?.

மிகச் சிலரே இந்த அடியாழக் குறிப்பை உதறியிருக்கிறார்கள். அவர்களையும் 'பரதேசம் போனவர்' என தமிழ்ச் சமூகம் ஒதுக்கி வைத்தே வேடிக்கை பார்த்திருக்கிறது. என்னுடைய குடும்பத்திலேயே இப்படி ஒருத்தர் கிளம்பிப் போய் ஊர் சுற்றி விட்டு ஜடாமுடியுடன் திரும்பி வந்து நின்றார். இந்தியாவில் ஒரு நிலத்தை விட்டு விட்டு இன்னொரு நிலத்திற்கு நகரும் போது ஜடாமுடி பாதுகாப்பு. அப்படி வந்து நின்றவரிடம் "துன்னூறு வாங்கிக்கோடா. நம்ம சித்தப்பன் தான்" என்றார்கள். பிறகு அவர் ஓய்வாய் அவர் செய்த பல பயணங்களைப் பற்றி எனக்குச் சொன்னார்.

அவர் செய்த பயணத்திற்கும் ஜடாமுடிக்கும் சம்பந்தமே இல்லை. சோறு திங்கறதுக்கு மட்டும்தான் கோவிலுக்குப் போயிருக்கிறது சித்தப்பூ! ஆனால் இதுபோல ஜடாமுடி போங்காட்டம் போல அல்லாமல் 90களுக்கு அப்புறம் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் பெருகியிருப்பது ஆறுதல் தரும் விஷயம்தான். ஆனாலும் இன்னமும் சாகும் வரை மண்ணை விட்டு வெளியேற மாட்டேன். பயணம் என்று கிளம்பினால் நேரடியாக பரமபதம்தான் என்று சொல்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீடுகிளம்புதலை பயணம், ஊர்சுற்றல் என இரண்டு வகையாகப் பிரிக்கிறார். திட்டமிட்டு செய்யப்படுவது பயணம். இலக்கில்லாமல் சுற்றுவது ஊர்சுற்றல். இந்த இரண்டாவது வகையில்தான் புதுப்புது அனுபவங்கள் சாத்தியமாகும். சமீபத்தில் ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு டீக்கடை வைத்திருக்கும் குழந்தைகள் இல்லாத வயதான தம்பதி வருடம் முழுக்க மாடாய் உழைக்கிறார்கள். வருடத்திற்கு பத்து நாட்கள் கடையை இழுத்து மூடிவிட்டு நாடு சுற்றக் கிளம்பி விடுகிறார்கள். வாழ்க்கையை ரசனையாக கொண்டாடத் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்களைப் பார்க்கையில் நாமும் அப்படி இருக்க வேண்டுமென சிறகடிக்கிறது மனசு.

உங்களுக்கும்கூட இருக்கலாம். செய்ய வேண்டியதெல்லாம் துண்டை உதறித் தோளில் போடுகிற வேலை மட்டும்தான். உங்களது பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று தெரியாமல், இங்கே போங்கள், அங்கே போங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சிம்பிளாகச் சொல்ல வேண்டுமெனில் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். இந்த நிமிடத்தில் என் பாக்கெட்டிலும் அவ்வளவு பணம் இல்லையென்பதால் 'பாங்காக்'கிற்கெல்லாம் போக முடியாது.

இந்தா இருக்கிற மேகமலைக்கு ஒரு எட்டு போய் விட்டு வாருங்கள். கை படாத காடு. தேனி போய் சின்னமனூர் வழியாக மேலேறும் மேற்குத் தொடர்ச்சி மலை. பஸ் வசதி கொஞ்சம் குறைவுதான். விசாரியுங்கள். அதைக்கூடச் செய்ய மாட்டீர்களா? மேலே இரண்டு டீக்கடைகளில் முறை வைத்து சோறு பொங்கிப் போடுவார்கள். காசு கொடுத்தால் கெடா விருந்தும் நிச்சயம். ஒரு கிலோ சமைத்துத்தர நூற்றியம்பது ரூபாய் என்பது குறைவுதானே? 

மற்றபடி மேகமலையில் ட்ரக்கிங் போகலாம். மொட்டைப் பாறையொன்று இருக்கிறது. இன்னும் கொஞ்சம் மேலேறி தேயிலை பேக்டரிகளையும் காபி பேக்டரிகளையும் பார்க்கலாம். பசுமையோடு இருப்பதற்கு உத்தரவாதம். எந்த நேரம் வேண்டுமானாலும் மழை, புது மனைவி மாதிரி சிணுங்கிக் கொண்டே இருக்கும். பட்ஜெட்டிற்கு ஏற்ற சிணுங்கல்!.

ஆராய்ந்து பார்த்தால், மனித வரலாறும் உயிர்களின் பரிணாமங்களும் முழுக்க முழுக்க தட்பவெப்ப நிலையின் கட்டுப்பாட்டுக்கே உட்பட்டிருந்திருக்கின்றன. தட்பவெப்ப நிலையினாலேயே உயிர்கள் தோன்றின. உயிர்கள் அழியவும் செய்தன. தட்பவெப்பநிலை என்னும் அறிவியல் துறையின்கீழேதான் கோடை என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.  

மனித வரலாற்றில் போக்குவரத்து வாய்ப்புகள் குறைந்திருந்த முற்காலத்தில் ஓரிடத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்தந்த இடத்திலேயே வாழத்தலைப்பட்டனர். மிகுந்த ஊக்கமும் வீரமும் துறவு நாட்டமும் உடையவர்கள்தாம் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லவே துணிவார்கள். அவ்வாறின்றிப் படையெடுத்துச் சென்றால்கூட திரும்பி வருவது கடினம்தான். செல்லுமிடத்தில் போர்த்தோல்வி கண்டாலோ, செல்லும் வழியில் இடரை எதிர்கொண்டு மடிந்தாலோ இஃதிரண்டும் இன்றிச் செல்லுமிடம் பிடித்துப்போய் அங்கேயே நிரந்தரமாய்த் தங்கிவிட்டாலோ எந்தப் படையும் கிளம்பிய இடத்திற்குத் திரும்பி வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் படையெடுப்புகளே குடியேற்றங்களை நிகழ்த்தின.  

ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பி வந்த பாபரின் படைகள் சிந்து கங்கைச் சமவெளி வளத்தைக் கண்டபின் திரும்பிச் செல்லவேயில்லை. இல்லாமை மட்டுமே மனிதர்களைச் செலுத்தவில்லை, இயற்கையும் மனிதர்களை விரட்டியது. மலையில் வாழ்பவர்கள் கீழிறங்க விரும்புவதில்லை. மருதநில மக்களுக்குக் காட்டு வாழ்க்கை தெரியாது. நெய்தலின் உப்புக்காற்றோடு வாழ்வதற்குப் பிற நிலத்தார் அறியார். இப்படி எல்லாமே சூழலியல் கட்டுகளோடுதான் இயங்குகின்றன. அவற்றுக்கேற்ற தகவமைப்புக்கு வந்துசேர நெடுங்காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தத் தகவமைப்பிலிருந்து வெளியேறி வேறொன்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கு யாராலும் எளிதில் இயலாது.
 
வரலாற்றுக் காலத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த பேரரசு என்று ஐரோப்பியத்தின் உரோமானியப் பேரரசைச் சொல்கிறார்கள். பிற பகுதிகளில் பேரரசுகள் உருவாவதற்கும் முந்தி உரோமானியர்களும் கிரேக்கர்களும் ஞாலத்தை வலம் வந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு எது அத்தகைய உந்துகையைத் தந்தது என்றால் அதற்கு ஐரோப்பியத்தின் தட்பவெப்ப நிலையையும் காரணம் என்றே  கூறவேண்டும். 

தம்நாட்டைப்போல இயற்கைச் சூழல் நிலவும் நாடுகளை எல்லாம் அவர்கள் கைப்பற்றத் துணிந்தார்கள். அல்லது தம்நாட்டிற்கு நேர் எதிரான நிலவளங்கள் உடைய அண்டை நாடுகளையும் குறிவைத்தார்கள். எகிப்தின் நைல் நதி வளமும் அங்கே உருவான பாரோக்களின் பேரரசுகளும் மத்தியத் தரைக்கடலைப் போரதிர்வுகளால் ததும்பச் செய்தன. எகிப்துபோன்ற வளமான நாடுகளைத் தாண்டி ஆப்பிரிக்கக் கண்டத்தின் வேறு நிலப்பகுதிகளுக்கு அவர்கள் நுழைய முற்படவில்லை. ஏனென்றால் ஆப்பிரிக்கக் கண்டம் முழுக்கவே வெப்பக்காடுகளால் ஆனது. கொடுவிலங்குகள் உலவும் பரந்த கரடுமுரடு நிலம் அது. இருண்ட கண்டம் என்று ஆப்பிரிக்கக் கண்டம் அழைக்கப்பட்டதற்குக் காரணம் அதுதான். மனிதர்கள் அங்கங்கே தனித்தீவுகளாய் வாழ்ந்திருந்தார்கள். பிறநாட்டுப் படையெடுப்போ அவர்களுக்குள் பங்கீடோ... எதுவும் அவர்களோடு நிகழவில்லை. 

நவீனக் காலம் தொடங்குவதற்கு முந்திய இருபதாயிரம் ஆண்டுகளாக ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் வாழ்நிலை என்றும் மாறாத ஒன்றாகவே இருந்தது. அதற்குக் காரணம் என்னவெனில் அங்கே நிலவிய நிலநடுக்கோட்டுக் கொடுவெய்யில்தான். அந்த வெப்பநிலையால்தான் ஆக்கிரமிப்பு வரலாற்றையுடைய ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவை எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், ஐரோப்பாவிற்கு இணையான தட்பவெப்பமிருந்த எல்லா நிலப்பரப்பின்மீதும் அவர்கள் படையெடுத்தார்கள். அலெக்சாண்டர் தானிருந்த இடத்திற்கு நேர் கிழக்காகப் படையெடுத்தபடி இந்தியா வரைக்குமே வந்து கைப்பற்றினான். புவிக்கோளத்தின் மேல்கீழாக நகர்ந்தால் ஒவ்வொரு நகர்வுக்குமிடையே தட்பவெப்ப நிலையில் பெருமாற்றம் நிகழ்வதைக் காணலாம். ஆனால், புவியில் கிழக்கு மேற்காக நகர்ந்தால் ஓரிடத்தில் நிகழும் தட்பவெப்பமே எங்கும் தொடரும். புதிய தட்பவெப்பச் சுழலுக்கு ஆட்படுவோர் உடனே நோய்த்தொற்றுக்கு ஆளாவர்.

ஐரோப்பாக் கண்டம் கிழக்கு மேற்காகப் பரந்திருக்கிறது. போரும் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்புமாய் அங்கே வரலாறு நிகழ்ந்தது. அமெரிக்க ஆப்பிரிக்கக் கண்டங்கள் புவிக்கோளத்தில் வடக்கு தெற்காக இருந்தமையால் அவை மனிதப் படையெடுப்புகளுக்குத் தப்பின. அந்தந்தப் பகுதிவாழ் உயிரினங்களோடு அக்கண்டங்கள் வரலாறெங்கும் அமைதியாய் விளங்கின. 

ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியபடி வந்தபோது அக்கண்டத்தின் தென்முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயர் வைத்தார்கள். அங்கேயே ஐரோப்பியக் குடியேற்றமும் நிகழ்ந்தது. ஐரோப்பா இருக்குமிடம்  எங்கே... தென்னாப்பிரிக்கா இருக்குமிடம் எங்கே ? ஆனால், தென்னாப்பிரிக்காவில்தான் ஐரோப்பியக் குடியேற்றம் மிகுந்து நிகழ்ந்தது. வரும்வழியிலுள்ள ஆப்பிரிக்கத் தேயங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு நன்னம்பிக்கை முனையில் குடியேறியதற்கு என்ன காரணம் ? அங்கே நிலவிய ஐரோப்பியத் தட்பவெப்ப நிலைதான் ஒரே காரணம். 

ஆங்கிலேயர்கள் சென்னையைத் தேர்ந்தெடுத்தபோது இவ்விடம் அருகிலுள்ள பழவேற்காட்டின் சதுப்புநிலத்தன்மையோடு குளிர்ந்த கடற்காற்றோடு கூவமும் அடையாறும் கடல்கலக்கும் கழிமுகமாக மரங்கள் அடர்ந்து இதக்குளிர் மிகுந்திருந்தது. அதனால்தான் இங்கே கோட்டை கட்டப்பட்டது. தாங்கவொண்ணாத வெப்பம் நிலவிய காரணத்தால்தான் கொடைமாவட்டங்கள் என்று தெலுங்கான நிஜாமிடம் ஆந்திர மாவட்டங்களைக் கையளித்துவிட்டு ஆங்கிலேயர்கள் தெறித்தோடினர். ஆனால், சென்னையை விரும்பி ஏற்றனர். ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு ஐரோப்பிய நிழன்மை உடைய காலநிலை நம் தமிழகத்தில் முற்காலத்தில் நிலவியிருக்கிறது. 

கோடையில் மட்டும் சற்றே வெப்பம் கூடியிருக்கையில் அப்போது திங்கள்முழுக்க விடுமுறை அறிவித்து உதகைக்குப் போய்விட்டனர். உதகை என்பது முழுக்க முழுக்க இலண்டன் தட்பவெப்ப நிலைதான். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவர்களுடைய கோடைக்காலத் தலைநகரம் சிம்லா என்றே கூறுவார்கள். இன்றும் அங்கே ஆட்சியக்கட்டடங்களைக் காணமுடியும். 

இத்தனை வரலாற்றுச் செய்திகளோடும் நான் கூற வருவது என்னவென்றால், தட்பவெப்ப நிலை என்பதே வரலாற்றை உருவாக்கியிருக்கிறது. மக்களை வாழச் செய்தது. இடம்பெயர்த்து. ஓரிடத்தில் நிலவும் குளிரும் வெப்பமுமே அவ்விடத்தில் அரசுச் சூழலை வருவிக்கிறது. அல்லது விடுவிக்கிறது. இதுநாள்வரை நம்நிலத்தில் நிலவிய குளிரான தன்மை தற்போதைய இயற்கைச் சீரழிவுப் போக்குகளால் மாறிவிட்டது. கோடையின் தாக்கம் மிகுதியாக இருக்கிறது. 

வீட்டுக்குள் குளிர்பதனம், சாலையில் குளிரூட்டியுள்ள மகிழுந்து, அலுவலகத்தில் குளிரூட்டம் என்ற நிலையில்தான் சென்னை போன்ற நகரங்களில் ஒருநாளை எதிர்கொள்ள முடியும். அந்நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது எப்போதைக்கும் உதவும் என்று கூறுதற்கில்லை. ஒருநாள் மின்சாரம் இல்லாவிட்டால் மனக்கோளாறு மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம்.


மரங்களை நடுவதில் யார்க்குமே அக்கறையில்லை. நட்டால்மட்டும் போதுமா ? தலைக்குமேல் வளரும்வரை தண்ணீர்விட்டு வளர்க்கவும் வேண்டும். இன்னும் என்னென்னவோ சீர்திருத்தங்களைச் செய்தால்தான் எதிர்காலக் கோடைகளையே எதிர்கொள்ள முடியும். இல்லாவிட்டால் கதிர்வீச்சினால் கைவிடப்பட்ட மேற்கத்திய நகரங்களைப்போல, கொடுங்கோடையால் முடங்கிவிடும் நகரங்களையே நாம் உருவாக்கியவர்களாவோம். இக்கட்டுரையின் வரிகளுக்கிடையே பதுங்கியுள்ள எச்சரிக்கையை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன். கோடையில் வியர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இக்கோடையை உணர்ந்து விழிக்கவும் வேண்டும்.

ஒரு படம் எடுக்கறதும் ஒரு மனுஷன் பொறந்து , வருஷா வருஷம் வளர்ந்து, அப்பா அம்மாகிட்ட அடி வாங்கி , ஸ்கூல் படிச்சு ,எக்ஸாம்ல பாஸ் பண்ணி , கஷ்டப்பட்டு காலேஜ்ல சீட் வாங்கி , அதுல அரியர் வெச்சு , நைட்டும் பகலுமா கண்ணு முழிச்சு படிச்சு , காலேஜ் முடியறதுக்குள்ள அரியர க்ளியர் பண்ணி , 50 இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி , வேலைக்கு போயி , மேனேஜர்கிட்ட அசிங்கமா திட்டு வாங்கிட்டே வேலை செஞ்சு , ஒரு பொண்ண பாத்து , அது பின்னாடி நாய் மாதிரி சுத்தி , அத ஓக்கே பண்ணி , அவங்கப்பன் அனுப்பற குண்டாஸா சமாளிச்சு , அந்த பொண்ண கல்யாணம் பண்ணி, வீட்டு லோனுக்கு ஈ.எம்.ஐ , ஏசி லோனுக்கு ஈ.எம்.ஐ கட்டி , ஒரு பொண்ண பெத்து அத வளர்த்து , படிக்க வெச்சு , பொண்டாட்டிக்கு அக்‌ஷய திரிதியை ஆபர்ல நகை வாங்கி குடுத்து , புள்ளைய டொனேஷன் கட்டி காலேஜ் சேர்த்து , அது படிச்சு முடிச்சதும் நல்ல இடமா மாப்பிள்ளை பாத்து , ஊரே பேசற மாதிரி கல்யாணம் பண்ணி , பேரன பேத்திய கொஞ்சி , அதுங்களுக்கு ஆயி கழுவி விட்டு கடைசியா எதாவது வியாதி வந்து , ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி போய்ச் சேர்றதும் ஒண்ணுதான். ஏன்னா ரெண்டுலயும் அவ்ளோ கஷ்டங்கள் , நஷ்டங்கள், உதவிகள், துரோகங்கள், சாதனைகள், சோதனைகள்ன்னு அத்தனையும் உண்டு. 

கோமலோட ஷுட்டிங் ஆரம்பிச்சதுல இருந்து இது எல்லாமே ஸ்டார்ட் ஆயிடுச்சு. பொதுவா ஒரு படத்தோட இயக்குனரத்தான் “கேப்டன் ஆப் தி ஷிப்” அப்படின்னு சொல்லுவாங்க. சினிமாவ பொறுத்தவரைக்கும் இயக்குனர்கள் மூழ்கிட்டு இருக்கற டைட்டானிக் ஷிப்போட கேப்டன் மாதிரி பரபரப்பாவே இருப்பாங்க. ஏன்னா சுத்தி அவர டென்ஷன் ஏத்தற சம்பவங்கள் காலைல சூரியன் உதிக்கற மாதிரி அதுபாட்டுக்கு உதிச்சுட்டே இருக்கும். இதுக்கு நடுவுல நாம எழுதுன கதைய படமா எடுத்து முடிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளி மூக்கு வழியா வந்துடும். 

கோமலுக்கு முதல் ஷெட்யூல்லயே இதெல்லாம் ஆரம்பிச்சிடுச்சு. தி.நகர் ரங்கநாதன் தெருவுல ஞாயிற்றுக் கிழமை ஹீரோவும், ஹீரோயினும் ஷாப்பிங் போறாங்க . அங்க கூட்டத்துல நடக்கும் போது ஒருத்தன் ஹீரோயின் மேல இடிச்ச்சுடறான். ஹீரோ உடனே அவன அடிக்க துரத்தறான். அவன் கூட்டத்துக்குள்ள பூந்து ஓடற மாதிரி சீன். அத ரெங்கநாதன் தெரு மாதிரி இருக்கற செட்ல அடுத்த நாள் ஷுட் பண்றதா ப்ளான். அதுக்கு 100 ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் வேணும்ன்னு கோமல் முன்னாடி நாள் நைட்டே தெளிவா புரொடக்ஷன் மேனேஜர்கிட்ட சொல்லிட்டான். அடுத்த நாள் காலைல வந்து பாத்தா மொத்தமே 35 பேர்தான் இருக்காங்க. என்னடான்னு பாத்தா , புரொடக்ஷன் மேனேஜர் பட்ஜெட்ல மிச்சம் பண்றதா பீல் பண்ணிட்டு 100 பேருக்கு பதிலா 50 பேர்தான் லிஸ்ட்டே குடுத்து இருக்காரு. அந்த 50 பேர்ல 35 பேர கூட்டிட்டு வந்துட்டு ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜன்ட் மொத்தமா 50 பேர் வந்துட்டாங்கன்னு கணக்கு சொல்லி இருக்காரு. இப்படி ஆளாளுக்கு சொதப்பி கோமல கொலைவெறியாக்கிட்டு கூலா பொங்கல் சாப்பிட போய்ட்டாங்க. இதுக்காக ஷுட்டிங்க கேன்சலா பண்ண முடியும் . கடைசியா கோமல் கூட்டமான ரங்கநாதன் தெருவுக்கு பதிலா ஒரு வீக் டேஸ்ல கூட்டமே இல்லாத ரெங்கநாதன் தெருவுல காலைல 10 மணிக்கு ஹீரோவும் , ஹீரோயினும் ஷாப்பிங் பண்ண வர்றாங்கன்னு மாத்தி , முன்னாடி பின்னாடி டயலாக்க அட்ஜஸ்ட் பண்ணி காம்ப்ரமைஸோட அந்த சீன எடுத்து முடிச்சான். சினிமால இந்த காம்ப்ரமைஸ் இருக்கே அது நீங்க நினைச்ச பாக்க முடியாத அளவுக்கு இருக்கும். கேட்ட லொக்கேஷன் கிடைக்கலன்னு காம்ப்ரைமஸ், கேட்ட ஆர்ட்டிஸ்ட் கிடைக்கலன்னு காம்ப்ரமைஸ், கேட்ட எக்யூப்மெண்ட்ஸ் கிடைக்கலன்னு காம்ப்ரமைஸ், ஹீரோவுக்கு மாஸ் ஏத்தணுன்னு காம்ப்ரமைஸ், புரொடியூசருக்கு நல்லா ஒரு கிளாமர் சாங் வேணும்ன்னு காம்ப்ரமைஸ், இப்படி காம்ப்ரமைஸ் பண்ணி பண்ணி கடைசில நீங்க எடுக்க நினைச்ச படம் ஒண்ணா இருக்கும். கடைசில ரிலீஸ் ஆகறது வேற ஒண்ணா இருக்கும். 

எல்லா படத்துக்கும் இதே நிலமைதான்னு சொல்லல, பெரும்பாலான படங்கள்ல இந்த காம்ப்ரமைஸ் அப்படிங்கற விஷயம் கண்டிப்பா இருக்கு. சில படங்கள படம் எடுக்கற இயக்குனருக்கு தெரியாம புரொடியூசரே எடிட் பண்ணி ரிலீஸ் பண்ற கொடுமை எல்லாம் வேற இருக்கும். கோமலுக்கு இந்த அளவுக்கு டார்ச்சர் இல்லன்னாலும் சினிமாவில் தவிர்க்கவே முடியாத அடிப்படை டார்ச்சர்ஸ் இருந்துட்டுதான் இருந்துது. ஒரு பக்கம் “சார்.. மேடம்க்கு ஜுஸ் கேட்டா புரொடக்ஷன்ல ரொம்ப லேட்டா குடுக்கறாங்கன்னு ஹீரோயினோட அஸிஸ்டெண்ட் வந்து கோமல்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவான். இந்த பக்கம் திரும்புனா “கோமல்.. கேமராவுக்கு வண்டியே இன்னும் போகலயாம் .. அப்புறம் கால்ஷீட் எக்ஸ்ட்ரா போச்சுன்னா என்ன திட்டாதீங்கன்னு கேமராமேன் சொல்லுவாரு.

அந்த பிரச்சனைய சால்வ் பண்ணிட்டு  திரும்புனா “சார்.. புராப்பர்ட்டிஸ் வாங்கறதுக்கு காசு தர மாட்டங்கறாங்க ..அப்புறம் ப்ரேம் எம்ப்ட்டியா இருக்கும் எங்கள திட்டக் கூடாதுன்னு ஆர்ட் அஸிஸ்டெண்ட் வந்து சொல்லுவாரு. அத சால்வ் பண்ண புரொடக்ஷன் மேனேஜர்கிட்ட பேசுனா “சார்.. ஆல்ரெடி இந்த ஷெட்யூல் பட்ஜெட் ஓவரா போயிட்டு இருக்கு .. ஆர்ட் டிபார்ட்மெண்ட்ல எக்கசக்கமா காசு போகுது சார்.. நீங்கதான் கண்ட்ரோல் பண்ணனுன்னு கோமலுக்கு பிரச்சனைய பூமராங் பண்ணிவிட்டு மேனேஜர் போயிடுவாரு. கோமல் அந்த டென்ஷன்ல இருக்கும் போதே “ சார்..நாளைக்கு நாசர் சார் டேட் இல்லியாம் .. இன்னிக்கே அந்த சீனையும் எடுத்து முடிச்சுட சொல்றாங்க.. இன்னிக்கு எடுக்கலன்னா லொக்கேஷனும் திரும்ப கிடைக்காதாம்”  அஸிஸ்டெண்ட் டைரக்டர் அவன் பங்குக்கு ஒரு பிரச்சனைய கொளுத்தி போட்டுட்டு எரிஞ்சுட்டு இருக்கற கோமல் மனசுல எரிசாராயத்த ஊத்திட்டு போவான். அத அணைச்சு கோமல் கூலாகும் போது பவித்ரா போன் பண்ணி ஏன் காலைல குட்மார்னிங் மெசேஜ் அனுப்பலன்னு அவ பங்குக்கு ஒரு அணுகுண்டு போடுவா. அப்ப கோமல யார் பாத்தாலும் “யார் பெற்ற மகனோ ..பாவம் யார் பெற்ற மகனோன்னு “ சோக பாட்ட கண்டிப்பா பாடுவாங்க. 

இத்தன பிரச்சனைகளுக்கு மத்தில நாம நினைச்ச மாதிரி ஒரு படம் எடுக்கறதே சாதனைதான். கோமலுக்கு இந்த பிரச்சனைகள், சின்ன சின்ன காம்ப்ரமைஸ் இருந்தாலும் புரொடியூசர் அவனுக்கு சப்போர்ட்டா அமைஞ்சதால படம் ஓரளவுக்கு அவன் எதிர்பார்த்த மாதிரி வந்துட்டு இருந்துச்சு. 23 நாள் முதல் ஷெட்யூல் முடிஞ்சு 10 நாள் பிரேக் விட்டாங்க. இப்ப எல்லாமே டிஜிட்டல் ஆயிட்டதனால படம் எடுக்க எடுக்க ஸ்பாட்லயே எடிட் பண்றவங்க கூட உண்டு. கோமல் ஸ்பாட் எடிட் வேணான்னு சொல்லிட்டான். அன்னன்னிக்கு ஷுட் முடிஞ்சதும் புட்டேஜ் கன்வெர்ட் ஆகி எடிட்டருக்கு போயிடும். அந்த 23 நாளும் எடுத்த புட்டேஜ எடிட்டர் கிஷோர் ஆர்டர் பண்ணி ஆல்ரெடி எடிட் பண்ணி வெச்சிருந்தான் . கோமல் தன் டீமோட உட்கார்ந்து எடிட் பண்ணி இருந்த சீன் எல்லாத்தையும் பாத்தான். அவனுக்கு அவன் எதிர்பார்த்த மாதிரி வந்திருக்குன்னு பீல் வந்துச்சு. கிஷோர் சில சீன்ஸ் ரொம்ப இழுக்குதுன்னு கோமல்கிட்ட சொன்னான். கோமல் கரெக்டா இருக்குன்னு சொன்னான். ரெண்டு பேருக்கும் பயங்கர ஆர்க்யுமெண்ட் போச்சு. கடைசியா மொத்த படமும் முடிஞ்சதுக்கப்புறம் பாக்கலாம் ..அப்பவும் இழுக்கற மாதிரி தெரிஞ்சுதுன்னா ட்ரிம் பண்ணிடலான்னு கோமல் சொன்னான். 

பொதுவா ஒரு படம் நல்லா வர்றதுக்கு காரணம் அந்த படத்தோட டைரக்டர் மட்டும் காரணம் கிடையாது. அந்த படத்துல வொர்க் பண்ற டெக்னீஷியன்ஸ் பங்கும் மிகப்பெரியதா இருக்கும். ஒரு படத்துக்கு சரியான டெக்னீஷியன் மட்டும் அமைஞ்சா அந்த படம் ஒரு டைரக்டர் நினைச்சத விட சூப்பரா வந்துடும். கோமல் எல்லா டெக்னீஷியனையும் புதுசா அறிமுகப்படுத்துனாலும் எல்லாமே திறமைசாலிங்களா இருந்தாங்க. ஷுட்டிங் ஸ்பாட்ல கோமல் சில இடங்கள்ள தடுமாறும் போது கேமராமேன் “மச்சான் ..அத இப்படி பண்ணிக்கலாண்டான்னு ஈஸியா வேலைய முடிச்சுட்டு போயிடுவாரு. எடிட்டிங்க்ல கிஷோர் கூட கோமல் எனக்கு இதான் வேணுன்னு சண்டை போட்டாலும் ரெண்டு பேருமே ஈகோ இல்லாம வேலை பாத்தாங்க. விஷயம் சரியா இருந்தா யார் சொன்னாலும் ஈகோ இல்லாம ஏத்துகணுங்கற மனப்பக்குவம் கோமல்கிட்டயும் அவன் டீம்கிட்டயும் இருந்துச்சு. நான் எடுக்கறதுதான் சினிமான்னு என்னிக்கு ஒரு டைரக்டர் நினைக்கறாரோ அப்பவே அவருக்கு அவரே ஆப்பு வெச்சுக்க தயார் ஆகிட்டார்ன்னுதான் அர்த்தம்.


சினிமாவ பொறுத்தவரைக்கும் ஒரு படம் நல்லா இல்லன்னா டைரக்டரதான் கேவலமா திட்டுவாங்க. அதே சமயம் ஒரு படம் நல்லா இருந்துச்சுன்னா படத்துல வேலை பார்த்த அத்தனை பேரோட உழைப்புக்கும் சேர்த்து அதே டைரக்டரதான் பாராட்டுவாங்க. கோமல் இதெல்லாம் தெளிவா உணர்ந்து இருந்தான்.

முதல் ஷெட்யூல் பிரேக்ல அடுத்த ஷெட்யூல் ஷுட்டிங்குக்கான வேலைகள் பரபரப்பா நடந்துச்சு. அடுத்த ஷெட்யூல்ல பைட் சீன்ஸ் எடுக்கறதனால கோமல் திலீப் மாஸ்டர் கூட உட்கார்ந்து பைட்ட எப்படி எடுக்கறதுன்னு டிஸ்கஸ் பண்ணான். சில இங்கிலீஷ் பட டிவிடிக்கள குடுத்து மாஸ்டர் ..எனக்கு இந்த பைட் இருக்கணுன்னு கோமல் சொன்னான். யூ டூ கோமல்ன்னு மாஸ்டர் அவன முறைச்சுட்டே “கோமல் ..எனக்கு ரெப்ரன்ஸ் எல்லாம் வேணாம்.. என்ன பீல்ன்னு சொல்லு ..அத விட உனக்கு நல்லா எடுத்து தர்றன்னு சொன்னாரு. கோமல் அவரு மேல நம்பிக்கை வெச்சு ரெப்ரன்ஸ் டிவிடிய தூக்கி போட்டான். 10 நாள் பிரேக் முடிஞ்சு அடுத்த நாள் காலைல ஷுட்டிங்ன்னா நைட்டு செம்ம மழை. காலைல 5 மணிக்கு புரொடக்ஷன் மேனேஜர் போன் அடிச்சு “சார்.. இன்னிக்கு ஷுட்டிங் கேன்சல்ன்னாரு . ஏன் ..சார் ? கோமல் குழப்பமா கேட்டான். மேனேஜர் “நாம போட்டு வெச்சு இருந்த செட் எல்லாம் மழைல அடிச்சுட்டு போயிச்சு சார்ன்னு சொன்னாரு. கோமல் நொந்து போனான். மறுபடியும் அந்த செட்ட ரெடி பண்றதுக்கு 5 நாள் ஆச்சு. 5 நாள் கழிச்சு ஒரு வழியா ஷுட்டிங் ஆரம்பிச்சுது. முதல் நாளே பைட் சீன். ஹீரோ பறந்து வந்து ஒரு ஜன்னல் வழியா குதிக்கற மாதிரி ஷாட் . திலீப் மாஸ்டர் ஹீரோவுக்கு ரோப் எல்லாம் கட்டி ரிகர்சல் பாத்துட்டு டேக் போலான்னு சொன்னாரு. ஹீரோ மாடில இருந்து குதிச்சதும் , பைட் மாஸ்டர் அஸிஸ்டெண்ட்ஸ் கரெக்டா ரோப்ப இழுத்து அவர ஜன்னல்கிட்ட லேண்ட் பண்ணனும். திலீப் மாஸ்டர் ஸ்டார்ட் கேமரா சொன்னதும் .. ரோலிங்ன்னு கேமரா ஆபரேட்டர்கிட்ட இருந்து சத்தம் வந்துச்சு .. திலீப் “ஆக்ஷன்” அப்படின்னு கத்துனதும் ஹீரோ மேல இருந்து குதிச்சாரு. ஸ்டண்ட் அஸிஸ்டெண்ட்ஸ் கரெக்டா ரோப்ப இழுத்தாங்க . அப்ப யாரும் எதிர்பாராம ஒரு விஷயம் நடந்துச்சு. ஹீரோ இடுப்புல கட்டி இருந்த கயிறு கட் ஆகி , அப்படியே பறந்து வந்து அங்க இருந்த கிரேன் மேல மோதி கீழ விழுந்தாரு. கோமல் அதிர்ச்சியோட எழுந்து அவர நோக்கி ஓடி வந்தான். 

(கோமலின் கலைப்பயணம் தொடரும்).

ஆழி சூழ் உலகை
வெக்கை சூழ் உலகாக்குகிறது
இக்கோடை.

ஓடைகளைக் காணோம்
கோடைதான் பட்டுத் தெறிதெறிக்கிறது 

கோடை எனப்படுவது 
யாதெனின்
யாதொன்றும் குளுமை இலாத 
சொலல்.

சோம்பல் முறிப்பதற்கும் 
சோம்பலாய் இருக்கிறது 

இரு முறை தடைபட்டாலும்
ஆழ்ந்த உறக்கம்தான்
இலவம்பஞ்சு மெத்தையில்

தட்டையாய்ப் படுகிறது
கோடையற்ற
எக்காலமும்

அவ்வப்போது உதட்டை 
ஈரப்படுத்துவதில் 
கொஞ்சமாய்க் குறைகிறது 
கசகசப்பு 

கைக்குட்டை இருந்தாலும் 
அவசரத்துக்கு சட்டையே 
போதுமானதாக இருக்கிறது 
முகம் துடைக்க


உறிஞ்சும் போது 
மிளகாயாய்ப்பழமாய்ச் 
சிவக்கிறது மூக்கின் 
குவிமையம்

குவளை குவளையாய்க் 
குளோரினற்ற தண்ணீரும்
செம்பு நிறைய மோரும் 
தேவைப்படுகிறது 
அவ்வப்போது

சூடும்
சுதாரிப்பு வேட்கையும்
நீரும்
நீராகார
உபசரிப்புமென எம் மக்களின் 
போக்குகள் அலாதி

வெளிர் நிறப் பருத்தி 
ஆடைகள் மீதான 
பெருங்காதல் 
வெளிப்பட 
இக்கோடையொருவாய்ப்பு 

இப்படியாய்
கோடைச் சிந்தனைகளில் 
எஞ்சியிருக்கிறது 
இன்னும் நிறைவேற்றப்படாத 
வியர்வையின் விருப்பங்கள்.

உலகின் சிறந்த திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் இயக்குநர் அப்பாஸ் கியோரஸ்தமிக்கும் முக்கிய இடம் உண்டு. அதற்கு காரணம் திரைக்கும் பார்வையாளனுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து, படத்தை ஒரு வாழ்வியல் அனுபவமாகவே மாற்றி விடுவதில் வல்லவர் என்பதால் தான். அவர் இயக்கிய கடைசி திரைப்படம்தான் 'லைக் சம்ஒன் இன் லவ்'. 

பொதுவாக ஒரு நாவலை வாசிக்கும்போது நமக்கு கிடைக்கும் உணர்வு சொல்லில் அடங்காதது. நம்முடைய மனநிலை, புறச்சூழலின் தன்மை, கதையின் பாத்திரங்கள் அதன் சூழல், மனோபாவம் இவற்றை மையமாக கொண்டு நாவலின் சுவை அமையும். வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே அற்புதமான ஓர் ரஸவாதம் நிகழும் தருணமும் அது தான். ஆகவேதான் உலகம் முழுவதும் இன்றும் வாசிப்பு அனுபவம் என்பது தொடர்ந்து விரும்பப்படுகிறது. அதேபோல, ஒரு திரைப்படமும் இருக்க முடியும் என்பதற்கு உதாரண்ம்தான் அப்பாஸ் கியோரஸ்தமியின் இந்தப் படம்!

ஒரு நாவலில் மையப் பாத்திரத்தை சுற்றி, துணைப் பாத்திரங்களும் கிளைக் கதைகளும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், முடிவில்லாத நிகழ்வுகளைக் கொண்டிருக்கும். சில இடங்களை வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கும். எழுத்தாளன் சிலவற்றை மட்டுமே சொல்லிச் செல்வான் அல்லது கோடிட்டு காட்டுவான். சொல்லப்படாத அந்தப் பக்கங்களில் தான் நாவல் அழகு பெறும், உயிரோட்டமானதாய் அமையும். அதுபோலவே, ஒரு படத்தில் சில இடங்களில் இயக்குநர் சொல்லாமலேயே காட்சிகளை தவிர்த்துவிடுவார். அவை பார்வையாளனுக்கான இடங்கள். அதில், அவனே தனக்கான காட்சிகளை எழுதிச் செல்ல வேண்டும். அப்படியாக தன்னுடைய படங்களின் காட்சிகளை உருவாக்கியவர் அப்பாஸ் கியோரஸ்தமி. 'லைக் சம்இன் ஒன் லவ்' படம், அதற்கொரு சிறந்த உதாரணம்!

மானுட வாழ்க்கை பலவிதமான உறவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த உறவுகளுக்குள் நிகழும் சம்பாஷணைகள், விருப்பங்கள், வெறுப்புகள், பிரச்சினைகளாலே கட்டமைக்கப்பட்டுள்ளது இந்தப் பெரும் வாழ்வு. எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய முடியாததாக எப்போதும் இருக்கிறது வாழ்வு. அதை முழுவதுமாக அறிந்துகொள்வதிலேயே மனித வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் வேகமாக கடந்துபோய் விடுகின்றன. மனிதன், வாழ்வின் சூட்சமத்தை அறியும்போது அல்லது அவனுக்கு புரியும்போது எல்லாம் முடிந்துவிட்டிருக்கும். இதுவே வாழ்வின் புதிர். அதுவே வாழ்வின் சுவாரஸ்யமும் கூட!

இப்படியான வாழ்வில் மனித உறவுகளின் சிக்கல்களை சொல்வதில் திறமையானவராக அறியப்படுகிறார் அப்பாஸ் கியோரஸ்தமி. அவருடைய 'லைக் சம்ஒன் இன் லவ்' திரைப்படமும், மேற்கண்டவற்றைதான் விவாதிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் வந்து போகும் சில உறவுகளுக்கு பெயர் வைக்கவே முடியாது. அப்படியான உறவுகளை பற்றி, வெளியில் சொல்லவும் முடியாது. அப்படியான ஒரு வாழ்க்கையை பற்றி அலசும் திரைப்படம் தான் இது. 

ஒரு ஓய்வுப்பெற்ற பேராசிரியர், பல்கலைக் கழக மாணவி, அவளுடைய காதலன் ஆகிய மூன்று பேரையும் மேலும் சில பாத்திரங்களையும் கொண்டு முழுப்படத்தையும் முடித்துவிட்டார் இயக்குநர். அதுவே அவரின் சிறப்பு என்றும் கூறலாம். 

கல்லூரியில் பணி முடித்து, ஓய்வில் இருக்கிறார் வயது முதிர்ந்த பேராசிரியரான டகாஷி. இளம்பெண் ஒருத்தியுடன் ஓரு இரவை கழிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. பல்கலைக் கழக மாணவி அகிகோ. மறைமுகமாக பாலியல் தொழில் செய்பவள். அதுவும் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மட்டுமே. அவளுடைய இந்த அந்தரங்க செயல்பாடுகள், அவளின் நண்பர்கள் சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால், இது அவளுடைய காதலன் நோரியக்கிக்கு தெரியாது. இந்நிலையில், நண்பர்களின் மூலமாக டகாஷியின் ஆசையை நிறைவேற்ற செல்கிறாள் அகிகோ. பேத்தி போல இருக்கும் அவள் வந்த பிறகு, டகாஷியின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் 'லைக் சம்ஒன் இன் லவ்' படத்தின் திரைக்கதை. 'ப்ரியத்தை பெண் என்றும் அழைக்கலாம்' என்பதை இப்படத்தின் மூலமாக மறைமுமாக சொல்கிறார். அதை போரடிக்காமல், கவித்துவமாக நகர்த்திச் சென்றிருப்பதுதான் அப்பாஸ் கியோரஸ்தமியின் திறமை!

இருட்டத் தொடங்கியதும் டகாஷியின் வீட்டுக்கு காரில் வந்து இறங்குகிறாள் அகிகோ. அவள் காரைவிட்டு இறங்கத் தொடங்கியதில் இருந்து தன் அறைக்கு வரும் வரை ஒருவித பதைபதைப்புடனும் பதட்டத்துடனுமே இருக்கிறார் டகாஷி. குதூகலம் நிரம்பிய மனநிலையில் அறைக்குள் வரும் அவள், அந்த அறையின் அழகில் சொக்கிப்போகிறாள். அதன்பிறகு அவர்கள் இருவருக்குள் நடக்கும் உரையாடல்களும் அதன்தொடர்ச்சியாக நடக்கும் களேபரங்களுமே படத்தின் கதை. அந்த அறைக்கு எதற்கு வந்திருக்கிறோம் என்பது அகிகோவுக்கு தெரியும். அதேபோல, டகாஷிக்கும் அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்பது தெரியும். ஆனால், இருவருக்குமிடையே எதுவும் நடக்காதது ஏன்? என்பதை மானுட விசாரணை போல காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் அழகே அதுதான்!

டகாஷிக்கு ஒரு பேத்தி இருந்தால் என்ன வயது இருக்குமோ, அப்படியானவளாக இருக்கிறாள் அகிகோ. ஆகவே, பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி, அவளை அவருடைய பேத்தி என்றே நினைத்துக்கொள்கிறாள். இடையில் அங்கே வரும் காதலன் நோரியக்கிக்கும் அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு பற்றி சந்தேகம் வருவதில்லை. அவனும் அகிகோவின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பேராசிரியர் என்றே எண்ணுகிறான். ஆனால், இறுதியில் என்ன நடந்திருக்கலாம் என்கிற முடிவை பார்வையாளர்களாகிய நம்மிடம் விட்டுவிடுகிறார் இயக்குநர். இதுதான் படத்தை வெறொரு தளத்துக்கு கொண்டு சென்று படத்தின் தரத்தை கூட்டிவிடுகிறது. அவரவர் மனம் சொல்லும் இறுதிமுடிவை!

ஒரு படத்தின் முடிவை சொல்லாமல் விடுவது என்பது உலக சினிமாக்களில் புதிதல்ல. ஆனால், அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படம் 'லைக் சம்ஒன் இன் லவ்'. படம் பார்க்கும் யாவரும், அவரவர் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கதையின் முடிவு எழுதிக்கொள்ள முடியும் என்பதுதான் அது. அவ்வகையில் இப்படம் சர்வதேச ரசிகர்களால் கவனத்தை ஈர்த்ததோடு, சிறந்த படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற இயக்குநரான அப்பாஸ் கியோரஸ்தமி, இந்தப் படத்தை இயக்கிய பின் காலமானார். 

109 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு ஜப்பானில் வெளியானது. இப்படம், கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அயல்நாட்டு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அப்பாஸ் கியோரஸ்தமியின் மறைவை ஒட்டி, கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இவரது படங்களில் முக்கியமானவற்றை திரையிட்டனர். அதில் 'லைக் சம்ஒன் இன் லவ்' திரைப்படமும் அடக்கம்!