தமிழ் சினிமாவுக்கு இது கொண்டாட்டமான நேரம். இந்திய அளவில் உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருது. அவற்றில் ஆறு விருதுகளை வெவ்வேறு பிரிவுகளில் தட்டி வந்திருப்பதுதான் அதற்கு காரணம். சிறந்த மாநிலமொழிப் படம், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பாடலாசிரியர், சிறந்த திரைப்பட ஆய்வாளர் ஆகிய விருதுகளை கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ஆளுமைகளே பெற்றுள்ளனர். 

இயக்குநர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் இரண்டு விருதுகளையும், சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கிய '24' படம் இரண்டு விருதுகளையும், சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' ஒரு விருதும் பெற்றுள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்துவும், சிறந்த திரைப்பட ஆய்வாளருக்கான விருதை தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும், பெற்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளராக திரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த மாநில மொழிப் படமாக ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த 'ஜோக்கர்' தேர்வாகியுள்ளது. 

தேசிய விருதுகளை தேர்ந்தெடுக்கும் கமிட்டியின் தலைவராக, இந்த முறை நியமிக்கப்பட்டவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனது கவித்துமான கதைசொல்லல் முறையால் கவர்ந்தவர். ஏற்கனவே, இவர் இயக்கிய 'காஞ்சிவரம்' தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் கோலிவுட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தேசிய விருது அங்கீகாரம் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. அபூர்வமாகத்தான் தென்னிந்தியாவின் பக்கம் தேசிய விருது குழுவினரின் கவனம் திரும்பும். ஆனால், கடந்த சில வருடங்களாக இவற்றில் பெரும் மாற்றம் உருவாகி, வந்திருக்கின்றன. அதன் தாக்கம்தான் ஒரே நேரத்தில் இப்போது தமிழ் சினிமாவுக்கு ஆறு தேசிய அங்கீகாரம்!

இந்த மாற்றம் ஒரே நாளில் நடக்கவில்லை. அதற்கு, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பெரும் உழைப்பை செலுத்தியுள்ளனர். குறிப்பாக, இயக்குநர்களில் மறைந்த பாலசந்தர், பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு முக்கியமானது. சிறந்த படங்களை இயக்குவதோடு, தேசிய விருது கமிட்டியில் தங்களை இணைத்துக்கொண்டு, நல்ல படங்களை தேர்வு செய்தும், ஊக்குவித்தும் வந்தனர். அப்படியாக, பாரதிராஜா கண்டறிந்து, தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம் 'குற்றம் கடிதல்'. அதேவரிசையில் இயக்குநர் வெற்றிமாறனின், மாறுபட்ட முயற்சியான 'விசாரணை' படமும் கடந்த வருடம் தேசிய விருதை தட்டியது. தேசிய விருதுகளை அள்ளுவதில் மலையாளத் திரையுலகத்தை தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகமும் களத்தில் இறங்கியுள்ளது வரவேற்கப்பட வேண்டியதே!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 64வது தேசிய விருது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக, கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, இப்போது ஏழாவது முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார் என்பது  தமிழுக்கு கூடுதல் அங்கீகாரம்!. இந்த விருது குறித்து வைரமுத்து பேசும்போது, "இந்த விருதால் நான் அடையும் மகிழ்ச்சியை விட, நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன். அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் 2 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே!" என்கிறார் பெருமிதத்துடன்!

சிறந்த படத்துக்கான விருதை பெறவுள்ள இயக்குநர் ராஜுமுருகன்  "மனித உரிமைகள் பற்றிய பேசுக்கூடிய படமாக, 'ஜோக்கர்' படத்தை இயக்கியிருந்தேன். பொதுவாக, இன்றைக்கு படம் எடுப்பதைக் காட்டிலும், அதை திரையரங்களுக்கு கொண்டு சேர்ப்பதில்தான் பெரும் சவால்கள் நிறைந்திருக்கிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு கிடைத்த வரவேற்பு மறக்க முடியாது. அதேபோல, அரசும் தேசிய விருது மூலமாக அங்கீகரித்துள்ளது, எங்களது குழுவை மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது" என்று, தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 


இந்தப் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "இந்த விருது இன்னும் நல்லப் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது" என்று கூறியுள்ளார். இவையெல்லாம் சிறந்த படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக உருவாகும் என்கிற நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறது!

தேசிய விருது அறிவிப்பில் கூடுதலாக கவனம் ஈர்த்த மற்றொரு விஷயம். கோலிவுட்டின் தொழில்நுட்பங்களில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சில துறைகளுக்கு, விருது அறிவிக்கப்பட்டுள்ளதும், அவற்றையும் நம்முடைய டெக்னீஷியன்களே பெற்றிருப்பதும்தான். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, பெரும் வசூலை வாரிக் குவித்த படமான 'புலி முருகன்' படத்துக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருதை ஃபைட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னும், 'ஜனதா கரேஜ்' என்கிற தெலுங்கு படத்துக்காக சிறந்த நடனக்கலைஞருக்கான விருதை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமும் பெற்றுள்ளனர். ஆக, தமிழ் சினிமா தேசிய விருதுகளால் மகுடம் சூடியுள்ளது என்றால், அது மிகையில்லை!

"சாவு யாருக்கு வந்தாலும் வலி தான். யார் ஒடுக்கப்பட்டாலும் அதற்கு எதிரான குரல் ஓங்க வேண்டும் தான். அப்படியாக, 'டஸ்க்', 'லில்லி' போன்ற படங்கள் எனக்குள்ள நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கு! யார் எதிர்த்தாலும் நாங்கள் தொடர்ந்து படங்கள், நாடகங்கள், பாடல்னு இயங்கிட்டே தான் இருப்போம்" என்று தடாலடியாகப் பேசுகிறார்,  ஆவணப் பட இயக்குநர் மாலினி ஜீவரத்தினம். ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ எனும் படம் மூலமாக, சர்வதேச கவனம் ஈர்த்தவரிடம், கொஞ்சம் கதைத்தோம்!

‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ ஆவணப்படம் குறித்து?

“தற்கொலைகளை தடுக்கணும் என்ற நோக்கத்தோடு தான், இந்த ஆவணப்படத்தை எடுத்தேன். நான் தொடர்ச்சியாக எல்.ஜி.பி.டி. சம்பந்தமான விஷயங்களை ஆராய்ச்சி செய்து, கட்டுரைகளாக எழுதிட்டு வர்றேன். கடந்த வருடம், தமிழ்நாட்டுல, அதுவும் சென்னையில 17 ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் (அகனன்) இறந்திருக்காங்க. பல பேருக்கு அந்தச் செய்தி போய்ச் சேரவேயில்லை. புள்ளிவிவரத்தின் படி, உலகத்திலேயே, அதிகமாக தற்கொலையில் ஈடுபடற நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கு!
குறிப்பாக, தென்னிந்தியாவில் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அதிகமாக தற்கொலை செய்துக்கறாங்க. இதுக்கு காரணம், அவர்களை எல்லோரும் ஒதுக்கறாங்க. அதோட, அவங்களுக்கு நிகழும் பிரச்னைகள், உணர்வுகளை யாருமே புரிஞ்சுக்கிறது கிடையாது. அதை உணர்த்த வேண்டிய நோக்கத்துலதான் இந்த ஆவணப்படத்தை எடுத்தேன்!”

இந்த ஆவணப்படம் மூலம் தெரிந்து கொண்ட அறிய தகவல்கள் ஏதேனும் உண்டா?

“லெஸ்பியன் பற்றிய ஆவணப் படம்ங்கிறதால, தமிழ்நாட்டுல உள்ள பல  லெஸ்பியன்களை நான் சந்திச்சேன். சமூகத்துல அவர்களோட உணர்வுகளை யாரும் புரிஞ்சுக்காததால, தங்களின் பெற்றோர்கள் கிட்டே பேசக் கூட, அவர்கள் தயங்குறாங்க. அப்படியிருக்கும்பொழுது, என்கிட்டே எப்படி சொல்லுவாங்க?. 'லெஸ்பியன்கள் தங்களோட அடையாளத்தை கூட வெளியே சொல்ல மாட்டார்கள்' போன்ற பல விஷயங்களை இந்த ஆவணப்படத்துல பதிவு செஞ்சிருக்கேன்!”

'லெஸ்பியன்' என்கிற கான்செப்ட் தமிழ்நாட்டுக்கு புதுசா?

“மனித இனம் தோன்றிய காலம் தொட்டு 'கே' (அகனன்), 'லெஸ்பியன்' (அகனள்) என்ற பிரிவினரும் இருந்திருக்கிறார்கள். பெண்ணும் பெண்ணும் மற்றும் ஆணும் ஆணும் சேர்ந்து முத்தமிடுவது போன்ற  சிற்பங்கள், நம் புராதான கோயில்களில் இடம்பெற்றிருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் இது தமிழ்நாட்டுக்கு புதுசில்லை!”

உங்களுடைய ஆவணப்படத்தின் குழு பற்றி?

“லெஸ்பியன் பற்றி ஊடகத்துலேயே தெளிவான ஒரு பார்வை இல்லேன்னு தான் சொல்லணும். இப்படி ஒரு கருவை வச்சு நான் ஆவணப்படம் எடுக்கப் போறேன்னு சொன்னதும், என்னை எல்லோரும் அருவருப்போட தான் பார்த்தாங்க. நான் இதைப் பற்றி இயக்குநர் ரஞ்சித் கிட்டே சொன்னேன். அவரு, ‘நீலம் புரொடக்ஷன்' மூலமாக, பல சமூகம் சார்ந்த கான்செப்டை ஊக்குவிக்கறாங்க. என்னோட இந்த ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ ஆவணப் படத்தையும் தயாரிக்கிறேன்னு சொன்னாரு. இன்னிக்கி ரஞ்சித் இல்லேன்னா, இந்தப் படம் இல்ல. அதோட, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், லெஸ்பியன் ஆந்தெம் எழுதிய குட்டி ரேவதி, பாடல் வரிகளை கொடுத்த எழுத்தாளர் தமயந்தி, இவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்!.”

எதிர்கால திட்டம்?

“படைப்பு பொறுத்தவரை, பெரிய படம், சிறிய படம்னு எதுவுமே இல்லை. எனக்கு எல்லாமே ஒரே மாதிரிதான். சமூக அக்கறையோடு, என் மனசுக்கு பிடித்த படங்களை கடைசி வரைக்கும் எடுத்துக்கிட்டுதான் இருப்பேன்" என்றார். இவர் இயக்கியுள்ள 'லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை தட்டி, வந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

"வருசத்துக்கு ரெண்டு தடவ பிரசவம் மாதிரி கல் வெளியேறுது டாக்டர். கல் வராம தடுக்க ஏதாவது தடுப்பு மருந்து இருக்கா டாக்டர்..."

"சார், ஜவுளிக்கடைல வேலை பாக்கேன். காலைல 9 மணிக்கு போனா 3 மணிக்கு சாப்பிட வரும்போதுதான் பாத்ரூம் போக முடியும். கடைல பாத்ரூம்லாம் இல்லை. தண்ணி குறைவா தான் குடிக்கேன். இப்ப நாலு நாளா குறுக்கு வலிக்கு, நீர் சொட்டுச் சொட்டா கலங்கலா போகுது. ஒரு தடவ இரத்தமா போன மாதிரி கூட போச்சு. கல்லடைப்புங்காக, ஆப்ரேசன் பண்ற அளவுக்கெல்லாம் நம்மகிட்ட வசதி கிடையாது. வேலைக்கு போனாத்தான் சம்பளம். சித்தால கல்லு கரைஞ்சு வெளியேறும்னாங்க. அதான் வந்தேன்"

"ரெண்டு நாளா யூரின் போற இடத்துல கடுமையான வலி டாக்டர். ஸ்கேன் பண்ணிப் பார்க்கச் சொன்னாரு பேமிலி டாக்டர். கிட்னில ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கல்லு இருக்குன்னு ரிப்போர்ட் வந்துருக்கு. எனக்கு சித்த மருத்துவத்துல ஆர்வமுண்டு. அதான் வந்துருக்கேன்"

"ஒரே குமட்டல், வயிற்று வலி, படியேறி, இறங்குனா வலி கூடுது. நீரும் கம்மியாதான் போகுது. குறுக்கு வலியும் இருக்கு டாக்டர்"

"அஞ்சாறு வருசமா கல்லடைப்பு இருக்கு டாக்டர். கல் வரப்போகுதுன்கறது தெரியும். வலி வந்த உடனே வாழைத்தண்டு, முள்ளங்கி எல்லாம் ஜுஸ் எடுத்துக் குடிக்க ஆரம்பிச்சிருவேன். இரண்டு மூணு நாள்ல வலி குறைஞ்சிரும். சில சமயம் சின்ன சைஸ்ல கல்லு தெறிச்சு பத்து நாளா வாழைத்தண்டு, முள்ளங்கி ஜுஸ் குடிக்கிறேன். வலி குறையவே இல்லை. உடம்பு சோர்வா இருக்கு. கைகால் எல்லாம் அசதியா இருக்கு. சித்தால ஏதோ கசாயம் இருக்காமே. அதான் வாங்க வந்தேன்"

'கட்டுரையை விரைவாக அனுப்புங்க டாக்டர்' என மனம் அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததிலிருந்து எனது காதிற்கும் நோயர்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

நோய் விளக்கம் 

சிறுநீரகத்திலேயோ, சிறுநீர்ப் பையிலோ, சிறுநீர் வெளியேறும் பாதையிலோ கற்கள் உருவாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமத்தை ஏற்படுத்தி, இடுப்பு, அடி வயிறு, இன உறுப்பு ஆகியவற்றில் வலியையும், சிறுநீர் வெளியேறுவதில் சிரமத்தையும், சில நேரங்களில் குருதி கலந்த சிறுநீரையும் வெளியேற்றும் இயல்புடைய நோயைக் கல்லடைப்பு நோய் என்கிறோம்.

சித்த மருத்துவத் தத்துவ விளக்கம்

பித்த நாடியின் பாதிப்பால் கல்லடைப்பு நோய் ஏற்படும் சில நிலைகளில் வாத நாடியும் பித்த நாடியோடு சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும்.

சூட்டைத் தரும் உணவுகள், குறைவான நீர் எடுத்துக் கொள்ளல். எண்ணெய் முழுக்கத்தைத் தவிர்த்தல் போன்றவை பித்தம் மிகுந்து உடலில் உள்ள நீரைச் சுண்டச் செய்து, சிறுநீர் வற்றி, சிறுநீரின் உப்பை உரையச் செய்து, கல்லடைப்பு நோயை உண்டாக்கும்.

மருத்துவம் :

உணவே மருந்து :

உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை உண்டு அதிகரித்த பித்தத்தை இயல்பிற்கு கொண்டு வருதல் வேண்டும்.

பசலைக் கீரை, சிறுகீரை போன்ற கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவரை, வெண்டை போன்ற காய்கறிகள் உடல்சூட்டைக் குறைக்க வல்லவை. 

மணக்கத்தை அரிசிச் சோறு, பார்லி அரிசிக் கஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். 

 வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு கற்களை வெளியேற்றும் தன்மை வாய்ந்தவை. உடலில் உள்ள நீரை அதிகமாக வெளியேற்றும் தன்மை இவற்றுக்கு உண்டு. ஆதலால் தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் உடலில் உப்புச் சத்து குறைந்து கைகால் அசதியை ஏற்படுத்தும். எனவே தொடர்ச்சியாக எடுக்காமல் வாரத்தில் ஓரிருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

தக்காளி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பால்பொருட்கள், அசைவம் போன்றவற்றை கல்லடைப்பு நோயர்கள் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகளையும், குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

சித்த மருந்துகள்:

நீர்முள்ளி, நெருஞ்சில், சிறுபீளை, வெள்ளரி என சிறுநீரைப் பெருக்கக் கூடிய கற்களை உடைத்து வெளியேற்றக் கூடிய மூலிகைகள் கிட்டத்தட்ட 130க்கு மேலான எண்ணிக்கையில் உள்ளன. விரைந்து செயலாற்றும் வகையில் குடிநீர் (கசாயம்) வடிவில் அவற்றை எடுத்து வர கல்லடைப்பு நோய் குணமாகும். ஒரு செ.மீ. அளவு வரை உள்ள கற்களை சித்த மருந்துகளின் மூலம் உடைத்து வெளியேற்ற இயலும். கற்களின் அளவு அதற்கு மேல் இருப்பின் சித்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

நீர் முள்ளிக் குடிநீர் :

சித்த மருந்து கடைகளில் நீர்முள்ளிக் குடிநீர்ச்சூரணம் கிடைக்கிறது. 10 கிராம் நீர்முள்ளிக் குடிநீர்ச் சூரணத்துடன் 400 மி.லி. நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, 50 மி.லி. அளவாக வற்ற வைத்து வடிக்கட்டிக் குடித்து வரவும். காலை, மாலை உணவிற்கு முன் நீர்முள்ளிக் குடிநீர் அருந்தி வரவும். கல் இருக்கும் இடத்தைப் பொறுத்தும், கல்லின் வடிவத்தைப் பொறுத்து வெளியேறும் காலம் மாறுபடலாம். சிறுநீர்ப் பாதையிலோ, சிறுநீர்ப் புழையிலோ சிக்கி இருக்கும் கல் அளவில் சிறியதாக இருப்பின் ஓரிரு நாட்களில் வெளியாகி விடும். சிறுநீர்ப் பையிலும், சிறுநீரகத்திலும் இருக்கும் கற்கள் வெளியேற சிறிது காலம் ஆகலாம். கல்லடைப்பு நோயில் இருக்கும் சிறுநீர் சரியாக வெளியாகாமை, வலி, குமட்டல் ஆகியவை நீர்முள்ளிக் குடிநீர் குடித்த ஓரிரு நாட்களிலேயே சரியாகி விடக் கூடும். கல் வெளியாகி விட்டதா என்பதை யு.எஸ்.ஜி. ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறிந்து பின்பே நீர்முள்ளிக் குடிநீர் அருந்துவதை நிறுத்தவும்.

மாவிலிங்கக் குடிநீர், சிறுபீளைக் குடிநீர் போன்ற குடிநீர் வகைகளும் நீர்முள்ளிக் குடிநீரைப் போல கல்லடைப்பு நோயைக் குணமாக்க வல்லவை. 

மேலும் கல்லடைப்பு நோயைக் குணமாக்க வல்ல உயர்வகை பற்பங்கள் ஏராளமாக சித்த மருத்துவத்தில் உள்ளன. அவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி உண்ணலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

அடுத்த இதழில் "வெண் படை நோய்"

இன்றைய நவீன சமூகத்தில் ஆன்மிகம் என்றாலே ஒருவித சலிப்பு, பெரும்பாலானோரிடையே காணப்படுகிறது. அதேபோல, சம்ஸ்கிருத மொழியைக் கேட்டாலே மனசுக்குள் ஒருவித வெறுப்பும் மேலிடுகிறது.  இதெல்லாம் ஏன் என்ற கேள்வியும் நம் எல்லோரையும் துருவிக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன?. இவை எல்லாவற்றுக்கும் தீர்க்கமாக பதிலளித்தார் உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர். 

தொழில்நுட்ப வல்லுனரான நீங்கள் உபன்யாசத்திற்குள் நுழைந்ததன்  அவசியம் என்ன?  

“முதன்மையான காரணம், ஆச்சார்யார்களோட ஆசீர்வாதம் தான். பிட்ஸ் பிலானியில படிச்சிட்டு இருக்கும் பொழுது, நான் ஸ்லோகம் சொல்வதைக் கேட்ட,  என்னோட துணை வேந்தர் மறைந்த  வெங்கடேஷ்வரர் அவர்கள், "உன்னோட உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு. நீ ஏன், ஒரு உபன்யாசம் கொடுக்கக் கூடாது?"ன்னு கேட்டார். எங்க வீட்ல பரம்பரையாக யாருமே உபன்யாசத்துல இல்லை. அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சரி! கொடுத்துதான் பார்ப்போமேன்னு தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து, மும்பையில ஒரு கோவில்ல நான் கொடுத்த உபன்யாசத்தை எதேச்சையாக, விஜய் டிவி யில பார்த்திருக்காங்க. அவங்க எனக்கு ஒரு நிகழ்ச்சியை ஒதுக்கினாங்க. அதுக்கு அப்புறம் நான் தொடர்ந்து உபன்யாசம் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு கட்டத்துல நான் பாத்துட்டு இருந்த வேலையை உதறிட்டு, முழுக்க உபன்யாசகராக மாறிட்டேன்!”

ஏற்கனவே, உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன், உ.வே. அனந்த பத்மநாபாச்சார் போன்றோர் இருக்க, அவர்களிடமிருந்து, உங்களை எவ்வாறு வேறுபடுத்தி காட்டுகிறீர்கள்?

“நீங்க இங்கே குறிப்பிட்ட எல்லோரும், சனாதன தர்மத்துக்காக, சம்பிரதாயத்துக்காக தங்களையே அர்பணித்துக்கொண்டு உழைக்கிறார்கள். என்னுடைய உபன்யாசம் எப்படி வேறுபட்டு இருக்கு? ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரம் வருடங்களுக்கு, முன் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றை சொல்லும்பொழுது, அவர் பேசிய மாதிரி சொன்னால் யாருக்குமே புரியாது. தற்காலச் சூழலுக்கு ஏற்ற மாதிரி சொன்னால் அவர்களுக்கும், ஆர்வம் வரும். குழந்தைகளும் கேட்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்!”

ஆன்மீக தத்துவங்களை பெருந்திரளான மக்களுக்கு எப்படி கொண்டு செல்கிறீர்கள்?

“விளம்பரம் மூலமாகத்தான். இங்கு இன்னாரின் உபன்யாசம் நடக்கிறது என்று விளம்பரப்படுத்தினால் தான், மக்களுக்குத் தெரியும். அவர்களும், வருவார்கள். அது மட்டுமில்லாமல், எந்த முறையில் விளம்பர படுத்துறோம் என்பதும் ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, இராமாயண உபன்யாசம் என்று சொல்வதை விட; "ராமனுக்கு பிடித்தவன் பரதனா? அல்லது இலக்குவானா?" போன்ற கேள்விகளை எழுப்பி விளம்பரப் படுத்தினால், 'எனக்கும் இதே சந்தேகம் தான் இருக்கு, இவர் என்ன சொல்றார்?'ன்னு போய் கேட்போம்னு, சில பேர் வர வாய்ப்பு இருக்கு.

இவை எல்லாவற்றையும் விட, தொழில்நுட்பம் மிக அவசியம். நேரில் வந்து, உபன்யாசம் கேட்க முடியாதவர்களுக்கு இதுவே சிறந்த வழி. 

ஆயிரம் வருடத்திற்கு முன் இராமானுஜரிடம் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்தால் இன்று உலகம் முழுக்க அவர் சம்பிரதாயமே இருந்திருக்கும்!”

இராமானுஜர் காலத்திற்கு பிறகு இஸ்லாமியர் மற்றும் ஆங்கிலேயரின் படையெடுப்பிற்கு பின், சம்பிரதாயத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

“சமத்துவத்தை அழுத்தமாக மக்களுக்கு போதித்தவர் பகவத் ஸ்ரீமத் இராமானுஜர். எறும்பில் ஆரம்பித்து மனிதன் வரை எல்லோருக்கும் உள்ளே இருக்கும் ஆன்மாவில் இருப்பது இறைவன். ஆன்மாவைப் பொறுத்தவரை எந்த பேதமுமில்லை. பார்ப்பவரின் கண்கள் தான் மனிதனை வேறுபடுத்துகிறது. இவர் கருப்பு, இவள் மெலிந்தவள் போன்ற பேதங்களை மனிதனின் அறிவே பிரித்து பார்க்கிறது.

சம்பிரதாய மாற்றம் நிகழ்ந்தது, ஆங்கிலேயரின் படையெடுப்புக்குப் பிறகுதான். ஸ்பூன், ஃபோர்க், கண்ணாடி குவளைகள் போன்றவைகள் நம் வீட்டு சமயலறைக்குள் நுழைந்தது நூறு வருடத்திற்கு முன்னர்தான். அதே போல் வட இந்திய பெண்கள் முக்காடு அணிந்து கொள்வதும் இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்தான் என்பது அடியேனின் கருத்து!”

சமஸ்கிருத மொழியை பலரும் எதிர்ப்பதேன்?

“நான் மறுபடியும் சொல்றேன், நமக்குள்ளதான் பேதம் இருக்கே தவிர மொழிகளுக்குள்ளே இல்லை. சமஸ்கிருதம் இயல்பாகவே தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளோட கலந்து இருக்கு. சமஸ்கிருதம் ஒரு ப்ராச்சீன மொழி. அது பிறந்த தினத்தை நாம சொல்லவே முடியாது. அந்த மொழியோட வடிவமைப்பை வியக்காத உலக நாடுகளே இல்லை.  இது நம் பாரத நாட்டுல பிறந்த மொழி தானே. நாம தான் பெருமைப்படணும். நம் தாய் மொழியான தமிழ் மொழியை கற்றதும், பிற மொழிகளை கற்பதில் தவறில்லை. அதேபோல், ஒரு மொழியை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள், அந்த மொழியால் அவர்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டார்களா? என்று ஆராய்ந்து, பகை வளர்க்காமல் அவர்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்!.” என்று சமூக அக்கறையோடு பேசி, முடித்தார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஏனோ, அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது நமக்கு. உபன்யாசகர்களின் சிறப்பே அதுதானோ?!.

மகரக் குறுக்கம் என்று அடிக்கடி படித்திருப்பீர்கள். ஐகார ஔகாரக் குறுக்கங்களைப் போலவே மகரக் குறுக்கம் என்னும்போது மகர எழுத்துகள் அனைத்தும் குறுகி ஒலிக்குமா என்பது கேள்வி. அதில் பாதி சரி. மீதி தவறு. 

ஐகார ஔகாரங்களில் அவ்வரிசை எழுத்துகள் அனைத்தும் குறுகி ஒலிக்கும் என்று பார்த்தோம். மகரக் குறுக்கத்தில் ம் என்ற மகர மெய்யெழுத்து மட்டுமே குறுகி ஒலிக்கும். ம முதல் மௌ வரைவிலான மகர உயிர்மெய் எழுத்துகள் எங்கும் குறுகாமல் வழக்கம்போலவே ஒலிக்கும். மகர மெய்யெழுத்தாகிய ம் என்னும் எழுத்துக்கு மட்டும்தான் குறுக்கம்.
 
மகர மெய் எவ்வாறு குறுகுகிறது ? ஐகாரம் சொல்லுக்கு  முதல், நடு, இடையில் வந்தால் குறுகும்... ஔகாரம் சொல்லுக்கு முதலில் வந்தால் குறுகும்... என்று பார்த்தோம். அதுபோல் மகரம் எங்கே குறுகும் ? மகர மெய்யானது சொல்லுக்கு இறுதியில் வரும்போதுதான் குறுகும்.
 
சொல்லுக்கு இறுதியில் மகர மெய் எவ்வாறு வருகிறது ? ஆம், நாம், பட்டம், கள்ளம், வளம், வானம் என்று பலவாறு வருகிறது. இவ்வாறு சொல்லுக்கு இறுதியில் குறுக வேண்டும். குறுகுகிறதா ? இல்லை. எல்லாச் சொல்லிறுதி எழுத்துக்கும் மகரமெய்க் குறுக்கம் இல்லை. மிகவும் அரிதான நிலைமைகளில் மட்டுமே மகரமெய் தன் ஒலிப்பளவில் குறுகும். சிற்சில சொற்களுக்கு மட்டுமே மகரமெய்க் குறுக்கத்தை வகுத்துள்ளார்கள்.
 
எடுத்துக்காட்டாக, மருளும் என்று ஒரு சொல் இருக்கிறது. இந்த ளு என்னும் எழுத்து, இறுதியில் உள்ள ம் என்னும் மகர மெய்யோடுகொண்ட ஒலியொற்றுமையால் மயங்கி உகரம் கெடுகிறது. ளு என்னும் எழுத்து ள்+உ என்னும் எழுத்துச் சேர்க்கையால் உருவாவதுதானே ? அந்த உ என்னும் எழுத்து கெடுகிறது. கெட்ட பின்பு எஞ்சுவது எது ? மருள்ம் என்ற சொல் எஞ்சுகிறது. அந்த மயக்கம் அத்தோடு நிற்பதில்லை. ள் என்னும் மெய்யை அடுத்து மகர மெய் வருவதால் ள் என்ற ஒலிப்பு மேலும் மயங்குகிறது. அவ்வாறு மயங்கி ண் என்று மாறிவிடுகிறது.
 
மருளும் => மருள்ம் => மருண்ம்  
 
திரைப்பாடல்களை உற்றுக் கேளுங்கள். ண் என்னும் மெய்யைச் சரியாக ஒலிப்பதற்காக கொஞ்சமாய் ள் என்ற ஒலியைக் கலப்பார்கள். ண் என்பதை ள்ந்ந் என்பதுபோல் அவர்களுடைய ஒலிப்பு இருக்கும். கண்ணிலே என்பதைக் கள்ந்நிலே என்பதுபோல்தான் ஒலிப்பார்கள். ஏனென்றால் ள் என்பதும் ண் என்பதும் ஒலிப்பில் ஒன்றுக்கொன்று ஒற்றுமை காட்டும். அந்த இயற்கைதான் மகரக்குறுக்கத்தில் எழுத்து மயக்கமாகச் செயல்படுவது.  

மருளும் என்னும் அந்தச் சொல் ‘செய்யும்’ என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கிறது. இவ்வாறு மகரக்குறுக்கமாக அமைகின்ற சொற்கள் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டில்தான் இருக்க வேண்டும். செய்யும் என்ற வாய்பாடு குறித்தெல்லாம் பின்னொரு கட்டுரையில் விரிவாக விளக்குவேன். இப்போதைக்கு செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைந்த மகர மெய்யீற்றுச் சொற்களில் மகரக் குறுக்கம் தோன்றும் என்பதை நினைவில் கொள்க.      

வெருளினு மெல்லாம் வெருளுமஃ தன்றி
மருளினு மெல்லாம் மருண்ம்.
 
என்பது பாட்டு. இங்கே மருளும் என்ற சொல் மருண்ம் என்று மகரக்குறுக்கமாகி இருப்பதைப் பாருங்கள். “வெருளினும் எல்லாம் வெருளும் அஃதன்றி மருளினும் எல்லாம் மருண்ம்” என்னும் அந்தப் பாட்டு வரியில்  ‘வெருளினும்’ என்னுமிடத்தில் மகரக் குறுக்கம் வரவில்லையா ? வராது. ஏனென்றால் மகரமெய்க்கு முந்திய எழுத்து ளு அல்லது லு என்பதாக இருக்க வேண்டும். இது முதல் விதி. மருளும், உருளும், அருளும் ஆகிய சொற்கள் மருண்ம், உருண்ம், அருண்ம் என்று ஆகும். இவ்வாறு மயங்கிய மகர மெய்க்குக் கால் மாத்திரைதான் ஒலிப்பளவு. இயல்பான மகர மெய்க்கு அரைமாத்திரை ஒலிப்பளவு என்றால் மகரக் குறுக்கத்துக்குக் கால்மாத்திரை.

ளு என்ற எழுத்து மகரமெய்யோடு மயங்கி ண் என்று ஆனதைப்போல, லு என்ற எழுத்து மகரமெய்யோடு மயங்கி ன் என்று ஆகும். போலும் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல்லும் செய்யும் என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கிறது. இதுவும் மேற்சொன்னவாறே மகரமெய்யால் உகரம் கெட்டு போலும் என்பது போல்ம் என்றாகி நிற்கும். கடைசியில் மகர மெய் வருவதால் அந்த ல் என்ற மெய்யால் அதே நிலையில் இருக்கமுடியாது. ன் என்று மேலும் மயங்கும். இறுதியில் போன்ம் என்று நிற்கும்.
 
போலும் => போல்ம் => போன்ம்
 
இவ்வாறு போன்ம் என்று தோன்றும் சொல்லின் மகர மெய்க்கும் கால் மாத்திரைதான் ஒலிப்பளவு. இங்கும் மகரக்குறுக்கம்தான். போன்ம் என்னும் மகரக்குறுக்கச் சொல் செய்யுளில் இடையிலும் வரும். இறுதியிலும் வரும். செல்லும் என்னும் சொல் இடைமெய்க்குறையுற்று செலும் என்றாகி அது சென்ம் என்னும் மகரக் குறுக்கச் சொல்லாகும். இவ்வாறு மருண்ம், போன்ம் போன்ற சொற்கள் செய்யுளில் வாய்பாட்டு இடையூற்றைத் தவிர்க்கவும் இசையின்பத்துக்காகவும் நன்கு பயில்கின்றன. தற்போது இவற்றை நாம் முற்றாக மறந்துவிட்டோம். செய்யுளில் இவை எங்கேனும் அரிதாய்த் தோன்றினாலும் நமக்கு அடையாளக் காணத் தெரியவில்லை. இனியேனும் அவ்வாறிராமல் மகரக் குறுக்கத்தின் அடையாளத்தையும் அருமையும் உணர்வோம்.

இனி மகரக் குறுக்கமானது தற்காலத்தில் எங்கே பயன்பாட்டில் உள்ளது என்பதையும் பார்ப்போம். மகரமெய்யீற்றுச் சொல்லை அடுத்து வகரத்தில் தொடங்கும் சொல் வந்தால் அந்த மகர மெய்யீறு தனக்குரிய வழக்கமான மாத்திரை அளவிலிருந்து குறுகி கால்மாத்திரையாய் ஒலிக்கும். வானம்வழங்கும், தரும்வகையில், வாழும்வள்ளுவர் ஆகிய சொற்றொடர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே ம் என்னும் மகரமெய்யை அடுத்து வகரத்தில்தொடங்கும் சொல் வருகிறது. அத்தகைய நிலைமைகளிலும் மகர மெய் குறுகி ஒலிக்கும். இதுவும் மகரக் குறுக்கமே. தற்காலத்தில் எங்கெங்கும் வழங்கும் மகரக் குறுக்கம் இவ்வகைமைதான். 
 
னணமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்’ என்பது நன்னூல் (96) நூற்பா.

னணமுன்னும் = ன்ண் என்பன தனக்கு முன்னே வருகையிலும்
வஃகான் மிசையும் = வகரமெய்க்கு முன்னே தான் வருகையிலும்
மக்குறுக்கும் = மகர மெய் தன் ஒலிப்பளவான அரைமாத்திரையிலிருந்து கால்மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படும்.
 
இத்தகைய செய்யுள் இயற்கைகள் தற்காலத்திற்கு என்ன பொருத்தப்பாடு உடையன என்பது எளிய கேள்வி. ஆனால், இவற்றை நாம் அறிந்துகொள்வதால்தான் நம் மொழியியற்கையை முழுமையாக உணர முடியும். மகர மெய்க்கு எத்தகைய மயக்க ஒலிப்பும் இணையொலிப்பும் உள்ளன என்பதை அறிய முடியும். எழுத்து என்பது ஒரு குறியடையாளம் என்றால் அதை வாயால் சொல்வதில் நாம் காட்டுகின்ற நுண்மையை விளங்கிக்கொள்ளவும் இயலும்.


தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகிலும் கூட அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பெயர் தனஞ்ஜெயன். திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், விமர்சகர், திரைப்படக் கல்லூரி நிறுவனர் என பன்முகம் கொண்டவர். தற்போது இரண்டாவது முறையாக தேசிய விருதை வென்றிருக்கிறார். சிறந்த திரைப்பட ஆய்வாளருக்கான விருது, இப்போது அவரை அலங்கரித்துள்ளது. விடாமல் துரத்தும் வாழ்த்து அழைப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசினார்!

"சினிமா நல்லபடியாக உருவாக, என்னவெல்லாம் தேவை என்பது குறித்து எழுதப்படும் விமர்சனங்களுக்காகத்தான் தேசிய விருதை பெற்றுள்ளேன். இது சினிமா விமர்சனத்துக்கு அளிக்கப்படும் விருது அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 'தி இந்து', 'டைம்ஸ் ஆஃப் இன்டியா', 'தினத்தந்தி நெக்ஸ்ட்' போன்ற இதழ்களிலும் மற்றும் 'உயிர்மை' உள்ளிட்ட மாத இதழ்களிலும் சினிமாவின் வளர்ச்சிக்காக என்னவெல்லாம் செய்யலாம்; செய்ய வேண்டும் என்பது குறித்து எழுதி, வந்திருக்கிறேன். இப்படியாக நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து பத்தை தேர்வு செய்து, விருது குழுவுக்கு அனுப்பியிருந்தேன். அதை அவர்கள் பரிசீலித்து திரைப்பட ஆய்வாளர் விருதை எனக்கு அளித்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!

அனைத்து மொழிகளிலும் இருந்து இந்த விருதுக்காக ஏராளமான பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். 33 பேரில் இருந்து, என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்பது ஆச்சர்யமானது. ஏனெனில், இந்தப் பட்டியலில் பிரபல எழுத்தாளர்களும் இருந்தார்கள். இப்போது எனக்கு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய விருது அறிவிக்கப்பட்ட உடனேயே, எனக்கு அழைப்பு வந்தது இயக்குநர் பாலா சாரிடம் இருந்துதான். அது எனக்கு வியப்பாக இருந்தது. "பாஃப்டா என்கிற திரைப்படக் கல்லூரியை நடத்தி வருகிறீர்கள். அப்படியிருக்கும்போது, எழுத்துக்காக உங்களுக்கு விருது என்பது முக்கியமானது. ஒரு நல்ல ஆசிரியர் தான், நல்ல எழுத்தாளனாகவும் இருக்க முடியும். இது உங்களுக்கு இரண்டாவது இது. இது உங்க நிறுவனத்துக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்!" என்றார். தேசிய விருது பெற்ற ஒரு மாபெரும் இயக்குநர், என்னை பாராட்டியது நெகிழ்ச்சியாகவும் இருந்தது. 

என்னைப் பொருத்தவரை, சினிமா விமர்சகர் என்பவர் பிரச்சினைகளை மட்டுமே, சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டு விமர்சிக்கும்போது அதில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்தும் பேச வேண்டும். அதேபோன்று குறைகளையும் சுட்டிக் காட்டணும். அவர் ஒரு தராசு போல நின்று, நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருக்கு. தனக்குப் பிடித்தவர்கள் என்றால் அவரை, மேலே தூக்கி வைத்து, ஒரேயடியாக புகழ்வதும், பிடிக்கவில்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதும் நடக்கிறது. இது சில நேரங்களில் எனக்கு, தமிழ் சினிமா விமர்சகர்கள் தவறான பாதையில் செல்கிறார்களோ என்று கூட யோசிப்பது உண்டு. படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது, எந்த எதிர்பார்ப்பும் இன்றிதான் செல்வேன். அதேபோல, படம் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக திரும்பி விடுவேன். ஆகவே, விமர்சனங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும், வேண்டுகோளும் கூட!. 

ஒரு கட்டுரையை எழுதி, முடித்த உடனே அதை என்னுடைய மகளிடம் தான் காட்டுவேன். அவர் ஒரு தேர்ந்த வாசகர். சில விஷயங்களை அவர் திருத்தச் சொல்லுவார். அப்படியாக திருத்தி, எழுதும்போது அந்த கட்டுரை இன்னும் மேம்பட்டிருக்கும். அப்படித்தான் என்னுடைய எல்லா கட்டுரைகளும் வெளியாகும். என்னுடைய முதல் வாசகரும் என் மகள்தான். இந்த விருதில் அவருக்கும் பங்கு உண்டு!" என்று புன்னகைத்தவாறே முடித்தார் தனஞ்ஜெயன். அவரது மகளையும் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று தோன்றியது!

டீக்கடைல பாட்டு கேட்டுட்டு புல் எனர்ஜியோட கோமல் ரூமுக்கு வந்து சேர பவித்ராகிட்ட இருந்து போன் வந்துச்சு. கோமலுக்கு அப்பத்தான் பவித்ராகிட்ட இந்த விஷயத்த சொல்லலங்கற விஷயமே மைண்ட்ல ஸ்பார்க் ஆச்சு. போன அட்டெண்ட் பண்ணி விஷயத்த சொன்னா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு புரியாம குழம்பிட்டு இருக்கும் போதே போன் ரிங் ஆகி கட் ஆச்சு. பொய் வாழ விடாது . உண்மை சாக விடாதுன்னு என்னிக்கோ படிச்சது மைண்ட்ல வந்து கோமல உண்மைய சொல்ல தூண்டுச்சு. கோமல் பவித்ராவுக்கு போன் அடிச்சான். போன் அட்டெண்ட் பண்ணதும்  “ஹேய் ..ஸாரிடா நீ பிஸியா இருப்பன்னு எனக்கு தெரியும் .. இருந்தாலும் உன்கிட்ட பேசணும் போல இருந்துது.. ஒரு 2 மினிட்ஸ் மட்டும் பேசிட்டு வெச்சுடேன்” பவித்ரா படபடன்னு சொல்ல ..கோமல் ஒரு 20 நிமிஷம் நிதானாமா நடந்தத சொல்லி முடிச்சான். அடுத்த செகண்ட் “நீ அவ்ளோதான் கோமல்.  லவ்ல ..லைப்ல எல்லாத்துலயும் தோக்க போற .. உனக்கு நான் கிடைக்கவே மாட்டேன் .. ஒரு வேளை நீ என்ன கழட்டி விடறதுக்காகவே டிலே பண்றியோன்னு தோணுது. விட்ரு கோமல் .. இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல” பவித்ரா கோபமா சொல்லிட்டு போன வைக்க, கோமலுக்கு வாழ்க்கை ஒரு சூனியம் போலவும் பவித்ரா அவனுக்கு சூனியக்கார கிழவி மாதிரியும் தெரிஞ்சா. பவித்ரா மேல கொலவெறி , ரத்த காட்டேரி வெறி எல்லாம் வந்துச்சு. அதை எங்க யாருகிட்ட காட்டறதுன்னு தெரியாம கோமல் கன்ப்யூஸ் ஆகி ரூம் சுவத்துல ஒட்டி வெச்சு இருந்த ஜேம்ஸ் கேமரூன்கிட்ட காட்டுனான். ஜேம்ஸ் கேமரூம் மூஞ்சில ஓங்கி பொக்கு ..பொக்குன்னு குத்திட்டு வலியோட கோமல் நிற்க , ஜேம்ஸ் கேமரூன் போட்டோல ஜாலியா சிரிச்சுட்டு இருந்தாரு. கோமல் போட்டோவ பாத்து “ஏன் சார்.. ஏன் ? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? முடியலன்னு”  லைட்டா கண்கலங்குனான்.   


கோமல் இப்படி புலம்பிட்டு இருக்கும் போதே மறுபடியும் பவித்ராகிட்ட இருந்து போன் வந்துச்சு. எடுக்கவே கூடாதுன்னு நினைச்ச கோமல் போன எடுத்தான். பேசவே கூடாதுன்னு நினைச்ச கோமல் பவித்ராகிட்ட பேசுனான். பவித்ரா ஸாரி சொல்ல, பதிலுக்கு “என் சிச்சுவேஷன் புரிஞ்சுக்க மாட்டியா நீ ..நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமான்னு” கோமல் உருக , அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் பேசி முடிச்சு பவித்ரா கோமலுக்கு முத்தம் குடுத்துட்டு போன வெக்க, போட்டோல இருந்த ஜேம்ஸ் கேமரூன் “இந்த பொழப்புக்கு நீயெல்லாம்ன்னு” நக்கலா ஒரு பார்வை பார்த்தாரு. கோமல் அவர ஐ டூ ஐ சந்திக்கறத அவாய்ட் பண்ணிட்டு முதல் வேலையா போன் டயலர் ட்யூன “எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே” பாட்ட மாத்துனான். இனி பவித்ரா போன் பண்ணும் போதெல்லாம் இந்த பாட்டுதான் கேக்கும். இனி அவ பீல் பண்ணமாட்டானு கோமல் பீல் பண்ணான்.


கட் பண்ணா கோடம்பாக்கம் கூடி பேசற அம்மன் டீ ஸ்டால்ல கோமல் டீ குடிச்சுட்டு இருந்தான். ஒரு படம் கமிட் ஆகி ட்ராப் ஆகறத விட அத எல்லாரும் துக்கம் விசாரிக்கற மாதிரி விசாரிக்கறதுதான் கடுப்பேத்தற மாதிரி இருக்கும். டீக்கடைல கோமலுக்கு அதான் நடந்துச்சு. அப்புறம் கோமல் ..ட்ராப் ஆயிடுச்சாமே? ஏன் ? ஒருத்தரு கேட்டுட்டு போனதும் இன்னொருத்தரு வந்து “ படம் ட்ராப்ன்னு சொன்னாங்க.. என்னாச்சு பைனான்ஸ் பிரச்சனையான்னு கேட்டாரு.


அவரு போனதும் அடுத்து ஒருத்தர் வந்து “என்னங்க கோமல் இப்படி ஆயிடுச்சு ..இனி உங்கள எல்லாரும் ராசி இல்லாத டைரக்டர்ன்னு சொல்லுவாங்களே.. என்ன பண்ண போறீங்கன்னு கேட்டாரு. அவரு போனதும் 25 வருஷமா கோ டைரக்டராவே வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கற ஆறுமுகம் வந்து “என்னடா தம்பி ஞ்படம் கமிட் ஆகி ட்ராப் ஆயிடுச்சாமே... எப்ப படம் பண்றோம்ங்கறது முக்கியம் இல்லடா .. எப்படி படம் பண்றோம்ங்கறதுதான் முக்கியம்ன்னு அட்வைஸ் குடுத்தாரு. கோமலுக்கு ஏற்கனவெ எரியற கொள்ளில எரிசாராயத்த ஊத்துன மாதிரி இருந்துச்சு. அதுல சில பேர் படம் ட்ராப் ஆனத நினைச்சு உள்ளுக்குள்ள சந்தோஷப்பட்டாலும் வெளில சோகமா பீல் பண்ணி பேசறாங்கன்னு தெரிஞ்சுது. இந்த சினிமா உலகமே இப்படித்தான் அடுத்தவன் வெற்றிய கொண்டாடாம தோல்விக்கு பார்ட்டி வெச்சு சந்தோஷமா கொண்டாடும். இங்க ஜெயிக்கறவன வாழ்த்துவறவங்கள விட அதப் பார்த்து வயிறு எரியறவங்கதான் அதிகம். கோமல் அதனால பெருசா அலட்டிக்காம சிம்பிளா வாட்ஸ் அப் டிபிய “இதுவும் கடந்து போகும்” அப்படின்னு மாத்துனான்.


இனி என் வாழ்க்கைய நானா செதுக்கறன்னு சபதம் எடுத்தது எல்லாம் ஓக்கே..


ஆனா எப்படி செதுக்கறது ? அடுத்து என்ன? இந்த கேள்விய தனக்குத்தானே ஒரு ஆயிரம் தடவை கோமல் கேட்டு பாத்தான். தெரிஞ்சா சொல்லமாட்டனாங்கற மாதிரி அவன் புத்தி பதில் சொல்லுச்சு. இந்த குழப்பத்துலயே ஒரு ரெண்டு நாள் போய் இருக்கும். கோமல் அதே டீக்கடைல காலைல டீக்குடிச்சுட்டு இருந்தான். அப்ப பாத்து ஒரு போன் கால். எதோ புது நம்பர்ல இருந்து வந்துச்சு. கோமல் கால அட்டெண்ட் பண்ணான். எடுத்த எடுப்புல “என்ன தம்பி நல்லா இருக்கீங்களான்னு ஒரு வாய்ஸ் கேட்டுச்சு. இந்த வாய்ஸ எங்கியோ கேட்டு இருக்கனேன்னு கோமல் யோசிக்கும் போதே “நான்தான் தம்பி .. லீலா பேலஸ்ல மீட் பண்ணீங்களே..நியாபகம் இருக்குல்ல” இதக்கேட்டதும் கோமலுக்கு கொலைவெறி ஏறுச்சு. “என்ன சார் .. உங்களுக்கு சரக்கடிக்க கம்பெனிக்கு ஆள் இல்லையா? நான் வந்து உங்களுக்கு ஊறுகாய ஊட்டணுமா?  கோமல் கோபமா கேட்டான். உடனே அவரு “அட இல்ல தம்பி பொசுக்குன்னு கோச்சிக்காதீங்க” அவரு சொல்லும் போதே கோமல் கால கட் பண்ணிட்டான். அடுத்து அதே நம்பர்ல இருந்து மறுபடியும் ஒரு ரெண்டு மூணு டைம் கால் வந்துச்சு . கோமல் அட்டெண்ட் பண்ணவே இல்ல . 
அடுத்த நாள் , அதுக்கு அடுத்த நாள்ன்னு அந்த நம்பர்ல இருந்து கால் வர கோமல் அந்த நம்பர ப்ளாக் லிஸ்ட்ல போட்டுட்டான்.

அடுத்து வந்த வெள்ளிக்கிழமை நைட், கமலா தியேட்டர்ல அந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்த படத்த செகண்ட் ஷோ பாத்துட்டு கோமல் வடபழனி பஸ் ஸ்டாண்ட்கிட்ட டீக்குடிச்சுட்டு ரூமுக்கு திரும்பி வந்தான். வாசல்ல ஒரு ஆடி கார் நின்னுட்டு இருந்துச்சு. கோமலுக்கு அந்த கார பாத்ததும் சபதம் போட்ட ப்ளாஷ்பேக் ஷாட்ஸ் மைண்ட்ல வந்துட்டு போச்சு. இதே வாசல்ல இதே மாதிரி என்னோட ஆடி காரும் வந்து நிக்கும்ன்னு கோமல் யோசிச்சுட்டே மேல ரூமுக்கு படி ஏற போகும் போது ஆடி கார்ல இருந்து ஒருத்தன் இறங்குனான். பாக்கறதுக்கு டாம் க்ரூஸ் மாதிரி முகவெட்டுல அர்னால்டு மாதிரி வெயிட்டா இருந்தான். இறங்குனதும் கோமல பாத்து “கோமல்? அப்படின்னு கேட்க ..கோமல் ஆமாம்ன்னு தலை அசைச்சான். அடுத்த செகண்ட் அந்த டாம் குரூஸ் மூஞ்சிக்காரன் கோமல அப்படியே அலேக்கா தூக்கி ஆடி காருக்குள்ள போட்டான். உள்ள பாத்தா அக்‌ஷய் குமார் மாதிரி ஒருத்தன் உட்கார்ந்து இருந்தான். கோமல் “அய்யய்யோ என்ன கடத்துறாங்கன்னு கத்தும் போதே , அக்‌ஷய்குமார் மூஞ்சிக்காரன் கோமல் முகத்துல ஒரு கர்ச்சீப்ப வெச்சான். அடுத்த செகண்ட்  அப்படியே அரை மயக்கத்துக்கு போனான். ஆடி கார் கிளம்புச்சு. 

கார் வேகமா போக போக அரை மயக்கத்துல இருந்த கோமல் மூளைக்குள்ள “யாரு என்ன கடத்தறது யாரு ? நரசிம்ம ராவா? அவரு பையன வெச்சு படம் பண்ணலங்கற கோபத்துல கடத்தறாரா? ஒரு வேளை பவித்ராவோட அப்பாவா? அவரு பொண்ண லவ் பண்ணிட்டு அவருகிட்ட சவால் விட்டன்னு கடத்தறாரா? ..இல்ல .. ஒரு வேளை எப்.பி.ஐ ஆளுங்களா? இல்ல ..பாகிஸ்தான் தீவிரவாதிங்களா? யாரு ? யாரு ? என்ன கடத்தறது யாரு? இவங்ககிட்ட இருந்து நான் எப்படி தப்பிக்க போறன்? இத்தனை கேள்வியும் ஒரே சமயத்துல ஓடிட்டு இருந்துச்சு. நான் இப்ப தப்பிச்சாகணும் என்ன செய்ய போறேன் ..எனக்கு ஒரே வழிதான் இருக்கு இவங்கள அடிச்சு போட்டுட்டு நான் இறங்கி ஓடணும் . இப்ப நான் அததான் செய்யப்போறன் .. உயிர்பிழைக்க எனக்கு அது மட்டுந்தான் வழி” திடீர்ன்னு டிஸ்கவரி சேனல் வாய்ஸ் ஓவர் எல்லாம் வேற மைண்ட்ல வந்துச்சு. கோமல் பக்கத்துல உட்கார்ந்து இருந்த டாம் குரூஸ் மூஞ்சிக்காரன ஓங்கி குத்தலாம்ன்னு கைய ஓங்குனான். ஆனா கை அவன் சொன்னதே கேக்கவே இல்ல .

அது பாட்டுக்கு கீழ தொங்கிட்டு கிடந்துச்சு. கோமலுக்கு தன் கை மேல கோபமா வந்துச்சு. கண்ட்ரோல் பண்ணிட்டு கால தூக்கி உதைக்கலாம்ன்னு கால தூக்குனான் . காலும் அசையவே இல்ல . மைண்டு சொல்றத பாடி கேக்காம அடம்பிடிக்கறத பாத்து கோமலுக்கு கோபம் வரும் போது மயக்கமும் வந்து கோமல் அப்படியே ப்ளாட் அவுட் ஆனான் . 

ஆடி கார் அந்த அர்த்த ராத்திரில அடையாறு ஏரியாக்குள்ள பூந்து வேகமா போய் லீலா பேலஸ் வாசல்ல வந்து நின்னுச்சு. கட் பண்ணா கோமல் ஒரு ரூமுக்குள்ள கண்ணு முழிச்சான். முழிச்சதும் எல்லாம் அவுட் ஆப் போகஸ்ல தெரிய கோமல் கண்ண மூடி மறுபடியும் முழிச்சான். இப்ப எதிர்ல எல்லாமே போகஸ்ல வர கோமல் பாத்தான். டாம் குரூஸ் மூஞ்சிக்காரனும் , அக்‌ஷய்குமார் மூஞ்சிக்காரனும் அங்க இருந்த சோபாவுல உட்கார்ந்து இருந்தாங்க. அது லீலா பேலஸ்ல ஏற்கனவே வந்த ரூம் அப்படிங்கறது அவன்
 மண்டைக்குள்ள உறைச்சுது. கோமல் ஷாக் ஆகி பார்க்க அங்க ஒரு ரூம்ல இருந்து அதே தண்ணி பார்ட்டி  ஸ்லோ மோஷன்ல எண்ட்ரி ஆனாரு. அட பாவி ..நீயா? நீயான்னு கோமல் அவர பார்த்து கேட்க ட்ரை பண்ணி முடியாம அப்படியே துவண்டு மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்தான். கோமல் மறுபடியும் கண்ணு முழிச்சு பாத்தா அவரு எதிர்ல உட்கார்ந்து இருந்தாரு. கோமல பாத்து அவரு “நல்லா இருக்கியா தம்பின்னு” கேட்டு ஒரு சிரிப்பு சிரிக்க கோமலுக்கு குலை நடுங்குச்சு. வாழ்க்கை இன்னியோட முடிய போகுதுன்னு கோமல் பயமா அவர பார்த்தான். அவர் மறுபடியும் சிரிக்க கோமலுக்கு மரண பயம் வந்து மடில உட்கார்ந்துச்சு. அடுத்து என்ன ? அப்படிங்கற குழப்பம் இந்த சிச்சுவேஷன்ல ஒரு டெரர் கேள்வியா மாறி கோமல் மண்டைல உட்கார்ந்துச்சு. 

(கோமலின் கலைப்பயணம் தொடரும்…)

பெண்கள் வலிமையானவர்கள். இன்று எல்லாத்துறைகளிலும் அவர்கள் தங்களது முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களது பங்கும் முக்கியமானது. மென்பொருள் துறை மட்டுமின்றி, இலக்கியம், சினிமா, மீடியாக்களிலும் அவர்கள் அதிவேகமாக தங்களின் இருப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் மேடைப் பேச்சுகளில் புகழ் பெற்றவர் சுமதிஸ்ரீ. ஆன்மிகம்,  இலக்கியம்,  என முழு நேர சொற்பொழிவாளராகவும் வலம் வருபவர். 

"என்னுடைய வாழ்க்கையில் முழு நேர ஆன்மிக சொற்பொழிவாளராக இருப்பேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. ஆனால், பள்ளி நாட்களில் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டு, வெற்றிப்பெற்றிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தில் யாரும் பேச்சாளர்களாக இருந்தில்லை. ஒரு பெண் மேடையேறி பேசுகிறாள் என்பதை என்னுடைய உறவினர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

திருச்சியில் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, கலவரம் ஒன்று நடந்தது. இதனால், பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை விட்டுவிட்டனர். ஆனால், எனக்கு ரிக்ஷா மாலை தான் வரும் என்பதால், பள்ளியில் உள்ள ஆசிரியர் அறையிலேயே உட்கார்ந்துவிட்டேன். அப்போது அங்கே இருந்த பாரதியார் புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அறைக்குள் வந்த ஆசிரியை ஒருவர் என்ன படித்துக்கொண்டிருந்தாய் என்று என்னிடம் கேட்டதும், "அச்சமில்லை... அச்சமில்லை... என்பது இல்லையே" என்று கூறி, நான் படித்த முழு கட்டுரையையும் அவர்களிடம் ஒப்பித்துவிட்டேன். 

இதை சற்றும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பிறகு, அவர் என்னை பாராட்டிவிட்டு, நாளை வழிப்பாட்டு கூட்டத்தில் இதை பேசு என்று சொன்னார். அப்படியாக, என்னுடைய ஒன்பது வயதில் பள்ளியில்தான் என்னுடைய முதல் பேச்சு அரங்கேறியது. பிறகு, பல பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டேன். அவற்றில் வெற்றியும் பெற்றேன். அவற்றில் பல பிரபல தினசரிகளில் செய்தியாகவும் வெளிவந்துள்ளது!. அதேபோல, கல்லூரியில் படிக்கும்போதும் பல்கலைக் கழகங்களுக்கு எல்லாம் சென்று பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறேன்!. ஆனால், என்னுடைய பேச்சே, என்னுடைய வாழ்க்கையாகும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை!

பிறகு, கல்லூரி பேராசிரியை ஆகத்தான் என்னுடைய பயணம் தொடங்கியது. அப்போது, காதல் திருமணம் செய்துகொண்டேன். இதனால் உறவினர்களிடம் இருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போனது. மேடைப் பேச்சுக்காக என்னுடைய வேலையை உதறினேன். நிறைய வாய்ப்புகள் வந்தது. அதனால் தான் இப்போது முழு நேர பேச்சாளராக உள்ளேன். என்னுடைய கணவரின் முழு ஒத்துழைப்பால் அது சாத்தியமாகி உள்ளது. என் மீது விழுந்துள்ள வெளிச்சத்துக்கு காரணமும் அதுதான். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவாற்றி இருக்கிறேன். முன்பு என்னுடைய உறவினர்கள், "உனக்கு பேச்சா சோறு போடப் போகிறது?" என்று கேட்பார்கள். இன்று, எனக்கு சோறு போடுவது பேச்சுதான்!. மாதத்தில் ஒரு இருபது நாட்கள் நான் மேடைகளில்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்!

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஸாம்பியா, உகாண்டாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் பேசியிருக்கிறேன். இங்கே சொற்பொழிவுக்காக அழைக்கப்பெற்ற முதல் பெண் பேச்சாளர் நான்தான். இதை நான் பெருமையாக கருதுகிறேன்!." என்று, அதே உற்சாகத்தோடு முடித்தார் சுமதிஸ்ரீ!. கடல்தாண்டியும் பெண்கள் பறந்து சென்று, தங்கள் ஆளுமையை பறைசாற்றுவது வரவேற்கத்தக்கதே!

'பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்காக முடிந்தது' என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. ஒன்றைச் செய்யநினைத்துத் தொடங்குவோம், அது இன்னொன்றாகச் சென்றுமுடியும். நாம் எதிர்பார்த்தது நடக்காவிட்டாலும், கிடைத்ததை வைத்துத் திருப்தியடைவோம்.

சில நேரங்களில், அப்படி எதிர்பாராமல் கிடைக்கிற விஷயம் நாம் எதிர்பார்த்த விஷயத்தைவிடச் சிறப்பாக அமைந்துவிடுவதுண்டு. 'காற்றுவாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கிவந்தேன்' என்று வாலி எழுதியதைப்போல.

அப்படி ஒருமுறையல்ல, இரண்டுமுறை காற்றுவாங்கப் போய்க் கவிதைகளை வாங்கிவந்த ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஸ்டீவர்ட் பட்டர்ஃபீல்ட்.

இந்தப் பெயர் இவருடைய தந்தை, தாய் சூட்டியதல்ல, அவர்கள் வைத்த 'தர்மா' என்ற பெயர் இவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, தானே 'ஸ்டீவர்ட்' என்று பெயர்சூட்டிக்கொண்டார்.

ஸ்டீவர்ட் (அதாவது தர்மா) பிறந்தது ஒரு விநோதமான சூழ்நிலையில். அவருடைய பெற்றோர், நகரவாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகித் தனியே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அங்கே தொலைபேசி இல்லை, மின்சாரம் இல்லை, அட, ஒழுங்கான வீடுகூடக் கிடையாது, மரப்பலகைகளைத் தட்டியமைத்து உருவாக்கிய ஒரு கூண்டுக்குள்தான் வாழ்க்கை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்த ஒருவர், இரண்டு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார் என்றால், அதிசயம்தான். அவை இரண்டுமே அவர் திட்டமிட்டுத் தொடங்கியவை அல்ல, எதேச்சையாக அமைந்தவை என்பது இன்னும் பெரிய அதிசயம்.

காட்டுக்குள் வாழ்ந்துகொண்டிருந்த ஸ்டீவர்ட்டின் பெற்றோர் நாட்டுக்குத் திரும்பியபிறகு, மகனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கித்தந்தார்கள். ஆனால், கல்லூரியில் ஸ்டீவர்ட் விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்தது கம்ப்யூட்டர்பாடமல்ல, தத்துவப்பாடம்!

பட்டம் பெற்றபிறகு, ஆராய்ச்சி செய்து 'முனைவ'ராகலாம் என்று ஸ்டீவர்ட் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், இணையம் அவரை ஈர்த்தது. கொஞ்சம்கொஞ்சமாக அதற்குள் போய்விட்டார்.

ஆனால், மற்ற பலரைப்போல் ஸ்டீவர்ட் இணையத்தில் வெறுமனே நேரத்தை வீணடிக்கவில்லை. நிறைய கற்றுக்கொண்டார். ஏதாவது புதிதாகச் செய்யலாம் என்று தோன்றியது. சில நண்பர்களுடன் சேர்ந்து ஓர் ஆன்லைன் விளையாட்டை உருவாக்கத்தொடங்கினார். அதன் பெயர், Game Neverending.

இந்தப் பெயரைக் கேட்டவுடன் விஷயம் புரிந்திருக்கும். மற்ற விளையாட்டுகளைப்போல் இங்கே நீங்கள் 'ஜெயிக்க'வேண்டியதில்லை. இந்தப் பந்தயத்தில் முதலாவதாக வரவேண்டும், இந்த வில்லனை அழிக்கவேண்டும் என்பதுபோல் 'இலக்கு'கள் இல்லை, தொடர்ந்து மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டே இருக்கலாம். விளையாடுவதுதான் வெற்றி, விளையாடுவதுதான் இலக்கே.

நம் வாழ்க்கைகூட அப்படிதானே? தத்துவம் படித்த ஒருவர் இப்படியொரு விளையாட்டை உருவாக்க நினைத்ததில் வியப்பில்லை.

ஆனால், இந்த விளையாட்டை யார் வாங்குவார்கள்? இந்த நிறுவனத்துக்கு எப்படிப் பணம் கிடைக்கும்?

ஆரம்பத்தில் ஸ்டீவர்ட் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் நாளாக ஆக, பணமில்லாமல் எதுவும் நடக்காது என்பது புரிந்தது.


ஆகவே, இந்த விளையாட்டைக்கொண்டு ஏதாவது ஒருவிதத்தில் பணத்தைப் புரட்டமுடியுமா என்று பார்த்தார்கள். அதிலிருந்த ஒரு குறிப்பிட்ட வசதி மக்களைக் கவரும் என்று தோன்றியது.

இன்றைக்கு நாம் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் ஏற்றி மக்களிடம் பகிர்ந்துகொள்வதற்குப் பல வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆனால் அன்றைக்கு, அது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இந்தத் தேவையை யாரும் புரிந்துகொள்ளவில்லை, அதற்கேற்ற இணையத்தளங்களை உருவாக்கவில்லை.ஸ்டீவர்ட் குழுவினர் உருவாக்கிக்கொண்டிருந்த விளையாட்டில் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் வசதி இருந்தது. அதைமட்டும் தனியே பிரித்தெடுத்து வெளியிட்டால் என்ன? விளையாட வராதவர்கள்கூட, புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள வருவார்களல்லவா?

உடனடியாக, அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார் ஸ்டீவர்ட். Flickr என்ற பெயரில் அந்த இணையத்தளம் வெளியானது.

புகைப்படங்களை மையமாகக்கொண்டு அருமையான சமூக வலைத்தள வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருந்த Flickrக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. நாள்தோறும் ஏராளமான புகைப்படங்கள் அங்கே ஏற்றப்பட்டன. அதைப்பார்த்து அசந்துபோன யாஹூ நிறுவனம் அந்த வலைத்தளத்தை நல்ல காசு கொடுத்து வாங்கிக்கொண்டது.

இதனால், ஸ்டீவர்ட் கொஞ்சநாள் யாஹூவில் வேலைசெய்யவேண்டியிருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு நாட்களை ஓட்டிவிட்டு வெளியே வந்தார். மீண்டும் இன்னொரு விளையாட்டை உருவாக்கத் தொடங்கினார்.

இந்த விளையாட்டின் பெயர், Glitch. பெயர் மாறினாலும், முன்புபோல் இதுவும் ஒரு முடிவில்லாத, வெற்றி, தோல்வியில்லாத விளையாட்டுதான். ஆகவே, முன்புபோல் இதுவும் சந்தையில் எடுபடாதோ?

என்ன செய்யலாம்? முன்புபோல் இந்த விளையாட்டுக்குள்ளிருந்தே இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கமுடியுமா?

Glitchஐ உருவாக்கும்போது ஸ்டீவர்ட் குழுவினர் சந்தித்த மிகப்பெரிய பிரச்னை, வெற்றி, தோல்வி இல்லாத ஒரு விளையாட்டுக்கு மக்களைக் கவர்ந்திழுப்பது எப்படி? இங்கே வந்தபிறகும், அவர்கள் திரும்பிச் சென்றுவிடாதபடி தக்கவைத்துக்கொள்வது எப்படி? இதற்கான பல அம்சங்களை அந்த விளையாட்டில் கவனித்துச் சேர்த்திருந்தார்கள்.

இதனால், ஒருவர் Glitchஐ விளையாட வருகிறார் என்றால், வெல்வது, தோற்பது, பதக்கங்கள், பரிசுகள் என எவற்றையும் எதிர்பார்க்காமல், அந்த விளையாட்டுக்காகவே அதைத் தொடர்ந்து விளையாடுவார். அந்த அளவுக்கு அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அம்சங்கள் அதனுள் இருந்தன.

இந்த அம்சங்களையெல்லாம் வைத்துக்கொண்டு வெறுமனே விளையாடத்தான் முடியுமா? அவற்றை உருப்படியான அலுவலக வேலைக்குப் பயன்படுத்தினால் என்ன?


எடுத்துக்காட்டாக, வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி ஒன்றை ரசிப்பதற்காகத் தினமும் அதிகாலையில் எழுகிறான் ஒரு சிறுவன். கிரிக்கெட் போட்டி நிறைவடைந்தபிறகும், அவனுக்கு ஐந்து மணியானால் விழிப்பு வந்துவிடுகிறது, சும்மாதானே இருக்கிறோம், பாடம் படிக்கலாமே என்று படிக்கிறான், நல்ல மதிப்பெண்களை வாங்குகிறான். விளையாட்டாகக் கற்றுக்கொண்ட பழக்கம் அவனுக்கு நன்மை தருகிறது.

ஆனால், இதெல்லாம் கேட்பதற்குதான் நன்றாக இருக்கும். நிஜத்தில் நடக்காதே.

முயன்றுபார்த்துவிடலாம் என்று தீர்மானித்தார் ஸ்டீவர்ட். மக்கள் ஒருவரோடொருவர் பேசிப் பழகியபடி, விஷயங்களைப் பகிர்ந்தபடி விளையாட்டாக, கலகலப்பாக, களைப்புத்தெரியாமல் வேலை செய்ய உதவும் ஒரு மென்பொருளை உருவாக்கத் தொடங்கினார்.

ஆங்கிலத்தில் இதனை Team Collaboration என்பார்கள். அதாவது, ஒரு குழுவில் இருக்கும் எல்லாரும் ஒருவரோடொருவர் இணைந்து வேலைசெய்தல்.

எடுத்துக்காட்டாக, ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் ஓர் அறிக்கையை உருவாக்குகிறார். அதற்குத் தேவையான விஷயங்கள் நான்கு வெவ்வேறு நபர்களிடமிருந்து வருகின்றன, இந்த விஷயங்களைக்கொண்டு உருவான அறிக்கையை ஒருவர் சரிபார்க்கிறார், இன்னொருவர் அதனை வாடிக்கையாளருக்கு அனுப்பிவைக்கிறார்... இந்த எட்டு பேரும் சேர்ந்து இந்த வேலையை எப்படிச் செய்வார்கள்?

வேறெப்படி? மின்னஞ்சல்களால்தான்!

* முதல் நபர் 'எனக்கு இந்த விவரங்கள் தேவை' என்று நான்கு பேருக்கு மின்னஞ்சல் அனுப்புவார்
* அந்த நான்கு பேரில் இரண்டு பேர், 'ஒண்ணுமே புரியலை, கொஞ்சம் விளக்கமுடியுமா?' என்று பதில் அனுப்புவார்கள்
* அவர்களுக்கு விளக்கம் தந்து இவர் இன்னொரு மின்னஞ்சல் அனுப்புவார்
* இப்படி ஏழெட்டு மின்னஞ்சல்கள் ஓடியபிறகு நான்கு பேரிடமிருந்து விவரங்கள் வந்துசேரும்
* அந்த விவரங்களில் உள்ள சந்தேகங்களை மின்னஞ்சலில் கேட்டுத் தெளிவுபெறுவார்கள்
* அவர் அறிக்கையைத் தயார்செய்து, அதைச் சரிபார்ப்பவருக்கு மின்னஞ்சலில் அனுப்புவார்
* சரிபார்ப்பவர் அதைத் திருத்தி இன்னொருவருக்கு மின்னஞ்சலில் அனுப்புவார்
* நிறைவாக, அந்த அறிக்கை இன்னொரு மின்னஞ்சலில் வாடிக்கையாளரைச் சென்றடையும்

இப்போது, எத்தனை மின்னஞ்சல்கள், எத்தனை ஆவண வடிவங்கள்(Versions), இதற்கெல்லாம் எவ்வளவு நேரமாகும் என்று கணக்குப்போட்டுப்பாருங்கள். நடுவில் ஏதாவது தப்பாகிவிட்டால்? யாராவது ஒருவர் மின்னஞ்சலைக் கவனிக்காமல் அழித்துவிட்டால்? போன மாதம் இப்படிக் கஷ்டப்பட்டுத் தயாரித்த அறிக்கையை இந்த மாதம் எங்கே தேடுவது? இதனிடையே, அறிக்கையைத் தயாரித்தவர் வேறு நிறுவனத்துக்குச் சென்றுவிட்டால் என்ன ஆகும்?

ஓர் அறிக்கைக்கே இப்படியென்றால் வருடம்முழுக்கப் பல்லாயிரம் பேர் பல விஷயங்களுக்காகச் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய நிறுவனங்களில் எத்தனை மின்னஞ்சல்கள், ஆவணங்கள் சுற்றிக்கொண்டிருக்கும், அதில் என்னென்ன பிழைகளெல்லாம் நேரக்கூடும், அவற்றைக் கவனித்து, பதிலனுப்பி, பிழைகளைத் திருத்தி, சரியான ஆவணங்களைத் தேடியெடுத்து... இதிலெல்லாம் ஊழியர்களின் செயல்திறன் எந்த அளவு வீணாகும் என்று யோசியுங்கள்.இந்தப் பிரச்னையைதான் ஸ்டீவர்ட் உருவாக்கிய Slack தீர்த்துவைத்தது. தனது புதுமையான அணுகுமுறையின்மூலம் உரையாடலை எளிதாக்கியது, ஏராளமான மின்னஞ்சல்களைக் குறைத்து, பகிர்ந்துகொள்ளுதலை எளிமையாக்கி, முக்கியமாக, இவை அனைத்தையும் விளையாட்டான விஷயங்களாக்கியது, மக்கள் இதை ஒரு வேலையாக நினைக்காமல், விளையாட்டாக விரும்பிச் செய்யும்படி மாற்றியது.

அது சரி, ஆனால், மக்கள் இதை விரும்புவார்களா? ரசித்துப் பின்பற்றுவார்களா?

Slack இதனைப் பரிசோதித்துப்பார்த்துவிடத் தீர்மானித்தது. பொதுமக்களிடம் செல்லுமுன், தனக்கு நன்றாகத் தெரிந்த சில நிறுவனங்களிடம் பேசினார் ஸ்டீவர்ட், 'உங்கள் ஊழியர்களை இந்த மென்பொருளை உபயோகிக்கச்சொல்லுங்கள். அதிலிருக்கும் நல்லவை, கெட்டவற்றை எங்களுக்குத் தெரிவிக்கச்சொல்லுங்கள்' என்றார்.

இப்படி ஒரு சிறிய வட்டத்தில் Slackஐ முயன்றுபார்த்தபோது, பல பிரச்னைகள் தெரியவந்தன. அவற்றை ஒவ்வொன்றாகக் களைந்து, மக்கள் விரும்பும் கூடுதல் வசதிகளைச் சேர்த்து மெருகேற்றினார்கள். அதன்பிறகு, பொதுமக்களிடம் சென்றார்கள்.

அப்போதும், எல்லாருக்கும் Slackஐ அள்ளிக்கொடுத்துவிடவில்லை. முதலில் சிறிய நிறுவனங்களைமட்டும் உள்ளே அனுமதித்தார்கள். அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் மென்பொருளை மேம்படுத்தினார்கள், அதன்பிறகு, இன்னும் கொஞ்சம் பெரிய நிறுவனங்களைச் சந்தித்தார்கள், அங்கிருந்து இன்னும் பெரிய நிறுவனங்கள், இன்னும் பெரிய நிறுவனங்கள் என்று முன்னேறி, எந்த நிறுவனமும் எத்தகைய குழுவும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மென்பொருளாக மாற்றினார்கள்.

இந்த உழைப்புதான் Slackஐ எல்லாருக்கும் பிடித்த மென்பொருளாக்கியது. உண்மையில் அதனை வடிவமைத்தது ஸ்டீவர்ட்டோ அவருடைய குழுவினரோ இல்லை. இப்போது அதனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறவர்கள் தந்த கருத்துகளின் அடிப்படையில்தான் அது உருவாக்கப்பட்டது. ஆகவே, அது எல்லாருக்கும் பயன்படுகிறது, எல்லாருக்கும் பிடித்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் Slackபோல் அதிரடி வெற்றியடைந்த பிஸினஸ் மென்பொருள் வேறேதுமில்லை. வாடிக்கையாளர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற மாற்றங்களைச் செய்துகொடுத்து, நிரலெழுதுவோருடன் நட்பாக நடந்துகொண்டு, பிற மென்பொருள்களுடன் பல இணைப்புகளைச் சேர்த்து நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டிருக்கிறது Slack. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அதில் விளையாட்டுப்போல் வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள்!

(தொடரும்)


“என்னோட சின்ன வயதிலேயே என் அப்பா, அம்மாவை விட்டு  பிரிஞ்சிட்டாரு. முழுக்க, முழுக்க, அம்மா அரவணைப்புல தான் வளர்ந்தேன். குடும்பத்துல ஏழ்மை தாண்டவமாடுச்சு. ரொம்ப கஷ்டப் பட்டுதான், நான் பரதம் கத்துக்கிட்டேன். நடனத்தின் மேல் உள்ள ஈர்ப்பு, என் இரத்தத்திலேயே ஊறிய கலை மீதான ஆர்வம், இதுதான் என்னை 154 நாட்டுப்புறக் கலைகளை விரட்டி விரட்டி கத்துக்க வச்சுது.” என்று உணர்ச்சிப்பெருக்கோடு தன் சாதனைகளை பற்றி பேச ஆரம்பித்தார் நாட்டுப்புறக் கலைஞர் சுந்தரமூர்த்தி. அழிந்துவரும் நாட்டுப்புறக்கலைகளுக்கு உயிரூட்டி வரும் அவரை, சந்தித்தோம். 

பரதக் கலைஞரான உங்களுக்கு, நாட்டுப்புறக் கலைகள் மீது ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

“ எனக்கு நடனத்தின் மேல் ஆர்வம் இருக்கிறதை கண்டு பிடிச்சது, என் அம்மா தான். அவங்க என்னை நடனக் கலைஞர் முனிரத்தினம்மாள் கிட்ட சேர்த்துவிட்டாங்க. எல்லா கலைகளுக்கும் தாய் கலைதான் பரதம். அதுல இல்லாதது எதுவுமே இல்லை. பரதத்தில் உள்ள அடவுகளை நீங்கள் புரிந்து, கற்றுக் கொண்டீர்களானால், உங்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் எல்லாம் எளிதாக வரும். எனக்கு மொத்தமா 32 குருநாதர்கள் உண்டு. இவங்க எல்லாருக்கிட்டேயும் நான் என்னால முடிஞ்ச தட்சிணையை கொடுத்திட்டு, கலைகளை கத்துக்கிட்டேன். தமிழ் நாட்டுகலைகள் மட்டுமில்லாம, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரியக் கலைகளையும் கத்துக்கிட்டேன். நாட்டுப்புறக் கலைகள்ல 'தப்பாட்டம்', 'மாடு', 'மயிலு', 'பெரிய கொம்பு', 'சாட்டைக்குச்சி', 'சிலா', 'கரகாட்டம்' போன்ற 60 கலைகள் இருக்கு. அதைத் தவிர, நம்ம ஊர் கரகாட்டத்தை, ஆந்திராவில் 'கரகலு'ன்னு சொல்லுவாங்க, கர்நாடகாவில் 'பாடலு'ன்னு சொல்லுவாங்க, அதையும் கத்துக்கிட்டேன். இதை நான் மட்டும் கத்துகிறது இல்லாம, என்னைப்போல நிறைய பேருக்கு சொல்லித்தரணும்னு ஆசைப்படறேன்!”

நாட்டுப்புறக் கலைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, திட்டம் ஏதேனும் உள்ளதா?

“ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைகளை கத்துகிறதுக்கு  நான் ரொம்ப சிரமப் பட்டேன். பரதம் கத்துக்கிட்டதால, எல்லாக் கலைகளோட வடிவம் எனக்கு எளிதாக புரிஞ்சுது. தப்பாட்டத்துக்கு, இதுதான் ஸ்டெப்ன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதை நான் ஆவணப்படுத்தி வச்சுக்கிட்டேன். அதனால, என்கிட்டே கத்துக்க வர்ற மாணவர்களுக்கு அது ரொம்ப சுலபமா இருக்கு.

சென்னையில மாடம்பாக்கம்ல ‘சுக்ரா டான்ஸ் அகாடமி' மூலமாக நான் நாட்டுப்புறக் கலைகளை சொல்லி கொடுத்திட்டு வர்றேன். அதுமட்டுமில்லாம, மேற்கத்திய நடனம், வாத்தியங்கள் போன்ற வகுப்புகளும் சொல்லிக் கொடுக்குறோம். எட்டு நாட்களில் நாட்டுப்புறக் கலைகளை கத்துக்கிட்டு அரங்கேற்றுவதுதான் எங்க ஸ்பெஷாலிட்டி!”

இந்தத் துறையில, ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கா?

“எனக்கு இந்தக் கலை எந்த விதமான மன அழுத்தத்தையும் கொடுக்கலை. இதனை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியலையே? நம்ம பாரம்பரியக் கலையை நம் மண்ணின் மைந்தர்களுக்கு நாமே உணர்த்த வேண்டிய சூழல் வந்துவிட்டதே?ன்னு நினைக்கும் பொழுதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த நிலை மாறி, நிறைய இளைஞர்கள், நாட்டுப்புறக் கலையோட மகத்துவத்தை கத்துக்கிட்டு வரணும். பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்கணும். 'உணவே மருந்து' என்பதைப் போல, கலையும் மனிதனுக்கு மருந்துதான். இதை ஏன் நான் சொல்றேன்னா, ஒவ்வொரு கலைகளோட அசைவுகளும், நமக்கு ஒரு விதமான பயிற்சி!”
நாட்டுப்புறக் கலையை வியாபாரரீதியாக அடுத்தக் கட்டத்திற்கு  நகர்த்திச் செல்ல சுந்தர மூர்த்தியின் நண்பர்கள் அவருக்கு பக்க பலமாக இருக்கின்றனர். அவருடைய நண்பர் திரு. ஜானகி ராமன் கூறுகையில்,

“கலைகளாலயோ அல்லது விளையாட்டாலோ படிப்பு பாதிக்காது. இதை பெற்றோர்கள் புரிஞ்சிக்கணும். விளையாட்டுல ஈடுபடுறவங்களால கண்டிப்பா நல்லா படிக்க முடியும். மேலை நாடுகள்ல இதை புரிஞ்சிக்கிட்டு அவங்க குழந்தைகளை ஊக்குவிக்கிறாங்க. எங்களால முடிந்த அளவில், நாங்களும், பெற்றோர்களிடம் நாட்டுப்புறக் கலைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டுதான் இருக்கோம்!" என்றார். நம் பாரம்பர்ய கலைகளை காக்க வேண்டியது நம் அனைவரின் சமூகப் பொறுப்பு. அதை செய்தால் சுந்தரமூர்த்தி போன்ற எண்ணற்ற கலைஞர்கள், அக்கலையை வளர்த்தெடுக்க உதவியாய் இருக்கும். செய்வோமா?!.

தான் பாடுபட்டுச் சேர்த்ததை அளந்து பயன்படுத்தும் ஒருவர் பிறத்தியாரின் பொருள் என்றால் அள்ளித் தெளிப்பதைப் பார்க்கலாம். விடுதியில் அறை எடுப்பார்கள். அங்கே மின்சாரத்தை எவ்வளவு வீணடிக்க முடியுமோ அவ்வளவு வீணடிப்பார்கள். கழிப்பறையில் இருக்கையிலும் மின்விசிறி ஓடும். பார்க்காதபோதும் தொலைக்காட்சியை அணைக்க மாட்டார்கள். 

நண்பர்களோடு ஏதேனும் ஓர் அறையில் தங்க நேரும்போது குளித்து முடித்துவிட்டு உடைநேர்த்தி செய்துகொள்வார்கள். அப்போது நண்பனின் மணத்தெளிகையைப் (Deodorant) பயன்படுத்த வாய்க்கும். வழக்கமாய் இரண்டொரு பீய்ச்சலில் முடித்துக்கொள்பவர்கள் அன்றைக்குப் பார்த்து உடலெல்லாம் தெளிக்க விடுவார்கள். எண்ணெய்யைப் பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுகின்ற மண்தானே ஒட்டும் ? அதையெல்லாம் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். எவ்வளவுதான் தெளித்தாலும் வீசுகின்ற மணம் ஒன்றுதான். ஓராயிரம் மல்லிகைகள் வீசும் மணத்தைத்தான் ஒற்றை மல்லிகையும் வீசும். ஒருதுளி தரும் நறுமணத்திற்கும் ஒருபடி தரும் நறுமணத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிட முடியும் ? அதை எண்ணிப் பார்க்க மாட்டார்கள். 

இன்னொருவனின் வண்டியை எடுத்து ஓட்ட வேண்டி வரும். அவ்வாறு இரவலாய்க் கிடைத்த வண்டியைப் பாங்காய் ஓட்டிச் சென்று திருப்பித் தரவேண்டும்தானே ? அப்படிச் செய்யமாட்டார்கள். அந்த வண்டியை முறுக்கிப் பிழிந்துவிடுவார்கள். மேடுபள்ளத்தில் முரட்டுத்தனமாய் ஏற்றி இறக்குவார்கள். விபத்துக்குள்ளாக்கி ஒடுக்கித் தருபவர்களும் உண்டு. 

எல்லாரும் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், மனித மனத்தின் கீழ்மைக் குணங்களில் ஒன்று அவ்வாறு செய்யவைத்துவிடும். இயற்கையைப் பாழ்படுத்துவதுகூட இப்படித்தான். இது தனதில்லை என்னும் ஒரு கீழ்மையான எண்ணம்தான் இந்தப் பூமியைப் பாழ்படுத்துகிறது. இங்கே எரிக்கும் உன் புகைக்குழல்தான் வடதுருவத்தின் பனிப்பிசிறு ஒன்றை உருக்குகிறது என்பதை உணர்வதேயில்லை. 

பொருள் யாருடையதோ... ஆனால், அது என் கைக்குக் கிடைத்தால் முடிந்தவரை நுகர்ந்து தீர்ப்பேன் என்னும் தான்தோன்றி மனநிலை. ஊரார் வீட்டுக்கு விருந்தாடிச் சென்றால் அங்கே அவனுடைய மனைவியும் பந்தி பரிமாறிக்கொண்டிருந்தாளாம். தன் கணவனைப் பார்த்ததும் இலையில் வழக்கத்திற்கு மாறாக அள்ளியள்ளி நெய்யூற்றினாளாம். இலையெங்கும் நெய்யாய் வழிந்ததாம். 

அடுத்தவன் பொருளை அள்ளி இறைப்பது. தமக்குத் தொடர்பில்லை, இழப்பில்லை என்று தெரிந்தால் முற்றாய்த் தொலைப்பது. “ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...” என்னும் மனநிலைதான் இன்று நாம் அடைந்துள்ள சூழலியல் சீர்கேட்டுக்கும் காரணம்.  

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாட ஆரம்பித்துவிட்டது. சென்னையில் சொல்லவே தேவையில்லை. நகரத்தின் வீதிகளில் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நதி நீரை விவசாயத்துக்காக பங்கிட்டு கொள்வதில் அண்டை மாநிலங்களுடனான பிரச்சினையும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இப்படியான சூழலில்தான், 'நிலத்தடி நீரை உறிஞ்சி, விவசாயத்தின் குரல் வளையை நெறிக்கும் கருவேல மரங்களை வெட்டி எறியுங்கள்..' என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் திடீர் உத்தரவு பலரின் புருவங்களையும் உயர்த்தியது. 

சோஷியல் மீடியாக்களில் இது குறித்த விவாதங்கள் பட்டையைக் கிளப்பின. அரசு அலுவலர்களை நம்பிக்கொண்டிருக்காமல் பல கிராமங்களில் இளைஞர்களோடு கைக்கோர்த்துக்கொண்டு பொதுமக்களும் களத்தில் இறங்கினர். கருவேல மரங்களை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமூகப் பணியில் மென்பொருள் வல்லுநர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் நம் கவனம் ஈர்த்தவர் கார்த்திகேயன். வேலூர் மாவட்டத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து கருவேல மரங்களை அகற்றி வருகிறார்.  'தண்ணீர் தட்டுப்பாடு நம் எதிர்காலச் சந்ததிகளை பாதிக்காமல் இருக்க, கருவேல மரங்களை வேரோடு அகற்றுவது ஒன்றே தீர்வு"என்கிறார் தீர்க்கமாக. தொடர்ந்து அவரிடம் பேசினோம்!

தொழில்நுட்பவாதியான நீங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறியதன் பின்னணி என்ன?

“இன்றைய சூழல்ல நான் மட்டும் இல்ல, என்னைப்போல நிறைய இளைஞர்களும், மென்பொருள் வல்லுநர்களும் சுற்றுப்புறச் சூழல் மீது ஆர்வத்தோடு இருக்காங்க. மனிதனுடைய வாழ்வாதாரமான தண்ணீரை அழிக்கிறது இந்தக் கருவேல மரங்கள். இதனைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டும். அதனால்தான், கருவேல மரங்களை அகற்றுவது மட்டுமில்லாம, பயனுள்ள மரங்களை நடுவது, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது என்று சுற்றுச்சூழல் சார்ந்த வேலைகளைகளையும் செஞ்சிட்டு இருக்கோம். இன்று, நாம கஷ்டப்பட்டாலும், நம்மளோட எதிர்கால சந்ததிகள், நல்லா இருக்கணும் இல்லையா?. இது நம்ம எதிர்காலத்துக்கு மட்டுமில்லீங்க; நாட்டுக்கும் செய்யுற நல்ல விஷயம்! ”

கருவேல மரங்களை அகற்றும் பணியில் இளைஞர்களின் ஆதரவு கிடைத்ததா?

“இளைஞர்கள் தான் முழு ஆதரவு கொடுக்குறாங்க” என்று அழுத்தமாக கூறுகிறார். நிறைய பேர் தன்னார்வத்தோட எங்க கூட சேர்ந்து கருவேல மரங்களை அப்புறப் படுத்துறதுல முனைப்போடு இருக்காங்க. எங்களை மாதிரி ஆட்களுக்கு அலுவலகப் பணிகள் இருக்கு. இன்றைய இளைய சமுதாயத்துக்கு எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கு. அதேபோல உற்சாகமாக, சமூகப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்க விஷயம்!”

மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா?

“மக்களுக்கு கருவேல மரம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்கனவே இருக்கு. அதை செயல்படுத்தத் தான் கொஞ்சம் சிரமப்படுறாங்க. உதாரணத்துக்கு, ஒரு மாதத்திற்கு முன்னாடி, இங்கே (வேலூரில்) சிவன் கோயில் குளத்தின் அருகே இருக்கும் கருவேல மரங்களை அகற்றினோம். அதோட அந்தக் குளத்தையும் தூர்வாரினோம். அதை நாங்க 'சேஞ்ச் வேலூர்' என்கிற பெயரின் கீழ் செஞ்சோம். அப்போ, நிறைய பொதுமக்கள், எங்க கூட ஆர்வமா வந்து பங்கெடுத்தாங்க. இப்படி தன்னார்வத்தோட எல்லோரும் செயல்படணும்ங்கிற நிலை வரணும். அப்படி வந்தால், எல்லாம் இங்கே சாத்தியம்!".கருவேல மரங்களை அகற்ற சவால்களை எதிர்கொண்டீர்களா?

"கருவேல மரங்களை அகற்றுவது கொஞ்சம் சிரமம் தான். அந்த மரங்களை நீக்கும்போது நாம தான் பாதுகாப்போடு இருக்கணும். சவால் என்னன்னா, மரங்களை வெட்டுவதற்கு நாங்கள் ஒரு குழுவாக சேர வேண்டும். இப்போ இருக்குற, நேரமின்மையால் அது ரொம்ப சிரமமா இருந்தது. நாங்க திட்டமிட்டது போல, எல்லோரும் ஒன்றுசேர்ந்து, பிறகு  மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவோம். அது எங்க குழுவுக்கே பெரிய சவாலாகத்தான் இருந்தது!".

கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்ததா? அதற்கான வழிமுறை ஏதேனும் உண்டா?

"அரசிடமிருந்து நாங்க, எந்த விதமான அனுமதியும் வாங்கல. 'அரசு கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்' என்று நீதிமன்ற உத்தரவே இருக்கு. நல்ல விஷயங்களை பொதுமக்கள் தானே ஏற்று, செய்தாலே அரசு அதனை வரவேற்குது. இதுவரைக்கும் எங்களை நிறைய பேர் ஊக்குவித்தார்களோ தவிர, யாரும் தடுக்கவில்லை!"

எதிர்கால திட்டம்?

"சாலையோரம் மரங்களை நடவும், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை அகற்றும் பணியிலும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் திட்டமும் இருக்கு!" - நம்பிக்கையோடு முடிக்கிறார் கார்த்திகேயன்.

சினிமாவிலும், பத்திரிகைத் துறையிலும் இருவர் மிகவும் முக்கியமானவர்கள். ஒருவர் படத்தொகுப்பாளர், மற்றொருவர் உதவி ஆசிரியர். சினிமாவில் ஒழுங்கற்ற காட்சிகளை வெட்டி, ஒட்டி 
அதற்கொரு வடிவம் கொடுத்து, இயக்குநர் சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாக்கி பார்வையாளனை கதைக்குள் அழைத்து வருவார். உதவி ஆசியரியரும் வார்த்தைகளை இன்னும் மெருகூட்டி, தேவைப்படும் இடங்களில் நீக்கியும், சேர்த்தும் அந்தப் படைப்பை செழுமைப்படுத்துவர். மீடியாவில், சிறந்த உதவி ஆசிரியர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. ஆனால், சினிமாவில் படத்தொகுப்பாளர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர் எல்.வி.கே.தாஸ். 'மைனா', 'கும்கி','தொடரி' என கவித்துமான படங்களின் வழியே அடையாளம் காணப்பட்டவர். அவரிடம் உரையாடியபோது, 

இயக்குநர் பிரபுசாலமன் உடன் தொடர்ந்து, பணியாற்றியது குறித்து? 

“என்னுடைய சினிமா பயணத்தின் தொடக்க காலங்களில் பிரபு சாலமன் இயக்கும் படங்களுக்கு, நான் ட்ரைலர் கட் பண்ணி கொடுத்திட்டு இருந்தேன். அப்போதே, என்னோட வேலை, அவருக்கு ரொம்ப பிடிக்கும். ‘லாடம்’ திரைப்படத்திலேயே அவருகூட நான் பணியாற்றி இருக்கணும். அந்தச் சமயத்துல எனக்கு வேற கமிட்மென்ட் இருந்ததால, வொர்க் பண்ண முடியல. அதுக்குப் பிறகு ‘மைனா' திரைப்படத்துல தான் அவரோட முதன்முதலாக பணியாற்ற வாய்ப்பு அமைஞ்சது. நேரம் காலம் பார்க்காம நாங்க ரெண்டு பேரும் எடிட்டிங் ஸ்டூடியோவுலதான் இருப்போம். ஆடியன்ஸ் கதையை யூகிக்க விடாமல், ட்விஸ்ட் கொடுத்து, விஷுவலா எப்படி கதையை நகர்த்தலாம்னு யோசிச்சு, வேலை பார்ப்போம். எனக்கு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்ச அனுபவம் இல்லை. அதுனால பிரபு சாலமன் எனக்கு படத்தொகுப்புல  நிறைய டிப்ஸ் கொடுத்து உதவி செய்வாரு. அதோட நானும் ஒரு பார்வையாளனாக இருந்து படத்தை எடிட் செய்வேன். இப்படி ‘மைனா' திரைப்படத்துல ஆரம்பித்த எங்க பயணம் ‘தொடரி’ வரைக்கும் வந்திருக்கு!"

பிரபு சாலமனுடன் பணியாற்றும் பொழுது மறக்க முடியாத சம்பவம்? 

“அவருடன் சேர்ந்த பிறகுதான் எனக்கு ஒழுக்கம்னா என்னன்னு தெரிஞ்சுது. அவருக்கு இறை பக்தி கொஞ்சம் அதிகம், எனக்கும் அப்படித்தான். அந்த விஷயத்துல எனக்கும், பிரபு சாலமனுக்கும் ஒரு ஒற்றுமை இருந்துச்சு. படத்தோட முதல் காபி தயார் ஆகுற வரைக்கும் யார் கூடயும் பேச மாட்டாரு. அவர் குடும்பமே வந்தால் கூட, காத்திருந்து தான் அவரை சந்திக்க முடியும். வேலைக்காக,  தன்னையே ஒப்படைச்சுப்பாரு. இந்த மாதிரியான குணங்களைத்தான் அவருக்கிட்டே கத்துக்கிட்டேன்!”

இலக்கணத்தை மீறிய படத்தொகுப்பு சரியென்று நினைக்கிறீர்களா?

“நான் இன்னிவரைக்கும், படத்தொகுப்பாளர் லெனின் சாரோட மாணவன். இப்போதும் அவரோட வகுப்புகளுக்கு சென்று நான் அவர் சொல்லிக் கொடுக்குற பாடங்களை கவனிப்பேன். படத்தொகுப்பு இலக்கணத்தை முழுமையாக கத்துக்கிட்டு, "தேவைப்பட்ட இடத்தில் இலக்கணத்தை மீறுவது தப்பில்லை"ன்னு லெனின் சார் சொல்லுவார். ஆரம்பத்துல நானும், தேவையில்லாத எஃபக்ட்டுகளை போட்டுட்டு இருந்தேன். அனுபவத்தின் மூலமாகத்தான், எனக்கு எது தேவை, தேவையில்லைனு புரிஞ்சிக்க முடிஞ்சுது!”

தற்பொழுது படத்தொகுப்பு என்பது குடிசைத் தொழிலாக மாறிவிட்டதே?

“இது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு. நான் சமீபத்துல ஒரு எடிட் ஸ்டூடியோவுக்கு போயிருந்தேன், அங்கே வரிசையா சலூன் கடை போல நாற்காலி போட்டு காதுல ஹெட்செட் மாட்டிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. கேட்டதுக்கு, "படத்தொகுப்பு செஞ்சிட்டு இருக்கோம்"னு சொன்னாங்க. படத்தொகுப்பு நல்லா வரணும்னா, இயக்குநரோட உட்காரணும். அவங்க ஸ்க்ரிப்டை உள்வாங்கணும். அழகியலோடு எப்படி இந்த ஸ்க்ரிப்டை மேலும் மெருகேற்றலாம்னு தொடர்ந்து பார்க்கணும். அப்போதான் இதனை முழுசா கத்துக்க முடியும். சும்மா ஒரு கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் இருந்தா மட்டும், படத்தொகுப்பு செஞ்சிட முடியாது!”


தேர்ந்தெடுத்து படங்கள் செய்கிறீர்களே? ஏன்?

“பெருசா காரணம் இல்லை. நண்பர்கள், தெரிந்தவர்கள் படத்துல மட்டும் தான் வேலை செய்யுறேன். ஒரு படம் செய்தாலும், அதைப் பற்றி நூறு வருடங்கள் பேசணும்னு நினைக்கிறேன்!”

‘அட்டு’ திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து?

“ ‘அட்டு’ திரைப்படத்துல பணியாற்றிய எல்லாருமே புது முகங்கள்தான். எந்த ஒரு இயக்குநருக்கும், தன்னோட முதல் படம் வெற்றி பெறணும்னு, ஆசை இருப்பது இயற்கைதான். நாம என்ன ஆலோசனை சொன்னாலும், அதனை அவங்க ஏத்துக்கிற மனநிலையில் இருக்க மாட்டாங்க. திரைப்படத்தை பார்த்துட்டு, ஆடியன்ஸ் தர்ற கருத்துக்களை ஒப்பிட்டு, இரண்டாவது படத்தில் இருந்து எடிட்டர் சொல்றதை கேட்டுப்பாங்க. ‘அட்டு’ படமும் அப்படித்தான் அமைஞ்சது!”

உங்கள் குழுவை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

“என்கூட பணியாற்றும் எல்லாரும் எடிட்டர்ஸ் தான். உதவியாளர்கள்ன்னு யாரும் இல்லை. நான் இல்லேன்னா கூட அவங்களே எடுத்து, வேலை செய்யணும். அப்படி ஒரு டீம் தான் என்கூட இயங்கிட்டு இருக்கு!” நறுக்கென்று முடித்தார் எல்.வி.கே.தாஸ்


நான் என்ற என்னை 
பல வாறாகக் கிழித்துப் போடுகிறேன் 
சில்லு சில்லாகக் கிழித்து நொறுக்குகிறேன் 

என் எவ்வொரு துண்டும் 
ஒவ்வொரு யோகியாக உருவெடுக்கின்றன 
ஒவ்வொரு யோகியும் 
நான் என்ற நானாகவே மாறுகின்றன 

நான் என்ற என்னால் 
சுயமாக இயங்க முடியவில்லை 
நான் என்ற என்னால் 
எதையும் தீர்மானிக்க முடியவில்லை 

நான் என்ற என்னை இயக்குபவர்கள் 
எல்லாம் தெரிந்தவராக இருக்கின்றனர் 
கிழிக்கப்பட்ட என்னை 
நானே அறிந்திடாத அளவுக்குப் பதப்படுத்துகின்றனர் 
ஒரு புன்னகையினூடே 
எல்லாத்தையும் சாதிக்கின்றனர் 

நான் என்ற என்னை ஆள்பவர்களுக்கு 
ஒன்று மட்டும் தெரியவில்லை 
அவர்களுக்கு யோகியை 
தெரிந்திருக்கவில்லை.

உலக சினிமா என்றாலே பலரும் தமிழ் சினிமாச் சூழலில் நினைத்துக்கொள்வது அது ஈரானிய சினிமா தான். உண்மையில் உலக சினிமா என்பது நம்மூர் சினிமாவாகவும் இருக்க முடியும். சமூக மாற்றத்திற்கான விதையை தூவிச் செல்லும் தரமான படங்கள் யாவும் உலக சினிமாக்களே!. அதேபோல, அவ்வகையான சினிமாக்கள் என்றதுமே, குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள் என்றொரு தோற்றமும் நம்மிடையே உள்ளது. உண்மை அதுவல்ல; பெரும் முதலீட்டிலும் உலக சினிமாக்கள் எடுக்கப்படுவது உண்டு. 

ஒவ்வொரு படமும் எந்த அளவுக்கு மக்களின் வாழ்வை பிரதிபலிக்கிறது என்பதை பொருத்தே அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உலக சினிமாக்களின் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு சார்ந்த பிரச்சினைகளே அதிகமாக அலசப்படுகின்றன. மேலும், இன்றைய உலகமயமாக்கலால் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களும் கதைக் கருக்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்ற. இவை எல்லாவற்றையும் தாண்டி பெண்களின் உலகை படம் பிடிப்பதில், அண்மைக் கால சினிமாக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன!

பெண்களின் உலகை புரிந்துகொள்வது, அவர்களின் மனதை அறிவது என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவர்களின் அக உலகம் என்னவிதமாய் இயங்குகிறது என்பதும், எதை நோக்கி அவர்களது வாழ்வு செல்கிறது என்பதும் இன்று விவாதங்களுக்கு உட்பட்டிருக்கின்றன. பொருளாதார மாற்றங்களால், வீட்டிலிருந்து வெளியேறி பெண்களும் ஆணுக்கு நிகராய் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டனர். இதனால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் உருவான வாழ்க்கையும் இன்றைய உலக சினிமா ஆர்வலர்களுக்கு மிகச் சரியான கதைக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவேதான், உலகத் திரைப்பட விழாக்களில் அதிகமாக, பெண்களை மையமாக வைத்து உருவான படங்களின் வருகை என்பது கூடிக்கொண்டே போகிறது!

உண்மையில், பெண்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? அவர்களின் வாழ்வியல் சூழல் என்னவிதமாக இயங்கிக்கொண்டிருக்கிறது? இப்படியான நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஈரானில் தான் அதிகமான படங்கள் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளின் உலகத்தில் நிகழும் சின்ன சின்ன மாற்றங்கள், அவர்களின் ஆசைகள், விருப்பங்கள், ஏக்கங்களையும் பதிவு செய்ததில் ஈரானிய சினிமாக்களே முன்னோடியாக இருக்கின்றன. அத்தகைய சினிமாக்கள் அங்கே உருவாகக் காரணம், அந்த நாட்டில் உள்ள கடுமையான சட்டங்களும் விதிகளும் தான்!

அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்களைப் போலவோ அல்லது நம்மூர் சினிமாக்கள் மாதிரியோ அங்கே, படங்களை உருவாக்கி விட முடியாது.  அப்படியே எடுத்துவிட்டால், கடுமையான தண்டனையில் இருந்து அந்த இயக்குநர் தப்ப முடியாது. சில நேரங்களில் உயிரிழப்பு கூட, அவருக்கு நேரிடலாம். இப்படியாக உள்ள ஈரான் நாட்டில்தான் கவித்துமான படங்கள் உருவாகிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? வேறு வழியே இல்லை, நீங்கள் நம்பத்தான் வேண்டும்!

ஈரானிய சினிமாக்களின் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், முதலில் நீங்கள் 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தில் இருந்து துவங்க வேண்டும். பிறகு, நீங்களும் ஈரானிய சினிமாக்களை புகழ்பாடும் நபராக மாறிவிடுவீர்கள். காரணம், நம்மூர் படங்கள் பலவற்றில் காணக் கிடைக்காத அழுத்தமான பாத்திரங்களும், அவர்களது வலி நிறைந்த வாழ்க்கையும், அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதம்தான். மேலும், அந்த ஊருக்கே உரிய கட்டுப்பாடுகளை அவர்கள் எப்படி பகடியாக எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான்!

மேற்கண்டவற்றை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல முடியுமா? என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளார் ஈரானிய இயக்குநர் ஜாபர் அனாகி. அதற்காக அவர் எடுத்துக்கொண்டது ஒரேயொரு டாக்ஸியைத்தான். என்னது? ஒரு டாக்ஸியை வைத்துக்கொண்டு இவ்வளவு பிரச்சினைகளையும் எப்படி சொல்ல முடியும்? என்றுதானே உங்களது புருவங்கள் ஆச்சர்யத்தில் உயருகிறது!. ஆமாம். 'டாக்ஸி' படத்தின் சிறப்பே அதுதான்.


ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரான் மாகாணத்தில் வாடகை டாக்ஸி ஓட்டுநர் ஜாபர் அனாகி (கதையில் காரும் அவரும் ஒரு பாத்திரமாகவே வருகிறார்கள்).நகரத்தின் ஓரிடத்தில் தொடங்கி, மற்றொரு எல்லைக்கு அவர் சென்று சேருகிறார். இதற்கு இடையே அந்தக் காரில் ஏறும் வெவ்வேறு பெண்களைக் கொண்டே, அந்த நாட்டில் நிலவும் வறுமை,  பாகுபாடு, கட்டுப்பாடுகள், விதி மீறல்கள், யதார்த்த நிலை என பலவற்றை தொட்டுச் செல்கிறார். குறிப்பாக, அந்த நாட்டில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள பெண்களின் நிலையை பற்றி, பெண்களே உரையாடுவதின் வழியே, உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறார். சமூகத்தில் போலி முகத்தை தோலுரிப்பதில் பெண்களே எப்போதும் முதலில் இருக்கின்றனர் என்பதை 'டாக்ஸி' பார்க்கும் யாவரும் உணர முடியும். 

அதற்கு இரண்டு உதாரணங்களை படத்தில் அடிக்கோடிட்டு காட்ட முடியும். விபத்தில் சிக்கிய தன் கணவனை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என கூறி, கணவனோடு, அந்தப் பெண்ணும் வருகிறாள். டாக்ஸி நகரத் தொடங்கியதும், அவள் அவனுடைய நிலைமையை தன்னுடைய அலைபேசியில் பதிவு செய்தபடியே வருகிறாள். ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், நான் மறுமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்கிறாள். கணவனோ, "இல்லை. இறந்தாலும், நீ என் நினைவாகவே இருக்க வேண்டும்" என்று கூறுகிறான். இதன்வழியே தொடர்ந்து பெண்கள் மீது ஆண்களின் ஆதிக்கம் என்பதும் அவர்களின் இறப்புக்கு பின்னும் தொடருகிறது என்பதை நம் பின்மண்டையில் அடித்து சொல்கிறார் இயக்குநர் ஜாபர் அனாகி!
படத்தில் பள்ளிச் சிறுமி (ஹெனா சைதி) ஒருத்தி, கையில் சின்ன கேமிரா ஒன்றுடன் ஏறுகிறாள். அப்போது, டாக்ஸி ஓட்டுநரான ஜாபர் அனாகி, கேமிராவை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய்? என்று கேட்கிறார். சினிமா எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று அந்தக் குழந்தையிடம் இருந்து பதில் வருகிறது. பிறகு, அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதன் வழியே, அந்த நாட்டில் படங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும், அந்த ஊரிலும் கூட திரைப்பட விநியோகம் என்பது புதுமுக இயக்குநர்களுக்கு எட்டாக் கனிதான் என்பதும் நமக்கு உணர்த்தப்படுகிறது. 

இப்படி காருக்குள்ளே நடக்கும் சம்பவங்களை தனக்கு முன்னால் உள்ள ஒரு கேமிராவையும் காருக்கு முன்னால் கேமிராவையும் கொண்டு முழுக்க படம் பிடித்துள்ளார் இயக்குநர். படத்தின் சிறப்புகளில் அதுவும் ஒன்று!. எந்தப் பாத்திரம் பேசுகிறதோ, அதைநோக்கி காரை ஓட்டிக்கொண்டே அவரே திருப்புகிறார். சினிமாட்டோகிராபியின் விதிகளை மீறுவதன் வழியே புதிய யதார்த்தத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். இதுதான் உலகம் முழுக்க உள்ள திரை ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்த அம்சம். ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமெனில், பெரும் பொருட்செலவும் திட்டமிடலும் அவசியம் என்கிற சூழலில், அவற்றை தனது டாக்ஸி படம் மூலமாக இயக்குநர் ஒரே தாவலில் தாண்டி விட்டார்!

2015 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் 82 நிமிடங்கள் ஓடக் கூடியது. பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது 'டாக்ஸி'. ஆனால், இந்தப் படத்தில் நாட்டை விமர்சித்ததற்காக இயக்குநர் ஜாபர் அனாகி படம் எடுக்கவும், பயணிக்கவும் தடை விதித்தது அந்நாட்டு அரசு. ஆகவே, அவரது சார்பாக படத்தில் நடித்த ஹெனா சைதியே படத்துக்கான விருதை பெற்றார். இந்தச் சிறுமி வேறு யாருமில்லை; ஜாபர் அனாகியின் மகள்தான்!