முடமாகிறதா ஊடக தர்மம்?

ரு நாட்டின் முதுகெலும்பு ஊடகம் தான் என்று சொல்லும் அளவிற்கு ஊடகங்கள் சக்திவாய்ந்தவைகளாக உருவெடுத்து நிற்கின்றன. அரசு இயந்திரம் சரியாக இயங்க அங்கே சரியான ஊடகம் தேவை. அறத்தைப் பேணி மக்களின் நலனைக் கருதி உண்மையை உறக்கக் கூறும் ஊடகங்கள் காணாமல் போகின்றனவோ? இனக்கலவரம், மதக்கலவரம், வதந்திகள் என இன்று வலம் வந்துக்கொண்டிருக்கின்றன சில ஊடகங்கள்.

அன்றைய நாட்களில் நாளேடுகளில் வெளிவந்த செய்திகள் போரை நிறுத்தியது. மனிதநேயத்தை வளர்த்தது. ஆனால் இன்றோ, தன்னை முன்னிலை நாளிதழ்களாகவும், பத்திரிகைகளாகவும், தொலைக்காட்சிகளாகவும் கூறிக் கொள்ளும் ஊடகங்களின் போக்கு கீழ்த்தரமாக உள்ளது.

பெண்களை அவர்களுக்குத் தெரியாமலேயே படம் பிடித்து போடுவது. அதிகமாக பிரதிகள் விலைபோக கேவலமான உத்திகளைக் கையாண்டு தலைப்பினை வைப்பது என பாதாளத்தை நோக்கி பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது ஊடகம்.

இதில் இவர்கள் எல்லாம் சினிமாத்துறைப் பற்றி கேலிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. காந்தி ஒருமுறை சொன்னாராம். ‘உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் சிறிதாவது பயன்படுமா, நன்மை பயக்குமா என்று யோசித்துப் பார்’.

ஊடக தர்மம் முடமாகும் முன் இந்த ஊடகங்கள் இதை யோசித்துப் பார்க்கட்டும்!.கிராபியென் ப்ளாக்

“என்னப்பா... நம்மூரிலும் பிளாஸ்டிக் அரிசி நுழைஞ்சிடுச்சாமே... ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி... கடைசில மனுஷன கடிச்ச கதையாயிருக்கே...” பேருந்தில் பயணிக்கும்போது பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு வயதான மூதாட்டியிடம் இருந்து வந்த புலம்பல் இது. ஆமாம், இப்போது இந்தியாவின் வைரல் டாபிக் அதுதான். அயனாவரம் பேருந்து நிலையம் தொடங்கி அரியலூர் பஸ் ஸ்டாண்டு வரை இதே பேச்சு தான். காரணம், ரொம்ப சிம்பிள். தமிழக மக்களின் அடிப்படை ஆதார உணவான அரிசி மீதே பயங்கரவாத போர் தொடுக்கப்பட்டிருப்பதுதான்!.

முன்னரே பிளாஸ்டிக் முட்டை, முட்டைகோஸ் என அரசல்புரசலாக சமூக வலைதளங்களில் விவாதித்துக்கொண்டிருந்த மேட்டர் தான் என்றாலும், அதற்கெல்லாம் பெரிசாக அலட்டிக்கொள்ளாத சமூகம், அரிசி விஷயத்தில் அலர்ட்டாகிவிட்டது!

தஞ்சை நெற்களஞ்சியம்

தமிழகத்துக்கு என்று பல சிறப்புகள் உண்டு. அவற்றில் முக்கியமானது, தஞ்சை நெற்களஞ்சியம். “உலகுக்கே சோறு போடும் தஞ்சை...!” என்றால் அது மிகையில்லை. அப்படியாக எப்போதும் குளிர்ந்து காணப்படும் தஞ்சாவூரில் இருந்துதான் சுமார் எழுபது சதவிகித நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி உள்ள 30 சதவீதத்தை பிற மாநிலங்களில் தான் உற்பத்தி செய்கிறோம். அப்படியாக இந்தியாவிலேயே அதிகமான நெல்லை விளைவிக்கும் மாநிலத்துக்கு உள்ளே பிளாஸ்டிக் அரிசி நுழைந்துவிட்டது என்றால், சும்மா இருக்குமா மாநில அரசு? விடுவார்களா நெற்பயிர் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள்? விளைவு, தமிழகம் முழுவதும் உள்ள அரிசி ஆலைகளில் அதிரடி ரெய்டுகள், விசாரணைகள் ஆய்வுகள். பரபரப்பாயினர் மக்கள். விழித்துக்கொண்டனர் விவசாயிகள்!.

பிளாஸ்டிக் அரிசி

உண்மையிலேயே பிளாஸ்டிக் அரிசி குறித்த விழிப்புணர்வு நம்மிடம் ஏற்பட்டுவிட்டதா? என்றால், “இல்லை” என்பதே நேர்மையான பதில். ஆனால், பலருக்கும் அதுகுறித்து கேள்விகள் முளைக்கத்தொடங்கி விட்டன. குட்டை குழம்பிவிட்டால் மீன் பிடித்தல் எளிதுதானே. இப்போது பிளாஸ்டிக் குறித்த தேடல்கள் அதிகமாகி விட்டன. கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தையாக இப்போது மாறியுள்ளது பிளாஸ்டிக் ரைஸ்!. நாமும் அலசினோம். வந்து விழுந்த பதில் இதுதான். ரெஸின் எனும் ரசாயன மூலப்பொருளிலிருந்துதான் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரசாயனத்தை உருவாக்கி, பிளாஸ்டிக் அரிசி என்ன?. தேவைப்பட்டால்... பிளாஸ்டிக் கோதுமை, ரவை, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு...

என நீங்கள் எந்த வடிவத்திலான பொருளையும் உருவாக்கலாம். தற்போதைய எல்லையற்ற பெரு வணிகம் இதுதான். அதன்மீதுதான் விழுந்துள்ளது அதிரடியான கிடுக்குப்பிடி!

ஆதாரவேர் சீனாவில்!

சில வருடங்களுக்கு முன் சீனாவில் பரபரப்பான ஊழல் ஒன்று, உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்க வைத்தது. யூகிக்க முடிகிறதா உங்களால்? யெஸ். உங்கள் கணிப்பு மிகச் சரியே. அரிசியில் தான். அப்போது, மற்றொரு விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. அது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக விரும்பி உண்ணும் நூடுல்ஸில் பிளாஸ்டிக். இது புதுசா இருக்கே? என புருவம் உயர்த்தாதீர்கள்.


அந்த நூடுல்ஸில் கலக்கப்பட்ட ரசாயனப் பொருள்தான் ரெஸின். இப்போது இதுதான் றெக்கைக் கட்டி பறந்து வந்து இந்தியாவில் நுழைந்திருக்கிறது. அதை முறியடிக்க வேண்டாமா நாம்?

சிக்கியது இங்கேதான்!

கர்நாடகா, தெலுங்கானாவில்தான் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை குறித்த அலாரம் முதலில் அடித்தது. அங்குள்ள மக்கள் சுறுசுறுப்பாகினர். ஐ.டி. இளைஞர்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் சும்மா விடுவார்களா? தெறிக்க விட்டனர். விளைவு, அரசே களத்தில் இறங்கி, துரிதமாக வேட்டையை ஆரம்பித்தது. அந்த வேட்டையில் சிக்கியது எல்லாம் மூட்டை கணக்கில். விழிபிதுங்கி மட்டும் நிற்கவில்லை; அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டனர் அதிகாரிகள்!. செய்திகள் காட்டுத் தீயாய் இல்லை சுனாமி வேகத்தில் வைரலானது பிளாஸ்டிக் ரைஸ்!

அரசு உத்தரவு!

சோஷியல் மீடியாவின் பலமே அது நாம் நினைக்கும் நேரத்திற்கு முன்னதாக நினைத்தவரை சென்று சேர்ந்திருக்கும் என்பதுதான். அது பிளாஸ்டிக் ரைஸ் விஷயத்திலும் நடந்தேறியது. அதிகம் பேர் விவாதிக்கும் விஷயமாக, டிரெண்டிங்கில் வந்து நின்றது அரிசி டாபிக். பொங்கிவிட்டனர் சமூக ஆர்வலர்கள். மேலும் சூடானது தமிழக அரசு. அதிரடியான உத்தரவுகளால், நாலா திசையிலும் பறந்தனர் உணவு தர நிர்ணய கட்டுப்பாட்டு அதிகாரிகள். குறுக்கும் நெடுக்குமாக நீட்டப்பட்ட மீடியா மைக்குகளுக்கு முன்னால் திணறியது உணவு பாதுகாப்பு துறை.

துரிதமாக நடந்த விசாரணையின் முடிவில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் அப்படியான கலப்படங்கள் எதுவும் நடைபெறவில்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து “மேட்டரை ஆஃப்” செய்தார்கள். ‘சமூக வலைதள வாசிகளின் வேண்டாத வேலை’ எனவும் குற்றம் சாட்டினர். ஆனாலும், நிற்கவில்லை விவாதம். தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினரே கூட்டாக பேட்டி அளித்தனர். “பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வது காசு அதிகம் செலவாகும் விஷயம். அதற்கு பேசாமல் அரிசியையே உற்பத்தி செய்துவிடலாம்” என்றனர். மேலும், “அரிசி எங்களின் அரசி. அவளுக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம். காத்து நிற்றலே எம் கடமை ” என சத்தியம் செய்தனர். பிறகே, அரிசி விஷயத்தில் பொதுமக்கள் கொஞ்சம் ஆசுவாசமாயினர்.

அச்சத்தை தவிர்ப்போம்!

“சரி, பிளாஸ்டிக் அரிசி இப்போது நம் ஊருக்குள் எட்டிப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால், வராமல் போய்விடுமா?” என்றொரு பேச்சும் எதிர்திசையில் இருந்து வரவே செய்கிறது. இதை எப்படி நாம் எதிர்கொள்ளலாம்?. இதுபோன்ற பொருட்கள் நேரடியாக சிறு வணிகர்களின் வழி வருவதில்லை. எல்லாம் பெருவணிகர்களின் வழியே ஊடுறுவும் என்பதை நாம் கொஞ்சம் விழிதிறந்து பார்க்க வேண்டும். நமது ஏரியாவில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்றால், முதலில் நம்மை வரவேற்பது முன்னால் திறந்த நிலையில் இருக்கும், விதவிதமான அரிசி மூட்டைகள் தான். ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் அப்படி காண இயலாது. அதற்காக சூப்பர் மார்க்கெட்டுகளே மோசம் என்ற அச்சமும் அவசியமில்லை. எந்தப் பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு, கார்டை தேய்க்காமல் அதை கொஞ்சம் ஆய்வு செய்து பெறுவது நமக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே நலம் பயக்கும்!


கிராபியென் ப்ளாக்

v. c. சந்தோஷ் , க . விக்னேஷ்

மிழ் சினிமாவில் அபூர்வமாகவே ஒளிப்பதிவாளர்கள் வேறு சில துறைகளிலும் ஜொலிப்பது உண்டு. அப்படியான அபூர்வ ராகம் ஒளிப்பதிவாளர் செழியன். நவீன யதார்த்த சினிமா தமிழில் உருவாக காரணமானவர்களில் முக்கியமானவர். அவருடைய உலக சினிமா படைப்பு எப்போதும் நின்று பேசும். கவித்துமான ஒளிமொழியால் தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு உயிரூட்டியவர். நம்மிடம் மனம் திறந்தபோது...!

“ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் பள்ளி, கல்லூரி பருவம் என்பது மறக்க முடியாதது. அது ஒரு சந்தோஷமான, வசந்தமான காலம். அப்படி என்னுடைய சினிமா கேரியர்ல பொற்காலமா எதை நினைக்கிறேன்னா அது குருநாதர் பி.சி.ஸ்ரீராம் சாரோட இருந்த ஐந்து வருடங்கள் தான்.

படிக்கும்போதே ஒளிப்பதிவாளராக ஆகணும்கிற ஆசை எனக்குள்ளே இருந்தது. அதற்காக நிறைய புகைப்படங்களையெல்லாம் எடுத்தேன். அதைப் பார்த்த என்னோட நண்பர்கள், “நீ பி.சி. ஸ்ரீராம் சாரை போய்ப் பாரு...”ன்னு சொன்னாங்க. எனக்கு அவரை பார்ப்பது நோக்கமாக இருந்தாலும், எப்படி அவரை அணுகுவது என்கிற தயக்கம் இருந்தது!

பிறகு, ஒருவழியாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடைய தகுதியாக நினைத்தது, நான் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தை தான். அதை பி.சி.ஸ்ரீராம் சாரிடம் காட்டியபோது, அதைப் பார்த்துவிட்டு, “இதெல்லாம் ஒண்ணுமில்ல. சினிமாட்டோகிராபி என்பது வேற...” என்று சொன்னார்.

அதுவரை இதுதான் நாம் என்று நினைத்துக்கொண்டிருந்த என் பிம்பம் உடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அப்படிதான் அவர் சொன்னபோது உணர்ந்தேன். அதன்பின் “சினிமாட்டோகிராபி கற்கலாம் வா..” என சொல்லி, என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ஊரிலிருந்து கிளம்பி நகரத்துக்கு வந்த ஒருத்தன் முதன்முதலாக ஷுட்டிங் பார்த்தால் எப்படி பரவசப்படுவானோ அப்படியாக முதல் நாள் ‘முகவரி’ படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தேன். அந்த இடமே மிகவும் பரபரப்பாக இருந்தது. பி.சி. சார் அழைத்து, “என் பக்கத்திலேயே இருங்க... உங்களை சுற்றி என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க...” என்றார். “முதல் பத்து நாளைக்கு கேமிராக்கு முன்னாடி நீங்க போகவே கூடாது...” என்று கண்டிஷனும் போட்டார். சரி சார் என்று சொல்லிவிட்டு அவர் பக்கத்திலேயே நின்றுகொண்டேன்.

ஆனாலும் ஸ்பாட்டில் “இதை எடுங்க அதை எடுங்க...” என்று சொல்லும்போது, நம்மால் கையை கட்டிக்கொண்டு ச்சும்மா இருக்க முடியாது இல்லையா? ஆனால், சார் சொல்லிட்டாரே என்பதற்காக என்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். மதிய உணவு இடைவேளையின்போது பி.சி.சார் ஒரு அறையில் இருந்தார். அப்போது மற்றொரு உதவியாளரிடம் “செழியனை கூப்பிடுங்க...” என்றதும், அடுத்த நிமிஷம் அவர் முன்னால் ஆஜரானேன். “மதியம் ஒரு ஷாட் இருக்கு. ஆர்ட்டிஸ்ட் ஏழு பேரு வரிசையா நிற்பாங்க. கேமிரா அஸிஸ்டெண்ட்டிடம் சொல்லி, ஷாட் ரெடி பண்ணிட்டு என்னை கூப்பிடுங்க...” என்றதும், நான் ஜெர்க்காகி விட்டேன். அது முதல் நாள் படப்பிடிப்பு. அப்போதுதான் நான் முதன்முதலாக பிலிம் கேமிராவையே பார்க்கிறேன். இது ஏதோ ஒரு விளையாட்டு மாதிரி தெரிகிறதே?ன்னு பலவாறாக மனசுக்குள் வார்த்தைகள் ஓடியது.

ஆனாலும் மாஸ்டர் சொல்லிட்டார் என்பதால், கேமிரா அஸிஸ்டெண்ட்ஸை கூப்பிட்டு சொன்னதும் அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். ஏன்னா அந்தப் படத்தில் நான் ஒரு அப்ரண்டீஸ். “சார் சொன்னார்...” என்றதும் அவர் ஒ.கே. என்பது போல தலையாட்டிவிட்டு கேமிராவை கொண்டுவந்து ஒரு அறைக்குள் வைத்தார். அந்த கேமிராவில் 50 எம்.எம். லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. அந்த அறை சுமார் ஒரு பத்தடிக்கு பத்தடிதான் இருக்கும். அந்த அறையில் ஒரு பதினைந்து பேர் நின்றார்கள் என்றால் நீங்கள் ஒரு பதினைந்து அடியாவது பின்னால் போகணும். சுற்றிமுற்றும் பார்த்தேன். ஒரு அறை பூட்டியிருந்ததை கவனித்தேன்.


அடிப்படையில் எனக்கு லென்ஸ் பற்றி ஒரு புரிதல் இருந்தது. வைட், க்ளோஸ் என்றால் என்னவென்று தெரிந்து வைத்திருந்தேன். எனவே கேமிரா அஸிஸ்டென்டிடம் சொல்லி, “24 எம் எம்” லென்ஸை மாட்டச் சொன்னேன். பூட்டப்பட்டிருந்த அறையை திறக்க சொன்னால், அந்த வீட்டினுடைய ஹவுஸ் ஓனர் முடியாது என முரண்டு பிடித்தார்.

கேமிராவை அங்கே வைக்கவும் இல்லை. அது பி.சி.சார் எனக்கு வைத்த ஒரு பரீட்சை, டெஸ்ட் அவ்வளவுதான். அப்போது ஒன்றை புரிந்து கொண்டேன். ஒரு மாஸ்டர் செய்வது என்னவென்றால் ஒரு கதவை திறக்க வைப்பதுதான். ஒரு ஜன்னலை திறந்து விடுவதுதான். இதுதான் உனக்கான இடம் என்று வழிகாட்டுவது தான்!”

- சிலிர்ப்போடு முடித்தார் செழியன். அவர் பேச்சில் நெகிழ்ந்துவிட்டோம் நாங்கள்!

அவரிடம் கெஞ்சி அந்த அறையை திறந்தேன். இப்போது கேமிராவை அந்த அறையில் கொண்டு போய் வைத்து, வியூபைன்டர் வழியே பார்த்தால் காட்சி கச்சிதமாக இருந்தது. பின்னர் ஓடிப்போய் மாஸ்டரிடம், “சார் வைச்சிட்டேன் சார்...” என்றேன். நிமிர்ந்து பார்ததுவிட்டு எழுந்தவர் என் தோளில் மெதுவாக ரெண்டு தட்டு தட்டினார். அது ஒரு அப்ரிசேஷியன். அன்று அந்த ஷாட்டை அவர் எடுக்கவில்லை.


கிராபியென் ப்ளாக்

சார்பெழுத்துகளில்களில் நாம் ஏறத்தாழ அனைத்தையும் கற்றுவிட்டோம். கடந்த பகுதியில் உயிரளபெடையைப் பற்றிப் பார்த்தோம். இப்போது அளபெடைகளில் மீதமுள்ள இன்னொரு வகைமையான ஒற்றளபெடையைப் பற்றிக் கற்கப் போகிறோம்.


அளபு எடுப்பது என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து நீட்டித்துக்கொண்டு ஒலிப்பது. ஒலிப்பளவு எடுப்பாய் ஒலிப்பது. அதுதான் அளபெடுப்பது. உயிரெழுத்துகளின் அளபோசைகளையும் அவற்றின் வகைமைகளையும் உயிரளபெடையில் பார்த்தோம். இப்போது ஒற்றளபெடையைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். அதென்ன ஒற்றளபெடை ?

பெயரிலேயே விளக்கம் இருக்கிறது. நம் தமிழ் இலக்கணப் பெயர்கள் பலவும் தம்மளவிலேயே விரித்து விளக்கம் பெற்றுக்கொள்ளும்படியே அமைந்திருக்கின்றன. ஒற்றளபெடை. ஒற்று அளபு எடை. ஒற்று எழுத்துகள் தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து எடை கூடி ஒலிப்பது. ஒற்று எழுத்துகள் எனப்படுபவை மெய்யெழுத்துகள். மெய்யெழுத்துகள் தமக்குரிய ஒலியளவில் கூடி ஒலிக்கின்ற.


எப்படி ஒற்றெழுத்து ஒலிப்பு கூடி ஒலிக்கிறது ? பேசுகையில் அவ்வாறு எங்கேனும் ஆள்கின்றோமா ? பிறந்தவுடனேயே நாம் ஒற்றளபெடையைப் பயன்படுத்தினோம் என்றால் நம்புவீர்களா ? ஆம். குழந்தை பிறந்தவுடன் பேசிய முதல் சொல்லிலேயே ஒற்றளபெடை அமைந்திருந்தது.


குழந்தை பிறந்ததும் என்ன சொல்லைப் பேசத் தொடங்கியது ? அம்மா என்ற சொல்லைக் கூறத் தொடங்கியது. அம்ம்மா என்று சொன்னது. நாம் அதை அம்மா என்று சொல்வதாக விளங்கிக்கொள்கிறோம். நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள். குழந்தை எழுப்பிய முதல் ஒலிப்பு உயிரெழுத்தில் தொடங்கி வழமைக்குக் கூடுதலாக மெய்யெழுத்தில் நின்று ஒலித்து முடிந்தது. அம்ம்மா என்று ஆகிறது. இங்கே ம் என்ற ஒற்றெழுத்து ஒருமுறைதான் வருகிறது. அம்மா என்ற சொல்லுக்கு நடுவெழுத்து ம் என்னும் ஒரே மெய்தான். ஆனால், குழந்தை அம்ம்மா என்று இரண்டு மெய்யெழுத்துகளுக்குரிய ஒலிப்பைச் சொல்லிவிடுகிறது. அஃதாவது ம் என்ற ஒற்றெழுத்தின் ஒலிப்பளவைக் கூட்டி ஒலிக்கிறது. இதுதான் ஒற்றளபெடை. சொல்லிடையிலும் கடைசியிலும் இடம்பெறும் ஒற்றெழுத்துகள் தமக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து கூடுதலாய் ஒரு மாத்திரையளவில் ஒலிப்பது.

பொதுவாக, நாம் பேசுகையில் ஏதேனும் ஓர் உணர்ச்சி மேலீட்டால் ஒற்று ஓசைகளை அழுத்தி அளபெடுத்துத்தான் கூறுகிறோம். “உனக்கு எம்ம்மேல அன்ன்பே இல்ல்ல தெரியுமா…?” என்றுதான் காதலி கைப்பேசியில் கொஞ்சுகிறாள்.

“விட்டுடு… எல்ல்லாத்தையும் விட்டுடு…” என்றுதான் திரைப்பட நாயகன் கத்துகிறான். ஆக, நம் அன்றாடப் பேச்சுகளில் ஒற்றெழுத்து ஒலிகளை உணர்ச்சிக்கேற்பக் கூட்டியே கூறுகிறோம் என்பது தெளிவு.

பேசுவதற்கே இத்தனை கூட்டல்கள் இருக்கையில் இசையொழுங்குடைய செய்யுள்களில் கேட்கவா வேண்டும் ? இசையளவு கருதி ஒற்றெழுத்துகள் செய்யுள்களில் அளபெடுத்து வருகின்றன. ஒற்றளபெடை என்னும் நம் மொழி இலக்கணச் செப்பம் செய்யுள்களுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உணர்த்தத்தான் நம் பயன்பாட்டில் இருக்கும் பேச்சு வகைகளை எடுத்துக்காட்டுகளாய்க் கூறினேன். ஆனால், இலக்கணத்தில் இக்கூறுகள் செய்யுள்களை மேற்கோள் காட்டியே விளக்குகின்றன.

அதனால் இவையெல்லாம் செய்யுள்களுக்கே உரிய அழகுகள் என்று ஒதுக்கிவிடாமல் நம் பேச்சு வழக்கிலும் பயன்பாட்டிலும் நம்மையே அறியாமல் வழங்கி வருகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒற்றெழுத்து அளபெடுக்கும் என்றால் எங்கெங்கே அளபெடுக்கும் ? என்னென்ன எழுத்துகள் அவ்வாறு அளபெடுக்கும் ? இதிலும் தெளிவான இலக்கணக் கூற்றுகள் இருக்கின்றன.

சொல்லுக்கு முதலெழுத்துகளாக மெய்யெழுத்துகள் தோன்ற மாட்டா என்பதை அறிவோம். அதனால் சொல்லுக்கு முதலெழுத்தாக ஒற்றெழுத்துகள் அளபெடுத்து வரமாட்டா. சொல்லுக்கு நடுவிலும் சொல்லுக்குக் கடைசியிலும் மெய்யெழுத்துகள் வருகின்றன.


அதனால் சொல்லுக்கு நடுவிலும் சொல்லுக்குக் கடைசியிலும் மெய்யெழுத்துகள் அளபெடுத்துத் தோன்றும். எல்லா ஒற்றெழுத்துகளும் அளபெடுத்துத் தோன்றுமா ? பதினெட்டு மெய்யெழுத்துகளும் அளபெடுக்க வல்லனவா ? இல்லை. வல்லின எழுத்துகளை இழுத்துக் கூற இயலாது. ம்ம்ம்ம்ம்ம் என்று வெகுநேரம் சொல்லிக்கொண்டிருக்கலாம். க்க்க்க்க்க் என்று சொல்லவே முடியாது. க் என்று முதல் எழுத்தைச் சொல்கையிலேயே ஒலிப்பு அடங்கிவிடும். அவ்வாறிருக்கையில் வல்லின மெய்கள் அளபெடுக்க வழியேயில்லை. அவற்றின் ஒலிப்பு இயற்கை அழுத்திச் சொல்லி நிறுத்துவதோடு தொடர்புடையதாய் இருப்பதால் வல்லின மெய்கள் அளபெடுப்பதில்லை.

அவற்றைத் தவிர ர் என்ற மெய்யும் அளபெடுப்பதில்லை. ர்ர்ர் என்று சொல்வது விலங்கின் உறுமல்போல் இருப்பதுபோலோ என்னவோ தெரியவில்லை, ர் என்ற மெய்யின் அளபை நம் இலக்கணம் ஏற்கவில்லை. அளபெடுக்க வலித்து ஒலிக்கும்போது வல்லின ‘ற’கர ஓசை ஆகிவிடுவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்து தமிழின் தனிச்சிறப்பான ‘ழ’கர மெய்யும் அளபெடுப்பதில்லை. ழ் என்று தொடர்ந்து சொல்வது இயற்கையான தன்மையாய் இல்லை. வாய்கொப்பளிப்பது போன்ற தெளிவில்லாத ஓசையே கிடைக்கிறது. ழ் என்ற மெய்யை ஒலிப்பதே எழுத்திலா இசையாய் முடிவதையும் காணலாம்.

இக்காரணங்களால் இவ்விரு மெய்யெழுத்துகளும் அளபெடுப்பதில்லை. ஆக, மெய்யெழுத்துகள் பதினெட்டில் வல்லின மெய்கள் ஆறும் ரகர ழகர மெய்கள் இரண்டும் கழிய மீதமுள்ள பத்து மெய்யெழுத்துகளும் அளபெடுத்துத் தோன்றும் என்பதை விளங்கிக்கொள்கிறோம். இவற்றோடு ஆய்த எழுத்தான ஃ என்ற எழுத்தும் அளபெடுத்துத் தோன்றும். ஒற்றளபெடையாய்த் தோன்ற வல்ல மெய்யெழுத்துகள் “ஙஞண நமன வயலள” ஆகியவற்றின் மெய்யெழுத்துகளும் ஆய்தமுமே.

சொல்லின் எல்லா நிலைமைகளிலும் இவை அளபெடுத்துத் தோன்றுமா ? குறிலை எடுத்தும் குறிலிணை எழுத்துகளை அடுத்தும் ஒற்றளபெடுக்கும். நெடிலை அடுத்து ஒற்றளபெடை இல்லை. நெடிலை அடுத்து வரும் ஒற்றெழுத்தை அளபெடுத்துக் கூறுவது மிகவும் கடினம். எடுத்துக்காட்டாக, நாள் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். நெடிலை அடுத்து ள் என்ற ஒற்றெழுத்து வந்திருக்கிறது. இதை நாள்ள் என்று சொல்ல முடியுமா ? முடியவில்லை. அளபெடுத்துச் சொல்ல முயன்றால் நெடிலில் உயிரளபெடையைத்தான் கூற முடிகிறது. நாஅள் என்பதுதான் இயல்கிறது. நாள்ள் என்று கூற முயல்வது நாஇள் என்பதைப்போல் தனித்து ஒலிக்கிறது. அதனால் நெடிலை அடுத்து வரும் மெய்க்கு ஒற்றளபெடை இல்லை என்பதைக் கருத்தில் கொள்வோம்.

“கண் கருவிளை கார்முல்லை கூரெயிறுபொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூமின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலாள்என்ன் பிறமகளா மாறு”

மேற்கண்ட செய்யுளில் மொழியீற்றில் குறிற்கீழ் ஒற்றெழுத்துகள் அளபெடுத்துத் தோன்றியுள்ளன. ஒற்றெழுத்து ஓசை கூடி ஒலிக்கிறது என்பதை அவ்வொற்றெழுத்தை இருமுறை எழுதுவதன் வழியாக உணர்த்துகிறோம்.

ஒற்றளபெடையை விளக்கும் நன்னூலின் தொண்ணூற்றிரண்டாம் வாய்பாடு இஃது :

ஙஞண நமன வயலள வாய்தம்அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடைமிகலே அவற்றின் குறியாம் வேறே.

இதன் பொருளைத்தான் நாம் இதுவரை விரிந்த கட்டுரையாகப் படித்தோம். “ஙஞண நமன் வயலள ஆய்தம் ஆகியன அளபாகும். குறிலிணையிலோ குறிலை அடுத்தோ சொல்லின் இடையிலும் கடையிலும் ஓசை மிகும். அவற்றை வேறொரு ஒற்றெழுத்தைக் கொண்டு எழுதிக் குறிக்க வேண்டும்.”

பவித்ரா

v. c. சந்தோஷ்

‘அஞ்சலி’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி, ‘மே மாதம்’, ‘சதிலீலாவதி’ போன்ற திரைப்படங்களில் குறும்பு செய்யும் துருதுரு பையனாக நடித்து, நம்மை ஈர்த்த அந்த ஆனந்த் பையனை ஞாபகமிருக்கிறதா? அந்தப் பையன்தான் இப்போது வளர்ந்து, ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியாக புரமோஷன் ஆகியிருக்கிறார். தன்னால் கதாபாத்திரங்களை மட்டும் அல்ல; சிறப்பாக ஒலியையும் கையாளத் தெரியும் என நிரூபித்திருக்கும் தன்னம்பிக்கை இளைஞர். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரிடம் பால பாடம் கற்றவர். நம்மிடம் பேசினார்.

இசையமைப்பாளர்-ஒலிவடிவமைப்பாளர் இடையே உள்ள வேறுபாடு?

“ஒலி வடிவமைப்பு என்பது, சினிமாவுக்குள்ள இருக்கிற விஷயம். ஒரு காட்சிக்குள்ள இருக்கிற சூழல்களுக்கு ஏற்றமாதிரி ஒலியை கையாளுவதுதான். உதாரணத்துக்கு சொல்லணும்னா, கடற்கரையில ஒரு காட்சியை எடுக்குறாங்க. அங்க, அலைகளோட ஓசை, கூல்ட்ரிங்க்ஸ் விக்கிறவங்க சத்தம், குழந்தைகள் விளையாடும் சத்தம் இப்படி பல இருக்கும். இதை நாங்க, சூழல் ஓசை ன்னு சொல்லுவோம். அதாவது திரையில தெரியாத, ஆனால் அதற்குள் இருக்கும் விஷயம். இதை சரியான அளவில் வடிவமைப்பதுதான் எங்களோட வேலை.

காமெடி காட்சிக்கும், துயரமான காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை இசை மூலம் ஏற்படுத்த முடியும். அதே மாதிரியான வேறுபாடுகளை ஒலி வடிவமைப்பு மூலமாகவும் நாம செய்யலாம்!”

ஒலி வடிவமைப்பிற்கு ரசனை, தொழில்நுட்ப அறிவு; எது அவசியம்?

“இரண்டுமே அவசியம். தொழில்நுட்ப அறிவுங்கிறது, வெறும் பட்டனை தட்டற வேலை கிடையாது. என்ன மாதிரியான டோனுக்கு, என்ன உபயோகிக்கணும்னு அறிந்து வைத்திருப்பதுதான் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு.

நம்ம காதுல கேட்கிற ஒலி, மைக் மூலமாக கேட்கும் பொழுது வேற மாதிரி இருக்கும். எப்படி, எங்கே, இதனை ரிக்கார்ட் செஞ்சா, என்ன ஒலி கிடைக்கும்கிறதுதான் ரசனை. அது பயிற்சி மூலமாகத்தான் கிடைக்கும்!”

அனிமேஷன்-கமர்ஷியல் சினிமாவில் எது சவால் ?

“ நிஜவாழ்க்கையில, இல்லாத ஒரு விஷயத்தை அனிமேட் செஞ்சிருப்பாங்க. அதற்கு, ஒலி வடிவம் செய்யறதுக்கு, நாம கிரியேட்டிவ்வா இருக்கணும். உதாரணத்துக்கு, பலூன் மாதிரி ஒரு கேரக்டர் இருக்குன்னு வச்சிக்கோங்க, பலூனை அமுக்கினா என்ன சவுண்ட் வரும்னு தெரியும். அதை அடிப்படையாக வச்சிக்கிட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப ஒலிகளை உருவாக்கணும். இதுவும் பயிற்சியின் மூலமாக சுலபமாக செய்ய முடியும்.”

ஒலி வடிவமைப்பு பற்றி டிப்ஸ்?

“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, ரசனை, தொழில்நுட்பத்தை தாண்டி, மக்களை அரவணைத்துப் போகிற தன்மை வேணும். ஒலி வடிவமைப்புக்கான முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு திரைத்துறையினருக்கு, இப்பொழுதுதான் தெரிய வந்திருக்கு. பெரும்பாலும், படத்தொகுப்பு முடிச்சிட்டுதான் எங்ககிட்ட வருவாங்க. அதுக்காக நான் இயக்குநருக்கிட்டே சண்டைபோட முடியாது. அதே சமயத்துல அவரை ஏமாற்றவும் முடியாது. அவங்க கேக்குறத கொடுப்பது நம்ம கடமை. அதற்கு பொறுமை ரொம்பவே அவசியம். கதைகள் நிறைய கேளுங்க. சுவாரஸ்யமாக கதை சொல்லத் தெரியணும். நீங்க உருவாக்குற ஒலி மூலமாக காட்சியை உணர வைக்கலாம்!”

பிடித்த ஒலிவடிவமைப்பாளர்?

வால்டர் மர்ச்”

இயக்குநர் மணிரத்னம்?

“இசையைப் பற்றி தெரிந்த இயக்குநர் மணிரத்னம். சவாலான வேலையைத்தான் எங்களுக்கு கொடுப்பாரு. எடுத்துக்காட்டுக்கு சொல்லணும்னா “நீங்க கொடுக்கிற ஓசை ஆடியன்ஸை குளிர வைக்கணும்”ன்னு சொல்லுவார். அது எப்படி முடியும்?னு யோசிப்போம். காற்றுல ஈரப்பதம் கலந்தா, நம்மை குளிர வைக்கும் இல்லையா? அப்படி ஒரு சத்தம் எதிலிருந்து கிடைக்குமோ, அதை ஆராய்ச்சி செஞ்சு அவருக்கு கொடுப்போம். அதைக் கேட்டு அவரோட கருத்தை எங்ககிட்ட பகிர்ந்துப்பாரு. அவர் கொடுக்கிற கருத்து நம்மை அடுத்தத் தளத்துக்கு கொண்டு போகும்!”

ஒலி வடிவமைப்பு தவிர?

“எழுத்தில் ஆர்வம்!” - மணிரத்னம் படங்களின் வசனம் போலவே ரத்தின சுருக்கமாக பதில் வருகிறது. கைகுலுக்கி, விடைபெற்றோம்.

கிராபியென் ப்ளாக்

நோய் விளக்கம் :

ண்களின் விதைப் பையில் நீர் சேர்ந்து வீக்கத்துடன் காணப்படும் நிலையை நீர் விதை நோய் (Hydrocele ) என்கிறோம். வாத நாடியும், கப நாடியும் தன்னியல்பிலிருந்து மாறுபாடு அடைவதால் இந்நோய் ஏற்படுகிறது என்கிறது சித்தர் இலக்கியம்.

பெரும்பாலும் இளைஞர் பருவத்தில் இந்நோய் ஏற்படும் என்றாலும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கூட ஏற்படலாம். வீக்கம் தானாக சிலருக்கு சரியாகும் நிலையும் உண்டு. சிலருக்கு வீக்கம் பெரிதாகி அப்படியே நிலைத்து விடுவதுமுண்டு. வேறு ஏதேனும் குறிகுணம் தோன்றுவதில்லை. வலி இல்லாதிருப்பதால் பலர் இதனைக் குணப்படுத்த யோசிக்காமல் விட்டுவிடுவது முண்டு. வீக்கம் அதிகமான நிலையில் சிறிது கனத்தையும், சில சங்கடத்தையும் தருவதுமுண்டு. உடல் ரீதியாக வேறு கோளாறுகளை ஏற்படுத்துவதில்லை.

உணவே மருந்து :

வாதத்தை அதிகரிக்கக் கூடிய கிழங்கு வகைகள் எண்ணெய்ப் பலகாரங்கள், குளிர்ச்சியான உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கழற்சி இலையை பச்சரிசி மாவுடன் சேர்த்து அரைத்து அடைபோல தட்டி விளக்கெண்ணெய் சிறிது விட்டு எடுத்து காலை உணவாக வாரம் இருமுறை உண்டு வரலாம். நீர் விதை நோயிலுள்ள வீக்கம் படிப்படியாகக் குறையும்.


சித்த மருத்துவம் :

வெளி மருந்துகள் :

நாட்டு மருந்துக் கடைகளில் கழற்சி விதை கிடைக்கும். அதனை வாங்கி உடைக்க கழற்சிப் பருப்பு கிடைக்கும். அதனை பொடித்து, கோழி முட்டை வெண்கருவுடன் சேர்த்து அரைத்து விதையில் பூசி வரவும். தொடர்ந்து பூசி வர நீர்விதை நோய் குணமாகும்.

கழற்சி பருப்பு போலவே கல்லுப்பையும், கோழி முட்டை வெண்கருவையும் அரைத்துப் பூசலாம். இது ஆரம்ப நிலை விதை வீக்கத்தைக் குறைக்கும். கழற்சி இலை, தேங்காய் திருகல், ஆமணக்கு இலை, சிற்றாமணக்கு பருப்பு இவற்றை விளக்கெண்ணெய் விட்டு வதக்கித் தாங்கக் கூடிய சூட்டில் நீர்விதை நோய்க்கு ஒற்றமிடலாம். இதனையே வைத்துக் கட்டலாம்.


மேற்கண்ட வெளிமருந்துகள் நீர்விதை நோயை குணமாக்க வல்லவை. இவற்றை பயன்படுத்தியும் வீக்கம் இருப்பின் அருகிலுள்ள சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். நீர்விதை நோயைக் குணப்படுத்தக் கூடிய உள் மருந்துகள் பல உள்ளன, என்பதை நினைவில் கொள்ளவும்.

அடுத்த இதழில் ‘மலச்சிக்கல்’.

பவித்ரா

அவனியில் அன்பை மட்டுமே மிகுதியாக கொடுத்து, இல்லா மக்களின், துயரங்களைத் துடைக்கும் ரம்ஜான் பண்டிகை ஈகையின் சிறப்பை சாதி சமய வேறுபாடின்றி எல்லோருக்கும் வலியுறுத்துகிறது.

v. c. சந்தோஷ் , க . விக்னேஷ்

கிராபியென் ப்ளாக்

வித்ராகிட்ட போன்ல பேசிட்டு வெச்சதும் “பிரேக் அப் ஆகாத காதலும் பிரேக் புடிக்காத காரும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல”ன்னு ஒரு பொன்மொழி கோமல் மனசுல வந்து தொலைஞ்சுச்சு, கோமல் பாவம் குழம்பி போனான். எனக்கு ஏன் இப்படி எல்லாம் மொக்க பொன்மொழி தோணுது. பவித்ரா கூட சண்டை போட்டுட்டு போன வெச்சா இப்படி எல்லாம் தோணுமான்னு யோசிச்சு பாத்தான். காதல் கவிதை எழுத வெக்கும்.. காதலி கடுப்புல எழுத வெப்பான்னு மறுபடியும் ஒரு பொன்மொழி தோணுச்சு.

கோமல் உடனே யோசிக்கறத நிறுத்துனான். காதல பத்தி படம் எடுத்துட்டு இருக்கும் போது தன் காதலே புட்டுக்கறத அவனால ஏத்துக்க முடியல. எதாவது பண்ணி பவித்ரா கூட மறுபடியும் பெவிகால் போட்டு ஒட்டிக்கணுமுன்னு முடிவு பண்ணான்.

முடிவு பண்ண அடுத்த நொடி பவித்ராவுக்கு போன் அடிச்சான். பவித்ரா போன எடுக்கல. உடனே வாட்ஸ் அப்ல “என் காதல் என்னான்னு சொல்ல சொல்ல கோபமா வருது எங்க நான் ரொம்ப கோபப்பட்டு என் கோபம் உன்ன தாக்கிடுமோன்னு நினைக்கும் போது வர்தா புயல் மாதிரி வர்ற கோபம் கூட வலுவிழந்து சாந்தமா மாறிடுது. ப்ளீஸ் பவித்ரா என் கூட பேசு, இல்ல நான் ஆயிடுவன் லூஸூ”ன்னு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புனான்.

அதைக் கேட்டதும் கொலை வெறில இருந்த பவித்ராவுக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. அடுத்த செகண்ட் கோமலுக்கு அவகிட்ட இருந்து போனும் வந்துச்சு. போன எடுத்ததும் கோமல் ஸாரி கேட்க.. பதிலுக்கு என் மேலதான் தப்புன்னு பவித்ரா ஸாரி கேட்க..

இல்ல என் மேலதான் தப்புன்னு கோமல் மறுபடியும் ஸாரி கேட்க, இப்பவோ அப்பவோன்னு இழுத்துட்டு கிடந்த காதல் இன்ஸ்டண்ட் குளுக்கோஸ் குடிச்ச மாதிரி எனர்ஜியா மறுபடியும் ஆக்டிவ் மோடுக்கு வந்துச்சு.

நீ உடனே கிளம்பி சென்னை வா.. ரெண்டு நாள் என்கூட இருந்துட்டு அப்புறம் ஊருக்கு கிளம்பி போயிடுன்னு பவித்ராகிட்ட கோமல் சொன்னான். அடுத்த செகண்ட் “அசிங்கமா பேசறியேடா அயோக்கிய ராஸ்கல்.. என்ன அந்த மாதிரி பொண்ணுன்னு நினைச்சிட்டியா? நான் எல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்த பொண்ணு க்ஷ, என்கிட்ட இந்த மாதிரி எல்லாம் எதிர்பார்க்காதன்னு பவித்ரா பொரிஞ்சு தள்ள , கோமலுக்கு அப்பத்தான் அவன் சொன்ன வார்த்தையோட வேற கோணம் புரிஞ்சுது. ச்ச்சே கேனத்தனமா பேசிட்டமோன்னு அவனுக்கு அவனே பீல் பண்ணிக்கிட்டான்.

பவித்ராகிட்ட “பவி.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. நீ சென்னை வா.. ரெண்டு நாள் ஊர் சுத்தி பாத்துட்டு, லவ் பண்ணிட்டு திரும்பி போ, போன்லயே லவ் பண்ணி போரடிச்சுடுச்சு” கோமல் சொன்னதும் பவித்ராவுக்கும் அந்த ஐடியா புடிச்சு இருந்துது.

ஆனா சென்னைக்கு போகணுன்னா அப்பா விட மாட்டாரு, ஏன்? எதுக்குன்னு ஒரு ஆயிரம் கேள்விகள் வரும்னு பவித்ரா யோசிச்சா. உடனே கோமல் “இதெல்லாம் ஒரு மேட்டரா.. படத்துக்கே கதை எழுதறன். இதுக்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுத மாட்டனா? போன வை நான் பாத்துக்கறன்”னு சொல்லி போன வெச்சான்.

அடுத்த நாள் சென்னைல இருக்கற ஒரு கம்பெனில இருந்து ரெண்டு நாள் பயிற்சி முகாம்ல கலந்துக்க சொல்லி பவித்ராவுக்கு லெட்டர் வந்துச்சு. லெட்டர பாத்த பவித்ரா அப்பா “நல்ல கம்பெனிம்மா.. கண்டிப்பா இந்த ட்ரெயினிங் நீ அட்டெண்ட் பண்ணனும்”ன்னு சொல்லி அவரே ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வந்து வழி அனுப்பி வெச்சாரு. பவித்ரா கோமலுக்கு கம்பெனி குடுக்க போறது பாவம் அவருக்கு தெரியாது. ட்ரெயின் ஏறுனதும் பவித்ரா கோமலுக்கு போன் அடிச்சு ட்ரெயின் ஏறிட்டன்னு விஷயத்த சொல்ல, கோமல் தல படத்துக்கு தமிழ்நாடு வெயிட் பண்ற மாதிரி வெயிட் பண்ணிட்டு இருந்தான்.

பவித்ராவோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட நாலு விட்ட நாத்தனார் வீடு சென்னைல இருக்கறதனால பவித்ரா அங்கதான் ஸ்டே பண்ணனும்ன்னு அப்பா ஆல்ரெடி பிக்ஸ் பண்ணி இருந்தாரு. அதனால காலைல சென்னை வந்து இறங்குனதும், அந்த நாத்தனார் ஹஸ்பண்ட் வந்து பவித்ராவ கூட்டிட்டு போனாரு.


ஆனா கோமல் பெரம்பூர் ஸ்டேஷன்ல ஏறுனதும், பவித்ராவ வெல்கம் பண்ணி சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறக்கி விட்டதும் பாவம் அந்த நாத்தனார் ஹஸ்பண்ட்டுக்கு தெரியாது.

நாத்தனார் வீட்டுக்கு போன பவித்ரா காலைல 8 மணிக்கே ட்ரெயினிங்குன்னு சொல்லி அங்க இருந்து கிளம்ப, “ஊரு தெரியாத புள்ள.. போய் பஸ் வெச்சு விட்டுட்டு வாங்க”ன்னு நாத்தனார் சொல்ல , பாவம் நாத்தனார் ஹஸ்பண்ட் ஆபிஸ்க்கு 1 மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு பவித்ராவ பஸ் ஏத்திவிட்டாரு. பஸ் ஏறுன பவித்ரா அடுத்த ஸ்டாப்ல இறங்க, அங்க கோமல் பைக்கோட வெயிட் பண்ணிட்டு இருக்க ,பவித்ரா வந்து பைக்ல ஏற , அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் கவுதம் மேனன் படத்துல வர்ற மாதிரி ஒரே ரொமாண்டிக்கா இருந்துச்சு.

பவித்ரா துப்பட்டாவ எடுத்து மூஞ்சிய மறைச்சு கட்டிக்கிட்டு, கோமல கட்டிப்பிடிச்சு உட்கார்ந்துட்டு வர, கோமல் பைக்க அலைபாயுதே மாதவன் பீல்ல ஓட்டிட்டு இருந்தான். முதல்ல ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிட உட்கார்ந்தாங்க. ஆர்டர் பண்ண எதையுமே கோமலும் பாக்கல, பவித்ராவும் பாக்கல. தட்டுல கொண்டு வந்து வெச்சத ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்கிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க. தட்டுல இட்லிக்கு பதிலா இரும்பு துண்ட வெச்சு இருந்தா கூட பாவம் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்காது. அப்படி ஒரு லவ் பீல்ல ரெண்டு பேரும் இருந்தாங்க.


சாப்பிட்டு முடிச்சு ஒரே ஜுஸ் கிளாஸ்ல ரெண்டு ஸ்ட்ரா போட்டு ரெண்டு பேரும் உறிஞ்சி குடிச்சாங்க. அங்க சாப்பிட்டுட்டு இருந்த ஒருத்தர் “எப்பதான் இந்த பார்முலாவ எல்லாம் விட்டு தொலைப்பாங்களோ”ன்னு அவருக்குள்ள அவரே பீல் பண்ணிட்டாரு.

பிரேக் பாஸ்ட் முடிச்சதும், சத்யம் தியேட்டருக்கு போனாங்க. அந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்த ஒரு மொக்க படத்துக்கு கோமல் டிக்கெட் வாங்குனான். ரெண்டு பேரும் உள்ள போனாங்க. ஊர்ல இருக்கற மொக்க தியேட்டர்ல படம் பாத்த பவித்ராவுக்கு சத்யம் தியேட்டர் பிரமிப்பா தெரிஞ்சுது. படம் ஓட ஆரம்பிச்சது. கோமல பவித்ராவும், பவித்ரா கோமலும் பாத்துக்கிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. கோமல் பவித்ராவோட கைய மட்டும் பிடிச்சிக்கிட்டான். இண்டர்வெல் விட்டது கூட தெரியாம உட்கார்ந்து இருக்க, பாத்ரூம் போக எந்திரிச்ச ஒருத்தர் “தம்பி..இண்டர்வெல் விட்டாச்சு.. கொஞ்ச நேரம் உங்க படத்துக்கு இடைவேளை விடு”ன்னு சொல்லிட்டு போனாரு. கோமல் போய் பாப்கார்ன், கோக் எல்லாம் வாங்கிட்டு வந்தான்.

மறுபடியும் படம் ஸ்டார்ட் ஆச்சு, பாப்கார்ன ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஊட்டிக்கிட்டே மறுபடியும் அதே லவ் மூடுக்கு போனாங்க.

படம் முடிஞ்சு வெளில வந்ததும் கோமல் அவள லஞ்சுக்கு தலப்பாகட்டி பிரியாணிக்கு கூட்டிட்டு போனான். ரெண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டுட்டு முடிச்சாங்க. பவித்ரா ஏவிஎம். ஸ்டுடியோவ சுத்தி பாக்கணுன்னு ஆசைப்பட, அடுத்த ஷாட்ல ரெண்டு பேரும் ஏவிஎம்ல இருந்தாங்க. கோமல் அவளுக்கு எல்லாத்தையும் சுத்தி காட்டுனான். அங்க ஒரு ஷுட்டிங் நடந்துட்டு இருக்க பவித்ரா அதை பார்க்கும் போது டைரக்டர் ஆக்ஷன், கட் சொல்றதும் , ஹீரோ, ஹீரோயின் எல்லோரும் டைரக்டர்கிட்ட பயத்தோட பேசறதும் அவளுக்கு கோமல் மேல இன்னும் லவ்வ கூட்டுச்சு. தன் ஆளு செம்ம கெத்துன்னு அவளே பீல் பண்ணிட்டா.

கட் பண்ணா அடுத்த ஷாட்ல வள்ளுவர் கோட்டத்துல இருந்தாங்க. அதுக்கு அடுத்த ஷாட்ல அம்மா சமாதில இருந்தாங்க, அதுக்கு அடுத்த ஷாட்ல பெசண்ட் நகர் பீச்ல இருந்தாங்க. பவித்ரா சந்தோஷமா அலைல கால் நனைச்சு விளையாட, கோமல் அத போட்டோ எடுத்தான்.

விளையாடி முடிச்சதும் ரெண்டு பேரும் ஜாலியா ஒரு போட்ட நோக்கி நடக்க அங்க ஆல்ரெடி இருந்த லவ்வர்ஸ் நடத்திட்டு இருந்த ரொமான்ஸ் எல்லாம் பாத்ததும் பவித்ராவுக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு. “டேய்.. என்னடா.. இங்க இத்தனை பேரு பாக்கும்போதே இப்படி எல்லாம் பண்றாங்கன்னு? கோமல்கிட்ட கேட்க, அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காம வா” கோமல் சொல்லிட்டே ஒரு போட் பக்கத்துல அவள உட்கார வெச்சான்.


அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் சுண்டல் சாப்பிட்டாங்க. கைரேகை ஜோசியம் பாத்தாங்க. மணல்ல கோமல்குமார், பவித்ரான்னு எழுதி ஹார்ட்டின் போட்டு அம்பு விட்டாங்க. செல்பி எடுத்தாங்க, கைய பிடிச்சுட்டு காதலாகி கசிஞ்சுருகுனாங்க, கேப்ல சன் செட் ஆக லைட்டா இருட்ட ஆரம்பிச்சுது. நாத்தனார்கிட்ட இருந்து பவித்ராவுக்கு போன் வர, ரெண்டு பேரும் காதல்ங்கற மாய உலகத்துல இருந்து வெளில வந்து மவுண்ட் ரோட்ல பைக்ல போயிட்டு இருந்தாங்க.

கோமல் அவள கொண்டு நாத்தனார் வீடு இருக்கற எக்மோர் ஏரியால ட்ராப் பண்ணிட்டு , பிரிய மனமில்லாம பிரிஞ்சு கிளம்பி வந்தான்.

(கோமலின் கலைப்பயணம் தொடரும்....)

கிராபியென் ப்ளாக்

க. விக்னேஷ்

வீன இலக்கிய மரபில் கவிஞர் இசாக்கின் கவிதைகள் முக்கியமானவை. தன்னுடைய நாட்டில் வாழ வழியின்றி, தூர தேசம் சென்று உழைக்கும் மக்களின் துயரக் கதைகளை தன் கவிதை வழியே பேசியவர் அவர். துணையிழந்தவளின் துயரம், மௌனங்களின் நிறழ்குடை, பிள்ளைகளின் பிரதேசம் உள்ளிட்ட கவிதைகளில் அதை நாம் உணரலாம். “மிக எளிமையாகச் சொல்லப்பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான். அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது” என்கிறார் மறைந்த கவிஞர் இன்குலாப். அதுவே இசாக் கவிதைக்கான வெகுமதி!


துணையிழந்தவளின் துயரம்

கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்

ரசித்து ரசித்துவாங்கிய பொம்மைகளோடுகாத்திருக்கிறேன்நெடுநேரமாக

வீடு நுழைந்த முகம் கண்டுதொட்டுக் கொஞ்சி மகிழநெருங்கையில்

“யாரும்மா... இவங்க?”என்கிறாள்மழலை மொழியில்என் மகள். .

எப்போதாவதுதான் அமைகிறதுபிரச்னையில்லாமல் பயணமாகிற சூழல்ஓய்வற்ற ஓய்வாகவேஒவ்வொரு பயணமும்

மகிழ்ந்த முகத்தோடுசுடுநீர்சுவைகுறையாத தேனீர்உணவுகளில்பிள்ளைகளுக்குப் பிடித்ததென அம்மாஅவருக்கு விருப்பமெனதுணைவிகூடப்பொறந்தான்கூடுதலா சாப்பிடுவானென உடன் பிறந்தோர்வகைவகையாக பரிமாறுகிறார்கள்எப்படியும்திரும்பிவிடுவேனென்ற நம்பிக்கையில்

கவனிப்பாரெவருமற்று கிடக்கும்அப்பாவைக் காண்கையில்மீண்டும் உறுதியாகிறதுதூரப் பயணம்.

கிராபியென் ப்ளாக்

து எதனால் என்று தெரியாது. ஆனால், விட்டில் பூச்சிக்கு விளக்கிடம் மாறாத ஈர்ப்பு இருப்பது போல சின்ன வயதிலிருந்தே மகான்கள் என்றால் ஒரு வசீகரம்! ஆலயக் கருவறைகளில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருவுருவங்கள் எங்களை ஈர்த்ததை விட மகான்கள் ஈர்த்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணர், ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், மஹா பெரியவா, ராகவேந்திரர் போன்ற மகான்கள் அனைவருமே மனிதர்களாய்ப் பிறப்பெடுத்த தெய்வப்பிறவிகள். இவர்களுள் மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் மிகவும் ஸ்பெஷல். அவருடைய வரலாறு மிகவும் நெகிழ்ச்சியானது. மனதை உருக்குவது. அந்த மகான் நிரந்தரமாக எழுந்தருளி இருக்கும் மந்திராலயத்துக்குச் சென்று, என்றென்றும் உயிர்ப்புடன் திகழும் அவரது மகா சமாதியை விழுந்து வணங்கி அந்த மண்ணைத் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.


வேலை, வேலை என்று பறந்து கொண்டிருந்தோம். ‘அப்புறம் போகலாம், அப்புறம் போகலாம்’ என்று மந்திராலயப் பயணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தோம்.

திடீரென்று ஒரு நாள்…

திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவுக்கு ஒரு வேலையாக மோட்டார் பைக்கில் சென்றிருந்தோம். அந்தத் தெருவில் விரைந்து கொண்டிருந்த போது திடீரென்று ஓரிடத்தில் பைக் நின்றுவிட்டது. என்ன காரணம் என்றே தெரியவில்லை. உதைத்து, உதைத்துப் பார்த்தோம். ஸ்டார்ட்டர் முழு வேகத்தில் திரும்பி வந்து ஆடுசதையைப் பதம் பார்த்ததுதான் மிச்சம். எதனால் என்று புரியாமல் திகைத்துச் சுற்று முற்றும் பார்த்தோம். அங்கே மந்திராலய மகான் ராகவேந்திரரின் சன்னிதி இருந்தது. வியாழனுக்கு வியாழன் யாருக்கும் தெரியால் ரஜினி வந்து வணங்கிவிட்டுப் போகும் அதே சன்னிதி. பைக்கை அங்கேயே ஓரம் கட்டி விட்டு உள்ளே போனோம். அந்த மகானின் சன்னிதியில் நின்று வணங்கினோம். மிருத்திகை பிரசாதம் வழங்கினார்கள்.

வெளியே வந்தோம். பைக்கை உதைத்தோம். ஸ்டார்ட் ஆகிவிட்டது! இது என்ன அதிசயம். சற்று நேரத்துக்கு முன்பாக எவ்வளவு உதைத்தும் கிளம்பாத பைக் இப்போது மட்டும் எப்படிக் கிளம்பியது.

திகைத்துப் போய் கோவிலை நோக்கினோம். பிளாட்ஃபாரத்தில் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு ராகவேந்திரர் கட் அவுட் கண்களில் பட்டது. ஸ்ரீ ராகவேந்திரர் எங்களைப் பார்த்து நமட்டுப் புன்னகை புரிந்த மாதிரி தோன்றியது.

அவ்வளவுதான். மந்திராலயத்துக்குப் போயே ஆகவேண்டும் என்ற ஆவேச எண்ணம் எங்கள் நெஞ்சை ஆக்கிரமித்தது.

அன்று இரவே மும்பை மெயிலில் ஏறிப் பயணப்பட்டு மந்திராலயம் செல்வது என்ற தீர்மானத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம்.

இரவு பத்து மணி. அப்போதுதான் விடிந்தது போல் ஸ்டேஷன் படு சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.

சின்னக்குழந்தைகள் உற்சாகமாக ரயிலை நோக்கிச் சென்றார்கள். பிஸ்கட் பாக்கெட்டுகளும். சூடான பாலும் ஜோராக விற்பனை ஆகிக் கொண்டிருக்க, புதிதாக மணம் ஆகி புகுந்த வீட்டை நோக்கிப் புறப்பட்ட பெண், பிளாட்ஃபாரத்தில் நின்று பெண் மாலை, மாலையாய்க் கண்ணீர் வடித்தாள்.

ரயிலில் ஏறி, படுக்கையில் படுத்தோம். மனம், உடல் இரண்டும் பரபரத்தன. இது நாள் வரை பலப் பல புத்தகங்களில் ஸ்ரீராகவேந்திரரைப் பற்றி வாசித்து அறிந்தவை எல்லாம் தட்டாமாலையாகச் சுற்றின.

எப்பேர்ப்பட்ட பிறவி! அவர் வாழ்க்கையில்தான் என்னென்ன நிகழ்வுகள்! அந்தத் தெய்வப்பிறவி குடியிருக்கும் சமாதியை தரிசிக்கப் போகிறோம்!

ரயில் புறப்பட்டது. தூங்கிப் பொழுது விடிந்தால் மந்திராலயம்! கண்களை மூடினோம். தூக்கம் வரவில்லை. ஸ்ரீ ராகவேந்திரரின் வரலாறு வரி, வரியாக மனதில் ஓடத் தொடங்கியது.ஆன்மிக மணம் கமழும் மகான்களின் அற்புதச் சரிதங்கள் நமக்கென வழங்கப்பட்டிருக்கும் வரங்கள். அவற்றை அறிந்து கொண்டால் நமக்கு அளப்பரிய நலம் பயக்கும்! நெறி தவறாத வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை உணர்த்தி நாம் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி வகுக்கும்.

அந்த அடிப்படையில், பூஜ்யஸ்ரீ ராகவேந்திரரின் உள்ளத்தை நெகிழச் செய்யும் உன்னதமான வாழ்க்கை வரலாறு நெஞ்சுக்கு நிம்மதியும், நினைவுக்கு நிறைவும், ஆன்மாவுக்கு ஆனந்தமும் அளிக்கும் மகத்தானதொரு பொக்கிஷம்!

மந்திராலாய மகான்பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு

பிரம்ம லோகத்தில் நாள் தோறும் நடைபெறும் திருமாலின் விசேஷ ஆராதனைகளில், தேவலோகத்தின் நித்ய வாசிகளான தேவர்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்காக ஒரு தொண்டு புரிவதும் வழக்கம்.

சங்குகர்ணர் திருமாலின் பரமபக்தர். அவர் அனுதினமும் தமது கரத்தாலேயே பறித்துத் தொடுத்து வரும் மலர்கள் மகாவிஷ்ணுவின் வழிபாட்டுக்கு உகந்தவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக, வழிபாட்டு நேரத்துக்கு சங்குகர்ணரால் மலர்கள் கொண்டு தர இயலவில்லை.

கால தாமதமாக வந்தவரை பிரம்மன் கடும் சினத்துடன் எதிர் கொண்டார். சிந்தையில் கவனமின்றி, காலம் கடந்து மலர்மாலையைக் கொண்டு வந்த சங்குகர்ணரை, சிந்தை அற்ற அரக்கர் குலத்தில் சென்று பிறக்குமாறு சபித்தார்.

தன் தவறை உணர்ந்து பணிந்த சங்குகர்ணரை வாழ்த்தினார் நான்முகன். எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் மகாவிஷ்ணுவின் பக்தனாகவும், அவனது பக்தர்களுக்கு குருவாகவும் விளங்குவதற்காகவே சங்குகர்ணருக்குக் கால தாமதம் ஏற்பட்டது என்றும், அதன் காரணமாகவே, தான் அவரை சபிக்க நேரிட்டது என்றும், அனைத்துமே தெய்வச் செயல் அன்றி வேறொன்றுமில்லை என்றும் விளக்கினார் நான்முகன்.

பிரம்ம சாபத்தின் பயனாக சங்குகர்ணர் கிருத யுகத்தில் பிரகலாதனாக, அசுரச் சக்கரவர்த்தியான ஹிரண்யகசிபுவுக்கு மகனாக அவதரித்தார். துவாபர யுகத்தில் சங்குகர்ணர் பாஹ்லீக மன்னராகப் பிறந்தார். திருமாலின் மீது தீராத பக்தி கொண்டிருந்த போதிலும், விதி வசத்தால் அவர் பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட நேரிட்டது. என்றும் கண்ணனின் நினைவுடன் இருந்த அவர், வாயு பகவானின் அம்சமாகத் தோன்றிய பீமன் கையால் மாண்டார்.

சங்குகர்ணர் கலியுகத்தில் வியாசராஜ தீர்த்தராக மூன்றாவது அவதாரம் எடுத்தார். மத்வாச்சாரியாரின் த்வைத சித்தாந்தத்தில் ஈடுபட்டு, அந்த வழியில் அவர் சிறந்த துறவியாக விளங்கினார்.

வியாஸராஜருக்குப் பிறகு மத்வ பீடத்தைப் பல மகான்கள் அலங்கரித்தார்கள். இறைவனின் ஆணையை ஏற்று சங்குகர்ணர் அடுத்து ராகவேந்திரராகத் தோன்ற வேண்டிய நேரம் நெருங்கியது.

தென் இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம்!

கலை மற்றும் இலக்கியங்களுக்கு நல்லிடம் கிடைத்த விஜய நகரப் பேரரசின் அரசவையில், திம்மண்ண பட்டர் என்பார் ஆஸ்தான கலைஞராக இடம் பெற்றிருந்தார்.

திம்மண்ண பட்டருக்கும், அவரது மனைவி கோபிகாம்பிகைக்கும், வேங்கடாம்பாள் என்ற பெண் குழந்தையும், குருராஜன் என்ற ஆண் மகவும் பிறந்தன.

இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசு, அந்நியர் படையெடுப்பால் வீழ்ச்சி அடைந்தது. அத்துடன் அதைச் சார்ந்து வாழ்ந்த மக்களும் தங்கள் வாழ்வை இழந்தனர். திம்மண்ண பட்டர், மனைவியுடன் வாழ வழி தேடி தமிழகத்தில் புவனகிரி வந்தடைந்தார். புவனகிரியில் கோபிகாம்பாள் கருவுற்றார். குழந்தை கருவில் வளர்ந்த போதே, அன்னையின் முகமும், உருவும் பொலிவு பெற்று ஒளிர்ந்தன. ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு, தமிழ் மன்மத வருடம், பங்குனி மாதம் சப்தமி திதியில், மிருகசீரிட நட்சத்திரத்தில், குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில், கௌதம கோத்திரத்தில் ஒரு தெய்வீகக் குழந்தை பிறந்தது. தனது முற்பிறவிகளில் தான் ஆற்றிய பணிகளின் தொடர்ச்சியாக, அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல சங்குகர்ணர் ராகவேந்திராகப் பிறவி எடுத்தார்.


திருப்பதி வேங்கடவனின் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அதற்குப் பெற்றோர் வேங்கடநாதன் எனத் திருநாமம் இட்டனர்.

குழந்தைக்கு இரண்டு வயது முடிந்ததும் முதன் முதலாக அன்ன அமுதூட்டும் வைபவம் நடந்தது. தந்தையின் உதவியுடன் அக்ஷராப்பியாசமும் தொடங்கியது. சிறு வயதிலேயே வேங்கடநாதன் அறிவாற்றலில் சிறந்து விளங்கினான்.

திம்மண்ணாவின் குடும்பம் விஜயநகரப் பேரரசிலிருந்து தமிழகம் வந்து சேர்ந்து வெகு நாட்கள் ஆகி விட்டிருந்தன. சேமித்து வைத்திருந்த செல்வம் அனைத்தும் தீர்ந்தும் விட்டது. லௌகீக விஷயங்களில், திம்மண்ணா ஈடுபடாததால் வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டது.

திக்கவற்றவர்க்கு தெய்வமும், தெய்வீகமான இடங்களும்தானே புகலிடங்கள்! திம்மண்ண பட்டர், மனைவி, குழந்தையுடன் கும்பகோணம் ஸ்ரீமடத்திற்கு வந்து சேர்ந்தார். கும்பகோணத்தில் இருந்த மடாதிபதிகளான ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரும், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரும் திம்மண்ண பட்டரை நன்கு அறிந்திருந்தார்கள். மேலும் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சுதீந்திரர் வேங்கடநாதனைப் பார்த்ததும் பரவசமானார். ‘இந்த அவதாரச் சிறுவனல்லவா தனக்குப் பின் மடத்தை நிர்வகிக்க வேண்டியவன்' என்று அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே உணரும் தீர்க்க தரிசனம் அவருக்கு இருந்தது.


மடாதிபதிகளான ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரின் அருள் கடாட்சமும், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் கருணை விழி ஆசிகளும் சிறுவன் மீது தீர்க்கமாகப் பட்டன.

அந்தச் சமயத்தில் இறைவனின் திருவுளம் வேறாக இருந்தது. திம்மண்ண பட்டரின் காலம் முடிந்து, அவர் விண்ணுலகம் ஏகினார். குடும்பப் பொறுப்புகளைத் தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவரது மூத்த மகன் குருராஜன் ஏற்றுக் கொண்டார்.

தன் மூத்த சகோதரர் குருராஜரையே தந்தை இடத்தில் வைத்து வேங்கடநாதர் வணங்க, குருராஜரும் சகோதரனைத் தன் மகன் போல் காத்து வந்தார்.வேங்கடநாதரின் முன்னோர்கள், விஜயநகரப் பேரரசின் அரசவையை அலங்கரித்த ஆஸ்தான கலைஞர்கள். வழி, வழியாக அவரது குடும்பத்தினருக்கு இருந்த தனிச் சிறப்பு அவர்களது வீணை இசைக்கும் கலை.

அந்த வீணா கான கலையைத் தமையன் குருராஜர் கற்றுத் தர, தம்பியும் கருத்துடன் கற்றுக் கொண்டார். வீணை மீட்டுவதில் வேங்கடநாதர் விற்பன்னரானார். வீணை இசை அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

நாட்கள் சென்றன. வேங்கடநாதருக்கு பிரம்மோபதேசம் செய்ய குருராஜர் எண்ணினார்.

ஆயிரத்து அறுநூற்று இரண்டாம் ஆண்டு, அவரது எட்டாவது வயதில் வேங்கட நாதருக்கு உபநயனத் திருவிழா நடைபெற்றது.

வீணை இசைக்கக் கற்றுக் கொடுத்து, பிரம்மோபதேசத்தையும் செய்து வைத்த போதிலும், இளவல் வேங்கடநாதருக்கு முறைப்படி வித்தியாப்பியாசம் நடைபெற வேண்டுமென குருராஜர் விரும்பினார். ருகுல வாசத்துக்கு ஏற்ற இடமாக அவருக்குத் தோன்றியது, மதுரையிலிருந்த மகா பண்டிதரான லக்ஷ்மி நரசிம்மாச்சார்யாரின் இல்லம்.

ஆசிரியர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் வேங்கடநாதரின் மூத்த சகோதரி வேங்கடாம்பாளின் கணவர்.

சமஸ்கிருத இலக்கணங்கள், இலக்கியங்கள், சாத்திரங்கள், இதிகாச புராணங்கள், வேதங்கள், வேதாந்தம், தர்க்கம் ஆகிய அனைத்தையும் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யரிடம் கற்றார் வேங்கடநாதர்.மதுரையில் தான் கற்க வேண்டியவற்றைக் கற்ற பின் வேங்கடநாதர், தமையனின் விருப்பப்படி புவனகிரி வந்து சேர்ந்தார்.

குடும்பப் பொறுப்புகளில் வேங்கடநாதன் ஈடுபட்டாலும், கும்பகோணம் மடத்தில் சுதீந்திரர் மூலராமருக்குச் செய்கின்ற பூஜைகளைப் போலவே, தானும் செய்ய வேண்டும் என்று விரும்பி மூலராமருக்குப் பூஜைகள் செய்து வந்தார்.

தம்பியின் கவனம் ஆன்மிகத்தில் அமிழ்ந்து போவதைக் கண்ணுற்ற குருராஜனின் இதயத்தில் சஞ்சலம் ஏற்பட்டது.

உலகில் பிறந்த உயிர்களுக்கு இல்லற சுகம் இயல்பானது. அந்த இல்லற வாழ்க்கை வேங்கடநாதனுக்கு இல்லாமல் போய் விடக் கூடாது என்று தமையன் குருராஜர் எண்ணினார்.

தந்தை இடத்தில் நின்று பிரம்மோபதேசம் செய்தது போலவே, சரியான வயதில் சகோதரனுக்குத் திருமணமும் செய்து வைக்க விரும்பினார் அவர்.


பக்தியிலும், ஆச்சாரத்திலும் அவ்வூரில் சிறந்து விளங்கியது ஒரு குடும்பத்தில் பிறந்த சரஸ்வதி என்னும் உத்தமியை வேங்கடநாதருக்குத் திருமணம் செய்து வைத்தார்.

ராமனுக்கு வாய்த்த சீதை போல், வேங்கடநாதனுக்கு வாய்த்தாள் சரஸ்வதி. வேங்கடநாதர் லௌகீக வாழ்க்கையை ஏற்றார்.

வேதங்களைக் கற்பதில் காட்டிய துடிப்பை, குடும்பத்துக்கு வருவாய் தேடித் தருவதில் காட்டவில்லை வேங்கடநாதர். குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது.

அந்தச் சமயத்தில், ஒரு திருமணத்தில் அந்தணர்களுக்கு அன்ன போஜனம் நடந்து கொண்டிருந்தது.

வேங்கடநாதர் அங்கு உணவு உண்ணப் பந்தியில் அமர்ந்து இருந்தார். அவர் உடுத்தியிருந்த உடை, அவரது கோலம் ஆகியவற்றைக் கண்ட திருமண வீட்டினர் அவரைச் சற்று அலட்சியமாகவே நடத்தினார்கள்.

பந்தியில் அமர்ந்திருந்த அந்தணர்களோ, அவரைப் பந்தியில் உணவு உண்ண அனுமதிக்காததோடு, உழைத்து உண்ணுமாறு அவமரியாதையும் செய்தனர். அந்தக் கால கட்டங்களில், திருமணத்தில் உணவு உண்டவர்கள் உல்லாசமாகப் பூசிக்கொள்ள சந்தனம் அரைக்கப்பட்டு, வினியோகிக்கப்படும் வழக்கம் இருந்து வந்தது.

வேங்கடநாதருக்குத் திருமண வீட்டினர் சந்தனம் அரைக்கும் பணியை நிர்ணயித்தார்கள். அவரும் முகம் சுளிக்காமல், சந்தனத்தைக் கல்லில் உரைத்து, அரைக்கும் வேலையில் ஈடுபட்டார்.


கை தன் பணியை இடையறாது செய்ய, வாய் வேதம் ஓத ஆரம்பித்தது. வேத பாராயணத்தின் ஒரு பகுதியாக அவர் அக்னி சூக்தத்தை மனனம் செய்யலானார்.

அக்னி சூக்தத்தின் மந்திர சக்தி சந்தனத்தில் ஏற, சந்தனம் நெருப்பாய்த் தகித்தது. அரைத்த சந்தனத்தைப் பூசிக் கொண்ட அந்தணர்களின் உடல் பற்றி எரிந்தது.

தங்கள் குற்றத்தை உணர்ந்த அந்தணர்கள், வேங்கடநாதரின் கால்களில் வீழ்ந்து பணிந்தார்கள். அவரும் வர்ணசூக்தம் கூறியவாறு சந்தனம் அரைத்துத் தந்தார். அதைப் பூசிய பின்னர் அவர்களது உடல் எரிச்சல் தணிந்தது.

வேங்கடநாதன் மானத்தையும், அவமானத்தையும் ஒன்றாகக் கருதும் பக்குவத்தை அப்போதே அடைந்திருந்தார்.

அப்படிப்பட்டவரை அவமதித்தவர்கள் திருந்துவதற்காக, தெய்வமே தற்செயலாக அவரை அக்னி சூக்தம் உரைக்க வைத்தது. உருவம் கண்டு எள்ளி நகையாடுவது கூடாது என்ற பாடத்தை அந்தணர்களுக்கு, வேங்கடநாதன் மூலமாக தெய்வம் உலகுக்கு எடுத்து உரைத்தது.

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த போதிலும், நாட்கள் செல்லச் செல்ல, வேங்கடநாதரது மனம் ஞான மார்க்கத்தை நாடியது.

மனைவி மற்றும் தமையனின் அனுமதியுடன் கும்பகோணம் ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடாதிபதியாக வீற்றிருந்த சுதீந்திரர் வேங்கடநாதரை இன்முகத்துடன் வரவேற்றார். வேங்கடநாதரைத் தனது சிஷ்யர்களில் ஒருவராக ஆனந்தத்துடன் ஏற்றார்.


ஸ்ரீமடத்தில் அந்தச் சமயத்தில் பல மாணாக்கர்கள் பாடம் படித்து வந்தார்கள். எனினும் வேங்கடநாதர் அளவுக்குத் தீவிரமாகப் பாடம் கேட்பவர் எவரும் இல்லை.

ஒவ்வொரு நாளும் தான் கேட்ட பாடங்களில், தமக்கு எழும் சந்தேகங்களை, சுதீந்திரரிடம் கேட்டு அறிவார். விரைவிலேயே வேங்கடநாதர் குருவுக்கு ஆப்த சீடராக மாறினார்.

மற்ற சீடர்களுக்கு இது சற்று பொறாமையை ஏற்படுத்தியது. வேங்கடநாதர் மேல் சிறு சிறு குற்றங்களை சொல்வதிலும்,

அவரை நையாண்டி செய்வதிலும் தங்கள் பொறாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


இவ்வாறு அவர்கள் குறை சொல்வது சுதீந்திரரின் காதுகளையும் எட்டியது. இந்தச் சர்ச்சைக்கு முடிவு ஏற்பட வேண்டிய காலமும் வந்தது.

மத்வாச்சாரியார் எழுதிய பாஷ்யத்துக்கு, ஜெயதீர்த்தர் எழுதிய விளக்க உரையான நியாய சுதா என்னும் நூலுக்கு, சுதீந்திரர் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். வேங்கடநாதர் ஆழ்ந்த கவனத்துடன் பாடக் குறிப்பு எடுத்து வந்தார். பாடம் மிகவும் கடினம் என்பதால் பல மாணாக்கர்களுக்குப் புரியவில்லை. சுதீந்திரர் அதை உணர்ந்து, 'பாடத்தை நாளை தொடரலாம்' என்று கூறி நிறுத்தினார்.

அன்று நள்ளிரவு. மறுநாள் மாணவர்களுக்கு இன்னும் எளிதாக எப்படி பாடத்தைப் புரியவைப்பது என்று யோசித்தவாறு மாணவர்கள் தங்கும் விடுதி வழியாக நடந்து வந்தார் சுதீந்திரர்.

விடுதியில் வேங்கடநாதனின் படுக்கை காலியாக இருந்தது. மற்ற எல்லா மாணவர்களும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வேங்கடநாதன் எங்கு போயிருப்பான் என்ற கவலையுடன் மடத்தை வலம் வந்தார் சுதீந்திரர்.

விடுதி அறைகளுக்கு வெளியே, நடுங்கும் குளிரில், சுருண்டு படுத்திருந்த வேங்கடநாதரைக் கண்டார். அது மட்டுமா? அவர் அருகே அப்போதுதான் அணைந்திருந்த விளக்கும், எழுத்தாணியும், சுவடிகள் பலவும் இருந்தன.ஆர்வம் தாங்காமல் ஓலைச் சுவடிகளில் எழுதியிருந்தவற்றைப் படித்தவருக்கு வியப்புடன், பெருமிதமும், ஆனந்தமும் மிகுந்தது. காலையில் தான் நடத்திய கடினமான பாடத்திற்கு எளிமையான விளக்கங்கள் அந்தச் சுவடிகளில் இருந்தன.

சக மாணவர்களுக்குத் தூக்கம் கெடாமலும், அதே சமயம் தன் பணியும் நிற்காமலும் இருக்க, வெளியே வந்து இந்தச் சுவடிகளை அவர் எழுதியிருக்க வேண்டும் என்று உணர்ந்த சுதீந்திரருக்கு, வேங்கடநாதர் மேல் கருணை பொங்கியது.

குளிரில் படுத்திருந்த வேங்கடநாதரின் உடலின் மீது தன் காஷாய மேலாடையைப் போர்த்தி விட்டு இருப்பிடம் திரும்பினார்.

அசதியால் தன்னை மறந்து தூங்கி விட்ட வேங்கடநாதர் அதிகாலை எழுந்தார். குருநாதரின் மேலாடை உடலைப் போர்த்தியிருந்தது. ஆசிரியர் நடத்தும் பாடத்திற்கு தான் விளக்கம் எழுதினோமே என்றும், விடுதியை விட்டு வெளியே சென்று உறங்கினோமே என்றும், குற்ற உணர்வோடு விடுதிக்குத் திரும்பினார். காலை நியமங்களை முடித்துக் கொண்டு என்ன நடக்குமோ என்று அச்சத்துடன் வகுப்புக்குச் சென்றார்.

சுதீந்திரர், அவரை வெகுவாகப் பாராட்டியதோடு, வேங்கடநாதர் எழுதத் தொடங்கிய நூலுக்கு 'சுதா பரிமளம்' என்ற பெயரும் சூட்டினார். கூடவே அவருக்கு 'பரிமளாச்சார்யர்' என்ற பட்டத்தையும் வழங்கினார்.

குருவின் ஆசியாகக் கிடைத்த 'பரிமளாச்சார்' என்ற பட்டத்தை வேங்கடநாதர் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டார்.

(பயணம் தொடரும்)

நாம் என்ன செய்கின்றோமோ அதற்கான பலன் அந்தச் செய்கைக்கு நேர்மறைத் தொடர்புடையதாய் விளையும். அந்த நேர்விளைவு எப்போதுமே மாறி அமைந்ததில்லை. ‘எதுவுமே வீண் போகாது’ என்று நான் சோர்வுற்று இருக்கும்போதெல்லாம் கூறிக்கொள்வேன்.

நாம் ஒன்றைச் செய்திருப்போம். நாம் நினைத்தபடி அச்செயல் உரிய விளைவைத் தரவேண்டும் என்பது நம் விருப்பமாக இருக்கும். ஆனால், அவ்வாறு விளையாமல் போகலாம். இப்போது நாம் விளைவைக் கண்டு ஆராய்கிறோம். அது ஏன் நாம் நினைத்தபடி விளைவுறவில்லை ? அங்கே நாம் செய்த செயலை ஆராய வேண்டும். விளையாமைக்கான விடை அங்கேதான் இருக்கிறது. செயல் எவ்வாறு இருந்ததோ அதற்கேற்ற பலன் இருந்தது.

ஒன்றை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக முயன்றாலும் உரிய பலனைத் தராமல் போவதுண்டு. அங்கே நாம் அவசரப்பட்டிருப்போம். ஏதோ ஒன்றில் முந்திக் கெடுத்திருப்போம். விளைவுக்கென்று ஒரு காலம் இருக்கிறது. வண்டியை எடுத்துக்கொண்டு ஓரிடத்திற்குச் செல்வீர்களானால் அதற்குரிய நேரம் கட்டாயம் தேவைப்படும். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வந்து சேர முப்பது மணித்துளிகள் ஆகின்றன என்றால் அச்செயலுக்கு அந்நேரத்தை நாம் தந்தே ஆகவேண்டும். ஐந்து நிமிடத்தை மிச்சம் பிடிக்கும்படியாய் விரைந்து முடுக்கினால் நாம் ஒருபோதும் அலுவலகத்துக்கு வர முடியாமலே போகலாம். வண்டியைச் சீராகச் செலுத்தி வந்தால் இரண்டு நிமிடங்கள் முன்கூட்டியே கூட வந்து சேரலாம். ஆனால், அதற்குரிய நேரத்தைத் தரத் தவறினால் ஒட்டுமொத்தச் செயலே பாழ்படும்.

யற்சிக்கென்றும் செயலுக்கென்றும் சில வரையறைகள் இருக்கின்றன. நம் முயற்சியிலும் செயலிலும் அதைப் பற்றி நிற்க வேண்டும். அதிலிருந்து பிசகினால் எல்லாம் கெட்டுப் போய்விடும்.

அதில் அசட்டையாக இருந்தால் நாம் எதையுமே கற்றுக்கொள்ள மாட்டோம். நாம் நம்மைத் தராமல் நமக்கென்று ஒன்றைப் பெற முடியாது.

்வியுற்றவர்கள் எல்லாருமே பிற்காலத்தில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள். ஒவ்வொரு தோல்வியும் இன்னும் அறியப்படாத அச்செயலின் ஒரு பகுதியைக் காட்டிக்கொடுக்கிறது. அச்செயலில் மேலும் ஒரு நிபுணத்துவத்தைச் சேர்க்கிறது. தோல்வியிலிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். தோல்வி தரும் படிப்பனையின் சிறப்பே அதில் நாம் நேரடியாக ஈடுபட்டிருப்பதுதான். பிறரின் தோல்விக்கதைகளோ வெற்றிக்கதைகளோ நம்மை உணர்வுத்தளத்தில் பாதிக்கச் செய்யாதவை. ஆனால், நாமே அடையும் தோல்விதான் நமக்கு நேரடியாய் உணர்த்துகிறது. நாமே அடையும் வெற்றிதான் நமக்குத் தெளிவைக் கொடுக்கிறது. அதனால் எதுவுமே வீண்போவதில்லை என்னும் கருத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.

நாம் செய்யும் செயலுக்கென்று ஒரு விளைவு இருந்தே தீரும். நாம் விதைத்தது விளைந்தே தீரும். அதன் தன்மைகளில் முன்பின் இருக்கலாம். அதை மேலும் சீர்செய்து நாம் அடையவேண்டியதை அடைந்தே தீருவோம். ஏனென்றால் வினை என்னும் செயலை விதைக்கின்றோம். அது விளைவு என்ற பலனை உருவாக்கிவிடும். தினையை விதைத்துத் தினையறுப்பதுபோல வினையை விதைத்து அவ்வினைக்கு நேராய்ப் பிறந்த விளைவை அடைகிறோம்.

கிராபியென் ப்ளாக்

லக சினிமாக்கள் மீதான ஆர்வம் பார்வையாளர்களுக்கும், திரை விமர்சகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் எப்போதும் குறைவதேயில்லை. அதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சொல்ல முடியும்; உதாரணங்களை காட்ட முடியும். அப்படியாக நாம் எல்லோரும் காணத் தவறக் கூடாத, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு படம் தான் இன் தி மூட் பார் லவ். அப்படியென்ன இந்தப் படத்தில் ஸ்பெஷல் என்று நீங்கள் கேட்கலாம். இதுவரை நாம் இந்தப் பகுதியில் அலசிய அனைத்து சினிமாக்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட படம் இது. அது மட்டுமே போதுமா? என்றாலும் அதையும் தாண்டி பல சுவாரஸ்யமான தகவல்கள் அதில் அடக்கம்.

ஹாங்காங்கின் புகழ்பெற்ற இயக்குநர் வாங் கார் வை. அவர் இயக்கிய இந்தப் படம் தான் இப்போது வரை பல நாடுகளில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை வாய்பிளக்க வைத்த படம்.

எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டது ‘இன் தி மூட் பார் லவ்’. இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்கிறது. அதனால் அதற்குள் நாம் இப்போது போக வேண்டாஆனால், இந்தப் படத்தை உருவாக்கும்போது எந்தக் கதையும் எழுதப்படாமலேயே படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றார் இயக்குநர் என்றால், அதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பித்தான் ஆக வேண்டும்.

“என்ன சார் சொல்றீங்க!” என்று வியக்காதீர்கள். உண்மைதான். அதனால்தான் முன்னரே குறிப்பிட்டேன் இன் தி மூட் பார் லவ் எதிலும் சேராத விதிவிலக்கான படம் என்று. உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மைக்கேல் கேலஸோ, ஷிங்கேரு உமேபயாஷி ஆகியோரை அழைத்த இயக்குநர் வாங் கார் வை, தான் ஒரு படம் இயக்கப் போவதாகவும் அதற்கு தாங்கள் இருவரும் இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அவர்கள் சொல்லி வைத்தாற்போல, “கதை என்ன சார்?” என்று கேட்கின்றனர். “கதையா... அதைப்பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். இருவரும் சிறந்த இசையமைப்பாளர்கள் தானே. உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதே அதையே வாசியுங்கள்...” என்கிறார்.

நீங்கள் திடுக்கிடுவது போல தான், அவர்கள் இருவரும் திடுக்கிட்டனர். ஆனால், பெரிய இயக்குநர் ஆயிற்றே, சரி அவர் சொல்வது போலவே செய்வோம் என்று 98 நிமிடங்களுக்கான இசையை உருவாக்கி, அவரிடம் தந்தனர்.

அதை எடுத்து வைத்துக்கொண்ட இயக்குநர் பிரபல ஒளிப்பதிவாளரான கிறிஸ்டோபர் டாயலை அழைக்கிறார். அவரும் இயக்குநரிடம் ‘கதையென்ன?’ என்று அதே கேள்வியை கேட்க, இசையமைப்பாளர்களுக்கு சொன்ன பதிலையே சொல்கிறார் வாங் கார் வை. சரி என்று படப்பிடிப்புக்கு தயாராகிறார். இப்போது சிறந்த நடிகர், நடிகையர் என பெயர் வாங்கிய மேகி சாய்ங்கையும், டோனி லாயிங்கையும் படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்துப் போகிறார். ஷுட்டிங் அன்று மேகியும், டோனியும் “கதையென்ன பாஸ்?” என்று கேட்கின்றனர். “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் இருவரும் சிறந்த நடிகர்கள்தானே?” என்றதும், இருவரும் தலையாட்டுகின்றனர். “அப்படியென்றால் கேமிராவுக்கு முன்னால் போய் நடியுங்கள்” என்று, உத்தரவிடுகிறார். “பாஸ்... நாங்கள் என்ன வசனம் பேச வேண்டும் என்றாவது சொல்லுங்கள் ப்ளீஸ்” என்று கெஞ்சுகின்றனர்.

“இந்த இடத்தில் நீங்கள் இருவரும் சந்தித்து கொண்டால் என்ன பேசுவீர்களோ அதுதான் வசனம் போங்கள்... போய் பேசுங்கள்” என்று விரட்டுகின்றனர். அவர்களுக்கு நடிப்பதற்கான மூட் கிரியேட் பண்ணுவதற்காக முன்னரே உருவாக்கப்பட்ட இசைத்தட்டை ஒலிக்க விடுகிறார். ஆரம்பத்தில் அப்படி இப்படி என்று யோசனையில் இருப்பது, நடப்பது என இருக்கும் இருவரும் பிறகு கதையில்லா கதையில் நடிக்கத் தொடங்குகின்றனர். கிறிஸ்டோபர் டாயல் அவர்களது அசைவை படம் பிடிக்கத் தொடங்குகிறார்.

இப்படியாக படப்பிடிப்பு நடந்து முடிகிறது. ஒரு பக்கம் காட்சிகளை ஒழுங்குப்படுத்துவதும் மற்றொரு பக்கம் ஒலிகளை அதற்கேற்றவாறு அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

அதே சமயத்தில் அந்த வருடத்திற்கான (2000) கான்ஸ் உலகத் திரைப்பட விழா விருதுக்கான அறிவிப்பும் வெளியாகிறது. அதனால் அவசரம் அவசரமாக படத்தை முடிக்கிறார் வாங் கார் வை. படத்தின் நடிகர் நடிகையர் தொடங்கி டெக்னிஷீயன் வரை அனைவரும் படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள் என்று இயக்குநரிடம் முறையிடுகின்றனர். ஆனால் அவரோ, ‘அதை பெஸ்டிவலில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு படத்தின் பர்ஸ்ட் காபியையே பார்க்காமல் கான்ஸ் விருது குழுவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்.

சொன்ன தேதியில் உலகத் திரைப்பட விழாவும் தொடங்குகிறது.

அங்கேதான் படத்தின் மொத்த குழு உறுப்பினர்களும் ‘இன் தி மூட் பார் லவ்’ படத்தை பார்க்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல; அங்கே திரண்டிருந்த ஒட்டுமொத்த பார்வையாளர்களும் படத்தின் சிறப்பைக் கண்டு ஆனந்தத்தில் கூத்தாடுகின்றனர். இதுவரை உருவாக்கப்பட்ட படங்களிலேயே மிகச் சிறந்த படமாக அது உருவாகி இருப்பதாக கூறி பலரும் வாங் கார் வை கட்டிப்பிடித்துக்கொண்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். சினிமா ரசிகர்களின் கைகுலுக்கலில் திக்குமுக்காடி போகிறார் இயக்குநர். அதேசமயத்தில், அந்த ஆண்டின் (2000) சிறந்த படத்துக்கான கான்ஸ் விருது உள்பட பல விருதுகளை படம் அள்ளுகிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களின் உச்சரிக்கும் பெயராக மாறுகிறது ‘இன் தி மூட் பார் லவ்’. மேலும், கான்ஸ் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், படம், இயக்குநர் உள்ளிட்ட விருதுகளையும் வெல்லுகிறது. இப்படியாக இன்று வரை பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்பதும் விருதுகளை குவிப்பதுமாக இருப்பதோடு, உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டும் வருகிறது.

இப்போது சொல்லுங்கள். இந்தப் படத்தின் கதையை உங்களால் சொல்லிவிட முடியுமா? முடியும். அதற்கு நீங்கள் இப்போதே அந்தப் படத்தை பார்ப்பதுதான். சில கதைகளை கேட்காமல் பார்க்கும்போதுதான் நாம் பரவசமாவோம். அந்தப் பரவசத்துக்கு இப்போதே தயாராகுங்கள்!

கிராபியென் ப்ளாக்

ணையக்கடைகளுக்கென்று ஒரு தனி மரபுண்டு.

பார்ப்பதற்குப் பளபளப்பாக இருக்கவேண்டும். உள்ளே நுழைந்தவுடன், நூற்றுக்கணக்கான வகைகளில் லட்சக்கணக்கான பொருட்களைப் பட்டியலிடவேண்டும். அதில் வேண்டியவற்றை எளிதில் தேடி வாங்கும் வசதி இருக்கவேண்டும். நல்ல பிராண்ட் தயாரிப்புகள் இருபது, இருபத்தைந்து சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கவேண்டும். எதை வாங்கினாலும் அடுத்த சில நாட்களுக்குள் அது கைக்கு வந்துவிடவேண்டும். முக்கியமாக, வாங்கிய பொருளின் தரம் பிரமாதமாக இருக்கவேண்டும்.

உலகெங்கும் இயங்கிவருகிற இணையக்கடைகள் எல்லாமே இந்த விதிமுறைகளைதான் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன, அல்லது, பின்பற்ற முயன்றுகொண்டிருக்கின்றன.

இவைதான் இணையக்கடைகளை வெற்றிபெறச்செய்யும் அம்சங்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. புதிதாக இணையத்தில் கடை போடுகிற அனைவருமே இவற்றை இலக்காகக்கொண்டு செயல்படுகிறார்கள்.

ஆனால், இந்த விதிமுறைகளில் எவற்றையும் பின்பற்றாமல், சொல்லப்போனால் பலவிதங்களில் இவற்றை மீறிச்சென்று பெருவெற்றியடைந்த ஓர் இணையக்கடை இருக்கிறது. அதன் பெயர், Wish.

'இப்படியொரு கடையை நான் கேள்விப்பட்டதே இல்லையே' என்றீர்களானால், உங்கள் வயது முப்பதைத் தாண்டிவிட்டது என்று பொருள். உலகெங்கும் இளைஞர்கள் ஆர்வத்தோடு சுற்றிவரும் சூப்பர்ஹிட் கடை இது. தொடங்கிச் சில ஆண்டுகளுக்குள் அமேசான் போன்ற பெருந்தலைகளுக்கெல்லாம் சவால்விடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது, இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது.


Wishல் அப்படியென்ன விசேஷம்?

இந்த இணையத்தளத்தில் (அல்லது, மொபைல் அப்ளிகேஷனில்) நுழைந்ததுமே நம்மை ஈர்க்கிற விஷயம், வரிசையாகப் புகைப்படங்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள். இங்கே ஒரு சட்டை, அங்கே ஒரு பை, இந்தப்பக்கம் ஒரு நகை, அந்தப்பக்கம் ஒரு பொம்மை, கீழே ஒரு துண்டு, அதனருகே கைப்பை... இப்படி ஒரு புகைப்பட ஆல்பம்போல் வரிசையாகப் பொருட்கள். கீழே செல்லச்செல்ல மேலும் மேலும் பொருட்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. எத்தனை வண்ணங்கள்! எத்தனை வடிவங்கள்! 'இப்படியெல்லாம் பொருட்கள் இருக்கின்றனவா?' என்று வியப்பூட்டும் புதுச்சரக்குகள்!


இதில் ஆச்சர்யமான விஷயம், இந்தப் பொருட்களின் விலை. சாதாரணமாக ஆயிரம்ரூபாய் விற்கிற பொருள் இங்கே நூறுரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கிறது. 80% தள்ளுபடியெல்லாம் சர்வசாதாரணம்.

சரி, இந்தப்பொருளை வாங்கலாம் என்று எதையாவது தேர்ந்தெடுத்து க்ளிக் செய்தால், 'அடுத்த மாசம் எட்டாம்தேதிதான் டெலிவரி தருவோம், பரவாயில்லையா?' என்கிறார்கள்.

என்னது? பொருள் வாங்க ஒரு மாதம் காத்திருக்கவேண்டுமா?

பின்னே? ஆயிரம்ரூபாய்ப் பொருளை எழுபத்தைந்துரூபாய்க்கு வாங்குவதென்றால் சும்மாவா? அந்தப் பொருள் சீனாவின் ஒரு மூலையிலிருந்து உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்குச் சில வாரங்களாகும். சம்மதமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள்!

சீனாவிலிருந்து இத்தனை தூரம் வருகிற பொருள் தரமாக இருக்குமா? ஒருவேளை மோசமாக இருந்துவிட்டால்? வரும்வழியில் உடைந்துவிட்டால்?

அது உங்கள் தலைவலி. மலிவான பொருளை வாங்குவதென்றால் அந்த ஆபத்துக்கும் தயாராகதான் இருக்கவேண்டும்.

யோசித்துப்பாருங்கள். அமேசானோ, ஃப்ளிப்கார்ட்டோ இப்படிச் சொன்னால் நாம் சும்மா விடுவோமா? அவர்களுடைய சட்டையைப்பிடித்துக் கேள்வி கேட்கமாட்டோமா? 'என் பொருள் உடனே என் கைக்கு வந்தாகணும், அதுவும் தரமா இருந்தாகணும்' என்று பிடிவாதம் பிடிக்கமாட்டோமா?

Wish இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதே இல்லை. 'உங்க பொருட்கள் பல வாரம் கழிச்சுதான் வரும். தரமும் கொஞ்சம் முன்னேபின்னேதான் இருக்கும். வேணும்ன்னா வாங்கிக்கோங்க' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார்கள்.

சுத்தம், இவர்கள் உருப்பட்டமாதிரிதான். இந்தத் தேறாத நிறுவனத்தைப்பற்றி நாம் ஏன் வாசித்துக்கொண்டிருக்கிறோம்?

காரணம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் Wishபோல் அதிவேகமாக வளர்ந்த இணையக்கடை வேறெதுவும் இல்லை. அமேசானும் மற்ற போட்டியாளர்களும் பல பத்தாண்டுகளாக முனைந்து பெற்ற வளர்ச்சியை அதிவேகமாக எட்டிப்பிடித்துவிட்டுச் சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது இந்தக்கடை.என்ன காரணம்? தரத்தில் சமரசம் செய்துகொள்கிற எந்த நிறுவனமும் சரியாக முன்னேறமுடியாது என்றல்லவா சொல்வார்கள்?

அப்புறம் எப்படி Wishஆல் இப்படி வளரமுடிகிறது? என்னதான் விலை மலிவாகக் கிடைத்தாலும், சுமாரான தரத்தில், அதுவும் தாமதமாகக் கிடைக்கும் பொருட்களை மக்கள் ஏன் வாங்குகிறார்கள்?

அங்கேதான் Wish புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்திருக்கிறது: தன்னுடைய கடையில் எல்லாவிதமான பொருட்களையும் விற்பதில்லை. மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படாத, அவர்கள் அதிகம் செலவழிக்க விரும்பாத, தரம் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிற பொருட்களைமட்டுமே விற்கிறார்கள். அப்படி நினைக்கிறவர்களுக்குமட்டுமே விற்கிறார்கள்.

Wishன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இளைஞர்கள். அவர்கள் ஐயாயிரம், பத்தாயிரம் செலவழிப்பதென்றால் யோசிப்பார்கள், நல்ல பொருட்களைத் தேடிப்பிடித்து, பல இடங்களில் விசாரித்து, விலை ஒப்பிட்டுப்பார்த்து வாங்குவார்கள்.ஆனால், ஒரு சட்டையோ சுரிதாரோ வாங்குவதற்கு அவர்கள் இவ்வளவு மெனக்கெடமாட்டார்கள். அதுவும் 80% தள்ளுபடியில் கிடைக்கிறதென்றால் சட்டென்று வாங்கிப்போட்டுவிடுவார்கள்.

கடைக்குச்சென்று அல்லது மற்ற பிரபல இணையக்கடைகளில் பொருள் வாங்குவதோடு ஒப்பிட்டால், இது ஆபத்தான விஷயம்தான். தரமில்லாத ஆடைகள், கிழிந்த ஆடைகள் வரக்கூடும், அளவு பொருந்தாமல் போகக்கூடும்... ஆனால், இத்தனை பெரிய தள்ளுபடியில் வாங்கும்போது இதுபோன்ற பிரச்னைகளுக்கும் தயாராகத்தானே இருக்கவேண்டும், காசுக்கேற்ற தோசை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இதே மனோபாவத்தைப் பயன்படுத்தி Wish பெரிய பொருட்களையும் விற்கிறது. எடுத்துக்காட்டாக, Camcorder எனப்படும் வீடியோ கேமெரா ஒன்றை ஆயிரத்தைந்நூறுரூபாய்க்குத் தருகிறேன் என்கிறார்கள். வெளியே அதைப்போல் பத்துமடங்கு விற்கும் பொருள் இங்கே சொற்பவிலைக்குக் கிடைக்கிறது என்றால், 'ஒரு முயற்சி செஞ்சுபார்ப்போமே' என்றுதானே பலரும் நினைப்பார்கள்!ஒருவிதத்தில், தெருவோரக்கடைகளில் பொருள்வாங்கும் நம்முடைய மனோபாவத்தைத்தான் Wish பிரதிபலிக்கிறது. காசை மிச்சப்படுத்தவேண்டும், அதற்காகத் தரத்தில் கொஞ்சம் சமரசம் செய்துகொள்வோம் என்று நினைக்கிறவர்களைக் கவர்ந்திழுக்கிறது.


இங்கே விற்கப்படும் பொருட்கள் எவையும் பெரிய நிறுவனத்தயாரிப்புகள் அல்ல. உலகெங்கும் வெவ்வேறு நாடுகளில், பல சிறு தொழிற்சாலைகளில் இவை தயாராகின்றன. இவற்றை அங்கிருந்தே வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதன்மூலம் எல்லா இடைத்தரகர்களையும் தாண்டி Wish பணத்தை மிச்சப்படுத்துகிறது. ஆகவே, பெரிய தள்ளுபடியில் பொருட்களை விற்கமுடிகிறது.

அதற்காக, Wishல் கிடைக்கும் எல்லாமே தரமற்ற பொருட்கள் என்று நினைத்துவிடவேண்டாம். இயன்றவரை தரமான பொருட்களையே சேர்க்க முனைகிறார்கள். ஆனால், அதுபற்றி எந்த உத்தரவாதமும் அளிப்பதில்லை. இங்கே தொடர்ந்து பொருள்வாங்கிப் பழகியவர்கள், 'அவ்வப்போது சொதப்பினாலும், பெரும்பாலும் பிரச்னையில்லை' என்கிறார்கள். 'ஓரளவு தரம், மிகக்குறைவான விலை, அவ்வளவுதான்.'

Wishன் இந்த வியூகத்தைப்பார்த்துப் போட்டியாளர்கள் திகைக்கிறார்கள். அவர்கள் நினைத்தாலும் இந்த அளவுக்குக் கீழே இறங்கமுடியாது. ஆகவே, இந்தச் சந்தையை Wish அள்ளிக்கொண்டு போவதை வெறுமனே வேடிக்கை பார்க்கிறார்கள்.


நாளுக்கு நாள் Wishல் பொருட்களை விற்போர், வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம், நன்கு செலவழிக்கக்கூடிய நடுத்தர வயதினர்மேல் கவனம் செலுத்தாமல் இளைஞர்களைக் குறிவைத்து ஜெயிக்கிறது Wish; இன்னொருபக்கம், பெரிய நிறுவனங்களை நம்பாமல், சிறுதொழில்களை வைத்தே தன்னை ஒரு தனித்துவமான இணையக்கடையாக அமைத்துக்கொண்டுவிட்டது.

குறிப்பாக, இன்றைய இளைஞர்களின் மொபைல் பழக்கத்தை Wish நன்கு புரிந்துகொண்டுள்ளது. அவர்கள் எதைப்பார்ப்பார்கள், எதை எதிர்பார்ப்பார்கள், எதை வாங்குவார்கள், எதை வாங்கமாட்டார்கள் என்று புரிந்துகொண்டு கச்சிதமாகக் காய் நகர்த்துகிறார்கள்.


Wishல் நுழைந்த எல்லாரும் வியப்போடு சொல்லும் விஷயம், 'இங்கே காட்டப்படற பொருளெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கே! எனக்குன்னே கடை வைச்சமாதிரி தோணுதே.'

இது எதேச்சையாக நிகழ்வதில்லை. இங்கே வருகிற ஒவ்வொருவரையும் கவனமாக அலசி, அவர்களுக்கு ஏற்ற, அவர்கள் விரும்பி வாங்கக்கூடிய பொருட்களாகப் பார்த்துப்பார்த்துப் பட்டியலிடுகிறது Wish. யாரிடம் எதைக்காட்டினால் வாங்குவார்கள் என்று தெரிந்து செயல்படுகிறார்கள். இந்த புத்திசாலித்தனமான தொழில்நுட்பம்தான் அவர்களை மற்ற போட்டியாளர்களிலிருந்து முன்னே நகர்த்தியுள்ளது.

Wishஐத் தொடங்கிய பீட்டர் ஸ்ஜுல்க்செவ்ஸ்கி, டேனி ஜங் இருவரும் அதற்குமுன் கூகுள், யாஹூவில் வேலைபார்த்தவர்கள். அங்கே இணையத்தில் மக்கள் தேடும் விதம், தேடுகிற பொருட்கள், அவர்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்கள் போன்றவற்றைப்பற்றி இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எப்போது, யாரிடம், எந்த விளம்பரங்களைக் காட்டினால் பலன் இருக்கும் என்று கண்டறியும் நுட்பங்களைப் புரிந்துகொண்டார்கள்.

அதன்பிறகு, இவர்கள் இருவரும் இந்தப் பெரிய நிறுவனங்களிலிருந்து வெளியே வந்து ஒரு புது நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ContextLogic என்ற அந்த நிறுவனத்தின் நோக்கம், இணையத்துக்கு வருகிறவர்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குப் பிடிக்கக்கூடிய, அவர்கள் க்ளிக் செய்யக்கூடிய விளம்பரங்களைக் காட்டுவது.


கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் மொபைல்ஃபோன்கள் பெரிய அளவில் பிரபலமாகத்தொடங்கியிருந்தன. வருங்காலத்தில் மக்கள் கணினியைவிட மொபைலில்தான் அதிகம் தேடுவார்கள், அதிகம் வாங்குவார்கள் என்று பீட்டர், டேனிக்குத் தோன்றியது.

ஆக, மக்கள் எதைத் தேடுவார்கள், எதை விரும்புவார்கள் என்பதும் தெரியும், எங்கே தேடுவார்கள் என்பதும் தெரியும், இந்த இரண்டையும் இணைத்து ஓர் இணையத்தளத்தைத் தொடங்கினால் என்ன என்று இவர்கள் யோசித்தார்கள். Wish பிறந்தது.ஆரம்பத்தில் வெறும் புகைப்படத்தொகுப்பாக இருந்த Wish விரைவில் ஓர் இணையக்கடையாக ஆனது. மொபைல் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டது.

முதலீட்டாளர்களெல்லாம் Wishஐத் தேடிவந்து பணத்தைக் கொட்டுகிறார்கள். இதுதான் மின்வணிகத்தின் எதிர்காலம் என்கிறார்கள்.

இன்னொருபக்கம், Wishன் வெற்றி நிலைக்காது என்பவர்களும் உள்ளார்கள். மக்கள் குறைந்த விலைக்காக இப்போது Wishல் வந்து விழுந்தாலும், விரைவில் அவர்கள் எரிச்சலடைந்து வெளியேறிவிடுவார்கள், இந்த வளர்ச்சியை அதனால் தக்கவைத்துக்கொள்ள இயலாது என்பது இவர்களுடைய கணிப்பு.

தொழில்நுட்பத்தின் துணையோடு, ரசிக்கக்கூடிய வாங்கும் அனுபவத்தைத் தரவேண்டும் என்பதுதான் Wishன் இலக்கு. இளைஞர்களைப் புரிந்துவைத்திருப்பது அதன் பலம். இதனை எந்த அளவுக்கு அவர்களால் முன்னெடுத்துச்செல்லமுடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்! (தொடரும்)பவித்ரா

ன்றைய நவீன உலகில் பலருக்கும் ஏற்படும் பிரச்னை ஜவ்வு விலகல். இதனால் ஏற்படும் வலியும், மனஉளைச்சலும் சொல்லி மாளாது. இதுகுறித்து விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கெளதமன்.


துரிதமான இன்றைய வாழ்க்கைமுறை, பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. “சமையலறை பக்கம் போனாலே என் மனைவி எரிச்சல் ஆகிடறாங்க” என்று புலம்பித் தள்ளும் கணவன்மார்கள்; அதிகதூரம் அலுவலகத்துக்கு வண்டி ஓட்டிட்டு போறாரு, சாயங்கால வேளையில வீட்டுக்கு வந்ததும், முதுகுவலின்னு துடிச்சுப் போறாரு” என்று இல்லத்தரசிகள் தன் சக தோழிகளிடம் புலம்புவதை தற்பொழுது அதிகமாக கேட்க முடிகிறது.

வேலைக்குச் செல்லும், மகன் மருமகளுக்கு உதவியாக இருக்கும் பெரியவர்கள், “எப்பொழுதுதான் வேலை முடியுமோ; கொஞ்ச நேரம் கை கால்களை நீட்டி படுத்தால்தான் சற்று ஓய்வாக இருக்கும்” என்று புலம்பும் முதியோர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்றுதான் சொல்லலாம்.

உடலில் உள்ள முக்கியமான பாகங்களைத் தாங்குகின்ற முதுகுத்தண்டானது, சற்று தொய்வடைந்தால், ஏற்படும் புலம்பல்கள்தான் நாம் மேலே கண்டது. இக்குறிகளை நாம் கவனிக்காமல் விட்டோமேயானால், அது மேலும் வளர்ந்து கால் வலி, முதியோர்களால் பத்து நிமிடங்களுக்கு மேல் நடை பயிற்சி மேற்கொள்ள இயலாமை, அதனையும் தாண்டி கால் மரத்துப்போகும் நிலைமை ஏற்படுகின்றது. இங்கே குறிப்பிட்டதையும், கவனிக்காமல் விட்டால்தான் ஜவ்வு விலகல் (disc prolapse) என்ற பிரச்சினை ஏற்படுகிறது.

ஜவ்வு விலகும்பொழுது அங்கிருக்கும் நரம்புகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த அழுத்தம், நமக்கு கடுமையான வலியைக் கொடுக்கும்.

நூற்றில் தொண்ணூறு மக்கள், இந்த நிலைமையில்தான், மருத்துவர்களை அணுகுகிறார்கள். எந்த ஒரு உடல் உபாதையையும் உடனே, கவனித்தோமேயானால் நாம் அதிக வேதனைகளை அனுபவிக்கத் தேவையில்லை.

சரி! பிரச்சினை ஏற்பட்டுவிட்டது; என்னதான் தீர்வு இதற்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏனெனில், சிலர் இயன்முறை (Physiotherapy) சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோதான் ஜவ்வு விலகலுக்கு நிரந்தரத் தீர்வு என்று உங்களுக்கு பரிந்துரை செய்திருக்கலாம். ஆனால், ஆயுர்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல், எளிய சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும்.

எப்படி ?

ஆயுர்வேதத்தை பொறுத்தவரை ஒரு இடத்தில் பலவீனம் ஏற்படும் பொழுதுதான் அந்த இடத்தில் நோய் ஏற்பட ஆரம்பிக்கிறது. உதாரணத்துக்கு, நுரையீரல் நலிவடையும்பொழுதுதான் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதே போல பலவீனமடைந்த ஜவ்வுகளில், சிகிச்சைகள் கொடுத்தோமேயானால் இப்பிரச்சினையை எளிதாக குணப்படுத்த முடியும்.

சிகிச்சைகள் தசைகளை வலுவடையச் செய்யும் மருந்துகள், உடற்பயிற்சிகள் அல்லது பஞ்ச கர்ம சிகிச்சைகள் அப்யங்கம் என்று சொல்லக்கூடிய எண்ணெய் சிகிச்சை. இலைக்கிழி - தேவையான மூலிகைகளை எடுத்து ஒத்தடம் கொடுப்பது.

சவ்வு விலகல் ஏற்பட்ட இடத்தில் பாலம் போல் செய்து, மருந்தூட்டப்பட்ட எண்ணெய்களை நிரப்பி செய்யும் சிகிச்சை.

இவைகளைச் செய்யும் பொழுது, பாதிக்கப்பட்ட ஜவ்வு மட்டுமில்லாமல், அதனைச் சுற்றி இருக்கும், தசைகளும் பலம் பெறுகிறது.

படிப்படியாக முதுகு வலி குறைவதைக் காணலாம், அறிகுறிகளும், கொஞ்சம் கொஞ்சமாக மறைவதைப் பார்க்க முடிகிறது. ஜவ்வு விலகல் ஏன் வந்தது என்ற காரணத்தை அறிந்து, நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு, உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி செய்து வந்தாலே, இந்நோயிலிருந்து விடுபடலாம். நம் உடலுக்கு தேவையான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தாலே நாம் பல்லாண்டு காலம் வாழலாம்.

பவித்ரா

v. c. சந்தோஷ், க. விக்னேஷ்

வீன இலக்கியவாதி அமிர்தம் சூர்யா. கவிஞர், எழுத்தாளர், ஓவியர், விமர்சகர், பேச்சாளர் என்று பன்முக திறமை கொண்டவர். ‘உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை’, ‘பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு’ , ‘வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்’ ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளியாகி உள்ளன. ‘கடவுளை கண்டுபிடிப்பவன்’ சிறுகதைத் தொகுப்பு அவரது ஆக்கங்களில் முக்கியமானது. ‘திருப்பூர் தமிழ் சங்க விருது’, ‘எழுச்சி அறக்கட்டளை விருது’ உள்பட பல பாராட்டுக்களுக்கு சொந்தக்காரர். கவிதை, எழுத்து, சமூகம் என பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவற்றின் ஒருபகுதி இங்கே...

“அடிப்படையில நான் ஒரு பழமைவாதி. எல்லாமே மாயை என்கிற சிந்தனையை எப்போதுமே நான் என்னோட ஆழ்மனசுக்குள்ள வச்சுக்கிட்டே இருப்பேன். காலத்தை மீறி நாம எதுவுமே செய்ய முடியாது. அது நினைச்சா, ஒருத்தனை உச்சாணிக் கொம்பிலோ அல்லது அதள பாதாளத்திலோ தள்ள நேரிடும் என்பதுதான் நிதர்சனம். அதுனால, நான் யாரையும் பார்த்து வியப்பதும் இல்லை, தாழ்வாக நினைப்பதும் இல்லை. கடவுளோட படைப்பு ஒவ்வொண்ணும் தனித்துவம் வாய்ந்தது. யாருமே அடுத்தவங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. இந்தப் பழமையான சித்தாந்தம் தான் எனக்கு பல நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது.

இலக்கியக் குழுக்களுக்கு இடையே சண்டை அவசியம் தான். அது ஒரு ஆரோக்கியமான விஷயம். உதாரணமாக, ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு பல கிளைகள் வெவ்வேறு விதமாக இருக்கும். எத்தனை கிளைகள் பிரிகிறதோ, அத்தனை அளவு, அந்த மரம் விசாலமாகிறது. ஒற்றை சிந்தனையை மட்டுமே வைத்து எதையுமே, சாத்தியப் படுத்தி விடமுடியாது.

‘திராவிட கழகம்’ பல கிளை கட்சிகளாக பிரிந்த காரணத்தை யோசித்தால், அவர்களுக்குள் இருந்த கொள்கை மற்றும் சிந்தனை மாற்றம் தான் என்பது புலப்படும். இதேபோல இலக்கியவாதிக்குள்ளும், சிந்தனை மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.

கம்யூனிச சித்தாந்தம், தலித் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர், சாதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் இருப்பார்கள். அதோடு, கவிதைகளிலேயே ஹைக்கூ, ரியலிஸம், மாடர்ன், போஸ்ட் மாடர்ன் என்று பலவிதமான கவிதைகள் இருக்கிறது.

கவிதைகளோடு தன்மைகள் மாறும்பொழுது, இலக்கியவாதிகளின் சிந்தனைகள், மாறுவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. எனவே, இலக்கிய குழுக்கள் தனித்தனி குழுக்களாக, இயங்குவதை தவிர்க்க முடியாது. எனவே, அவர்களுக்குள் வரும் கருத்து வேறுபாடுகள் வரவேற்கத்தக்கதே ஒழிய, கேலிக்குரியதோ அல்லது கொச்சைப்படுத்தலுக்கு உரியதோ அல்ல. நியாயமானதே. இலக்கிய குழுக்களிடையே விவாதம், சச்சரவுகள் இருக்கும்; இருக்க வேண்டும்!

என்னுடைய இளமைக்காலம் ஒரு குடிசை வீட்டில் யதார்த்தமாக இருந்தது. அதாவது, என்னைச் சுற்றி இருந்த மக்கள் மிகவும் எளிமையானவர்களாக இருந்தார்கள். இப்பொழுது, வாழ்க்கைத் தரம் முன்னேறி வசதி வாய்ப்பு வந்தாலும், நான் பார்த்த அந்த யதார்த்த மனிதர்களை என்னால் இப்பொழுது எங்கேயும் பார்க்க முடியவில்லை. என்னுடைய, அந்த வட சென்னை வாழ்க்கையை, பதிவு செய்ய வேண்டும் என்று வெகு நாட்களாய் ஒரு ஆசை மனசுக்குள் வட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது. விரைவில், அது சார்ந்த நாவலை நான் வெளியிடப் போகிறேன்!” என்றார் அமிர்தம் சூர்யா. அவரைப் பற்றிய மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. தனியார் தொண்டு நிறுவனங்களின் துணையோடு சுமார் எட்டு கார்ப்பரேஷன் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு பயிலும் மாணவர்களைக் கொண்டே குழந்தை இலக்கிய நூல் ஒன்றை படைத்ததுள்ளார் என்பதுதான் அது!